நரசிம்மாவதாரத்தின் பெருமைகளும் பூஜை முறைகளும்-நரசிம்ம ஜெயந்தி 25.5.2021



வைணவ சமய மரபில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் ஐந்து நிலைகளில் இருக்கின்றான். பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற இந்த ஐந்து நிலைகளையும் ஆழ்வார்கள் பாடி இருக்கின்றார்கள். இதில் விபவம் என்பது அவனுடைய அவதாரங்களைப் பற்றிச்  சொல்வதாகும். இந்த அவதாரங்கள் மூன்று வகைப்படும். 1. சாட்சாத் அவதாரம். 2. சொரூப அவதாரம். 3. சக்தி ஆவேச அவதாரம்.

இதில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, திருவிக்ரம, ராம, கிருஷ்ணா அவதாரங்கள் சாக்ஷாத் அவதாரங்களாகும். இந்த அவதாரங்களை நாம் உபாசிக்கலாம். வணங்கலாம். இதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகளைப்  பெறலாம். இதில் வராக, நரசிம்ம, வாமன, திருவிக்ரம, ராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு  பல்வேறு கோயில்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றன.  இந்த அவதாரங்களை நாம் அர்ச்சாவதார  திருவுருவங்களாக இப்பொழுதும் கோயில்களில் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி குறிப்பிடும் நூல்கள்
பல புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய
குறிப்புகள் காணப்படுகின்றன. அவைகளில் சில .
1.பாகவத புராணம், 2. அக்னி புராணம், 3. பிரமாண்ட புராணம், 4. வாயு புராணம் 5. ஹரி வம்சம், 6. பிரம்ம புராணம், 7. விஷ்ணு தர்மோத்தர புராணம், 8. கூர்ம புராணம், 9. மச்ச புராணம், 10. பத்ம புராணம் ,11. சிவபுராணம், 12. லிங்க புராணம், 13.
ஸ்கந்த புராணம் ,14. விஷ்ணு புராணம்

மகாபாரதத்திலும் நரசிம்மரைப் பற்றிய சிறிய குறிப்பு காணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் நான்காவது பரிபாடலில் கடுவன் இளவெயினனார் இரணியன் பிரகலாதன் கதையை பாடியிருக்கிறார். சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் ‘‘இரணியன் பட்டது எம்மிறை எய்தினான்” என்று இரணியனை பற்றிய குறிப்பு ஒன்றை தருகின்றார்.

இரணியன் கதை இதுதான் சத்யுகத்தில் காசியப முனிவருக்கும், திதிக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாட்சன் ஆகிய இரு அசுர சகோதரர்கள்  பிறந்தனர். வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாட்சன் கொல்லப்பட்டான். அண்ணனான இரணியன் பெரும் கோபம் கொண்டான். விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடி, தன்னை வலியவனாக்கிக் கொள்ள, பிரம்மாவை நோக்கி கடும்  தவமிருந்தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது என்று வரம் கேட்டான்.பிரம்மாவும் வரம்  அளித்தார்.

எத்தனை வரம் பெற்று இருந்தாலும் இறைவன் அதைவிட மேம்பட்டவன் அல்லவா? உயர்வற உயர்நலம் உடையவன் அல்லவா? போலீஸ்காரனை விட
திருடன் புத்திசாலித்தனமாக இருந்துவிட்டால், அந்த நாடு பாதுகாப்பாக  இருக்காது .அதனால் வரம்  கொடுத்தவனைவிட,  வரம் பெற்றவன் அதிக பலத்தோடு இருந்துவிடக்கூடாது என்பது தத்துவம். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு, மூவுலகையும் அடக்கி ஆள ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.. தான்தான் கடவுள் என்றும், அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

இச் சூழலில் இரணியன் மனைவி  கயாது கர்ப்பம் தரித்தாள். நாரதர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு  மன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.பிரகலாதன், கல்வி பயிலும் காலம் வந்ததும், அசுரர்களின் குருவான சுக்கிாச்சாரியார், பாடம் நடத்தினார். ‘‘இரணியன் தான் கடவுள்; அவன் நாமத்தைச் சொல்” என்று போதிக்க, பிரகலாதன், ‘மன் நாராயணன் தான் கடவுள்” என்றும், அவன் நாமத்தையே எப்போதும் கூற வேண்டும் என்றும்,  சுக்கிராச்சாரியாருக்கே உபதேசித்தான்.

செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்ற பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன், தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தான். கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தான். விஷமருந்தச் செய்தான். தீக்குள் இறங்கச் செய்தான். அவனது முயற்சிகள்  பலன் அளிக்கவில்லை. இரணியன், தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போனான்.அதற்கு முன் , ‘‘உன் கடவுளைக் காட்டு” என ,பிரகலாதனிடம்  கோபமுடன்  கேட்டான்.

பிரகலாதனோ “என் இறைவனான ஹரி எல்லா இடங்களிலும் இருப்பான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.அப்போது இரணியன் ஒரு தூணைக் காட்டி, “இந்த தூணில் உள்ளாரா?” என்று கேட்க, பிரகலாதனோ. ‘‘எல்லா இடத்திலும் இருப்பவன், இந்தத் தூணிலும் இருப்பான்” என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, மன் நாராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு, தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.
திட்டமிட்டு நரசிங்கமாக  வந்தானா?

பகவான் பல்வேறு அவதாரங்களை நன்கு சிந்தித்து ஒரு திட்டத்தோடு எடுப்பான். ஆனால். நரசிம்ம அவதாரம் எடுக்கின்ற பொழுது, தான் அந்த உருவத்தில் தான் அவதாரம் எடுக்கப் போகிறோம் என்பதைத்  திட்டமிடவில்லை; அது எதேச்சையாகவே  நடந்தது என்றே பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.

தன் அவதாரத்தில், அவன் ஏன் கீழ் பாதி மனித உருவமாகவும், மேல் பாதி சிங்க உருவமாகவும் எடுத்தான்?வேறு மிருகத்தின் உருவத்தை எடுத்து இருக்கலாம் அல்லவா  என்கிற கேள்வி எழலாம். இதற்கு, கம்பராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தில்தான் விடை காண வேண்டும். இரணியகசிபு ஒரு துணைக் காட்டி, இந்தத் தூணில் உன்னுடைய பெருமான் இருக்கிறானா என்று கேட்க, அந்த நொடியிலேயே பெருமாள் அந்தத் தூணில் பிரசன்னமாக ஆயத்தமாகி விட்டார்.

ஆனால் உருவம் எடுக்கவில்லை. அதற்குள் கோபம் கொண்ட இரணியன், பிரகலாதனின் தலையை முரட்டுத்தனமாக பற்றி, ‘‘இதோ பார்! நீ காட்டிய இந்த தூணில் உன்னுடைய நாராயணன் இல்லை என்றால், ஒரு யானையின் தலையைப் பிளந்து, அதிலிருந்து ரத்தத்தை, எப்படி ஒரு சிங்கமானது, வாரிக்  குடிக்குமோ, அதை போல் உன் தலையைப் பிளந்து இரத்தத்தைக் குடிப்பேன் என்று சொல்ல, உள்ளேயிருந்த பெருமான் திடுக்கிட்டார்.

இதென்ன! ஒரு பிள்ளையைப் பெற்றவன் இப்படிச் சொல்வதா என்று திகைத்தார்.கோபம் கொண்டார். அடுத்த வினாடி, தான் சிங்கமாகவும், அவனை யானையாகவும் கருதி, அவனை அழிக்க முடிவு செய்தார். அந்தக்  கணத்தில்தான்  சிங்க முகத்தை எம்பெருமான் தீர்மானித்தார். இந்தக் காட்சியை, கம்பர் தன்னுடைய இரணிய வதைப் படலத்தில் அற்புதமாகக் காட்டுகின்றார்.

திடீரென்று நரசிம்மர் தோன்றினார் என்பதை விளக்கும் பாடல் இது.
பிளந்தது தூணும்; அங்கே பிறந்தது சீயம்;  பின்னை  
வளர்ந்தது திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல்; மற்றும்
அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறைய கிற்பார்?  
கிளர்ந்து கனக முட்டை; கிழித்தது கீழும்  மேலும்.

“பகவான் தன் அடியவன் கூறியதை நிஜம் என்று நிரூபிக்கவே , தன்னுடைய நிறைவு எல்லா பொருள்களிலும் இடங்களிலும் உள்ளதாக  நிரூபிக்க, மிருகமும் இல்லாமல் மனிதனும் இல்லாமல், இரண்டும் கலந்த அதிஅற்புதமான ஒரு வடிவம் கொண்டு தூணில் தோன்றினார்” என்று  மத் பாகவதமும் கூறுகிறது.நரசிம்மனின் பெருமையைச்  சொல்லும் வேதங்களும் உபநிடந்தங்களும்நான்கு வேதங்களும், பற்பல உபநிடதங்களும், நரசிம்மரின் தோற்றத்தைப்  பற்றியும், மந்திரங்களைப்   பற்றியும் பேசுகின்றன.

