கஜேந்திரனுக்கு மோட்சமருளும் திருவரங்கன்



* ஸ்ரீரங்கம், திருச்சி
சித்ரா பௌர்ணமி - கஜேந்திர மோட்ச நிகழ்வு - 19.04.2019


இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். அவன் ஒருமுறை திருமாலுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கையில், அவனது அரண்மனைக்கு அகஸ்திய முனிவர் எழுந்தருளினார். தன் கருத்து முழுவதையும் பூஜையிலேயே செலுத்தி இருந்த அரசன், முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. அவருக்கு எந்த உபசாரமும் செய்யவில்லை.

தன்னை அரசன் அலட்சியம் செய்ததாகக் கருதிய அகஸ்தியர் கடும் சினம் கொண்டு, “உனக்கு யானை போல் செருக்கு அதிகமாக உள்ளது! எனவே நீ யானையாகப் போவாய்!” என்று இந்திரத்யும்னனைச் சபித்தார். இந்திரத்யும்னனும் அகஸ்தியர் தந்த சாபத்தின் விளைவால், ஒரு காட்டில் யானையாகப் பிறந்தான். அக்காட்டிலுள்ள யானைக் கூட்டங்களுக்குத் தலைவனாகத் திகழ்ந்தபடியால், ‘கஜேந்திரன்’ (கஜங்களின் இந்திரன்) என்றழைக்கப்பட்டான். முன் பிறவியில் செய்த விஷ்ணு பக்தி மனதில் நன்கு பதிந்திருந்தபடியால், இப்பிறவியிலும் சிறந்த பக்தனாக அந்த யானை விளங்கியது.

நாள்தோறும் தாமரை மலர்களைக் கொண்டு வந்து திருமாலுக்கு அர்ச்சனை செய்வதை அந்த யானை வழக்கமாகக் கொண்டிருந்தது. இந்நிலையில், ஒருநாள் ஒரு பெரிய தடாகத்திலுள்ள தாமரையைப் பறிப்பதற்காக கஜேந்திரன் சென்றபோது, அத்தடாகத்திலுள்ள முதலை ஒன்று யானையின் காலைக் கவ்வியது. அந்த முதலை யார்? தேவலர் என்னும் முனிவர் ஒரு பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில், ஹூஹூ என்ற கந்தர்வன் அவரது காலைப் பற்றி இழுக்க, அதனால் கோபம் கொண்ட தேவலர், “நீ முதலையாகப் போவாய்!” என்று ஹூஹூவைச் சபித்தார்.

தேவலர் சாபத்தால் முதலையான ஹூஹூ தான் இப்போது கஜேந்திரனின் காலைக் கவ்வி இருக்கிறான். முதலையின் பிடியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கஜேந்திரன் எவ்வளவோ முயன்றும், அதன் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியாக, தன் முயற்சியால் தன்னைக் காத்துக் கொள்ள இயலாது, என்றெண்ணிய கஜேந்திரன், “ஆதிமூலமே!” என்று திருமாலை அழைக்க, தன் பக்தனைக் காக்கும் ஆர்வத்துடன் மிக விரைவாகக் கருட வாகனத்தில் அந்தப் பொய்கைக் கரைக்கு வந்த திருமால், தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையைக் கொய்து யானையைக் காத்தார். தான் பறித்த தாமரை மலரைத் திருமாலின் திருவடிகளில் அர்ப்பணித்து அவரைத் துதி செய்தது கஜேந்திரன். திருமாலின் அருளால் முக்தியும் பெற்றது.

இந்தக் கஜேந்திர மோட்சக் காட்சியைக் காணும் ஆவலுடன், ஐராவதத்தின் மேல் இந்திரனும், நந்தியின் மேல் சிவபெருமானும், அன்னத்தின் மேல் பிரம்மாவும் அப்பொய்கைக் கரையை நோக்கி விரைந்து வந்து இக்காட்சியைக் கண்டுகளித்தார்கள். அன்று பிரம்மா, சிவன், இந்திரன் உள்ளிட்டோர் கண்டு களித்த காட்சியைக் காலத்தாலும் ஞானத்தாலும் பிற்பட்டவர்களான நாமும் கண்டு களிக்க வேண்டாமா? அதற்கென்ன வழி? வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி அன்று, திருவரங்கம் கோயில் அம்மா மண்டபத்தில் நடைபெறும் ‘திருவூறல்’ உற்சவத்தில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியை ஸ்ரீரங்க நாதன் நம் கண் முன்னே நடத்திக் காட்டுகிறார்.

