எதிர்மறை மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை!



*குறளின் குரல் 117

இந்த உலகம் நல்லவர்களை மட்டுமல்ல, கயவர்களையும் கொண்டிருக்கிறது. நாம் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமானால் கயவர்களை இனங்கண்டு அவர்களிடமிருந்து நீங்கியிருக்க வேண்டும். நல்லவற்றைப் போற்றும் திருவள்ளுவர், நல்லவர்கள் கெட்டவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் கூறி எச்சரிக்கிறார்.  'கயமை' என்ற அதிகாரத்தில் கீழோரின் இழிந்த தன்மை எப்படிப்பட்டது எனப் பத்துக் குறட்பாக்களில் விளக்குகிறார். உலகின் போக்கைத் தெளிவாக அறிந்தாலன்றி உன்னத வாழ்வு வாழ்தல் சாத்தியமில்லை என்பதால் உலகின் இருண்ட பகுதியை இந்த அதிகாரத்தில் எடுத்துச் சொல்லி நம்மைக் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

'மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்!' (குறள் எண் 1071)

இழிந்த மக்களும் வெளிப்புறத் தோற்றத்தில் எல்லோரையும் போலத்தான் இருப்பார்கள். குணம் செயல்களால் முற்றிலும் மாறுபட்டு, உருவத்தால் ஒன்றுபோலவே தென்படும் இத்தகைய ஒப்புமையை நாம் வேறெங்கும் கண்டதில்லை. (இந்திரன் கெளசிகர் உருவில் வருகிறான். அவன் கயவன். பிறன்மனை நயந்தவன். ஆனாலும் அவன் கெளசிகன் போலவே தோற்றமளிக்கிறான். கயவர்கள் யாரென்று இனங்காண முடியாத அளவு அவர்கள் மற்றவர்களைப் போலவே தென்படுவார்கள் என வலியுறுத்துகிறார் வள்ளுவர்.)

'நன்றறிவாரில் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்.' (குறள் எண் 1072)

நல்லவர்களை விடக் கயவர்கள் பேறு பெற்றவர்கள். ஏனென்றால் அவர்கள் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலை கொள்வதே கிடையாது!

'தேவரனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.'  (குறள் 1073)

கயவர்கள் தேவர்களைப் போன்றவர்கள். ஏனென்றால், தேவர் கயவர் இருவருமே தாம் விரும்பியதையெல்லாம் செய்யும் இயல்புடையவர்கள்!

'அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.' (குறள் 1074)

கயவர்கள் தம்மை விடக் கீழானவர்களைக் கண்டால், தாம் அவர்களைவிட உயர்வு என்று எண்ணிப் பெருமை கொள்வர்.

'அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அளவுண்டேல் உண்டாம் சிறிது.'  (குறள் 1075)

கீழ்மக்கள் ஒழுங்காக நடப்பதற்குக் காரணம் தண்டனையின் அச்சமேயாகும். அவர்கள் விரும்பியது சிறிது கிடைக்குமானால் அவர்களிடம் சிறிதளவு ஒழுக்கம் உண்டாகும்.

'அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்துரைக்க லான்.'  (குறள் 1076)

தாம் கேட்ட மறைவான செய்திகளை வலியச் சென்று கயவர் எல்லோர்க்கும் சொல்வர். அதனால் அவர்கள் அடிக்கப்படும் பறையைப் போன்றவர் எனலாம்.

'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.'  (குறள் 1077)

கயவர்கள் தங்கள் கன்னத்தை அடித்து நொறுக்கும் முறுக்கிய கையை உடையவர்களுக்குத்தான் கட்டுப்படுவார்கள். மற்றவர்களுக்குத் தாம் உண்ட எச்சில் கையைக் கூட உதற மாட்டார்கள்.

'சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.'
 (குறள் எண் 1078)
சான்றோர் சொல்லிய அளவிலேயே பிறர் துன்பம் போக்கப் பயன்படுவார்கள். ஆனால் கயவர்கள் மட்டும் கரும்புபோல் கசக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.'  (குறள் எண் 1079)

பிறர் நன்றாக உடை உடுத்தினாலும் நல்ல உணவு உண்டாலும் பொறாமை கொண்டு அவர்களிடம் குற்றம் இல்லையென்றாலும் குற்றம் காண்பவர் கீழோர். (எப்போது வேண்டுமானாலும் புதுத்துணி எடுக்கலாம். ஆனாலும் தீபாவளி, பொங்கல் போன்ற தருணங்களில்தான் நாம் கடைக்குச் சென்று புதுத்துணி எடுப்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறோம். காரணம் என்ன? அத்தகைய நாட்களில் எல்லோரும் புதுத்துணி அணியும் வழக்கம் இருப்பதால் கயவர்கள் மனத்தில் பொறாமை தோன்ற வாய்ப்புக் குறைவு. ஆனால் தனித்த ஒரு நாளில் புதிது அணிந்தால் அதைக் காணும் கயவர்கள் மனத்தில் பொறாமை உணர்வு பெருக்கெடுக்கும். அந்தப் பொறாமை காரணமாக அவர்கள் நமக்குத் தொல்லை தரக் கூடும்.)

