இனிய ஸ்நேகிதன்



ஓஷோ கண்ணனைக் குறித்து கூறும்போது, இந்த உலகில் single dimension man (ஒற்றை பரிமாணம்), multi dimension man (பல பரிமாணங்கள்) என்று  இரண்டு வகை உண்டு. அதில் முதல் வகையில் அவதார புருஷர்கள் முதல் சாமானிய மனிதன் வரை நிறைய பேர் வந்துபோய் விட்டார்கள். ஆனால், இரண்டாவது வகையான multi dimention man என்கிற பல பரிமாணங்களை தன்னிடமிருந்து வெளிப்படுத்தியது கண்ணன் மட்டுமேயாகும். அவன் இல்லறத்தானா ஆமாம். அவன் சந்நியாசியா ஆமாம். யோகியா ஆமாம். காதலனா... ஆமாம். இப்படி எல்லா பரிமாணங்களையும் வெளிப்படுத்தினாலும் அதையும் மீறி அனைத்துமாகிக் கிடந்த ஞானியாக விளங்கினான்.

ஏனெனில், அவனால் மட்டுமே எதிரிப் படைகள் வன்மத்தோடு நிற்கும் போர்க் களத்தில் ஞான வேதாந்தம் கனிந்த கீதையை சாவகாசமாக எடுத்துரைக்க முடியும். எதிரே நிற்பவர்கள் உன் சிற்றப்பன் பெரியப்பனாக இருக்கலாம். அண்ணன் தம்பியாகக் கூட இருக்கலாம். ஆனால், இப்போது அவர்களை நோக்கி உன் அம்புகளை மழையாகப் பொழி. அதுவே இங்கு உன்னுடைய ஸ்வதர்மம் என்று சத்திய நீதியை நிலைநாட்டச் செய்தான். அர்ஜூனனுக்கு ஸ்நேகிதன். திரௌபதிக்கு சகோதரன். பாண்டவர்களின் காப்பான். கோபிகைகளின் காதலன். துவாரகை மக்களின் தலைவன். கௌரவர்களின் நோக்கில் எதிரி. குசேலனின் நெருங்கிய தோழன். ரிஷிகளுக்கெல்லாம் வேதாந்தம் உரைத்த மகா குரு. யோகிகளுக்கெல்லாம் யோகியான மகா யோகி. சுகப் பிரம்மத்தின் இருதயத்தில் அமர்ந்திட்ட பாகவத நாயகன்.

பெண் வாசனை அறியாத பீஷ்மரும், காமதகன மூர்த்தியான ஈசனும், ஆண் பெண் பேதமறியா சுகப் பிரம்மமும் காண ஏங்கிய ராச லீலை எனும் பிரேமை பொங்கும் பெருங்காதல் கூத்தை நிகழ்த்திய நித்திய பிரம்மச்சாரி. இறையை நோக்கி நகரும் அனைத்து மார்க்கங்களையும் தன்னிடத்தே கொண்டவன். புல்லாங்குழலை கையிலேந்தி கானத்தின் மூலம் இறையை உணரச் செய்த காதல் கடவுள் இவன். பிரேமையும் பக்தியுமே இவனை அடையும் எளிதான வழி. வெண்ணெய் எனும் மனதை கொள்ளை கொள்ளும் கள்வக் கண்ணன். ஒருபுறம் யோகிகளின் மையத்தில் அமர்ந்து வேதாந்தம் போதிப்பான். வேறு பக்கம் கோபிகைகளின் விரக தாபத்தில் சிக்கி தனிமையில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பான். பக்தியா, ஞானமா, கர்ம யோகமா, சந்நியாசமா, யோக சாதனையா…. எல்லாவற்றிற்கும் இலக்காய் இருப்பவன். அனைத்து மார்க்கங்களின் வழியாகப் பயணப்பட்டாலும் இறுதியில் அடைவது என்னையே என்று வேதாந்த முரசை கொட்டியவன்.

கண்ணனை அடையும் பாதை ரம்மியமானது. ஆனந்தமும் களிப்பும் நிறைந்தது. கடும் விரதம் வேண்டாம். காக்கைச் சிறகினை ரசிக்கும் மனம் போதும். கிருஷ்ண தியானம் என்பது கண்ணனை புரிந்து கொள்வது. தொட்டிச் செடியை பார்த்துச் சலித்த மனம், அடர்ந்த கானகத்தின் ஒட்டுமொத்த அழகை கண்ட வியப்பு நிறைந்த கண்கள் இருந்தால் போதுமானது. காதலாகி கசிந்துருகி பித்தேறிக் கிடந்தால் போதும். மெல்ல உங்கள் இருதயத்தில் எழுந்தருள்வான். அவனே ஞான சூரியன். அதன் பிறகு அங்கு அஸ்தமனம் இல்லை. அந்த நன்னாளுக்குப் பெயர்தான் கிருஷ்ண ஜெயந்தி.

கிருஷ்ணா(பொறுப்பாசிரியர்)