மங்கல நாணில் திரு எனும் தாய்தெய்வம்



திருமணங்களில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி எனும் அணியைச் சூட்டுவது முக்கிய சடங்காகத் திகழ்கின்றது. அந்த தாலி கோர்க்கப்பெற்ற மஞ்சள் நூலினை மாங்கல்ய சூத்திரம் என்றும் மங்கல நாண் என்றும் கூறுவர். திருமாங்கல்யம் எனும் அவ்வணி திருமணமான பெண்ணின் கழுத்திலிருந்து நீங்காது நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மங்கல நாளிலோ அல்லது ஆடிப்பெருக்கன்றோ தாலிப்பெருக்கு என்ற நிகழ்வாக மஞ்சள் நூலினை நீக்கி மஞ்சள் நிற தங்கத்தாலான சரடில் திருமாங்கல்யத்தைக் கோர்த்து பெண்ணின் கழுத்தில் அணிவித்து, மங்கல மகளிர் அப்பெண் கணவனைப் பிரியாது நீடு வாழப் போற்றுவர். அம்மங்கல அணி சுமங்கலி எனும் தகுதியுடன் அப்பெண் வாழும் வரை எக்காலத்தும் அவள் கழுத்திலிருந்து நீக்கப் பெறாத தகைமை உடையதாகும்.

இம்மரபினைச் சுட்டும் வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த சங்கத் தமிழ் நூலான அகநானூற்றில் உறையூர் ஏணிச்சேரி முடிமோசியார் எனும் புலவர் வேள் ஆய் அண்டிரன் எனும் அரசனைப் போற்றும் பாடலில் ஒரு குறிப்பு உள்ளது. அப்பாடலில் ஆய்அண்டிரன் எனும் அரசனைப் பார்த்து “ஆய்வேளே, இனிய அடிசிலை (உணவினை) பிறர்க்கு உதவாதார் சிலர்; தாமே உண்டு வயிற்றை நிறைப்பவர் அவர். அவர்களோ புகழில்லாத அருளற்றவர்கள்.

ஆனால், நீயோ உன் யானைகள் அனைத்தையும் இரவலர்க்கு வழங்கிவிட்டாய். பிறரிடம் கொடுக்க இயலாத மங்கல அணி (திருமாங்கல்யம்) மட்டுமே நின் மனைவி அணிந்துள்ளாள். உன்னுடைய பிற பொருள்கள் அனைத்தையும் வறியவர்கள் பெற்றுச் சென்றுவிட்டார்களே. உன் அரண்மனைக்கு மற்ற அரசர்களின் அரண்மனை ஈடாகுமா?” - என்று ஆய் அண்டிரனின் புகழினைப் பதிவு செய்துள்ளார்.

திருமாங்கல்யத்தின் சிறப்பை “ஈகை அரிய இழையணி” என்ற சொல்லால் முடமோசியார் அப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். சந்திரன் உரோகிணி எனும் விண்மீனோடு இணையும் நாளினை முன்நாளில் சுபமுகூர்த்த நாளாகக் கருதப்பெற்று திருமணங்கள் நிகழ்ந்தன என்பதற்குப் பல இலக்கியச் சான்றுகள் உள்ளன.

அருகின் கிழங்கு, மஞ்சள் ஆகியவற்றை மங்கல நாணில் கோர்த்துக் கட்டும் வழக்கமும் பண்டு இருந்துள்ளது. பின்னாளில் அவரவர் வாழும் பகுதி, அவரவர் குலம் ஆகியவற்றுக்கு ஏற்ப மங்கல நாணில் கோர்க்கப்பெறும் திருமாங்கல்யத்தின் (தாலி) வடிவங்கள் அமைந்தன. தென்னகத்து பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டு மக்களின் மாங்கல்ய சூத்திரத்து மாங்கல்யம் (தாலி) எனும் அணி மிகச் சேய்மையான காலத்தில்
தாய்தெய்வத்திற்குப் பண்டைய மனிதர்கள் வடித்த உருவமே என்பதை நோக்கும்போது நாம் வியப்பில் ஆழ்வோம்.

