என்ன சொல்கிறது என் ஜாதகம்



தீர்க்க சுமங்கலி யோகம்..!

* எனது  தொழில் விவசாயம். கடந்த பத்து ஆண்டுகளாக மழை இல்லாததால் கிணறு காய்ந்துவிட்டது. போர்வெல் போட்டும் நீர் ஆதாரம் இல்லை. இனி மழை பொழிந்து விவசாயம் செழிப்பது என்பது அபூர்வம். எனது மரண காலம் வரை தொழில் செய்ய விரும்புகிறேன். என் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்?  - முத்துசாமி, உடுமலை.

76 வயது முடிந்த நிலையிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பிரமிப்பைத் தருகிறது. நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் உள்ளத்திலும் உறுதி நிறைந்திருப்பதால் நீங்கள் நிச்சயமாக இறுதிக்காலம் வரை சுயதொழிலைச் செய்ய இயலும். உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது.

கணக்கீடு செய்து பார்த்ததில் தற்காலம் புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. தசாநாதன் புதன் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சுயதொழிலைச் செய்ய முடியும். அதிலும் தற்போது சுக்கிர புக்தி நடந்து வருவதாலும், சுக்கிரன் லாப ஸ்தானமாகிய 11ம் வீட்டில் ஆட்சி பலம் பெற்றிருப்பதாலும் தற்பொழுது செய்யும் தொழிலில் நல்ல லாபம் என்பது கிடைக்கும். உங்களுடைய ஜாதக பலத்தின்படி தண்ணீர் ராசி என்பது உங்களுக்கு நிச்சயம் உண்டு.

கிணற்றில் தண்ணீர் காய்ந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். பூச்செடிகள், மூலிகைச் செடிகள், பழ வகைகள் போன்றவை உங்களுக்கு நல்ல லாபத்தினைப் பெற்றுத் தரும். இவைகளை உற்பத்தி செய்ய உங்களால் இயலும். உங்களுடைய ஜாதக பலத்தின்படி இன்னும் பத்து ஆண்டுகளுக்கு உங்களால் நன்றாக உழைக்க முடியும். உழைப்பிற்கேற்றவாறு சம்பாத்தியமும் சிறப்பாக உள்ளதையே உங்கள் ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது. நம்பிக்கையோடு உழைத்து வாருங்கள். உங்கள் மனம் விரும்புவது போல் இறுதி வரை உழைத்து வாழ்வீர்கள்.

* 13 வயது ஆகும் என் மகனுக்கு படிப்பு சரியாக வரவில்லை. தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை சரியாக எழுத்துக்கூட்டி படிக்கத் தெரியவில்லை. பிழையுடன் எழுதுகிறான். படிப்பில் ஆர்வம் இல்லை. எப்போதும் விளையாட்டில் கவனம் செலுத்துகிறான். எனது மகன் நன்றாக படிப்பதற்கு என்ன வழி? - பிரபா, கன்னியாகுமரி.


உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கணிதம் செய்து பார்த்ததில் தற்காலம் சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது என்பது தெரிய வருகிறது. மூலம் நக்ஷத்ரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் உச்ச பலத்துடன் அமர்ந்துள்ளார். ஐந்தாம் வீடு என்பது கேளிக்கை, கொண்டாட்டம், ஆடம்பர ஆசைகள் போன்றவற்றோடு விளையாட்டு ஆர்வத்தையும் சொல்லும்.

தற்போது நடந்து வரும் தசாபுக்தி காலம் அவரது விளையாட்டு ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. அவரது போக்கிலேயே செயல்பட விடுங்கள். 21 வயது வரை அவர் தன் விருப்பத்தின்படி வாழ்க்கையை அனுபவித்து சந்தோஷமாக வாழட்டும். அதன் பின் துவங்கவுள்ள சூரிய தசையின் காலத்தில் மிகவும் பொறுப்புடன் செயல்படுவார். படிப்பு என்பது சுமாராக இருந்தாலும் உலக அனுபவம் என்பது உங்கள் பிள்ளைக்கு கைகொடுக்கும்.

