கண்ணனை எரித்த ராதையின் விரகம்!



பிருந்தா வனத்தின் அடர்ந்த வனப்பகுதி. அந்திசாயும் வேளை. நந்த கோப மகாராஜா தனது கரங்களில் குழந்தை கிருஷ்ணனை ஏந்திக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு சிறுமி. யார் அவள்? அவள் தான் நந்தகோபரின் ஆப்த நண்பர்  விருஷ்பானுவின் மகள். ராதை என்பது அவள் திருநாமம். விண்ணுலகாம் வைகுண்டத்தை விட்டு, பரந்தாமன் பூலோகம் வரும்போது அவனது போக சக்தியான இவளும் அவனை விட்டுப் பிரியேன் என்று அவனுக்கு முன்னரே பூலோகம் வந்து விட்டாள். இவளை ஆட்கொள்ள மாதவன் ஒரு அழகான நாடகம் ஆடப் போகிறான் என்பதை அறியாமல் பேதை அவள் நந்த கோபருடன் வனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அப்போது உலகுண்ட பெருவாயன் வானத்தைப் பார்த்து ஒரு புன்னகைப் பூத்தான். உடன் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. மின்னல் மின்னி ஒரு இடி சப்தமும் கூடவே கேட்டது. அதைக் கண்டு பயந்தவன் போல கள்ளக் கண்ணன் அழ ஆரம்பித்தான். அவன் அழுவதை தாங்காத நந்தபாபா, ராதையை நோக்கி பேச ஆரம்பித்தார்.  “அம்மா! ராதா. இதோ இந்தக் கண்ணன், பச்சிளம் குழந்தை. இவன் இந்த இடி சப்தத்தையும் மின்னலையும் கண்டு மிகவும் அச்சப் படுகிறான். ஆகவே இவனை நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டு ஒரு முக்கியமான வேலையை கவனிக்கச் செல்கிறேன். நீ இவனை கண்ணும் கருத்துமாக இல்லம் சேர்த்து விடு’’ என்று கண்ணனை ராதையின் கைக்கு மாற்றிய படியே நந்த மகாராஜா சொன்னார். கண்ணனும் அவளது கைகளுக்கு துள்ளித் தாவினான்.

 ''கவலைப் படாமல் சென்று வாருங்கள் கண்ணனை கண்ணின் மணிபோல நான் பார்த்துக் கொள்வேன்'' என்று ராதை நந்தருக்கு தைரியம் ஊட்டினாள். ''அந்த நம்பிக்கையில் தான் நான் செல்கிறேன். கண்ணனும் நீயும் பத்திரம். நான் வருகிறேன்'' என்றபடி நந்தர் நடக்க ஆரம்பித்தார். அவர் கண்ணை விட்டு மறையும் வரை காத்திருந்த கண்ணன், அவர் கண்ணை விட்டு மறைந்ததும் தான் மறைந்து போனான். ராதை அவனை காணாமல் “கண்ணா கண்ணா” என்று அலறினாள். அப்போது வானத்துக்கும் பூமிக்குமாக ஒரு ஜோதி தோன்றியது.''இதோ நான் இங்கிருக்கிறேன் ’’என்று விசித்திரமாக குரல் வேறு கொடுத்தது அது. ராதை புரியாமல் விழித்தாள்.

 அப்போது அந்த ஜோதி, மறையை காத்த மீனாய், மந்தர மலையை தாங்கும் ஆமையாய், பூமியை காத்த வராகமாய், இரண்யனைப் பிளந்த நரசிங்கனாய், உலகளந்த வாமனனாய், பரசுராமனாய், ராவணன் சிரத்தைக் கொய்த ராமனாய், அஹிம்சை போதித்த புத்தனாய், கலப்பை ஏந்திய பலராமனாய், உலகை அழிக்கும் கல்கியாய் , பலவிதமாக காட்சி தந்தது. ( த்ருத தச வித ரூப ஜய ஜெகதீஷ ஹரே ) ராதைக்கு நடப்பது அனைத்தும் விந்தையாகவும் விசித்திரமாகவும் இருக்கவே வாயடைத்துப் போனாள். அவள் சுதாரிக்கக் கூட அந்த மாயவன் அவகாசம் தரவில்லை.