“ந்ருஸிம்ஹதாபிந்யுபநிஷத்தில்” நரசிங்க மூர்த்தியின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இந்த உபநிஷத், அதர்வண வேதத்தைச் சேர்ந்தது. “பூர்வதாபநீயம்”  என்றும், “உத்தர தாபநீயம்” என்றும் இரண்டு பாகங்கள் இதில் உண்டு. தைத்திரீய உபநிஷத் போலவே  விரிவாக உள்ளது. இதில் பிரம்மனின் பிறப்பு, உலகம் படைக்கப்பட்டது போன்ற பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது.

இதில்தான் 32 அட்சரங்கள் 11 பதங்களும் கொண்ட நரசிம்ம அனுஷ்டுப் மந்திரம்  பிரம்மனுக்கு பகவானால் உபதேசிக்கப் பட்டதாகவும், அதை ஜெபித்து, நரசிம்மனை தியானித்து,  படைக்கும் ஆற்றலை பிரம்மன்   பெற்றதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உபதேசிக்கப்பட்ட ராஜ பத மந்திரத்தை பெரியவாச்சான் பிள்ளை முதல் திருவந்தாதி 23வது பாசுர   வியாக்கியானத்தில்  பிரமாணமாக எடுத்துக் காட்டியுள்ளார். எனவே, இது எல்லா ஆசாரியர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உபநிஷத்.

பிரம்மன் அறிய முயன்ற பிரம்மம் நாராயணன், நான்முகனை தன்னுடைய உந்தியில் படைத்தான். அதனால் பகவானுக்கு பத்மநாபன் என்று பெயர் ஏற்பட்டது. அவன் இறைவன் உந்திக் கமலத்தில் இருந்து தோன்றினாலும், இறைவனை அறியாதவனாக இருந்தான். அப்பொழுது ஒரு அசரீரி, ‘‘பிரம்மனே! நீ எங்கிருந்து தோன்றினாய் என்பதை உன்னால் அறிய முடியவில்லை. அதை அறிய வேண்டும் என்று சொன்னால்  பிரம்மம் ஆகிய என்னை அறிய வேண்டும்” என்று சொல்ல, நான்முகன், ‘‘நீ யார்?” என்று கேட்க, “நான் தான் பிரம்மம்!” என, உடனே நான்முகன்,” நான் உன்னை அறிவது எப்படி ?” என்று கேட்டார்.

உடனே அந்த அசரீரி, ‘‘தவம் செய்தால் என்னை அறியலாம்” என்று சொல்லி மறைந்தது. பிரம்மனும் தன்னைப்  படைத்தவனைத்  தெரிந்துகொள்வதற்காக மிகச்சிறந்த மந்திரமான நரசிம்ம அனுஷ்டுப் மந்திரத்தை ஜெபித்தார். அந்த மந்திரத்தின் அங்கங்கள்தான்  இதர மந்திரங்கள் என்று இந்த உபநிஷத் சொல்லுகிறது. அந்த மந்திரத்தில் தான் பிரம்மமாகிய வேதம் நிலை நிற்கிறது. எல்லா தேவர்களும் அந்த மந்திரத்தில் இருக்கின்றார்கள்.

அதாஸ்  பச் யத் ருசமானுஷ்டுபீம் பரமாம் வித்யாம் அங்காந் ய ந் யே  மந்த்ரா: யத்ர பிரம்ம பிரதிஷ்டிதம் என்று அந்த உபநிஷத் போகும்.நரசிம்மரைப் போற்றும்  மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்.மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்  ஈஸ்வர சம்ஹிதையில் உள்ளது.  லக்ஷ்மி நரசிம்ம மந்திரங்கள் எண்ணிலடங்காதது. ஆனால், ருத்ர பகவான்,  நரசிம்மனிடம் பெற்ற அனுபவத்தை எல்லாம் விளக்குவதற்காகவே இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் அருளிச்செய்தார். அஹிர்புத்ந்ய சம்ஹிதையில் இருக்கிறது. அஹிர்புத்ந்யன் என்றால் ஈஸ்வரனுக்கு பெயர்.