மனிதர்கள் இயற்கையின் ஆற்றல்களை உணர்ந்து அது தெய்வத்தால் விளைவது எனக் கண்டு, அத்தெய்வத்திற்கு ஒரு வடிவம் கொடுத்தனர். அவ்வாறு வடிக்கப்பெற்ற உருவத்தினைத் தாய் தெய்வம் எனப் போற்றினர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் இந்தியத் திருநாட்டில் மட்டுமின்றி கிரீஸ், சைப்ரஸ், துருக்கி, மெசபடோமியா, மஸ்டா போன்ற நாடுகளிலும் மக்கள் தாய்தெய்வத்தைச் சுடுமண் பதுமையாகவோ, உலோகத்திலோ வடித்து வணங்கியுள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த அந்த தாய் தெய்வ வடிவங்கள் மேற்குறித்த நாடுகள் அனைத்திலும் ஏறக்குறைய ஒரே வடிவில்தான் வடிக்கப்பெற்றுள்ளன என்பதைக் காணும்போது நமக்கு வியப்பளிக்கின்றது.

தமிழ்நாட்டில் தாய் தெய்வத்திற்கென பழங்காலத்தில் அமைந்த இரண்டு பிரம்மாண்டமான கல்வடிவங்கள் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள மொட்டூரிலும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூருக்கு அருகில் உள்ள உதயநத்தம் எனும் ஊரிலும் தரையில் நடப்பெற்று கிராம மக்களால் விசிறிக்கல் என்ற பெயரில் தெய்வமாக வழிபடப்பெறுகின்றன. ஏறத்தாழ 9 அடி உயரத்தில் இந்த தாய் தெய்வ உருவம் மொட்டூரில் காணப்பெறுகின்றது. தெளிவான தெய்வ உருவமாக அமையாமல் தலை இரு வளைவுக் கரங்கள் இரு மடிந்த நிலைக்கால்கள் என ஒரு கற்பனை வடிவில் இவ்வுருவம் காணப்பெறுகின்றது.

சங்க காலம் எனக் கூறப்பெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாய் தெய்வத்தின் இவ்வடிவத்தினை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் வெளியிட்ட காசுகளில் பொறித்துள்ளனர். குறிப்பாகச் சங்ககால சோழர்களின் சதுர வடிவ காசுகளில் ஒருபுறம் புலியும் மறுபுறம் யானைமீது வெண்கொற்றக் குடையுடன் திரு எனும் தாய் தெய்வ உருவமும் காணப்பெறுகின்றன.

திரு எனும் இவ்வுருவத்தினை திரு மறு என்றும் வடமொழியில் ஸ்ரீவத்சம் என்றும் குறிப்பிட்டனர். திருமாலின் மார்பில் வலப்புறம் இவ்வுருவம் திகழ்வதாக பண்டைய தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. “இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்” என்று திருமாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலித்தொகை, பரிபாடல் போன்ற நூல்களில் இத்தகைய பல குறிப்புகள் உள்ளன. நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

பங்கயக் கண்ணன் என்கோ பவளச்செவ்வாயன் என்கோ
அங்கதிர் அடியவன் என்கோ அஞ்சணவண்ணன் என்கோ
செங்கதிர் முடியன் என்கோ திருமறுமார்பன் என்கோ
சங்கு சக்கரத்தான் என்கோ சாதி மாணிக்கத்தையே

- எனக்கூறி திருமாலின் மார்பில் திருமருவாகிய தாய்தெய்வத்தின் உருவம் இருப்பதாகக் கூறியுள்ளார். திவ்ய பிரபந்தத்தில் இத்தகைய குறிப்புகள் பலவுள்ளன.