தற்போதைய நேரத்தின்படி அவர் ஒரு நல்ல ஆசிரியரை இந்த வருடத்தில் சந்திப்பார். அந்த ஆசிரியர் உங்கள் மகனின் உள்ளிருக்கும் திறமையை வெளிக்கொணர்வார். அந்த ஆசிரியரின் ஆலோசனையின்படி உங்கள் மகன் செயல்பட்டு தனது வாழ்வினில் உயர்வடைவார். வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு வடக்கு முகமாக நெய்விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்து வாருங்கள். குருவின் அருளால் உங்கள் மகனின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும். உங்கள் மகனின் எதிர்காலம் குறித்து நீங்கள் பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

* பிஎச்டி படித்து வரும் என் மகள் தனது ஆராய்ச்சியில் வெற்றி பெறுவாரா? இவரது திருமணம் எப்போது நடைபெறும்? மணமகனின் குணநலன் எவ்வாறு அமையும்? அவளது எதிர்காலம் பற்றி கூறுங்கள். - ராமஜெயம், சென்னை.


உங்களது மகளின் ஜாதகத்தை வாக்ய பஞ்சாங்க கணித முறைப்படி துல்லியமாக கணித்ததில் தற்காலம் 02.03.2020 வரை புதன் தசையில் சூரிய புக்தி நடைபெற்று வருகிறது. அடுத்து வரும் சந்திர புக்தி உங்களது மகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். 02.03.2020 முதல் 02.08.2021 வரை நடைபெறும் புதன் தசையில் சந்திர புக்தி காலத்தில் உங்களது இரு எதிர்பார்ப்புகளுமே அடுத்தடுத்து நிறைவேறும்.

சந்திரன் குரு பகவானின் சாரம் பெற்ற நிலையில் குரு பகவான் ஏழாம் இடத்தில் நிற்பதால் முதலில் திருமணமும், 11ம் இடமான உயர்கல்வியைக் குறிக்கும் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் குரு பகவானே நிற்பதால் திருமணத்தைத் தொடர்ந்து அவரது, படிப்பிலும் வெற்றி பெறும் சூழல் உருவாகும். ஆக, மேற்சொன்ன காலத்திற்குள்ளாக இவ்விரு நிகழ்வுகளும் வெற்றிகரமாக அமையும். களத்ர ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பது அவருக்கு அமைய உள்ள கணவரின் குண நலனை தெளிவாக உணர்த்துகிறது. நற்குணங்கள் நிரம்பிய ஒரு நல்ல மனிதர் தங்கள் பெண்ணிற்கு மாலையிடுவார்.

கவலை வேண்டாம். லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்துடன் லக்னத்திலேயே கேந்திரம் பெற்றிருப்பது மிகச் சிறப்பான யோகத்தை ஜாதகருக்கு தருகிறது. ஜனன காலத்தில் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற இந்த பெண் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக திகழுவார். ஜீவன ஸ்தானாதிபதியாகிய சனி பகவான் உச்சம் பெற்ற நிலையில் சுக்கிரனின் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்ல நிலையேயாகும். நல்ல வளமான எதிர்காலத்தை ஜாதகி பெற்றிருப்பார். 37வது வயது முதல் 44வது வயது வரை ஜாதகி சற்றே பொருளாதார ரீதியாக சிரமத்தினை சந்திக்க நேர்ந்தாலும், அதன் பின்னர் அவரது வாழ்க்கைத் தரம் எவரும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சி பெறும்.

* அடுத்த ஆண்டில் ஓய்வு பெற உள்ள நான் தொடர்ந்து பணி செய்ய விரும்புகிறேன். எனது ஜாதகம் அதற்கு ஒத்துழைக்குமா? என் மனைவி மற்றும் மகன்கள் எப்படி இருப்பார்கள்? என் ஆயுள் பாவம் எப்படி உள்ளது? - ஜெயராமன், தஞ்சாவூர்.