இந்த ராஜபத ஸ்தோத்திரம் மூன்று மத ஆசாரியர்களாலும்  பிரமாணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மிகவும் மங்களகரமானது. இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் 32 அட்சரங்கள் கொண்ட மந்திரம். இதில் 32 பிரம்ம வித்தைகளும் அடங்கியிருக்கின்றன. 11 பதங்கள் இந்த மந்திரத்தில் உள்ளன. அதில் ஏகாதச ருத்ரர்கள் 11 ருத்திரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த பதினோரு பதங்களுக்கும் விவரமாக 11 ஸ்லோகங்களும் ,இறுதியாக ஒரு பலச்சுருதி ஸ்லோகம்.

12 சுலோகங்களால் இந்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் இருக்கிறது, மூன்று காலங்களிலும் இந்த ராஜபத ஸ்தோத்திரம் யார் சொல்கிறார்களோ, அவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதது. இதனை ஏதேனும் ஒரு நரசிம்மர் சந்நதியில், விளக்கேற்றும் நேரத்தில் ,சொல்வது மிகுந்த பலனை அளிக்கும். அப்படி இல்லாவிட்டால், வீட்டிலே ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து, இதை மாலை நேரத்தில் சொல்வது, வீட்டிலே செல்வத்தை கொழிக்கச் செய்யும்.

வறுமை இல்லாத நிலையைத் தரும். எதிரிகள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அச்சம் என்பதே இருக்காது. மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் இருக்கும். எல்லா உறவுகளும் தேடி வரும்.  எதிலும் தோல்வி என்பதே இருக்காது. எமன் கூட வருவதற்குத் தயங்குவான். அதில் உள்ள ஒரு ஸ்லோகம் இது. இதை சாஷாத் ஈஸ்வரனே பார்வதி தேவிக்கு உபதேசம் செய்தார்.யந்நாம ஸ்மரமணாத் பீதா  பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி  பீஷணம் தம் நமாம்யஹம்!!

எவனுடைய பெயரை நினைத்தாலே, பூதங்கள், பிசாசுகள், ராக்ஷஸர்கள் நடுங்கி நான்கு திசைகளிலும் ஓடுவார்களோ, எவனுடைய பெயரைச் சொன்னால், எந்த வியாதிகளும் ஒருவனை கிட்டே கூட அணுகாதோ, எந்த நாமத்தைச் சொன்னால் ஏற்கனவே வந்த தீராத நோய்களும் அவரை விட்டு ஓடி ஒளியுமோ, அப்படிப்பட்ட நரசிம்ம பிரபுவை  நான் வணங்குகின்றேன். காரணம் அவன் எமனுக்கு எமன், அவன் திருவடிகளில் ‘‘நம:” என்று கூறி, ஆத்ம நிவேதனம் செய்து விட்டால்,  அவன் காப்பாற்றி விடுவான்.

நரசிம்மரின் மூல மந்திரமும் அதன் பொருளும்
உபநிடத்தில் உள்ள சக்தி வாய்ந்த மூல மந்திரம்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம்  பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

உக்ரம் என்கிற மந்திரத்தில் நரசிம்மனை உக்கிரமாக சொல்கின்றது. வீரியத்தை உடையவராக இருப்பதால் வீரியம் என்று சொல்கிறது. அவன் தான் மகாவிஷ்ணு என்பதை அடுத்த பதத்தில் காட்டுகிறது. ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்து நிற்கும் அவற்றைக் காட்டிலும் பெரிதாக பிரகாசிப்பவன் என்பதால் அவனை ஜ்வலந்தம் என்று சொல்லி, எல்லாவிடத்திலும் அவன் நிறைந்திருக்கிறான்; எங்கும் அவனைக் காணலாம்; அவன் முகத்தை எந்த இடத்திலும் பார்க்கலாம் என்பதால் ஸர்வதோமுகம் என்கிறது..  

