காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்



சென்ற இதழ் தொடர்ச்சி...

விபீஷணன்


விபீஷணன் ராமரிடம் வந்து சேர்ந்தது வரை சென்ற இதழில் பார்த்தோம். அதன் பிறகு உள்ளவை...‘‘விபீஷணன்’’ என்ற சொல்லுக்கு ‘பயமில்லாதவன்’ என்பது பொருள் என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அதன்படி, ராவணன் தவறு செய்தபோது சுட்டிக்காட்டி, நல்லதை எடுத்துச்சொல்லித் திருத்த முயல்வதும்; ராவணன் திருந்த மறுத்து ‘‘வெளியே போய்விடு! எதிரில் நின்றால் எமனுலகம் அனுப்பிவிடுவேன்’’ என்றதும், அங்கிருந்து வெளியேறத் தீர்மானித்தது, விபீஷணனின் பயமற்ற தன்மையை உணர்த்தும். கெட்டதை விட்டு விலகுவதற்குத் தைரியம் வேண்டும்.

அதைவிட அதிக தைரியம், நல்லதைச் சேர்வதில் வேண்டும். இந்த இரண்டையும் செய்ய முடியாததால் தான் ஏராளமானோர் இன்னலில் அகப்படும்படியாக ஆகிவிடுகின்றது. ஆனால் விபீஷணன் இந்த இரண்டையும் மிகவும் தைரியமாகக் கடைப் பிடித்தான். தீயவனான ராவணனை விட்டு விலகியதிலும் பரம்பொருளான ராமரைத் தேடி வந்ததிலும் விபீஷணனின் தூய உள்ளம் வெளிப்படுகிறது.

அதை வெளிப்படுத்துவதே ‘‘விபீஷண சரணாகதி’’ நல்லதைத் தேடிவந்த விபீஷணன்,அதில் எவ்வளவு உறுதியாக இருந்தான் என்பதை, இதற்குப் பின்வரும் நிகழ்வுகள் விளக்கும்.கடலில் அணை கட்டி மறுகரைக்கு வந்தார்கள் அனைவரும். ராமர் முதலானோர் வானர வீரர்களுடன் அங்கே தங்கியிருந்த வேளையில் ராவண ஒற்றர்களான சுக-சாரன் என்பவர்கள், வானர வடிவில் வந்து படைகளுடன் கலந்து விட்டார்கள்.

வானரப்படைகளை அப்படியே சுற்றிவந்து மேற்பார்வையிட்ட விபீஷணன் உண்மையைப் புரிந்துகொண்டான். இருவரையும் பிடித்து ராமர் முன்னால் நிறுத்தி,‘‘இவர்கள் இருவரும் வானரவீரர்கள் அல்ல; ராவண ஒற்றர்கள்; சுகன் - சாரன் என்பது இவர்கள் பெயர்’’ என்றான்.

ஆனால் அந்த ஒற்றர்களோ,
‘‘இல்லை இல்லை. குரங்குக்

கூட்டத்தை அழிக்க விபீஷணன் சூழ்ச்சி செய்கிறான். நாங்கள் இருவரும் உண்மையிலேயே வானர வீரர்கள்தான்’’ என்று வாதாடினார்கள்.
‘‘இவர்கள் கள்ள வடிவில் வந்த ஒற்றர்கள்தாம். இதோ பாருங்கள்!’’ என்ற விபீஷணன் ஒரு மந்திரம் சொல்ல, ஒற்றர்கள் உண்மை வடிவம் பெற்றார்கள்.
இந்த நிகழ்வை வியப்பூட்டும் விதத்தில் விவரிக்கிறார் கம்பர்.

‘‘கள்ளரே காண்டியென்னா மந்திரங்கருத்துட் கொண்டான்
தெள்ளிய தெரிக்குந்தெய்வத் தீவினை சேர்தலோடும்
துள்ளியின் ரதந்தோய்ந்து தொன்னிறங்கரந்து வேறாய்
வெள்ளியோடிருந்து செம்புமாமென வேறுபட்டார்..’’
(கம்ப ராமாயணம்)
வெள்ளியோடு இருந்த செம்பு, அமிலத்தில் இடப்பட்டபோது தனியாகப் பிரிந்து நின்றதைப்போல, வானர வடிவம் நீங்கி அரக்க வடிவோடு நின்றார்கள் அந்த ஒற்றர்கள் - என்பது கம்பர் வாக்கு.இதையடுத்து விபீஷணனை, யுத்தகளத்தில் கும்பகர்ணன் புகுந்தபோது சந்திக்கலாம்.

