தரிசனம்



திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது வேணுகோபாலன் ஆலயம். கண்ணன், ருக்மிணி - சத்யபாமாவுடன் அருளும் கோயில். வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.

வேணுகோபாலன், பார்த்தசாரதி, செம்பொன்ரங்கபெருமாள் ஆகிய பெயர்களுடன், பத்மாவதி, ஆண்டாளுடன் கண்ணன் அருளும் கோயில், திருவண்ணாமலையில் உள்ள செங்கம் எனும் ஊரில் உள்ளது.  தன் பரம பக்தனான ஏழை ஒருவனுக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

வேணுகோபலசுவாமி எனும் திருநாமத்துடன் கண்ணன் பாமா-ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குராயூர்-கள்ளிக்குடியில் உள்ளது. இங்கே நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை எனும் சிறப்பைப் பெற்றது. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

மூலவர் கோபிநாதராகவும் உற்சவர் கிருஷ்ணராகவும் தாயார் கோபம்மாளாகவும் அருளும் ஆலயம், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் உள்ளது. மரங்கள் மற்றும் கால்நடைகளைக் காப்பதில் இந்த கண்ணன் நிகரற்றவன்.

கேரளம், திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் அருள்கிறான் உன்னி கிருஷ்ணன். கல்லாலோ, வேறு உலோகத்தாலோ அல்லாமல் பாதாள அஞ்சனம் எனும் மூலிகையால் வடிவமைக்கப்பட்டவர் இவர். இத்தலத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட ஆயுளுடன் ஒற்றுமை மிகுந்து நலமாக வாழ்வர்.

ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணன் ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட காணிக்கைகளை இத்தலத்தில் சேர்க்கலாம் என்பது மரபு.

வெண்ணெயுண்ட மாயவன் ராதாகிருஷ்ணனாக அருளும் கோயில் மதுரை, திருப்பாலை எனும் ஊரில் உள்ளது. மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தன் கிரணங்களால் கண்ணனை வணங்கும் தலம் இது. கண்ணனின் பிராணநாடியாக விளங்கும் ராதைக்கு இங்கே தனி சந்நதி உள்ளது. வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றித் தருகிறான் இந்தக் கண்ணன்.

மதனகோபாலசுவாமி எனும் பெயருடன் பாமா-ருக்மிணியுடன், மதுரையில் கண்ணன் அருள்பாலிக்கிறான். ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன் பெரியாழ்வாருடன் வந்து இந்த மதனகோபாலரை தரிசனம் செய்து விட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

ராஜகோபாலசுவாமி, செங்கமலவல்லித் தாயாருடன் காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் கோயில் கொண்டுள்ளார். பொதுவாக வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி அருளும் திருமால், இங்கே இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அதிசயம். அனுமன் பிரம்மச்சாரியாதலால் இத்தலத்தில் அவருக்கு காவியுடையே அணிவிக்கப்படுகிறது. மகாபாரதப் போரில் வலது கையில் சங்கை ஏந்திய கிருஷ்ணரே இத்தலத்தில் ராஜகோபாலனாக அருள்கிறார்.

சென்னை ஆதம்பாக்கம் சாந்தி நகரில் உள்ளது பாண்டுரங்கன் ஆலயம். பண்டரிபுரத்தில் உள்ளது போலவே கோபுர அமைப்பு. கருவறையில் சிரித்த முகத்துடன் அருள்கிறான் கண்ணன். கேட்பவர் கேட்கும் வரங்களைத் தரும் கண்ணன் இவர்.