தியான பாசுரங்கள்



வணக்கம் நலந்தானே!

நாம் இறையை நோக்கி என்ன கேட்க வேண்டும்? எவ்விதம் கேட்க வேண்டுமென்று பாசுரங்கள் மூலம் ஆழ்வார்கள் அழகாக சொல்லிக் கொடுக்கின்றார்கள். நீ எப்போதும் எப்படி இருந்து கொண்டிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். ஆனால், நீ என்ன செய்ய வேண்டு மென்பதை நான் மட்டுமே அறிவேன் என்று அறைகூவல் விடுக்கின்றார். இதோ கீழேயுள்ள திருமங்கை மன்னனின் பாசுரத்தை படியுங்கள்.தாயே தந்தையென்றும் தாரமேகிளை மக்களென்றும்.

நோயே பட்டொழிந்தேன் நுனைக்காண்பதோராசையினால், வேயேய் பூம்பொழில்சூழ் விரையார்திருவேங்கடவா, நாயேன் வந்தடைந்தேன் நல்கியாளென்னைக் கொண்டருளே.- என்று பெரும்பான்மையினரின் வாழ்வை அப்படியே பிரதிபலிக்கின்றார். தாய், தந்தை, தாரம், மக்கள் என
எல்லாமும் நல்லூழோ அல்லது முன்ஜென்ம வினை என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இல்லறம் நல்லறமே என்றுகூட நல் மொழி பேசுங்கள். ஆனாலும், இவை அனைத்துமே ஒரு விலங்குதான். உடலே நான் என்று இறுக்கிப் பிணைத்து நெருக்கும் நாகம்.

உடலிலிருந்து உடல் என்று இடையறாது நகரும் மாய மேகம். உடலே ஒரு நோய். அதற்குள்ளும் இந்த பந்தங்கள் நோயென அறியாது நம்மை பீடிக்கும் பிணிகள். இப்படியெல்லாமும் என்னை மூச்சுத் திணற வைத்தபடி இருந்தாலும் வேங்கடவா... நாயேன் என உன்னை வந்தடைவேன் என்னை ஆட்கொள் என்று கோரிக்கை வைக்கவும் சொல்லிக் கொடுக்கின்றார். இந்தப் பாசுரத்தை சாவியாகக் கொண்டு உங்களின் அகத்தை திறந்து கொள்ளலாம். வேங்கடவனை அடைவதைவிட இப்பிறவியில் வேறொன்றும் முக்கியமில்லை என்று லட்சியத்தை உறுதியோடு சுட்டிக் காட்டுகின்றார்.   
இதேபோல கீழேயுள்ள திருமங்கையாழ்வாரின் இந்த பாசுரத்தையும் பாருங்கள்.  

தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியே னாயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே

கண்ணாடி கூட நம்மை தவறாக பிரதிபலிக்கலாம். ஆனால், ஆழ்வார் முகத்திற்கு நேராக நம் ஒட்டுமொத்த வாழ்வினையும் இரு அடிகளில் அநாயாசமாக உரைக்கின்றார். போதும்... போதும்… இதோடு நிறுத்திக் கொள்ளடா உன் வீண் செயலை. நின்று யோசித்துப் பார் என்று கூட சொல்லவில்லை. மனமே அல்லது உடம்பெடுத்த உயிரே உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ‘‘கனமாமலை வேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே’’ என்று முடிவுறச் செய்து விடுகின்றார். இந்த உலக விளையாட்டை நிறுத்திக்கொள்.

அதிலொரு பிரயோஜனமுமில்லை என தரதரவென்று வேங்கடவனை நோக்கி இழுத்துச் செல்கிறார். ஏனெனில், திருமங்கை மன்னனுக்கு தெரியும். இவனாக வேங்கடவனை நோக்கி இப்போதைக்கு திரும்ப மாட்டான். அதனால், நானே இவனை இடுப்பில் ஏற்றிக்கொள்கிறேன் என்று பாசுரம் வழியே நம்மை இழுத்துக்கொள்கிறார். பாசுரங்கள் அனைத்துமே தியானத்திற்குரியவை. நிறைய பாசுரங்கள் என்பது நிறைய கண்ணிகளைக்கொண்ட வலை போன்றவை. ஏதேனும், ஒரு கண்ணியில் சிக்கிக்கொள்வது நிச்சயம்.

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)