தங்கள் ஜாதகத்தை வாக்ய கணித முறையில் கணித்ததில் தற்காலம் 16.01.2021 வரை குரு தசையில் குரு புக்தி நடைபெற்று வருகிறது. 2020ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். உத்யோக முறையில் நீங்கள் ஓய்வு பெற்றாலும் கூட எப்பொழுதும் சதா பணியாற்றிக் கொண்டே இருப்பீர்கள். லக்னாதிபதி செவ்வாயை பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் கொண்டிருக்கும் உங்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது.

சதா உழைத்துக் கொண்டிருப்பவர் நீங்கள். மேலும் தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்து செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் உங்களது உழைப்பு வீணாகாமல் நல்ல வருமானத்தையும் ஈட்டித் தரும். மேலும் தற்போது குரு தசை ஆரம்பித்துள்ளதாலும் குரு பகவான் லாப ஸ்தானமாகிய 11ம் இடத்தில் ராகுவுடன் இணைந்து நிற்பதாலும், உங்களது அந்திமக் காலம் வரையிலும் நல்ல சம்பாத்யத்தோடு நினைத்த காரியங்களில் வெற்றியும் அடைந்து வருவீர்கள். 11ம் இடம் தற்போது இயங்கி வருவதால் ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். நல்ல பெயரையும், புகழையும் சம்பாதிப்பீர்கள்.

 ரோக ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் உடல்நிலையில் அவ்வப்போது பிரச்னைகள் இருந்து வரும். சனிக்கிழமை தோறும் உங்கள் துணைவியாரை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வரச் சொல்லவும். ஆயுள் பாவம் நன்றாக உள்ளது. தீர்க்காயுளுடன் இருப்பீர்கள். மனைவியைக் குறிக்கும் ஏழாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரன் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், புத்ர ஸ்தானாதிபதி சூரியன் திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், உங்களது மனைவி மற்றும் குழந்தைகளின் கௌரவமான நிலையினை தெளிவாகக் காட்டுகிறது. பிள்ளைகளால் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வு உங்களுக்கு நிம்மதியைத் தரும்.

* என் மனைவிக்கு சதா உடல்நிலையில் ஏதேனும் பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது. அவரது ஜாதக அமைப்பு காரணமா? உடல் ஆரோக்யம் பெற என்ன செய்ய வேண்டும்?
- சிவசிதம்பரம், மயிலாடுதுறை.

 
உங்களது ஜாதகத்தில் தற்காலம் 17.04.2020 வரை சனி தசையில் கேது புக்தி நடைபெற்று வருகிறது. ஆறாம் இடமாகிய ரோக ஸ்தானாதிபதி புதன் இவரது ஜாதகத்தில் 12ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சதா உடல்நிலையில் பிரச்னைகள் இருந்து வரும். ஆனாலும் ஆயுள் ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் ஆயுள் ஸ்தானம் வலுப்பெறுவதோடு, தீர்க்க சுமங்கலி யோகத்தையும் பெறுகிறார். சயன ஸ்தானமாகிய 12ம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரஹங்கள் அமர்ந்திருப்பதும், ஸ்தானாதிபதி குரு எட்டாம் இடத்தில் அமர்ந்திருப்பதும் இவரது உறக்கமின்மையைக் காட்டுகிறது. இரவினில் சரிவர தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்.

எல்லாம் சரியாக அமைந்தும், ஏதோ ஒரு வித மன உளைச்சலால் சரிவர தூங்காமல் உடல்நிலையையும் கெடுத்துக் கொள்கிறார். ஆனாலும் தற்காலம் நடைபெறும் கேது புக்தியில் ஞான காரகனான கேதுவின் அருளால் சிந்தனையில் சற்றே மாற்றம் ஏற்பட்டு ஆன்மீகத்தில் கொள்ளும் ஈடுபாட்டால் மன நிம்மதி கொள்வார். இவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இவரது மன உளைச்சலை போக்க வழி காண வேண்டும்.