இப்போது சங்கு சக்ர கதா தாரியாக, நீலமணி வண்ணனாக காட்சி தந்தான்.ராஜாக்கள் எல்லாம் தாங்கள் வென்ற நிலத்தை குறிக்க ஒரு அறிகுறியை அங்கு விட்டுச் செல்வார்கள். அதுபோல மாயனை முழுதாக வென்ற மகாலட்சுமியின் அடையாளங்கள் அவனது உடலெங்கும் வியாபித்திருந்தது.  அதைக் கண்டதும் ராதைக்கு தான் ஜீவாத்மா என்பதும் கண்ணன் பரமாத்மா என்பதும் நன்கு விளங்கியது. வேதங்களும் ''ஹிரீச்ச தே லட்சுமீச்ச பத்ன்யௌ'' என்று பிராட்டியைக் கொண்டு தானே மாதவனை அடையாளம் காட்டுகிறது. அப்படி இருக்க ராதையும் அவளைக் கொண்டே அவனை இனம் கண்டு கொண்டதில் வியப்போன்றும் இல்லையே. அவன் யார் என்பதை அறிந்த உடன் ஜீவாத்மாவான ராதை பரமனை துதிக்க ஆரம்பித்தாள். அதுவும், எப்படி பெரியாழ்வார் இறைவனது திருமேனிக்கு எந்த தீங்கும் வரலாகாது என்று பல்லாண்டு பாடினாரோ அது போலவே இவளும் பல்லாண்டு பாடுகிறாள். ஜய ஜய தேவ ஹரே என்று. (அஷ்டபதி - 2).

பலவிதமாக காட்சி தந்து மகிழ்வித்த இறைவன் இப்போது சட்டென்று மறைந்து போனான். ராதை அவனை எங்கு தேடியும் காணாமல் பிருந்தாவனத்தின் ஒரு அடர்த்தியான பகுதியில் சோகமாகவும் சோர்வாகவும் அமர்ந்தாள். அப்போது வசந்த காலம் வேறு. அந்த காலத்தில் வீசும் தென்றலும், அதில் கலந்து வரும் புஷ்பங்களின் நறுமணமும், பௌர்ணமி நிலவில் ஒளியும் ராதையின் பிரிவாற்றாமையை வெகுவாகத் தூண்டியது. அப்போது ராதையின் ஒரு தோழி ''கண்டேன் கண்ணனை'' என்ற நல்ல செய்தியுடன் வருகிறாள்.

ராதைக்கு அந்த வார்த்தைகள் அம்ருதம் போல இனித்தது. ''கண்ணனைக் கண்டாயா? எங்கு கண்டாய்? எப்படி கண்டாய்? எப்போது  கண்டாய்? அவன் என்ன செய்து கொண்டிருந்தான்’’என்று ஆர்வமிகுதியால் பல கேள்விகளை ஒரே மூச்சாக ராதை கேட்டாள்.  ''நான் அவனைப் பார்த்த போது அவனது உடம்பெங்கும் சந்தனம் மணத்துக் கொண்டிருந்தது. பீதாம்பரமும் பல பொன்னாபரணங்களும் அவனது பூவுடலை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவனது மகர குண்டலத்தின் பிம்பம் அவனது கண்ணாடிக் கன்னத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அவனது முகம் சந்திரன் போல மின்னியது. எப்படி சகோர பட்சி என்னும் ஒரு வகைப் பறவை சந்திரனின் ஒளியை விழுங்கியே ஜீவிக்குமோ அதுபோல ஒரு கோபி அவனது மதி முகத்தை பருகியே முக்தி அடைந்தாள். நான் பார்த்த போது இது தான் நடந்தது'' என்று ராதையின் தோழி பதிலுரைத்தாள். ( சந்தன சர்சித நீல களேவர பீத வசன வனமாலி)

