தெளிவு பெறு ஓம்



ஜாதகத்தில் தோஷம் உள்ள பெண்ணுக்கு அதே தோஷம் உள்ள ஆண்பிள்ளையைத்தான் திருமணம் செய்ய வேண்டுமா?

கூடாது. நிதானமாக யோசித்துப் பாருங்கள். தோஷம் என்றால் ஏதோ ஒரு வகையில் குறை இருக்கிறது என்று பொருள். ஜாதகத்தில் தோஷம் உள்ள அதாவது ஏதோ ஒரு குறை உள்ள பெண்ணிற்கு அதேபோன்ற குறையை உடைய ஆண்மகனைத் திருமணம் செய்து வைப்பதால் அந்தக் குறை எவ்வாறு சரி யாகும்? தோஷமும், தோஷமும் இணைந்தால் மேலும் அதிக தோஷத்தை அதாவது அதிகமான குறையைத் தானே தரும்.! அவ்வாறு இருக்க ஜாதகத்தில் தோஷம் உள்ள ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ வரன் பார்க்கும்போது அந்தத் தோஷத்தை சமாளிக்கும் திறன் உடைய வலிமை வாய்ந்த ஜாதகத்தைப் பொருத்தினால்தான் குறையானது சரி செய்யப்பட்டு வாழ்க்கை சிறக்கும்.

இங்கே கணக்குப் பாடத்தில் வருகின்ற ஃபார்முலாவான ( -×- = + ) மைனஸ் இன்ட்டூ மைனஸ் ப்ளஸ் என்பதை பொருத்திப் பார்க்கக் கூடாது. திருமணம் என்பது
பெருக்கல் வாய்ப்பாடு அல்ல. இங்கே மைனஸையும், மைனஸையும் சேர்க்கப் போகிறோம். இரண்டையும் சேர்த்தால் மைனஸ் என்பது அதிகமாகத்தான் சென்று கொண்டிருக்கும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, பலம் நிறைந்த ஜாதகத்தைப் பொருத்தி குறையில்லா வாழ்வினுக்கு வழிகாட்ட வேண்டும். ஜாதகத்தில் தோஷம் உள்ள பெண்ணுக்கு அதே தோஷம் உள்ள ஆண்பிள்ளை ஜாதகத்தைத்தான் பொருத்த வேண்டும் என்பது தவறான கருத்து ஆகும்.

?ஷண்ணவதி சிராத்தம் என்றால் என்ன?
- ரவிச்சந்திரன், பெங்களூரு.
ஷண்ணவதி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 96 என்று பொருள். ஒவ்வொரு வருடத்திலும் 96 நாட்கள் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டிய நாட்கள் என்று சாஸ்திரம் உரைக்கிறது. இதையே ஷண்ணவதி சிராத்தம் என்று அழைக்கிறார்கள்.

தர்ச சிராத்தங்கள்-12, மாஸ ஸங்க்ரமண சிராத்தங்கள்-12, அஷ்டகா சிராத்தங்கள்-12, வைத்ருதிசிராத்தங்கள்-13, வியதீபாத சிராத்தங்கள்-13, மன்வாதி சிராத்தங்கள்-14, யுகாதி சிராத்தங்கள்-4, மஹாளய சிராத்தங்கள்-16 ஆக மொத்தம் 96 நாட்கள் சிராத்தம் செய்ய வேண்டும். தர்ச சிராத்தம் என்பது மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்கள். ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதால் தர்ச சிராத்தம் என்பது வருடத்திற்கு 12 நாட்கள் வருகின்றன.

மாஸ ஸங்க்ரமண சிராத்தம் என்றால் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு அன்று செய்யப்பட வேண்டியது ஆகும். இவற்றில் தை மற்றும் ஆடி மாதப் பிறப்பு நாட்கள் அயன சிராத்தம் என்றும், சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பு விஷூ என்றும்,வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய மாதப் பிறப்பு நாட்கள் விஷ்ணுபதீ என்றும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதப் பிறப்பு நாட்கள் ஷடசீதி என்றும் அழைக்கப்படுகின்றன.

அஷ்டகா சிராத்தங்கள் என்பது மார்கழி, தை, மாசி, பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஸப்தமி, அஷ்டமி, நவமி திதி ஆகிய நாட்களில் முறையே திஸ்ரோஷ்டகா, அஷ்டகா, அன்வஷ்டகா என்ற பெயரில் செய்யப்படுபவை. அடுத்தபடியாக வைத்ருதி, வியதீபாத சிராத்தங்கள் என்பவை மாதந்தோறும் இந்த யோகங்கள் வருகின்ற நாட்களில் செய்யப்பட வேண்டியவை. திதி, வாரம், நக்ஷத்ரம் போல யோகம் என்பதும் உண்டு. (அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் அல்ல). இந்த யோகங்கள் மொத்தம் 27. இவற்றில் 17வது யோகம் வியதீபாதம். 27வது யோகம் வைத்ருதி. இவை ஒரு வருடத்திற்கு தலா 13 முறை வரும். இந்த நாட்களிலும் சிராத்தம் செய்யப்பட வேண்டும்.