கும்பகர்ணன் யுத்தகளத்தில் நுழைந்தான். அவனைப் பார்த்து ராமரே வியந்தார்;
‘‘விபீஷணா! யாரிவன்? தோளோடு தோள், நாம் பார்த்து முடிக்கப் பல நாட்கள் ஆகும் போலிருக்கிறதே! கால்கள் முளைத்து ஒரு மலை நடந்து வருவதைப்போல இருக்கின்றது.

யாரிவன்?’’ எனக் கேட்டார்.‘‘பெருமானே! ராவணனின் தம்பி இவன்; எனக்கு அண்ணன். சூலாயுதம் கொண்டு உலகையே வென்றவன்; நல்லவன்; தரும விரோதமான காரியம் செய்திருப்பதால் நாம் உயிரிழந்து விடுவோமென, ராவணனுக்கு எவ்வளவோ அறிவுரையும் சொன்னவன் இவன்; அதை ஏற்கவில்லை ராவணன். ஆகையால் அவனுக்காக உயிரைவிடத் தீர்மானித்து வந்திருக்கிறான் இவன்’’
என்றான் விபீஷணன்.

இதன் பிறகு சுக்ரீவன் ஆலோசனையின் பேரில், ராமர் உத்தரவுப்படி கும்பகர்ணனை அழைப்பதற்காகப் போனான் விபீஷணன்; போனவன் கும்பகர்ணனின் கால்களில் விழுந்து வணங்கினான். கும்பகர்ணனோ, விபீஷணன் வரவை விரும்பாமல் விபீஷணனுக்கு நல்லுபதேசம் செய்தான்.
விபீஷணன் மறுபடியும் முயன்றான்; ‘‘அண்ணா! எனக்கு ராமர் தந்த அனைத்துச் செல்வங்களையும் உனக்குத்தந்து, உன் அடிமையாக உனக்கு அடங்கி இருப்பேன் நான். என் மனத்துயர் தீரும்படியாக நீயாவது ராமபிரானை அடைந்து, தர்ம வழியில் நட! அக்கிரம வழியில் நடப்பவர் யாராயிருந்தால் என்ன? தர்மத்தில் நம்பிக்கை உடையவர்கள், பழியைப்பற்றி அஞ்சாமல், அக்கிரம வழியில் நடப்பவர்களைக் கை விடுவார்கள் அல்லவா?

‘‘அண்ணா! மும்மூர்த்திகளில் சிறந்தவரான திருமாலே, ராமர் வேடத்தில் அறத்தை நிலைநாட்ட வந்திருக்கிறார். ராமர் அருள் உனக்குக் கிடைத்தால், அனைவரையும் விட, நீ பெரியவனாகி விடுவாய்; யாராலும் வெல்ல முடியாது உன்னை” என்றான் விபீஷணன்.

‘‘தேவர்க்குத்தேவன் நல்க இலங்கையில் செல்வம்பெற்றால்
யாவர்க்கும் சிறியையில்லை; யாருனை நலியு மீட்டார்?
மூவர்க்குந்தலைவரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங்காட்டி’’
 (கம்ப ராமாயணம்)

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விபீஷணனின் வார்த்தைகளை ஏற்க மறுத்துவிட்டான் கும்பகர்ணன். (கும்பகர்ணனின் பேச்சுக்களைக்’கும்பகர்ணன்’எனும் தலைப்பில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்) கும்பகர்ணன் தன் கடைசிக் காலத்தில் ராமரிடம்,
‘‘இந்த விபீஷணன் தர்மவான். சரணா கதியென்று உன்னை அடைந்திருக்கிறான்.

இவனைக் காப்பாற்று! இவன் உன் அடைக்கலம்’’ என்று விபீஷணனுக்காக ராமரிடம் வேண்டினான்; இதிலிருந்து விபீஷணனின் தூய்மையான
உள்ளம் புரியும்.அடுத்து விபீஷணனை, இந்திரஜித் போர்க்களம் புகுந்த போது நடந்த நிகழ்வுகளில் சந்திக்கலாம்.போர்க்களத்தில் ஒருநாள்...அந்தி சாயும் நேரம். வானரங்களுக்கு உணவு சேகரிக்க விபீஷணனை அனுப்பிய ராமர், வானரப்படையைப் பாதுகாக்கும்படியாக லட்சுமணனிடம் சொல்லிவிட்டு, அஸ்திர பூஜை செய்வதற்காகப் பாசறை சென்றார்.