அதைக் கேட்ட ராதைக்கு மார்பில் இடி பாய்ந்தது போல இருந்தது. அவனையே நினைத்து நான் இங்கு வாடிக் கொண்டிருக்க அவன் வேறு ஒருத்திக்கு முக்தி தருவதா என்று மனமுடைந்து போனாள். ''ஓ என் சகி! என் பாக்கியம் அவ்வளவு தான் போலும். அவனுக்கு உதவாத நான் இருந்து என்ன பயன்?  அவன் செய்த காரியம் கேட்டு என் உள்ளம் குமுறுகிறது அவனை வெறுக்க நினைக்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை. அவனது பவள இதழும் அதில் அவன் வைத்து ஊதும் புல்லாங்குழலும் என்ன என்னவோ செய்கிறது. அந்த புல்லாங்குழலுக்கு கிடைத்த பாக்கியம் எனக்கு இல்லையே என்று தவிக்கிறேன்.

( சஞ்சர அதர சுதா மதுர த்வனி). அவனின்றி இனி இந்த உடலில் ஜீவன் தங்காது. ஆகவே, இறுதியாக எனக்காக அவனிடம் ஒரே ஒரு தூது மட்டும் செல். முன்னம் ஒரு நாள் அவன் என்னை நந்தவனம் வரச் சொன்னான். நானும் சென்றேன். அவனை அங்கு காணவில்லை. மண்ணுண்ட அவனது வாயில் உண்மையை எதிர்பார்த்த எனது பேதமையை நொந்து கொண்டேன். அப்போது பின் புறமாக வந்து என்னை பயமுறுத்தினான் அவன். பிறகு சொல்லவும் வேண்டுமோ? இந்த அபலைக்கு அபயம் அளித்தான். இப்படி எல்லாம் செய்துவிட்டு  இப்போது என்னை மறக்கலாமா? என்று அவனிடம் கேள். அவன் என்னை மறந்தால், ''மாசுச'' ( என்னை சரண் அடைந்து விட்டாய் அல்லவா, இனி கவலையை விடு.) என்று கீதையில் அவன் சொன்னதை யார் நம்புவார்கள். இவ்வாறு அவனிடம் நான் கேட்டதாக சொல்.

நீ நிச்சயம் எனக்கு இந்த தூது போகத்தான் வேண்டும் செய்வாய் தானே?'' என்று ராதை தன் தோழியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சுகிறாள். (நிப்ருத நிகுஞ்ச கிருகம் கதயா படு சாடு....). இதைக் கேட்ட தோழி ராதையை ஒருவாறு தேற்றி விட்டு கிருஷ்ணனிடம் தூது போகிறாள். அவனோ கோலப் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருந்தான். அவனிடம் விஷயத்தை சொன்னாள், ராதையின் தோழி. அதைக் கேட்ட கண்ணனுக்கு கவலை மேலிட்டது. ராதையை வஞ்சித்து விட்டோமோ என்ற குற்ற உணர்வில் பித்து பிடித்தவன் போல ஆனான்.