அடுத்தது மன்வாதி சிராத்தம். இவை மொத்தம் 14. அவற்றின் விபரம் பின்வருமாறு: ஆஸ்வீஜ சுக்ல நவமி - ஸ்வாயம்புவ மன்வாதி(1), கார்த்தீக சுக்ல த்வாதசி - ஸ்வாரோசிஷ மன்வாதி(2), சைத்ர சுக்ல த்ருதீயை - உத்தம மன்வாதி(3), பாத்ரபத சுக்ல த்ருதியை - தாமஸ மன்வாதி(4), புஷ்ய சுக்ல ஏகாதசி - ரைவத மன்வாதி(5), ஆஷாட சுக்ல தசமி - சாக்ஷூஷ மன்வாதி(6), மாக சுக்ல ஸப்தமி - வைவஸ்வத மன்வாதி(7), ச்ராவண க்ருஷ்ண அஷ்டமி - ஸூர்யஸாவர்ணி மன்வாதி(8), கார்த்தீக சுக்ல பௌர்ணமி - இந்த்ர ஸாவர்ணி மன்வாதி(9), பால்குண சுக்ல பௌர்ணமி - ப்ரும்ஹ ஸாவர்ணி மன்வாதி(10), ஆஷாட சுக்ல பௌர்ணமி - அக்னி ஸாவர்ணி மன்வாதி(11), பால்குன அமாவாசை - ருத்ரஸாவர்ணி மன்வாதி(12), ஜ்யேஷ்ட சுக்ல பௌர்ணமி - பௌத்(ஷ்)ய மன்வாதி(13), சைத்ர சுக்ல பௌர்ணமி - ரௌச்ய மன்வாதி(14) ஆகியன. அடுத்து வருவது யுகாதி சிராத்தம். யுகத்தின் துவக்க நாளினை யுகாதி என்று அழைப்பார்கள்.

க்ருதயுகம், திரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களின் துவக்க நாட்கள் யுகாதி நாட்கள் ஆகும். வைசாக சுக்ல த்ருதியை - கிருதயுகாதி, கார்த்தீக சுக்ல நவமி - திரேதாயுகாதி, பாத்ரபத க்ருஷ்ண த்ரயோதசி - துவாபரயுகாதி, மாக அமாவாசை - கலியுகாதி. அடுத்து மஹாளய பக்ஷத்தில் வருகின்ற 16 நாட்களும் மஹாளய சிராத்த நாட்கள்.

அதாவது மஹாளய அமாவாசைக்கு முன்னர் வருகின்ற பௌர்ணமிக்கு அடுத்த நாள் ஆன பிரதமை நாள் முதல் தொடர்ச்சியாக மஹாளய அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற வளர்பிறை பிரதமை நாள் வரை வருகின்ற 16 நாட்களும் சிராத்தம் செய்ய வேண்டிய நாட்கள்.

ஆகமொத்தம் மேற்சொன்ன 96 நாட்கள் ஒவ்வொரு வருடத்திலும் வரும். இவை பித்ருக்களுக்கு உகந்த நாட்கள் என்பதால் இந்த நாட்களில் சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வது என்பது மிகவும் விசேஷம். இதனையே ஷண்ணவதி சிராத்தம் என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

இன்றளவும் இந்த 96 சிராத்தங்களையும் தவறாது செய்து வருகின்ற பெரியோர்கள் நம் கண்முன்னே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 96 சிராத்தங்களையும் செய்ய முடியாவிட்டாலும் முடிந்தவரை இந்த நாட்களில் பித்ருக்களை எண்ணி விரதம் இருப்பதன் மூலம் அவர்களது ஆசியினைப் பெற்று எந்தவிதமான குறையுமின்றி வாழ இயலும்.

?தொழில்புரியும் இடங்களில் சிவலிங்கத்தின் கோமுகம் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும்? லிங்கத்திற்கு வலது புறமா அல்லது இடது புறமா?
- பொன்.மாயாண்டி, ராயபுரம்.