அந்த நேரத்தில் திடீரென்று, இந்திரஜித் மறைந்திருந்து, பிரம்மாஸ்திரத்தை ஏவினான்; லட்சுமணன், அனுமான், சுக்ரீவன் என அனை
வரும் மயங்கி விழுந்தனர். இந்திரஜித் வெற்றிக்கூச்சலிட்டு அரண்மனை திரும்பினான்.அஸ்திர பூஜை முடிந்து திரும்பிய ராமர், நடந்ததைக் கண்டு கதறினார். பலவாறாகச் சொல்லிப் புலம்பினார். அந்த நேரத்தில் விபீஷணன் திரும்பினான்; நடந்தவைகளின் உண்மை அறிந்து,அனுமானைத் தேடிக் கண்டுபிடித்தான்; அனுமானின் உடம்பில் தைத்திருந்த அம்புகளை மெதுவாக எடுத்துவிட்டு, முகத்தில் மென்மையாக நீரைத் தெளித்தான்.

‘‘ராம! ராம!’’ என்றபடியே அனுமான் எழுந்தார். அப்புறம் என்ன? அனுமான் போய் - மருந்து மலையைக் கொண்டுவர, வீழ்ந்து கிடந்த
அனைவரும் எழுந்தனர்.விவரம் அறிந்த இந்திரஜித், மாயா சீதையை (சீதை போன்ற ஒரு வடிவம்) உருவாக்கிப் போர்க்களத்திற்குக் கொண்டு வந்து, அனுமான் எதிரிலேயே அவளை வெட்டினான். அனுமான் நடுங்கினார். அதே சமயம், ‘‘இது மட்டுமா? இதோ! அயோத்தி போய் அங்கும் அனைவரையும் அழிக்கப் போகிறேன்’’ என்ற இந்திரஜித், அயோத்திக்குப் போவதைப் போலப் போக்கு காட்டிச் சென்றான்.

அனைவரும் கலங்கிய நிலையில் இருக்க, அதுவரை பேசாதிருந்த விபீஷணன் பேசத்தொடங்கினான்; ‘‘நானும் இதுவரை கலங்கித்தான் போயிருந்தேன். நடந்தது உண்மையல்ல; சீதாதேவியைக் கொல்வதற்காகவா ராவணன் கொண்டு வந்து வைத்திருக்கிறான். இதில் ஏதோ சூது இருக்கிறது. இந்திரஜித் ஏதோ மாயம் செய்திருக்கிறான். உடனே இலங்கைக்குள் புகுந்து உண்மையை அறிந்து வருகிறேன் நான்’’ என்ற விபீஷணன் வண்டின் உருவம் கொண்டு இலங்கையுள் புகுந்தான்; அசோக வனத்தில் சீதை உயிருடன் இருப்பதைக் கண்டான். இந்திரஜித் நிகும்பலை யாகம் செய்யப் போவதாக
அரக்கர்கள் பேசியதையும் கேட்டான்.

விபீஷணனுக்கு உண்மை புரிந்தது; வெகுவேகமாகத் திரும்பி வந்து, ‘‘தெய்வமே! ராம மூர்த்தியே! அன்னை சீதா தேவி உயிருடன் இருக்கின்றார். நானே பார்த்தேன். நமது கவனத்தை வேறுபக்கம் திருப்பிக் குழப்பிவிட்டு, நம்மை முழுவதுமாக அழிக்க இந்திரஜித் நிகும்பலை யாகம் செய்யப்போகிறான். அது நடந்து விட்டால், இந்திரஜித்தை யாராலும் வெல்ல முடியாது. அவன் நடத்தும் அந்த யாகத்தை உடனே அழித்தாக வேண்டும்’’ என்றான்.

‘‘இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் என் கணார
அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவுண்டோ? அரக்கன் நம்மை
வருந்திட மாயஞ்செய்து நிகும்பலை மருங்கு புக்கான்
முருங்கழல் வேள்வி முற்றி முதலற முடிக்க மூண்டான்’’
 (கம்ப ராமாயணம்)

நிகும்பலை யாகம் அழிக்கப்பட்டது. வேறு வழியற்ற நிலையில் இந்திரஜித், லட்சுமணனுடன் போரிடத் தொடங்கினான். அப்போது விபீஷணனைக்கண்ட இந்திரஜித், இழிவாகப் பேசினான். அவனுடைய அந்தப் பேச்சுகளுக்கு விபீஷணன் பதில் சொன்னான்.

‘‘இந்திரஜித்! தர்மத்தைத் துணையாகக்கொண்டு வாழ்வதுதான் நல்வாழ்வு; நான் தர்மம் தவறி வாழமாட்டேன். மாற்றான் மனைவியைத் தீண்ட வேண்டுமென, என்றைக்கு ராவணன் நினைத்தானோ அன்றே அவன் என் சகோதரனில்லை எனத் தீர்மானித்துவிட்டேன்.

நான் மது அருந்தியதில்லை; பொய் சொன்னதில்லை; பலாத்காரத்தால் அடுத்தவர்களுடைய எந்தப் பொருளையும் அபகரித்ததில்லை; மனத்தால்கூட அடுத்தவர்க்கு வஞ்சனை நினைத்ததில்லை; என்னிடம் யாருமே குற்றம் கண்டதேயில்லை; இவையெல்லாம் உனக்கே தெரியும்.