 ''ராதா ராதா''என்று புலம்பிக் கொண்டே பிருந்தாவனத்தில் திரிந்தான் அந்த மாயவன்.  பக்தன் ஒன்று கேட்டு அதை அவன் ஊழ்வினை காரணமாக தரவில்லை என்றால் அந்த பக்தனை விட அதிகம் கவலை கொள்வது மாயவன் தான். ராவண வதம் முடிந்தபின் ராமனை விபீஷணன் இலங்கையில் தங்குமாறு வேண்ட, ‘‘நான் முன்னமே பரதனை வஞ்சித்து விட்டேன். இப்போது தாமதமாக சென்று அவனை வஞ்சித்தால் அந்தத் துயரத்தை என்னால் தாங்க முடியாது. ஆகவே எனக்கு விடை கொடுப்பாய் விபீஷணா.!'' என்றான். இந்த அவனுடைய கூற்று கண்ணனின் இப்போதைய நிலையை நன்கு விளக்குகிறது அல்லவா? வருத்தத்தில் இருக்கும் மாதவனை மேலும் வருத்த அவனது சொந்த மகன் மன்மதன், புஷ்ப பாணங்களைக் கொண்டு வந்துவிட்டான். அவனைக் கண்டதும் கண்ணன் மேலும் புலம்ப ஆரம்பித்தான்.

  ''ஓ மன்மதா! நான் உடலில் பூசியிருப்பது சந்தனம் - விபூதி இல்லை. நான் அணிந்திருப்பது துளசி -  வில்வம் இல்லை. நான் சூடிக்கொண்டிருப்பது தாமரை மாலை  - வாசுகி இல்லை. என் கழுத்தில் நீல நிறத்தில் மின்னுவது நீலோத்பல மலர்  - ஆலகால விஷம் இல்லை. ஆகவே என்னை உமாபதியான ஈசன் என்று நினைத்துக் கொள்ளாதே. நானே ராதையைப் பிரிந்து வாட்டத்தில் உள்ளேன். என்னை மேலும் துன்புறுத்தாதே!’’ என்று தன் எதிரில் நின்ற மன்மதை நோக்கி கதறுகிறான் கேசவன். இதே மன்மதனை நர நாராயண அவதாரத்தில் வெற்றி கொண்டதை மறந்துவிட்டான் போலும். ( ஹ்ருதி விசலதா ஹாரோ....).

இவன் இப்படி புலம்பிக் கொண்டிருக்க, மற்றொரு ராதையின் தோழி, கண்ணனிடம் வருகிறாள். ''கண்ணா! நீ செய்தது நியாயமா?  உன்னைப் பிரிந்த ராதை எப்படியெல்லாம் வருந்துகிறாள் தெரியுமா? சந்தனத்தை எடுத்து மார்பில் பூசினால் ஏன் நெருப்பை மார்பில் தடவுகிறாய் ? என்கிறாள். கண்ணன் இல்லாமல், நிலவொளி சுடுகிறது என்று ஏங்குகிறாள். அவள் கழுத்தில் அணிவித்த தாமரை மாலையைத் தாங்கக் கூட சக்தி இல்லாமல் கீழே விழுகிறாள். அந்த அளவு இளைத்து விட்டாள். நீ இல்லாமல் அனைத்தையும் வெறுக்கிறாள்.'' என்று ராதையின் நிலையை கண்ணனிடம் கூறுகிறாள்.

 ( ஸ்தனபின்னிஹிதம் அபி ஹாரம் முதாரம்...) இதையெல்லாம் கேட்ட கண்ணன் இடி கண்ட சர்ப்பம் போல் துடித்தான். மெல்ல சுதாரித்துக் கொண்டு அடுத்து செய்ய வேண்டியதை தீர்மானித்தான்.  தனக்கு விஷயத்தை சொன்ன தோழியை நோக்கி பேச ஆரம்பித்தான்.  ''இதற்கு மேல் பொறுக்க முடியாது. ராதையின் கர்ம வினை தடுத்தாலும் இனி அவளை நான் விடேன். பேதை அவள் என்ன செய்வாள் பாவம். ஆகவே, சகி நான் இங்கேயே இருக்கிறேன் நீ அவளை இங்கு அழைத்து வா. அவளுக்கு நான் அபயம் அளிக்கிறேன். ஒரு கணம் கூட தாமதிக்காமல் இதை நீ செய்து தரவேண்டும்! புரிகிறதா? '' என்று தோழிக்கு கட்டளை இட்டான் மாயவன். (அஹமிஹ நிவசாமி யாஹி ராதா...)