தொழில்புரியும் இடம்தான் என்றில்லை, எங்குமே சிவலிங்கத்தின் கோமுகம் என்பது வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். வலதுபுறம் இடதுபுறம் என்று கணக்கில் கொள்ளக்கூடாது. திசையைத்தான் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான ஆலயங்களில் சிவபெருமானின் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். அந்த சந்நதிகளில் லிங்கத்திருமேனிக்கு இடதுபுறமாக அதாவது வடக்கு திசையை நோக்கியவாறு கோமுகம் என்பது அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில ஸ்தலங்களில் மேற்கு நோக்கிய சந்நதி அமைந்திருக்கும்.

மேற்கு நோக்கிய சந்நதிகளில் லிங்கத் திருமேனிக்கு வலதுபுறத்தில் அதாவது அங்கும் வடக்குத் திசை நோக்கியே கோமுகம் என்பது அமைக்கப்பட்டிருக்கும். ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அபிஷேக த்ரவ்யமானது வடக்குப் புறமாக செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். மிகவும் அரிதாக கோமுகத்தை தெற்கு நோக்கி வைத்திருக்கும் தலங்களும் உண்டு.

இதுபோன்ற தலங்கள் எம பயத்தைப் போக்கும் என்றும் சொல்வார்கள். இது அந்தந்த ஆலயங்களின் ஸ்தல புராணத்தைப் பொறுத்தது. ஆலயங்கள் தவிர்த்து பொதுவாக சாமானிய மனிதர்கள் ஆகிய நாம் வீடுகளிலும் சரி, அல்லது நாம் தொழில் செய்யும் இடங்களிலும் சரி, சிவவழிபாடு செய்ய நினைக்கும்போது லிங்கத்தின் கோமுகமானது வடக்குத் திசை நோக்கி இருக்குமாறு வைத்து வழிபடுவதே சாலச் சிறந்தது.
?சாமி வேடம் போட்டு மனிதர்கள் (நடிகர்-
நடிகைகள்) நடிக்கலாமா?
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

தாராளமாக நடிக்கலாம். இது ஒன்றும் சாஸ்திர விரோதமான செயல் அல்ல. இயல், இசை, நாடகம் என்பது நமது கலாச்சாரத்தின் முக்கியமான அங்கங்கள். இவற்றின் வாயிலாகத்தான் புராணங்களையும் இறை சரித்திரங்களையும் பொதுமக்கள் கற்றுக் கொண்டார்கள். இவற்றில் இயல், இசை ஆகிய இரண்டின் வாயிலாக கற்பிக்கப்படும் கருத்துக்கள் நன்கு கற்றறிந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும். ஆனால் நாடகத்தின் வாயிலாக மட்டுமே சாமானிய மக்கள் எல்லோருமே புரிந்துகொள்ளும் வகையில் கருத்துக்களை பரப்ப இயலும்.

அதனால்தான் திருவிழாக்கள் முதலான பொதுமக்கள் அதிகமாக கூடும் சமயத்தில் தெருக்கூத்து, மேடைநாடகம் வாயிலாக வள்ளித்திருமணம், சுந்தரகாண்டம், பிரகலாத சரித்திரம் போன்று பல்வேறு நாடகங்களை நடத்தினார்கள். அதன் மூலம் புராணங்களையும் தெய்வீக சிந்தனைகளையும் பரப்பினார்கள். அதே நேரத்தில் தெய்வீக நாடகங்களில் நடிப்பவர்கள் முறையாக விரதம் இருந்து நடித்தார்கள். அதிலும் நரசிம்மர், கிருஷ்ணர், நாரதர், அம்மன் வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் யாவரும் முறையாக விரதத்தினை கடைப்பிடிப்பார்கள்.

இந்த நடைமுறை இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் தெய்வீக கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களும் நடிகைகளும் தாங்கள் அவ்வாறு நடிக்கும் காலத்தில் விரதத்தினை கடைப்பிடிக்கிறார்கள் என்ற செய்தியை நாம் பத்திரிகைகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இது அவர்களுக்கு தங்கள் தொழில் மீதுள்ள பக்தி சிரத்தையை எடுத்துக்காட்டுகிறது. எனவே இறைவனின் வேடம் தரித்து மனிதர்கள் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை.

?எனக்கு வயது 90. மனைவி இல்லை. பிரம்ம முகூர்த்த நேரத்தில் படுக்கையில் இருந்தவாறே மானசீகமாக விநாயகர், சிவன் இவர்களை
பூஜிக்கலாமா? தெளிவுபடுத்த வேண்டும்.
- கோவிந்தராஜன், குடியாத்தம்.

தாராளமாக பூஜிக்கலாம். 80வது வயதினைக் கடக்கும்போதே பிரம்மத்துவம் என்பது வந்துவிடுகிறது. அவ்வாறு பிரம்மத்துவம் அடைந்தவர்கள் அதன்பின்னர் உலக வாழ்வியல் சுகங்களைத் துறந்து சதா சர்வகாலமும் இறை சிந்தனையுடன் வாழவேண்டும். அதிலும் நீங்கள் 90 வயதினைக் கடந்தவர். உங்கள் வயதினை உடையவர்களுக்கு படுக்கையறை, பூஜையறை என்ற பேதம் எதுவுமில்லை.