சங்க காலத்தில் மாலவன் மார்பில் காட்டப்பெற்ற திருமறு எனும் வத்சத்தின் உருவம் எவ்வாறு இருந்தன என்பதற்கு நமக்கு வடிவங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், பல்லவர் காலம்தொட்டு (கி.பி. 6ஆம் நூற்றாண்டு) வடிக்கப்பெற்ற திருமாலின் திருவடிவங்களிலும், பின்னாளில் சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள் போன்ற மன்னர்கள் காலத்தில் வடிக்கப்பெற்ற மாலவனின் கற்சிற்பங்களிலும் செப்புத் திருமேனிகளிலும் அப்பெருமானின் வலது மார்பில் வத்சம் எனும் திருமறு நிச்சயம் இடம்பெற்றுத் திகழும்.

அவ்வடிவம் பண்டைய காலத்தில் எவ்வாறு தாய்தெய்வத்திற்கு உருவம் அமைத்தார்களோ அதேபோன்று பல்லவர் கால சிற்பங்களில் காணப் பெறுகின்றன. அக்காலத்திய திருமறு தனியாகவோ அல்லது தாமரை மலர்மீதோ காணப் பெறுகின்றன. பல்லவர் காலத்திற்குப் பிறகு அவ்வுருவம் தெளிவான தாமரை மலர்மீது அமர்ந்த திருமகளாக காலப்போக்கில் மாற்றம் பெற்று பின்பு விஜயநகர அரசு காலத்தில் திருமகள் உருவமாகவோ அல்லது முக்கோணமாகவோ இடம்பெற்றுள்ளன.

திருமாலின் மார்பில் வடிக்கப்பெற்ற தாய்தெய்வமான திருவினை தனியாகவும் நம் திருக்கோயில்களில் கல்லிலும் உலோகத்திலும் வடித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஏனாதி எனும் ஊரில் கிடைத்த செம்பில் வடிக்கப்பெற்ற திருமறு உருவம் பழமையானதாகும். தாமரை மலர்மீது கை கால்கள் வேலைப்பாடுடைய சுருள் வடிவிலும், மகுடம் அணிந்த முகத்தோடும் அமர்ந்த தாய் தெய்வம் காணப்பெறுகின்றாள். அரியலூர் கோதண்ட ராமசாமி கோயிலில் இடம்பெற்றுள்ள கற்சிற்பத்தில் ஏனாதியில் கிடைத்த வடிவம் போன்றே காணப்பெற்றாலும், இருமருங்கும் இரு யானைகள் நின்றவாறு நீர் கலசங்களை துதிக்கைகளில் ஏந்தி திருவை நீராட்டுகின்றன.

கங்கைகொண்ட சோழபுரத்து சோழீச்சரத்தில் உள்ள திருமகள் உருவம் குறிப்பிடத் தக்கதாகும். தாய்தெய்வ உருவம் கலை நிலை வளர்ச்சி மாறுபாடுகளை எவ்வாறு பெற்றது என்பதைக் காட்டுவதோடு, அவ்வடிவம் எந்த தத்துவத்தைச் சுட்டி நிற்கின்றது என்பதையும் தெளிவாக விளக்குவதாக அமைந்துள்ளது.

சூல்கொண்ட கருத்த மழைமேகங்கள் வானில் சூழ்ந்து மழை பொழியும். அம்மழைநீரால் நீர்நிலைகள் நிரம்பி வழியும். அப்போது வளத்தை எடுத்துக் காட்டும் தாமரை மலர்கள் அங்கு பூத்து மலரும். அப்போது எல்லா பயிர்களும் விளைந்து வளம் கொழிக்கும். இவை அனைத்திற்கும் காரணமாக இருப்பது தாய் தெய்வமே. எனவே, அத்திருவை தாமரை மலரில் ஏற்றி அமரச்செய்து நம் முன்னோர் வழிபட்டனர். இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் காசாகுடி செப்பேட்டில் திருமகளைக் குறிப்பிடும் ஒரு செய்யுள் காணப்பெறுகின்றது.