தோழி ராதையிடம் வந்தாள். ''ராதா நீ எப்படி பிரிவற்றாமையினால் கவலைக்கிடமாக உள்ளாயோ, அது போலவே தான் கண்ணனும் உன்னைப் பிரிந்து வருந்துகிறான். எப்போதும் வித விதமான ராக ஆலாபனைகள் செய்யும் அவனது புல்லாங்குழல் இன்று ‘ராதா ராதா’’என்று சோக கீதம் பாடுகிறது. உனக்காக அந்த இறைவனே காத்திருக்கிறான்.  உடன் அவனை நாடிச் செல். திருமகளை எப்படி மார்பில் தாங்குகிறானோ, அதுபோலவே நீயும் அவனால் ஆட்கொள்ளப் படுவாய். தாமதம் வேண்டாம் உடன் செல்.'' என்று ராதைக்கு அறிவுரை வழங்குகிறாள் அவளது தோழி. பிறகு அவளை அழைத்துக் கொண்டு பிருந்தாவனத்தில் கண்ணன் சொன்ன இடத்தில் அமர வைத்தாள். பின்பு கண்ணனை அழைத்து வருவதாகக் கூறி, கண்ணனை நாடிச் செல்கிறாள். ராதையின் தோழி. நொடிகள் நிமிடங்களாகி உருண்டோடியது. ஆனால் கண்ணன் வந்த பாடில்லை. காத்திருந்து காத்திருந்து பூத்துப் போன ராதை ,கண்ணன் என்ன செய்து கொண்டிருப்பான்? என்று யூகித்துப் பார்த்து பயந்து போனாள்.  

''என்னை விட சிறந்த ஒரு பக்தை இன்று கண்ணனின் தரிசன பாக்கியம் பெற்றிருப்பாள், அவள் நற்கதி அடைந்திருப்பாள். நானோ இங்கு என்னுடைய இளமையையும் அழகையும் வாழ்நாளையும் வீணடிக்கிறேனே! அந்தோ! சொன்ன நேரத்தில் அந்த ஹரி வரவில்லையே. தோழியின் சொல்லைக் கேட்டு மோசம் போனேனே. உலகையே அளந்தவன்,  என் தோழியிடம் பொய் சொல்லி அளக்க மாட்டான் என்று நம்பிய நான் ஒரு மதி இல்லாதவள்தான்.'' என்று  புலம்பித் தள்ளுகிறாள் ராதை. கண்ணன் இல்லாததால், வாழ்வையே வெறுத்த மாபெரும் தவஸ்வினி அந்த ராதை.

 ''மானிடர்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்'' என்று ஆண்டாள் சொன்னதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. வேறு ஒரு பக்தையிடம் அவன் சென்றிருப்பானோ?  என்ற அவளது ஏக்கம் அவளது பிரிவாற்றாமையின் உச்சம்.  கண்ணன் கோகுலத்தை விட்டு மதுரா புரிக்கு சென்றதும் கோபிகைகள் கண்ணனை பிரிந்து துன்பப் பட்டார்கள். இதை உணர்ந்த கண்ணன், உத்தவரை அவர்களிடம் தூது அனுப்புகிறான். அந்த உத்தவர் கோபிகைகளிடம் ''நீங்கள் கண்ணனை நினைக்கும் நினைவில்( பாவனையில்) பாவ ரூபமாக என்றும் அவன் உங்களுடனேயே இருக்கிறான். ஆகவே பெரிய யோகிகளை விட நீங்களே சிறந்தவர்கள். இப்படி பாவ ரூபத்தில் அவனை அடைவதே எளிய சிறந்த வழி''என்கிறார்.