'எற்றிற் குரியர் கயவர்ஒன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.'  (குறள் எண் 1080)

கீழ்மக்கள் துன்பம் வருமானால் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவர். ஆனால் பயன் கிடைக்குமானால் தன்னையே விற்றும் கூட அந்தப் பயனைப் பெறுவதற்கு விரைந்து ஓடுவர். (பிறர்க்கு உதவுவது கயவர்களின் நோக்கமல்ல. ஆனால் தனக்கு ஒரு பலன் கிட்டுமானால் சுயநலத்தின் பொருட்டாக எவ்விதமேனும் அந்தப் பலனை அடைய முயல்வது கயவர்களின் பண்பு.) இந்தக் கயமை என்ற அதிகாரம், நல்லவற்றையே பேசும் வள்ளுவர்,  கெட்டவற்றையும் எவ்வளவு கூர்மையாக இனம்கண்டு அவற்றிலிருந்து விலகி வாழ்ந்திருக்கிறார் என்பதன் அடையாளம்....

*பொய்ச்சாட்சி சொல்வது கயவர்களின் குணம்தான். பணத்தை வாங்கிக் கொண்டு மனச்சாட்சியே இல்லாமல் நடந்த உண்மைக்கு மாறாகப் பொய்ச்சாட்சி சொல்வோர் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். இந்தப் போக்கு மிகத் தவறானதென்றும் அத்தகைய பொய்ச்சாட்சி சொல்லும் கயவர்கள் வாழும் இடம் நசித்து நாசமாகும் என்றும் அவ்வையார் தாம் எழுதிய 'நல்வழி' என்ற நூலில் ஒரு வெண்பாவில் கூறுகிறார்:

'வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை!'

பொய்ச்சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன்படாமல் போகும். அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும். வெள்ளெருக்கு பூப்பூக்கும். பாதாள மூலி என்ற கொடிய விஷம் உள்ள கொடி வளரும். மூதேவி அத்தகையோர் வீட்டில்தான் வாழ்வாள். அந்த வீடுகளில் பாம்புகள்தான் வசிக்கும். *மனத்தில் ஒன்று வைத்து வெளியே வேறொன்று பேசுவது கயவர்களின் குணம். ஒருவரை நேரில் புகழ்வதுபோல் புகழ்ந்து, அவர் இல்லாத வேளையில் அவரை இகழ்வதும் கயவர்களின் பண்புதான். `உள்ளத்தில் ஒரு கருத்தை மறைத்து வெளியே வேறு கருத்துச் சொல்லும் கயவர்களின் உறவே எனக்கு வேண்டாம்!’ என முருகப் பெருமானை வேண்டுகிறார் ராமலிங்க வள்ளலார்.

'ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்கிறார் அவர். *கயவர்களோடு உறவாடக் கூடாது என்றும், அவர்களின் நட்பைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வையார் தம் 'மூதுரை' என்ற நூலில் ஒரு வெண்பாவில் தெரிவிக்கிறார். கயவர்களைக் கண்ணால் காண்பதும் தகாது என்பது அவ்வையார் கருத்து.

'தீயாரைக் காண்பதுவும் தீதே! திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே! - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது!'

என்பது அவ்வையார் நல்வாழ்வு வாழ விரும்பும் தமிழர்களுக்கு விடுக்கும்  எச்சரிக்கை.*வாக்குத் தவறுவது கயவர்களின் குணம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாததால் உயிர்விட்ட உத்தமர்கள் பலர் நம் நாட்டில் உண்டு. வாக்கைக் காப்பாற்றுவது உத்தமர்களின் குணம். மகாத்மா காந்தி வெளிதேசம் செல்வதற்கு முன்னால் தம் அன்னை புத்லிபாய்க்கு மூன்று சத்தியங்கள் செய்து கொடுத்தார். புலால் உண்ணாதிருப்பது, மது அருந்தாதிருப்பது, பெண்களை ஏறெடுத்தும் பாராதிருப்பது. இந்த மூன்று சத்தியங்களையும் அவர் தொடர்ந்து காப்பாற்றி வந்தார். தசரதர் சம்பராசுர யுத்தத்தின்போது தன் உயிரைக் காத்த கைகேயிக்கு இரண்டு வரங்கள் தருவதாக வாக்குக் கொடுத்தார்.

அந்த வரங்களைத் தான் விரும்பும்போது பெற்றுக் கொள்வதாகக் கூறினாள் கைகேயி. அதற்கு அவர் உடன்பட்டதுதான் தம் வாழ்வில் அவர் செய்த பெரும் தவறு. என்ன சங்கடம்! ராமனுக்கு முடி சூட்டப்பட முடிவெடுத்த தருணத்தில் அவனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பரதன் நாடாள வேண்டும் என்றும் வரங்கள் கேட்டாள் கைகேயி. கொடுத்த வாக்குத் தவறியவன் என்ற பெயர் வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ராமன் கானகம் சென்றபோது வேறு வழியின்றி தசரதர் அதற்கு உடன்பட நேர்ந்தது. அதனால் அவர் உயிர்விடவும் நேர்ந்தது.