எப்பொழுதும் இறை சிந்தனையுடன் வாழவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துவதால் பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், சாயரட்சை என்ற காலபேதம் கூட கிடையாது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நீங்கள் இறைவனை மானசீகமாக பூஜித்து வணங்கலாம். மானசீக பூஜைக்கு சிறப்பான மகத்துவம் உண்டு. பரிபூரண பலனும் உண்டு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?எனது தோழிக்கு சனிதசை நடப்பதால்
திருநள்ளாறு சனீஸ்வரன் படத்தை பூஜை
யறையில் வைத்து வழிபடுகிறாள். சிலர் சனீஸ்
வரன் படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது
என்கிறார்கள். என்ன செய்யலாம்?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

சனீஸ்வரன் என்று குறிப்பிடுவது தவறு. சனைஷ்சரன் என்று சொல்வதே சரியானது. சனைஷ்சரன் என்ற பெயருக்கு மெதுவாக நகர்பவன் என்று பொருள். சனைஷ்சரன் என்ற வார்த்தை மருவி நாளடைவில் சனீஸ்வரன் ஆகிவிட்டது. சனி உள்பட நவகிரகங்கள் யாவும் இறைவன் நியமித்திருக்கும் பணியாளர்களே. இறைவனின் ஆணைப்படி அவரவருக்குரிய கர்ம பலன்களை உரிய நேரத்தில் தருகின்ற வேலையாட்கள்தான் நவகிரகங்கள்.

இவர்களைத் தனியாக வழிபட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி வழிபட நினைப்பவர்கள் இறைசாந்நித்யம் நிறைந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் நவகிரஹங்களின் சந்நதியில் வழிபடுவதே சாலச்சிறந்தது. தனியாக வீட்டில் வைத்து வழிபடவேண்டிய அவசியம் இல்லை. சனைஷ்சரன் படத்தினை வீட்டில் வைத்து வழிபடுவதைவிட ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதே நல்லது.

?தற்காலத்தில் நிறைய ஆலயங்களில் கற்பூரம் ஏற்றுவதில்லையே, இது தவறு இல்லையா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

தவறு இல்லை. ஜோதி வடிவான இறைவனை ஒளி வெள்ளத்தில் தரிசிக்க வேண்டும் என்பதே நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்து
ஆகும். அதனால் நெய்தீபம் ஏற்றி ஹாரத்தி காண்பிக்கிறார்கள். கற்பூர ஹாரத்தியின்போது வாசனை மிகுந்த பச்சைக் கற்பூரத்தை
பயன்படுத்தினார்கள்.

பச்சைக்கற்பூரத்தை ஏற்றி ஹாரத்தி காண்பிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் புகை வாசனை மிகுந்ததாக இருப்பதோடு உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் நன்மை தருவதாக அமைந்தது. ஆனால், தற்காலத்தில் விற்கப்படும் கற்பூரம் வேதிப்பொருட்கள் நிறைந்ததாக உள்ளது. அதிலும் ஒருசில கற்பூரங்கள் மெழுகு கலந்து விற்பனை ஆகின்றன. கற்பூரம் என்பது காற்றினில் கரையக்கூடியது. பொதுவாக ஒரு திடப்பொருளை நெருப்பில் இடும்போது அது முதலில் திரவநிலைக்கு உருமாறும்.

அதன்பின்னர் திரவ நிலையில் இருந்து வாயுநிலையினை அடையும். ஆனால் கற்பூரம் என்னும் திடப்பொருள் வெப்பமாகும்போது நேரடியாக வாயுநிலைக்கு உருமாறக்கூடியது. இதனை பதங்கமாதல் என்று வேதியியலில் குறிப்பிடுவார்கள். ஆனால், தற்காலத்தில் தயாரிக்கப்படுகின்ற கற்பூரத்தில் மெழுகு கலந்திருப்பதால் கற்பூரம் ஏற்றும்போது அது உருகி திரவநிலைக்கு வருகிறது. அதிலிருந்து கரும்புகையும் வெளிப்படுகிறது.

இது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு உடல்நிலைக்கும் கேடு விளைவிக்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் தற்காலத்தில் பெரும்பாலான ஆலயங்களில் கற்பூரம் ஏற்றப்படுவதில்லை. மாறாக நெய்விளக்கு ஏற்றி இறைவனுக்கு ஹாரத்தி காட்டுகிறார்கள். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா