மண வரம் தருவான் மருதூர் நவநீதன்



*சீவலப்பேரி நெல்லை

கண்ணன் வெண்ணெய் திருடி உண்டதால் கோபம் அடைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப் போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தபடி சென்றான். அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளகூபன், மணிக்ரீவன் இருவரும் சாப விமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர வேண்டும் எனக்கேட்டுக் கொண்டனர்.

அந்த ஐதீகத்தின் அடிப்படையில் சீவலப்பேரி அருகேயுள்ள வனத்தினில் நின்ற மருத மரத்தில் மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஆயர்குல சிறுவர்களுக்கு கிருஷ்ணன் காட்சி கொடுத்தார். அந்த காட்சி கொடுத்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. மருத மரங்கள் நின்றதால் இந்த ஊர் மருதூர் என்றழைக்கப்பட்டது. இக்கோயில் மூலவர் கிருஷ்ணன் நான்கு அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். மூலவர் அருகே இரண்டு அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணன் இரண்டு வயது பாலகனாக  அரை சலங்கையுடன், இரு கைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள்கிறார்.

இத்தல கிருஷ்ணனுக்கு பால் பாயாசம் நைவேத்தியம் தான் அதிகமாக படைக்கப்படுகிறது. அதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். வேண்டுதல் வேண்டி பால் பாயாசம் படைத்து வேண்டுவோர் பூஜை முடிந்தவுடன் குழந்தைகளுக்கு நைவேத்தியத்தை கொடுப்பார்கள். அன்றைய தினம் பூஜையில் குழந்தைகள் எவரும் பங்கேற்கவில்லை என்றால் கோயில் அருகே அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து நைவேத்தியத்தை கொடுக்கின்றனர். குறைந்தது ஐந்து குழந்தைகளுக்காகவது நைவேத்தியத்தை கொடுக்க வேண்டுமாம். அவ்வாறு செய்தால் தான் பகவான் கிருஷ்ணன் அந்த வேண்டுதலை ஏற்றுக்கொள்கிறார் என்கின்றனர் பக்தர்கள். இத்தல கிருஷ்ணன் இரு கைகளிலும் வெண்ணெய் வைத்திருக்கிறார். காரணம் ஒரு கையில் உள்ளது அவர், தான் உண்பதற்காக எடுத்தது. மற்றொரு கையில் வைத்திருக்கும் வெண்ணெய் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருக்கிறார்.

கிருஷ்ணர் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் பஞ்சமில்லை. அவர் சந்நதி முன்னாடி தாமிரபரணி ஆறு ஓடுகிறது. மூன்று போக விளைச்சல் கொண்டது மருதூர், சீவலப்பேரி பகுதிகள். கிருஷ்ணன் கோயில் பின்னாடி கோயிலுக்குரிய தெப்பக்குளம் உள்ளது. கோயிலைச்சுற்றி மருதூர் சிவன் கோயில், துர்க்கை கோயில், ஐயப்பன் கோயில், விநாயகர்கோயில், மருதூர் அம்பாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து சீவலப்பேரி செல்லும் அனைத்து  பேருந்துகளும் மருதூர் நின்று செல்லும்.

சு. இளம் கலைமாறன்