அதன்படி இவ்வருடம் ஏப்ரல் மாதம் 19ம் தேதி, சித்ரா பௌர்ணமி அன்று, அதிகாலையில் அரங்கனுக்கு முதல் திருவாராதனமும், பொங்கல் நிவேதனமும் ஆகும். காலை ஏழு மணி அளவில் மூல ஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்படுவார். தென் திருக்காவிரி ஆற்றின் கரையிலுள்ள அம்மா மண்டபம் படித்துறையிலுள்ள ஆஸ்தான மண்டபத்தில் 10 மணியளவில் எழுந்தருள்வார். ‘சேரபாண்டியன்’ என்றழைக்கப்படும் தங்கப் பீடத்தில் எழுந்தருளும் பெருமாளுக்கு, மதியம் 12 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் நடைபெறும்.

மாலை 6 மணியளவில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நடைபெறும். ‘சமரபூபாலன்’ என்றழைக்கப்படும் கேடயத்தில் புறப்படுவார் நம்பெருமாள். காவிரியில் வைக்கப்பட்டிருக்கும் கூர்மாசனப் பலகையில், கோயில் யானை கஜேந்திரனின் ஸ்தானத்தில் வந்து நிற்கும். கஜேந்திரனைப் போல் பணிந்து நிற்கும் அந்த யானையின் முன்னே பெருமாள் தோன்றி, அதற்கு சடாரி சாதித்து அருள்புரிவார். இரவு 8 மணியளவில் அம்மா மண்டபத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள், 9 மணிக்கு மூல ஸ்தானத்தை அடைவார். கோயிலுக்குப் பெருமாள் திரும்ப வருகையில், வாத்திய கோஷங்கள் எதுவும் இன்றி, அரையர்களின் இசையை மட்டும் கேட்டபடி எழுந்தருள்வார்.

இந்த கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியின் மூலம் திருமால் நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன பிறவிக்கடல் என்னும் பொய்கையில், புலன்களாகிய முதலைகள், ஜீவாத்மாவாகிய கஜேந்திரனைப் பிடித்து அழுத்துகின்றன. இம்முதலைகளிடமிருந்து தன் முயற்சியால் தப்பிக்க இயலாது என்று உணரும் ஜீவாத்மா, இறைவனைச் சரணடைகிறது. அவ்வாறு இறைவனிடம் சரணடைந்தவாறே, ஞானமென்னும் சக்கராயுதத்தைக் கொண்டு, புலன்களாகிய முதலைகளை வீழ்த்தி, பிறவிக்கடலாகிய பொய்கையில் இருந்து ஜீவாத்மாவை மீட்டு, அக்கரை ஆகிய வைகுந்தத்தில் சேர்க்கிறார் திஎருமால்.

பராசர பட்டர் என்னும் குருவிடம், அவரது சீடரான நஞ்ஜீயர், “திருமால் ஏன் திருவரங்கத்தில் சந்திர புஷ்கரிணி பொய்கைக் கரையில் துயில் கொள்கிறார்?” என்று கேட்டார். அதற்குப் பராசர பட்டர், “கஜேந்திரன் ‘ஆதி மூலமே!’ என்று அழைத்தவுடன், அது நின்றிருந்த பொய்கைக் கரைக்குச் சென்று அந்த யானையைக் காத்த திருமால், நாம் அழைப்பதற்கு முன் நம் துன்பங்களிலிருந்து நம்மைக் காப்பதற்காக இந்தச் சந்திர புஷ்கரிணிக் கரையில் தயார் நிலையில் துயில் கொண்டிருக்கிறார்!” என்று விடையளித்தார்.

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்