தெளிவு பெறுஓம்



* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் உண்டா?  யாழினி பர்வதம், சென்னை- 78,

இங்கே கோடி என்ற வார்த்தை எண்ணிக்கையைக் குறிக்காது. கோடி என்ற வார்த்தைக்கு முனை, இறுதி, கடைசி அல்லது முடிவு என்ற பொருள் உண்டு. உதாரணத்திற்கு தெருக்கோடியில் ஒரு கடை இருக்கிறது என்று பேச்சு வாக்கில் சொல்வார்கள். அதாவது தெருவின் முனையில் ஒரு கடை உள்ளது என்று பொருள். தனுஷ்கோடி என்ற பகுதி நமது நாட்டின் நிலப்பரப்பின் முனையில் அமைந்திருக்கும். இந்த சப்த கோடி மந்திரங்கள் என்பதும் ஒரு வாக்கியத்தின் முனையில் அமைந்திருக்கும்.

“நம:, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, லம், வஷட், வௌஷட்” ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன. இவை வெறும் ஏழு வார்த்தைகள்தானே தவிர ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது. என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது. ஒரு வாக்கியத்தை முழுமை அடையச் செய்வதோடு அதற்குண்டான முழுமையான பலனையும் தருகின்ற சக்தி இவற்றிற்கு உண்டென்பதால் இந்த ஏழும் சப்தகோடி மந்திரங்கள் என்ற பெயரில் சிறப்பு பெறுகின்றன.

* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன? வைணவத்தில் உள்ளது போல் சைவத்தில் எந்த திருத்தலங்களாவது நாயன்மார்களால் திவ்யக்ஷேத்திரங்களாக முத்திரையிடப்பட்டு இருக்கிறதா?
- சந்திரசேகரன், வில்லிவாக்கம்.


தலத்தின் தனிப் பெருமையை விளக்கிச் சொல்வதே மங்களாசாஸனம். ஒவ்வொரு ஆலயத்திற்கும் பெருமாளை வழிபட வந்த ஆழ்வார்கள் முதலான பெரியோர்கள் அந்த ஆலயத்தின் தனித்துவம் குறித்தும், மூலவரின் சாந்நித்தியம் மற்றும் மகத்துவம் குறித்தும் பாடல்களையும் ஸ்லோகங்களையும் அருளிச் செய்து பெருமாளைச் சேவித்திருப்பார்கள். அவ்வாறு அந்த ஆழ்வார்கள் முதலான வைணவப் பெரியோர்கள் ஆலயத்தின் மகத்துவம் குறித்துத் தெரிவித்துச் சென்றதை மங்களாசாசனம் என்ற பெயரில் அழைப்பார்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் மங்களாசாசனம் என்பது வெவ்வேறு விதமாக இருக்கும். ஆலயத்தில் நடைபெறும் பூஜையின்போது பூஜை செய்யும் பட்டாச்சாரியார்கள் இந்த மங்களாசாசனத்தைச் சொல்லக் கேட்கலாம். வைணவத்தில் 108 திவ்யதேசங்களை விசேஷமாகச் சொல்வது போல, சைவ சமயத்தில் 1008 சிவாலயங்கள் உள்ளதாகச் சொல்வார்கள்.

பெரும்பாலும் தமிழ்நாட்டிலேயே இடம் பெற்றிருக்கும் இந்தச் சிவாலயங்கள் அனைத்துமே அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர்களால் பாடல் பெற்ற ஸ்தலங்களே ஆகும். ஒவ்வொரு ஊரில் உள்ள சிவாலயத்திலும் அந்த ஸ்தலத்தின் பெருமையைப் போற்றும் வகையிலான தேவாரப் பாடல்களை எழுதி வைத்திருப்பார்கள். அந்தப் பாடலைக்கொண்டு அந்த ஸ்தலத்தின் மகிமையை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். நாம் அன்றாடம் வழிபடும் பழங்காலத்திய சிவாலயங்கள் அனைத்துமே சமயக்குரவர்களால் பாடல்பெற்ற திருத்தலங்களாகத்தான் இருக்கும். அந்த விவரங்களை அந்தந்த ஆலய அர்ச்சகரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

* குடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்கிறார்கள். இது வீட்டிற்கு எதிரில் இருக்கக்கூடாதா அல்லது வீட்டிற்குள் நுழைபவர்களின் எதிரில் இருக்கக்கூடாதா? விளக்கமாகச் சொல்லுங்கள்.
- பி.எல்.பிரபா, சென்னை -102.