இவரிடம் உள்ள அச்சத்தினால் சூரியன் உதிக்கின்றான். சந்திரன் சொல்படி கேட்கின்றான். வாயு வீசுகின்றான். அக்கினி உஷ்ணம் தருகின்றான்.  வருணன் மழையைப் பொழிகின்றான். எனவே இவனை பத்ரம் என்கின்ற சொல்லினால், சர்வ மங்களங்களுக்கும்  காரணமானவன் என்று உபநிஷத் சொல்லுகின்றது. ம்ருத்யு  ம்ருத்யும் என்பதால்  சம்சார துக்கத்தைப் போக்குபவன் என்று பொருளாகிறது.
ஆதி சங்கரரும் ராமானுஜரும் போற்றிய நரசிம்மர்
ஆதிசங்கரர், லட்சுமி
நரசிம்மரைத்  துதிக்க, அவருக்கு  நரசிம்மர் காட்சி தந்தார்.
அப்பொழுது அவர் லட்சுமி
நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் பாடினார்.

பல்லவ மன்னர்கள் பலரும் நரசிம்ம அவதாரத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் தங்கள் பெயரோடு நரசிம்மரின் பெயரையும் இணைத்துக் கொண்டார்கள். சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன், ராஜசிம்மன் போன்ற பெயர்களை அந்த அரசர்கள் வைத்துக் கொண்டார்கள்.  

 ராமானுஜருக்கு நரசிம்மரிடம் அளவு கடந்த ஈடுபாடு. அவர் 74 சிம்மாசன அதிபதிகளை வைணவ மதத்தைப் பரப்புவதற்காக நியமித்தார். அவர்களுடைய திருவாராதனப் பெருமாளாக நரசிம்மப்  பெருமாளையே வழங்கி, நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.

யோக நரசிம்மரின் சிறப்பு :
நரசிம்மரின் தோற்றத்தில் மூன்று தோற்றங்கள் முக்கியமான தோற்றங்கள். ஒன்று இரணியனை சம்ஹாரம் செய்கின்ற உக்கிர நரசிம்மர். அந்த நேரத்தில் அவரிடம் தேவர்களால் கூட நெருங்க  முடியவில்லை. எல்லோரும் அஞ்சி நடுங்கினர். அவன் மார்பில் சதா  மகிழ்வித்து கொண்டிருக்கும் பெரிய பிராட்டியார் மகாலட்சுமித்  தாயாராலும்  அருகில் செல்ல முடியவில்லை. உக்கிர நரசிம்மரின் அருகில் பயமில்லாமல் நின்ற ஒருவன் நரசிம்மனின் பக்தனான பிரகலாதன்  மட்டுமே.

சிவந்த விழியோடும், கோபம் கொண்ட முகத்தோடும், இருந்த நரசிம்மமூர்த்தி, பிரகலாதனை வாரி அணைத்துக் கொண்டார். பிரகலாதனிடம் மட்டும் இத்தனை கருணையும், உகப்பும்  எப்படி வந்தது என்பதற்கு வைணவ ஆச்சாரியர் பராசர பட்டர் ‘‘என்னதான் சிங்கமானது எதிரிகளோடு சண்டை போட்டாலும், தன் குட்டிக்கு பால் தந்து கொண்டுதானே இருக்கும்” என்று விளக்கம் அளித்தார்.. பிரகலாதனின் பிரார்த்தனைக்கு இணங்க உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்.

விஷ்ணுவை போகமூர்த்தி என்றே  கருதினாலும், அவர் தக்ஷிணாமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாகவும் விளங்குகிறார். இப்போதும் சீர்காழி திருநகரியிலும் சோளிங்கரிலும் யோக நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம். எப்படி பூஜை செய்வது?

நரசிம்ம ஜெயந்தி விரத முறை எளிமையானது. எல்லோரும் கொண்டாடலாம். பகவான் நரசிம்மரை பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6)  பூஜிக்க வேண்டும்.செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல்,தயிர் சாதம் , பானகம் போன்ற நிவேதனங்களும் சிறப்பு. வாசனையான சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். செவ்வாய் தோஷம் பாதிப்பு உள்ளவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள்,  நரசிம்ம வழிபாடு செய்வது நலம்.

நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களையும், உடல் உபாதைகளையும், கடன் தொல்லைகளையும் எளிதில் வெல்ல முடியும். முடிந்தளவு கீழே உள்ள நரசிம்ம காயத்ரியை தினசரி சொல்லுங்கள். ஓம் வஜ்ர நகாய வித்மஹே   தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹீ  தன்னோ நாரஸிம்ஹ ப்ரசோதயாத்நரசிம்ம மூர்த்தி நமக்கு நல்வாழ்வு தருவார்.

விஷ்ணுபிரியா சுதர்ஷன்