இவரது பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளின் நலனைப் பற்றி வினா எழுப்பியுள்ளீர்கள். அவர்களது நலனைப் பற்றி அறிய அவர்களது ஜாதகங்களை கொண்டே தெளிவாகக் கூற இயலும். ஆயினும் இவரது ஜாகத்தைக் கொண்டு நோக்கினால் தகப்பனார் ஸ்தானத்தைக் குறிக்கும் 9ம் இடத்திற்கு அதிபதி புதன் 12ம் இடத்திலும், இளைய சகோதரத்தைக் குறிக்கும் 3ம் இடத்திற்கு அதிபதி 8ம் இடத்தில் அமர்ந்திருப்பதும் சாதகமான நிலை அல்ல.

தாயார் மற்றும் மூத்த சகோதர ஸ்தானங்களுக்கு அதிபதியான செவ்வாய் கேந்திரத்தில் அமர்ந்திருப்பது நன்மையைத் தரும். அவர்களால் ஜாதகிக்கு நன்மை உண்டாகும். இவரது ஜாதகத்தைப் பொறுத்த வரை தனிப்பட்ட முறையில் பிறந்த வீட்டைவிட புகுந்த வீட்டில் குடும்பம் நல்ல நிலையில் இருக்கும்.

* என் மருமகன் மிகவும் பிடிவாத குணம் கொண்டவராக இருக்கிறார். என் மகளின் சொல்பேச்சைக் கேட்பதில்லை. சமயத்தில் அடித்துவிடுகிறார். இத்தனைக்கும் என் மகள் தான் காதலித்தவரையே கரம்பிடித்தாள். அவளது எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும்?  - பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
    
உங்களுடைய கடிதத்தில் தங்கள் மகள் மற்றும் மருமகனின் நட்சத்திரம், ராசிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஜாதகம் அல்லது பிறந்த தேதி, நேரத்தை சரியாகக் குறிப்பிட்டால் ஜாதகங்களை கணித்து சரியான முறையில் பதில் கூற இயலும். தங்கள் குமாரத்தி மிருகசீரிஷம், மிதுன ராசி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவர் யாரையும், எந்த சூழ்நிலையையும் சமாளித்து நடந்து கொள்வார். நீங்கள் அவரைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. அதே நேரம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களது மருமகன் யாரையும், எதையும் சமாளித்து போகமாட்டார்.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் பிடிவாதமாக இருக்கும் அவரை மாற்ற யாராலும் இயலாது. அவராக மனம் மாறினால்தான் உண்டு. மேலும் தனுசு ராசிக்காரர்களுக்கு தற்போது ஜென்மச்சனியும், ஜென்ம ராசியில் கேதுவும் இணைந்திருப்பதால் அவரால் சரியான முறையில் சிந்திக்க இயலாது. இந்நிலை 2020ம் ஆண்டின் இறுதி வரை நீடிக்கும். அதன்பின்னர் அவரே உணர்ந்து பழைய நிலைக்கு திரும்புவார்.

அதுவரை அமைதி காத்து வாருங்கள். உங்களது மகளைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். அவர் சமாளித்துக்கொள்வார். மிதுன ராசிக்காரர்களுக்கு வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள குரு பெயர்ச்சி நன்மை செய்யும் என்பதால் வரும் வருடத்திலேயே அவரது பதவி உயர்வினை எதிர்பார்க்கலாம். தனுசு ராசிக்காரர்களை மிதுன ராசிக்காரர்கள் சமாளிப்பார்கள் என்பதால் அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை உணர்வு  எப்போதும் இருக்கும். எதிர்காலம் நன்றாக உள்ளது. கவலை வேண்டாம். மூத்த மகன் தகப்பனாரின் குணத்தையும், இளையவர் தாயாரின் குணத்தையும் கொண்டிருப்பார்கள். வாழ்க வளமுடன் !

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

சுபஸ்ரீ சங்கரன்

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004