செழித்தது ஆத்மா! சிறந்தது பக்தி!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

அட்சய திருதியை பற்றிய தகவல்கள், அதன் சிறப்பு, ஆலய விசேஷங்கள், எதை வாங்கினால் அது நன்மையாக பன்மடங்காக பெருகும், எதை வாங்கக் கூடாது என அனைத்து விஷயங்களும் மனதிற்கு ஆனந்தமளித்தன.
- திருமதி. கீதா ரவி, சென்னை - 600041
 
தேனாக ஒலித்த ஆழ்வார்கள் பாசுரங்களின் தொகுப்பு தனித் தொகுப்பு! ஜொலித்த படங்கள் ஆத்மாவின் பூரிப்பு! களித்த என் மனமோ இல்லத்தின் கலங்கரை விளக்கமானது! செழித்தது ஆத்மா! சிறந்தது பக்தி!
 - ஆர். ராஜகோபாலன், நெல்லை.

அள்ளித்தரும் அட்சயதிருதியை தொகுப்பு ஆனந்தத்தையும் அள்ளிக் கொட்டியது. ஏழுவிதமான வகை மற்றும் பலன்களை விவரித்த விதம் கூட
டெபாசிட் ரகம் தான்! கொடுக்கல் வாங்கல்களை எப்படி அமைத்திட்டால் நன்று என்பதைப் புரிந்து சொடுக்கு போட்டு உற்சாகமானேன்.
- எஸ்.எல். ஜார்ஜ் அருண், தூத்துக்குடி.

வராகரைப் போற்றி வளமான வாழ்வு வாழ அழைக்கும் கோகுலாச்சாரியின் தொகுப்பு அற்புதம். குவலயத்தின் இன்றைய நிலையில் மச்சம், கூர்மம் தாண்டி வராக அவதாரம் மூலம் பாரினைக் காத்த பார்த்தசாரதி நிச்சயம் தொற்றிலிருந்து நிச்சயம் உலகைக் காப்பார் என்ற நம்பிக்கை எழுகிறது.
- ஆர் ஜே.கலியாணி, நெய்வேலி.    
 
வராஹர் பக்தி ஸ்பெஷல் அட்டைப் பட தரிசனத்தின் மூலமே அபாரம் எனப் போற்ற வைத்து மனப்பாரம் போக்கியது. மங்களமும் மாட்சிமையும் தரவல்ல மகிமை மிக்க வராஹ தரிசனத்திற்கு வாசகன் ஆகிய அடியேன் உரைக்கும் வார்த்தை… ‘வரம் பெற்றவன் ஆன்மிகம் வாசகன்!’
 - மருதூர்மணி, நெல்லை.
 
இரண்டாம் அலை கொரோனா விரித்துள்ள வலையால் கவலை அதிகரிக்க மாறும் மனோபாவத்தையும் அதற்கான எதிர்விளைவையும் பொறுப்பாசிரியர் சுட்டிக் காட்டியிருப்பது உள்ளத்தை தெளிவு பெறச் செய்கிறது. அடிப்படையில் பிரார்த்தனையே சக்தியாக ஒளிர்வதால் அதுவே பலம் என்பதையும் எனவே பிரார்த்தனையை பலமாக்குவோம் என்பதையும் நிச்சயம் பக்தர்கள் நெஞ்சங்களில் பதித்துக் கொண்டால் ஏற்றம்தான்!
 - ஆர்.விநாயகராமன், திசையன்விளை.