வீடு க்ருஹப்ரவேசம் செய்யும்போது எதிர்வெள்ளி கூடாது என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். எதிர்வெள்ளி கூடாது என்றால் வீட்டிற்குள் நுழையும் திசையில் வெள்ளி இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஒரு வீட்டின் தலைவாயில் என்பது கிழக்கு நோக்கி இருப்பதாக வைத்துக்கொள்வோம். மரத்தால் செய்யப்பட்ட அந்த வாயிலுக்கு வீட்டின் எஜமானர் தனது இல்லத்தரசியுடன் இணைந்து பூஜை செய்து தம்பதியராக உள்ளே நுழைவார்கள். கிழக்கு நோக்கிய தலைவாயிலாக இருந்தால் இவர்கள் மேற்கு நோக்கி உள்ளே நுழைவார்கள்.

அவ்வாறு நுழையும்போது மேற்கு திசையில் வெள்ளி இருக்கக் கூடாது என்பதைத்தான் ஜோதிடர்கள் வலியுறுத்துகிறார்கள். கிழக்கு நோக்கிய வாயிலுக்கு மேற்கில் வெள்ளி இருக்கும்போதும், மேற்கு நோக்கிய வாயிலுக்கு கிழக்கில் வெள்ளி இருக்கும்போதும் குடிபுகுதல் கூடாது. வடக்கு அல்லது தெற்கு நோக்கிய வாயில் கொண்ட வீடுகளுக்கு இந்தப் பிரச்னை கிடையாது.

இந்த விதியானது தனி வீடுகளுக்குத்தான் விதிக்கப்பட்டுள்ளதே தவிர அடுக்கு மாடி குடியிருப்பு அதாவது ஃப்ளாட்டுகளுக்குப் பொருந்தாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீண்ட காலத்திற்கு வெள்ளி மேற்கிலேயே இருக்கிறார் எனும்போது கிழக்கு பார்த்த வாயில் கொண்ட தனி வீடுகளுக்கு இந்த காலத்தில் புதுமனைபுகுவிழா நடத்த முடியாதா, நீண்ட நாட்களுக்கு இந்த வீடுகள் மூடித்தான் கிடக்க வேண்டுமா என்ற ஐயமும் நம் மனதில் உருவாகக் கூடும். இதற்கும் விதிவிலக்கு என்பது உண்டு. அதாவது வெள்ளி என்பது விடியற்காலை நேரத்தில்தான் கண்களுக்குப் புலப்படும்.

பொதுவாக சூரிய உதயத்திற்கு முன் புதுமனைபுகுவிழா நடத்திவிட வேண்டும் என்ற சம்பிரதாயம் நம்மால் கடைபிடிக்கப்படுவதால் எதிர்வெள்ளி என்ற விதி அங்கே வந்து சேர்கிறது. விடிந்த பிறகு சூரிய ஒளியின் தாக்கம்  தொடங்கிவிடுவதால் வெள்ளி அங்கே நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதனால் விடிந்தபிறகு தோஷமில்லாத வகையில் ஒரு நல்ல லக்னத்தைக் நிர்ணயம் செய்து அந்த நேரத்தில் க்ருஹப்ரவேசம் செய்யும்போது எதிர்சுக்கி
ரனால் எந்தவிதமான தோஷமும் உண்டாகாது.

* அஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்? - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.


அஷ்டோத்ரம் என்பது 108 என்ற எண்ணிக்கையை குறிக்கும். துதி என்பது போற்றுவது என்ற பொருளைத் தரும். ஸ்லோகம் என்பது நல்வாக்கியம் என்று பொருள்படும். நாமாவளி என்றால் பெயர்வரிசை அதாவது வரிசையாக பெயர்களைச் சொல்லுதல் என்று அர்த்தம். பொதுவாக இவை அனைத்தும் பூஜை நேரத்தில் உபயோகப்படுத்தப்படுவதால் உங்கள் மனதில் இந்த ஐயம் உருவாகி இருக்கிறது. அஷ்டோத்ர நாமாவளி என்றும் ஒரு சில புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது இறைவனின் திருநாமங்களை 108 என்ற எண்ணிக்கையில் குறிப்பிட்டு பூஜை செய்யும் முறை இதுவாகும். துதி என்பது இறைவனின் புகழ்பாடும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த துதி என்பது எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் இவை பாடல் வடிவில் அமைந்திருக்கும். இலக்கண சுத்தமாக அமைந்திருக்கும் துதிகளை கீர்த்தனை என்றும் சொல்வார்கள். ஸ்லோகம் என்பது ஏதோ ஒரு நன்மையை வேண்டி இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்கின்ற விதமாக அமையும் வாக்கியங்கள் ஆகும். அஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி ஆகிய அனைத்தும் இறைவனை நோக்கிச் சொல்லப்படுபவையே. அவரவருக்கு எது எளிமையான வழிமுறையோ அதனை பின்பற்றி வழிபட்டு வருகிறார்கள்.

* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக? - எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

ஆகர்ஷண சக்திக்காகவே கோபுரங்களில் கலசங்கள் வைக்கப்படுகிறது. அதாவது ஈர்ப்பு விசை என்று நீங்கள் பொருள் கொள்ளலாம். பொதுவாக கோயில் கோபுரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த கோபுரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்களின் சக்தியும் வந்து இறங்க வேண்டும், வானில் உள்ள தேவர்களின் சக்திகள் அனைத்தும் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகத்தான் கூர்மையான முனையை உடைய கலசங்கள் வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இது தாமிரம் என்ற உலோகத்தால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். தாமிரத்திற்கு ஈர்ப்பு விசை என்பது அதிகமாக இருக்கும். இயற்பியலில் இதனை என்று குறிப்பிடுவார்கள். தற்காலத்தில் செல்போன் டவர்களின் உச்சியிலும் இதுபோல கூர்மையான முனை கொண்ட கம்பியினை வைத்திருப்பார்கள்.

மின்னல் தாக்கினாலும் டவர் சேதமடையாமல் இருப்பதற்காக அந்தக் கம்பியிலிருந்து பூமிக்கு ஒரு இணைப்பை ஏற்படுத்தி எர்த் கனெக்ஷன் என்ற அமைப்பினை உருவாக்கியிருப்பார்கள். அதுபோல ஆலய கோபுரங்களில் அமைக்கப்படுகின்ற கலசங்களும் இடி, மின்னல் முதலான இயற்கைச் சீற்றங்களை தன்னுள் வாங்கிக்கொண்டு தன்னைச் சுற்றியிருக்கும் குடியிருப்புகளை காப்பாற்றுகின்றன. இதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். ஆக கோபுரத்தில் கலசங்கள் என்பவை இயற்கைச் சீற்றங்களில் இருந்து நம்மைக் காக்கும் பணியைச் செய்வதற்காகவும் தெய்வீக சக்தியினை உள்ளிழுப்பதற்காகவும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன என்று புரிந்து கொள்ளலாம்.

* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்டு அவஸ்தைப்படுகிறார்கள். குருக்ஷேத்ரம் புண்ணிய பூமியா? பலர் குழப்பத்தில் உள்ளனர். தெளிவுபடுத்துங்கள்.
- தியாகராசன், ராசிபுரம்.


குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோருக்கும் உடல்நலம் கெடுகிறது என்ற கூற்றினை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலும் வயதானவர்கள்தான் ஆன்மிக சுற்றுலாவிற்குச் செல்கிறார்கள். இவர்களுக்கு உடலில் உபாதை உண்டாவது இயற்கையே. குருக்ஷேத்ரம் தவிர்த்து மற்ற தலங்களுக்கு சுற்றுலா சென்று வருபவர்கள் கூட உடல்நலம் குன்றி அவஸ்தைப்படத்தான் செய்கிறார்கள். பயணம் செய்த களைப்பு, குடிநீரில் வேறுபாடு, வெவ்வேறு நதிகளில் தீர்த்தமாடுதல், உணவு ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால்தான் அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறதே அன்றி குருக்ஷேத்ர தரிசனத்தால் அல்ல.

குருக்ஷேத்ரம் என்ற புண்ணிய பூமியில்தான் இறைவனின் விஸ்வரூப தரிசனம் நிகழ்ந்தது. பகவத்கீதை என்ற வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய ஸ்லோகங்களின் உபதேசம் அங்குதான் நிகழ்ந்தது. அந்த அதிர்வலைகளை இன்றளவும் உணரமுடிகிறது என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். அத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய குருக்ஷேத்ரம் புண்ணியபூமிதான் என்பதில் அணு அளவும் ஐயமில்லை.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா