புன்னகை ராமாயணம் கேட்கும் புனிதன்



*வடுவூர்
*கார்த்திகை மாத பவித்ர உற்சவம் 6-12-2019 முதல் 12-12-2019 வரை


வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில் பவித்ர உற்சவம் புன்னகை ராமாயணத்தைக் கேட்கும் புனிதன் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில், தஞ்சாவூர் - மன்னார்குடி மார்க்கத்தில் உள்ள வடுவூர் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ள கோதண்டராம ஸ்வாமி திருக்கோயிலில் பவித்ர உற்சவம் நடைபெறும். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவமானது, கார்த்திகை பௌர்ணமியில் நிறைவடையும். இவ்வுற்சவம் இந்த வருடம் டிசம்பர் மாதம் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினந்தோறும் கோதண்டராமனுக்கும், சீதைக்கும், லட்சுமணனுக்கும், ஆஞ்ஜநேயருக்கும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, நான்கு வேத பாராயணமும், நாலாயிர திவ்வியப் பிரபந்த பாராயணமும் ஹோமங்களும் வெகு சிறப்பாக நடைபெறும். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், அந்த மாலை வேளையில், ராமபிரான் திருமுன்பே மந்தஸ்மித ராமாயணம் பாராயணம் செய்யப்படும்.

அது என்ன மந்தஸ்மித ராமாயணம்? 20-ம் நூற்றாண்டில் வடுவூரில் வாழ்ந்து வந்த ஆசுகவி நிதி சுவாமிகள், தினந்தோறும் மாலை கோதண்ட ராமனைச் சென்று தரிசிப்பார். வடுவூர் ராமனின் சிறப்பம்சமே அவரது அழகிய புன்னகையாகும். அந்தப் புன்னகையில் மிகவும் ஈடுபட்ட ஸ்ரீநிதி சுவாமிகள், ஒவ்வொரு நாளும் ராமனின் புன்னகைக்கான காரணத்தை வினவும் விதமாக ஒரு ஸ்லோகம் இயற்றி அதனை அவன் விண்ணப்பம் செய்து அதனைப் பதிவு செய்தும் வந்தார்.

“அன்று நீ கௌசல்யா தேவியின் மகனாக அவதரித்த போது, உன் அன்னையைப் பார்த்துப் புன்னகை பூத்தாயே! அதை எனக்குக் காட்டத்தான் இன்று வடுவூரில் புன்முறுவல் பூத்த படி காட்சி தருகிறாயோ?”,“அன்று வில்லை முறித்து விட்டுச் சீதையைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தாயே! அதை எனக்குக் காட்டவே இங்கு புன்னகை அரசனாக வந்து குடிகொண்டுள்ளாயோ?”,“அன்று சபரி தந்த இனிய கனிகளை உண்டு அவளைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தாயே! அதை எனக்கும் காட்டி அருள்வதற்காகத் தான் இங்கு புன்னகை தவழும் முகத்தோடு காட்சி தருகிறாயோ?” என்றெல்லாம் பலவாறான காரணங்களைக் கூறி, தினம் ஒரு ஸ்லோகமாக எழுதி வந்தார்.

இப்படி தினந்தோறும் அவர் ஸ்லோகங்கள் எழுத, ஏறத் தாழ ஓர் ஆண்டுக்குள், ராமாயணத்தில் நடந்த அனைத்து சம்பவங்களையும் குறிப்பிட்டு சுமார் 317 ஸ்லோகங்களை அவர் இயற்றி விட்டார். அவற்றை மொத்தமாகத் தொகுத்த போது, அதுவே ஒரு ராமாயணமாக ஆகி விட்டது. ராமனின் புன்னகையைக் குறித்து எழுந்த ராமாயணம் என்பதால், வடமொழியில் ‘மந்தஸ்மித ராமாயணம்’ என்றும், தமிழில் ‘புன்னகை ராமாயணம்’ என்றும் இந்நூல் அழைக்கப்படுகிறது. மந்தஸ்மிதம் என்றால் மெல்லிய புன்னகை என்று பொருள்.

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் புன்னகை ராமாயணத்தை இயற்றிய ஸ்ரீநிதி சுவாமிகளின் அவதார நாளான கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம், வருடந்தோறும் வடுவூர் ராமனின் பவித்ர உற்சவத்தின் நிறைவு நாளை ஒட்டியே வரும். பலவிதமான ராமாயணங்கள் இதுவரை பல மொழிகளிலே வந்திருந்தாலும், அவை எதுவுமே ஒரு குறிப்பிட்ட திருத்தலத்தில் உள்ள ராமனைப் பற்றியதாக இல்லாமல், பொதுவாக ராமனின் வரலாற்றைச் சொல்வதாகவே அமைந்துள்ளன.

ஆனால், இந்தப் புன்னகை ராமாயணமோ பிரத்தியேகமாக வடுவூரில் கோயில் கொண்டுள்ள கோதண்டராமனின் புன்னகையை வைத்தே எழுதப்பட்ட ராமாயணமாகும். அதுவும் நாராயணீயம் எனும் காவியத்தில், நாராயண பட்டத்திரி என்பவர், குருவாயூரப்பனை முன்னிலைப் படுத்தி வினா எழுப்பும் பாணியில் பாகவத புராணம் முழுவதையும் பாடியது போல், வடுவூர் ராமபிரானை முன்னிலைப் படுத்தி அவன் புன்னகையின் பின்னணியை வினவுவது போன்ற கேள்விகளாலேயே ராமாயண வரலாற்றை உணர்த்தும் காவியம் இந்தப் புன்னகை ராமாயணம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே, கார்த்திகை மாதப் பவித்ர உற்சவத்தில் ஏழு நாட்களிலும் மாலை ஐந்து மணி அளவில், வடுவூர் ராமன், தனது புன்னகையைக் குறித்து எழுந்த அந்தப் புன்னகை ராமாயணத்தை ஆனந்தமாகக் கேட்டுப் புன்னகைக்கிறான். ஆசுகவி நிதி சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களோ அவர்களின் ப்ரதிநிதியோ ஒவ்வொரு ஸ்லோகமாகப் பாராயணம் செய்ய, அதன் நிறைவிலே அர்ச்சகர் “ஓம் மதே ராமாய நம:’’ என்று கூறிப் புன்னகைப் புனிதன் திருவடியிலே மலர் தூவுவதும் கண்களையும் நினைவையும் விட்டு நீங்காத காட்சி. வாருங்கள்! நாமும் அந்தப் புன்னகையையும் புன்னகை ராமாயண பாராயணத்தையும் ரசிப்போம்! பாராயண நிறைவில் நாள் தோறும் புன்னகைப் புனிதனின் பிரசாதமான புனிதமான சர்க்கரைப் பொங்கலையும் சுவைத்து இன்புறுவோம்!

* குடந்தை உ.வே. வெங்கடேஷ்