ஆக உண்மையான பக்தர்களை இறைவன் என்றும் பிரிவதில்லை. ராதையையும் அவன் பிரியவில்லை என்பது தெரிய வருகிறது. அவள் தபசின் உன்னத நிலையை அடைந்ததும் அவன் தேடி வந்து அருளப் போகிறான். அந்நிலைக்கு அவளை உயர்த்தவே பிரிவு என்னும் நாடகத்தை ஆடுகிறான் அவன். கண்ணனின் பிரிவின் வேதனை தாங்காமல் விம்மி விம்மி களைப்பில் ராதை உறங்கிப் போனாள். பொழுது விடிந்ததும், யாரோ வந்து ராதையை தட்டி எழுப்பினார்கள். ராதை திடுக்கிட்டு எழுந்து பார்க்கிறாள். வந்தது வேறு யாருமில்லை சாட்சாத் கண்ணன்தான்.

ஆனால், அவனது கோலம் அவளை பாடாய்ப் படுத்தியது. கோபி சந்தனம் கலைந்திருக்க, கேசங்கள் எல்லாம் குலைந்திருக்க, பீதாம்பரம் கசங்கி இருக்க, இரவில் உறக்கம் இல்லாததால் கண்கள் சிவந்திருக்க எதிரில் நிற்கும் கண்ணனைக் கண்டு ஆவேசத்தின் உச்சத்திற்கே சென்றாள் ராதை. ''இரவில் வேறு ஒருத்தியுடன் ஆடிப் பாடி கூத்தடித்து விட்டு இப்போது என்னிடம் வந்திருக்கிறாயா? சந்தோஷம். யாருடன் இரவெல்லாம் களித்தாயோ அவளிடமே செல். ஆனால், அந்த வழியில் இந்த ராதையின் சோகக் கண்ணீர் இருக்கும் என்பதை மறவாதே!'' என்று ராதை கண்ணனை கோபத்தில் பொறித்து தள்ளினாள். கேசவன் எதையோ சொல்லி சமாளிக்க வருகையில், ''போதும் உன் பிதற்றல். செல் இங்கிருந்து. உன் கோலமே நீ சொல்வதனைத்தும் பொய் என்பதற்கு கண்கூடான சாட்சி. செல்'' என்று கத்தினாள். (ரஜனி ஜனித குரு ஜாகர...)

கண்ணன் என்ன பேசுவது என்று அறியாமல் மெல்ல அங்கிருந்து அகன்று விட்டான். ராதா சோகமே வடிவாகி வேரோடு சாய்ந்து மரம் போல் கிழே விழுந்து கதறினாள். ''யாரையும் நாடிச் செல்லாத தாமரை பாதங்கள் அவை. அவை என்னை நாடி வந்த போது அதனை துரத்தி விட்டேனே. முன்னம் ஒரு முறை பலிச் சக்கரவர்த்தியை நாடிச் சென்றது அந்த பாதம். அவன் அதற்கு தலை வணங்கினான். அவனுக்கு யாருக்கும் கிடைக்காத பெறு கிட்டியது. நான் அந்த பாதங்களை துரத்தி விட்டு அபாக்யவதியாகி விட்டேன். அந்தோ கெட்டேன்'' என்று ராதை மனமுடைந்து அழுதாள். அப்போது அவளது தோழிகள் அவளது கவலையை மேலும் அதிகரித்தார்கள்.  

''ஏனடி… அவனை விரட்டினாய். இந்த வீசும் பனிக் காற்றில் அவன் நாடி வந்தது உன்னைத் தானே. தேடி வந்த செல்வத்தை ஓட விரட்டி விட்டாயே, பாதகி! அவனது தயாள குணத்தை நீ அறிய மாட்டாயா? குகனையும், சுக்ரீவனையும், விபீஷணனனையும் சகோதரர்களாக பாவித்து கட்டி அணைத்தவன் அல்லவா அவன். அது போல இன்றும் யாருக்காவது அருளியிருப்பான். அதனால் அவனது அலங்காரம் குலைந்திருக்கும். ஆதிமூலம் என்ற யானைக்காக ஒடியவன் அவன். அது போல இன்றும் ஓடியிருப்பான். அவனை குறை கூற நாம் யார்? அவன் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன் ஆயிற்றே'' என்று ராதையை ஏசி அவளுக்கு நல்ல புத்தியை காட்டினார்கள் தோழிகள். நிகழ்ந்தவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்தான். அந்த அந்தி வேளையில் இளஞ்சூரியனைப் போல கண்ணன் ராதையை நாடி வந்தான்.

 முன்பு அவனை திட்டிய ராதை , அவனை எப்படி சந்திப்பது என்று புரியாமல் அவனுக்கு முகம் கொடுக்காமல் திரும்பி அமர்ந்துக் கொண்டாள். ‘‘ராதா! சொன்ன சமயம் வராதது என் குற்றம் தான். இருந்தாலும் இந்த எழையை கருணையே வடிவான நீ பொறுக்கக் கூடாதா. வேண்டுமென்றால் ஒன்று செய். உன் பாத கமலங்களை என் தலையில் வை!,  அப்படியாவது உன் கோபம் தணிகிறதா பார்ப்போம்'' என்று கண்ணன் ராதையின் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான். (ஸ்மர கரல கண்டனம் மம சிரசி மண்டனம். அஷ்டபதி -19 - இவ்வரிகள் கண்ணனே நேரில் வந்து எழுதி அங்கீகரித்தவை.) எல்லாருடைய சரணாகதியையும் ஏற்கும் பகவானது சரணாகதி ராதையால் அங்கீகரிக்கப்பட்டது.

 பிறகு தோழிகளால் ராதை நன்கு அலங்கரிக்கப்பட்டாள்.  அலங்காரத்தில் சர்வாங்க சுந்தரியாக பிரகாசித்த ராதை என்னும் ஜீவாத்மா, பரமாத்மாவுடன் கலந்தாள். முதலில் ஜீவாத்மாவை பரமன் தனது அளப்பரிய கருணையால் ஆட்கொள்கிறான். அவனை அடையவிடாமல் இந்திரியங்கள் என்னும் தோழிகள் அவனைப் பற்றி இல்லாதவற்றை சொல்கிறது. பிறகு கட்டுக்கடங்காத இந்திரியங்களை சிறிது சிறிதாக அவனிடம் தூது அனுப்பி அவனது அருமையை ஜீவாத்மா உணர்ந்துகொள்கிறது.  முன் செய்த வினையெல்லம் ஓய்ந்தபின் இந்திரியங்களும், (தோழிகளும்) அவனை   உணர்ந்து அவனது அருமை பெருமைகளை சொல்லி ஜீவனை தேற்றுகிறது.  பின்பு, கண்ணனின் சம்பந்தத்தால் மாயயை ஒழித்த ஜீவாத்மா, இந்திரியங்களோடு கூடி அவனை அடைகிறது. இதுவே இந்த மாபெரும் காவியத்தின் பொருள். நாமும் ஒருநாள் அவனிடம் கலக்க வேண்டும் அல்லவா அதற்கு வழிகாட்டியாக இந்த கீத கோவிந்தத்தைக் (அஷ்டபதி) கொண்டு அவனை அடையக் கூடிய பாதையில் முன்னேறுவோம்.

வந்தது வேறு யாருமில்லை சாட்சாத் கண்ணன்தான். ஆனால், அவனது கோலம் அவளை பாடாய்ப் படுத்தியது. கோபி சந்தனம் கலைந்திருக்க, கேசங்கள் எல்லாம் குலைந்திருக்க, பீதாம்பரம் கசங்கி இருக்க, இரவில் உறக்கம் இல்லாததால் கண்கள் சிவந்திருக்க எதிரில் நிற்கும் கண்ணனைக் கண்டு ஆவேசத்தின் உச்சத்திற்கே சென்றாள்

ஜி.மகேஷ்