*வாக்குறுதியைக் காப்பாற்றாதிருத்தல் மட்டுமல்ல, காட்டிக் கொடுத்தல் என்பதும் கயவர்களின் குணம்தான். எட்டப்பன் கயவன். அந்தக் கயவன் வெள்ளைக்காரர்களிடம் ஆதாயம் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான். அதனால்தான் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். எட்டப்பன் மட்டும் காட்டிக் கொடுக்காதிருந்தால் கட்டபொம்மனை யாராலும் வென்றிருக்க முடியாது. இன்றும் காட்டிக் கொடுப்பவர்கள் எட்டப்பர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.

 காலம் அந்தக் கயவனின் செயலை வரலாற்றில் பதிவு செய்து நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.*பணத்திற்காகக் கட்சி மாறுவது என்பதும் கயவர்களின் குணம். இன்று ஏராளமான அரசியல்வாதிகள் இந்த வகையில் அடுத்தடுத்துக் கட்சி மாறுவதைச் செய்தித் தாள்கள் மூலமும் புலனாய்வு இதழ்கள் மூலமும் அறிகிறோம். கொள்கை, கோட்பாடு போன்றவற்றைப் புறந்தள்ளி, பதவிக்காக காசு வாங்கிக் கொண்டு எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருப்பேன் என்கிற அரசியல்வாதிகளை விடக் கயவர்களுக்கு வேறு உதாரணம் தேவையில்லை. இத்தகைய கட்சிமாறும் கயவர்களை இனம்கண்டு தேர்தல்களில் மக்கள் அவர்களைப் புறந்தள்ளினால்தான் நாடு உருப்படும்.

*டாக்டர் மு. வரதராசன் நல்ல உணர்வுகளை முன்னிலைப்படுத்தி லட்சியவாதம் சார்ந்த நாவல்கள் பலவற்றைப் படைத்தவர். பெரும் புகழோடு வாழ்ந்த மாபெரும் தமிழறிஞர். அவர் காலத்தில் எண்ணற்றோர் அவரது நாவல்களால் தங்கள் வாழ்க்கைப் போக்கை மாற்றிக் கொண்டு திருந்தி வாழத் தலைப்பட்டனர். மு.வ. எழுதிய திருக்குறள் உரை நூல் பல லட்சம் பிரதிகள் விற்றது. ஒருகாலத்தில் அவரது திருக்குறள் உரைநூலை வாங்கி மணமக்களுக்குப் பரிசளிப்பதும் தாம்பூலப் பைகளில் அந்த உரைநூலைப் போட்டுக் கொடுப்பதும் பல தமிழர் திருமணங்களில் இயல்பாய் இருந்தன.

'மூவாத் தமிழ் தந்த மு.வ.!' என்று தமிழன்பர்களால் கொண்டாடப் பட்டார் அவர்.
'கரித்துண்டு, அல்லி, கள்ளோ காவியமோ? அகல்விளக்கு, நெஞ்சில் ஒரு முள், மண் குடிசை' உள்ளிட்ட பல புகழ்பெற்ற புதினங்களைப் படைத்தவர் மு.வ.. திருக்குறளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த அவர், திருக்குறளின் 'கயமை' என்ற அதிகாரத்தையே தமது நாவல் ஒன்றிற்குத் தலைப்பாக வைத்திருக்கிறார். அந்த நாவலின் கதை, அதன் தலைப்புக்கு விளக்கம் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

*கவியரசர் கண்ணதாசன் மனித மனங்களை ஆராய்ந்து பாடல்கள் புனைந்தவர். ரத்த உறவுகளில் கூடக் கயமை தென்படுவதைக் கண்டு, 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே?’ என விரக்தியுடன் பாடலெழுதியவர். 'ஆண்டவன் கட்டளை' படத்தில் வரும் 'ஆறு மனமே ஆறு!’ என்ற பாடலில் கண்ணதாசன் ஆசை, கோபம், களவு இவை மட்டுமே தெரிந்த கயவர்களைப் 'பேசத் தெரிந்த மிருகம்’ என்கிறார்.

'ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்!
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்!
இதில் மிருகம் என்பது கள்ள மனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம்’
என்பன கவியரசரின் கவித்துவம் செறிந்த வரிகள்.

உறவுகளிலும் நட்புகளிலும் ஊடுருவியிருக்கும் கயவர்களால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். கெட்டவர்களை நம்பிக் கெட்டவர்கள் பலர். வாழ்வின் ஒவ்வோர் அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும் என்பதை திருக்குறளின் இரண்டடிகள் நமக்கு அக்கறையுடன் தெரிவிக்கின்றன. நல்லவற்றையே பேசும் வள்ளுவர், எதிர்மறை நோக்கில் நின்று கயவர்களைப் பற்றியும் கூறி கயமை என்ற அதிகாரத்தில் எச்சரிப்பது, மனித குலத்தின்மேல் வள்ளுவருக்குள்ள மாறாத அன்பின் வெளிப்பாடு.

(குறள் உரைக்கும்)
* திருப்பூர் கிருஷ்ணன்