பத்மா பத்மசீனா பத்மோத் ஜ்வலபாணி பத்ம யுகலா வஹ
பிரீத்யா பச்யது கரிணீ கரத்ருத கனககட சுஸ்னானா
- என்பதே அச்சுலோகமாகும்.

“தாமரை மலர்கள் அலங்கரிக்கும் கரங்களையுடையவளும் தாமரை மலரில் அமர்ந்திருப்பவளும் யானைகள் துதிக்கைகளில் தாங்கிய பொற்குடங்களிலிருந்து நீராட்டப் பெறுபவளுமான தாமரையாள் நம்மை அருளோடு பார்க்கட்டும்” - என்பதே அதன் பொருளாகும்.

கங்கை கொண்ட சோழபுரத்து திருமகள் சிற்பத்தில் தாமரை மலர்மீது இரு கரங்களிலும் தாமரை மலரை ஏந்தியவளாகத் திருமகள் பத்மாசனத்தில் அமர்ந்திருக்க தலைக்கு மேல் மேகக் கூட்டங்கள் காட்டப்பெற்று அவையே யானை உருவங்களாக மாறி பொற்கலசங்களை ஏந்தி மழை எனும் நீராட்டலைச் செய்கின்றன.

இரண்டு யானைகளுடன் திகழும் திருமகளை வைணவ ஆலயங்களில் தாயார் என்ற பெயரில் தாயார் சன்னதியில் இடம்பெறச் செய்து வணங்குவது நம் வைணவ மரபாகும். மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயிலில் உள்ள திருமகளை செங்கமலத் தாயார் எனக் குறிப்பிடுவர்.

சக்தி வழிபாட்டைக் கொண்ட சாக்த மரபில் திருமாங்கல்யமும், அதோடு இணைத்து மங்கல சூத்திரத்தில் கோர்க்கப்பெறும் கோணங்கள் உள்ள குண்டுகளும் காமகலாஸ்வரூபமாகக் கருதப்பெறுகின்றது.

மகாமேரு அல்லது ஸ்ரீசக்கரத்தில் காணப்பெறும் திரிகோணம் மற்றும் பிந்து ஆகியவை திருமாங்கல்யம் எனும் தாலியிலும் இடம்பெற்றுள்ளன. சாக்தர்களும் திருமாங்கல்யத்தை தாய் தெய்வமாகிய லலிதா திரிபுரசுந்தரியாகவே போற்றி வழிபடுகின்றனர்.தாய்தெய்வ வடிவத்தில் எத்தனை கோல நிலைகள் இருப்பினும் நம் தமிழ்நாட்டில் மிகத் தொன்மைக்காலத்தில் தாய்தெய்வத்திற்கு என்ன வடிவம் அமைத்தார்களோ அதனையே திருமாங்கல்யமாகப் போற்றத் தொடங்கினர்.

இடம், இனம் இவை அடிப்படையில் உருவ அமைதியில் சிறுசிறு மாற்றங்கள் இருந்தாலும் மங்கல நாணில் இடம்பெறும் திருமாங்கல்யம் எனும் தாலி திரு எனும் தாய் தெய்வத்தின் திருவடிவமே என்பது உறுதி. எனவேதான் திருமணச் சடங்கைக் குறிப்பிடும் வகையில் தமிழ்நாட்டில் “திருப்பூட்டுதல்” என்ற சொல்லாட்சி மக்கள் வழக்கில் இன்னும் வழங்கி வருகின்றது. தாயாகிய திருவை திருமாங்கல்யமாக மணமகளின் கழுத்தில் சூட்டி அப்பெண் தாயாகி வாழ்நாள் முழுவதும் தாய்தெய்வத்தைத் தன்னோடு எக்காலத்தும் நீக்காமல் தாங்குவதுதான் நம் மரபுப் பெருமையாகும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்