‘‘இந்நிலையில்,மாற்றான் மனைவியைக்கண்டு ஆசைப்பட்டவரை விட்டு விலகியது குற்றமா?’’ மாற்றான் மனைவியை விரும்புவது குற்றமென்று கூறிய என்னை, உனது தந்தை வெளியேற்றியதால் தானே வந்தேன்! மாற்றான் மனைவியை விரும்பும் உன் தந்தைக்கும், அவனை நல்லவனென்று நினைக்கும் உங்களுக்கும் நல் உலகம் கிடைக்கட்டும். அறவழியில் செல்லும் எனக்கு நரகம் கிடைக்கட்டும்.

‘‘தர்மத்தை அதர்மம் வெல்லாது என்பதை அறிந்தே, ராமரை அடைந்தேன் நான். இதனால் எனக்குப் பழி வந்தாலும் சரி!’’ என விரிவாகவே பதில் சொன்னான் விபீஷணன்.

போர்க்களத்தில் இந்திரஜித் கொல்லப்பட்டான். அவன் தலையை அங்கதன் சுமக்க, அனைவருமாக ராமரிடம் வந்தார்கள். இந்திரஜித்தின் தலையை ராமர் முன்னால் வைத்துவிட்டு, அங்கதன் ஒதுங்கி நின்றான். ராமரின் முகம் மலர்ந்தது;‘‘விபீஷணன் இல்லாவிட்டால் இந்த வெற்றி கிடைத்திருக்காது.‘‘வீடணன் தந்த வென்றி ஈது’. ஆமாம்! விபீஷணன் தந்த வெற்றி இது’’ என மனதார விபீஷணனைப் புகழ்ந்தார் ராமர்.

இதன்பின் போர்க்களத்தில் ராமரால் கொல்லப்பட்ட ராவணன் கீழே கிடந்தான். அப்போது ராமர் அனுமதியின் பேரில், ராவணன் உடம்பில் விழுந்து அழுதான் விபீஷணன்.‘‘அண்ணா! நஞ்சு என்பது உண்டால்தான் கொல்லும்; கண்டால் கொல்லாது.

ஆனால் மாற்றான் மனைவியான சீதை என்ற நஞ்சைப் பார்த்ததாலேயே நீ இறந்துவிட்டாயே! உன் பெண்ணாசையால், அரக்கர் குலம் முழுவதையும் நீ அழித்து விட்டாயே!..’’ என்று பலவாறாகப் புலம்பினான் விபீஷணன். பிறகு ராமர் உத்தரவின் பேரில், ராவணனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களைச்செய்து முடித்தான்விபீஷணன்.

ராவணன் முடிவிற்குப் பிறகு, இலங்கைக்கு அரசனாக விபீஷணனுக்கு முடி சூட்டினான் லட்சுமணன். அனைவருமாக அயோத்தி புறப்பட வேண்டிய அந்த வேளையிலும் விபீஷணன், ராமருக்குச் செய்ய வேண்டிய தன் தொண்டினை மறக்கவில்லை; எவ்வளவு பேர்கள் வந்தாலும் அவ்வளவு பேர்களுக்கும் இடம் கொடுக்கும் புஷ்பக விமானத்தில் வானர வீரர் உட்பட அனைவரையும் ஏற்றிக்கொண்டு தானும் அயோத்தி
சென்றான் விபீஷணன்.

சீதா-ராம பட்டாபிஷேகம் அற்புதமான முறையில் நடந்து முடிந்தது. அனைவர்க்கும் வெகுமதி கொடுத்து அன்புடன் வழியனுப்பி வைத்தார் ராமர்.
அப்போது, இட்சுவாகு குல தனமான பூஜா தெய்வத்தை விபீஷணனுக்குத் தந்தார் ராமர்.விபீஷணன் பெற்ற அந்தத் தெய்வம்தான், திருவரங்கத்தில் இன்றும் நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் திருவரங்கப்பெருமான் எனும் ரங்கநாதர்.

விபீஷணன் கதாபாத்திரம் மிகவும் உயர்ந்ததாகும். நல்லது - கெட்டது என்பதை உணர வேண்டும்; கெட்டதை விட்டு விலக மன உறுதியும் தைரியமும் வேண்டும். நல்லதை நாடிச்சென்று கடைப்பிடிக்கவும் வேண்டும். அப்படிப்பட்டவர்களால்தான், உலகம் நலம்பெறும் எனும் வாழ்வியல் உண்மையை விளக்கும் கதாபாத்திரம் - விபீஷணன்.

(தொடரும்)

பி. என். பரசுராமன்