ஸ்ரீ கிருஷ்ண அமிர்தம் - 2 (பகவத் கீதை உரை)



மனக்குழப்பத்துக்குக் காரணம் கிருஷ்ணனேதானோ!

மொத்தம் 18 அத்தியாயங்களைக் கொண்டது பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அருளிய பகவத் கீதை. இவற்றில் முதல் அத்தியாயம் என்பது போர்க்கள வர்ணனை, அதற்குப் பிறகு, போருக்கு வந்து விட்டாலும், தான் எதிர்க்க வேண்டியவர்கள் தன் உடன் பிறப்புகளே, உறவுகளே, தன் குருமார்களே என்றெல்லாம் உணர்ந்து மதி மயங்கும் அர்ஜுனனின் கேள்விக் கணைகள் ஆகியவற்றைக் கொண்டது.  

அந்த மயக்கத்தை, வலிமை குன்றிய தன் மனதைப் பலவாறாக வெளியிடுகிறான் அர்ஜுனன். தனக்கு நண்பனாக, ஆசானாகத் திகழ்ந்த கிருஷ்ணன், இப்போது தனக்கு சாரதியாகவும் பொறுப்பேற்றுத் தன்னைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறான்!ஆனால், அவனை வெறும் சாரதியாக அர்ஜுனனால் நினைக்க முடியவில்லை. தன் தேரை இந்தப் போர்க்களத்தில் எப்படி சாதுர்யமாக செலுத்தி, தன் வெற்றிக்கு அவன் முயற்சிக்கப் போகிறானோ, அதேபோல தனக்கு அவ்வப்போது தோன்றக்கூடிய போர் உத்தி சந்தேகங்களுக்கும் நல்ல, சரியான தீர்வை அளிக்கப் போகிறவனும் கிருஷ்ணன்தான் என்றும் தீர்மானித்திருந்தான் அர்ஜுனன்.

ஆனால், போரிடவே வேண்டாம் என்று தான் முற்றிலுமாகப் பின்வாங்கும் சூழ்நிலை உருவாகும் என்று அவனே எதிர்பார்த்திருக்க மாட்டான். அதனால் இந்த மனோநிலைக்கு ஆட்பட்ட அவன், பலவாறாக கிருஷ்ணனிடம் கேள்விகள் கேட்கிறான். இந்தக் கேள்விகளே இந்த முதல் அத்தியாயத்தின் பிரதான அம்சங்களாகும்! இந்த முதல் அத்தியாயம் ‘அர்ஜுன விஷாதயோகம் என்ற தலைப்பில் வழங்கப்படுகிறது.

அவன் கிருஷ்ணனைக் கேள்விகள் கேட்கு முன்பாக திருதராஷ்டிரன் - சஞ்சயன் உரையாடல் முதல் 20 ஸ்லோகங்களாக அமைந்திருக்கின்றன:-  
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ
மாமகா பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்சய (1:1)
த்ருஷ்ட்வா து பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ்ததா
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசனமப்ரவீத் (1:2)
பச்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தீமதா (1:3)

அத்ர சூரா மஹேஷ்வாஸா பிமார்ஜுனஸமா யுதி
யுயுதானோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத (1:4)
த்ருஷ்டகேதுஸ்சேகிதான: காசிராஜஸ்ச வீர்யவான்
புருஜித் குந்திபோஜஸ்ச சைப்யஸ்ச நரபுங்கவ: (1:5)
யுதாமன்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவான்
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா (1:6)

அஸ்மாகம் து வசிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைன்யஸ்ய ஸம்ஞார்த்தம் தான் ப்ரவீமி தே (1:7)
பவான் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய
அச்வத்தாமா விகர்ணஸ்ச ஸௌமத்த்திர்ஜயத்ரத (1:8)

அன்யே ச பஹவ: சூரா மதர்த்தே த்யக்த்ஜீவிதா
நானாசஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிசாரதா (1:9)
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் (1:10)
அயனேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த ஸர்வ ஏவ ஹி (1:11)

தஸ்ய ஸஞ்சனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:
ஸிம்ஹநாதம்விநத்யோச்சை: சங்கம் தத்மௌ ப்ரதாபவான் (1:12)
தத: சங்காஸ்ச பேர்யஸ்ச பணவானககோமுகா
ஸஹஸைவாப்யஹன்யந்த ஸ சப்தஸ்துமுலோபவத் (1:13)

தத: ச்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ
மாதவ: பாண்டவஸ்சைவ திவ்யௌ சங்கௌ ப்ரதத்மது (1:14)
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேசோ தேவத்த்தம் தனஞ்ஜய
பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீமகர்மா வ்ருகோதர (1:15)

அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர
நகுல ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ (1:16)
காச்யஸ்ச பரமேஷ்வாஸ சிகண்டீ ச மஹாரத
த்ருஷ்ட்த்யும்னோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித (1:17)

த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வச: ப்ருதிவீபதே
சௌபத்ரஸ்ச மஹாபாஜு சங்கான் தத்மு: ப்ருதக் ப்ருதக் (1:18)
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யனுநாதயன் (1:19)

அத வ்யவஸ்திதான் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ரான் கபித்வஜ
ப்ரவ்ருத்தே சஸ்த்ரஸம்பாதே தனுருத்யம்ய பாண்டவ
ஹ்ருஷீகேசம் த்தா வாக்யமிதமாஹ மஹீபதே (1:20)

- குருக்ஷேத்திரப் போர் அறிவிக்கப்பட்ட பிறகு பெரிதும் கலவரமடைந்தான் திருதராஷ்டிரன். தன் பிள்ளைகளான கௌரவர்கள் வெற்றி பெற வேண்டுமே என்ற எதிர்பார்ப்பினால், போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவலும் மிகுந்தது. இங்கிருந்தபடியே தொலைதூரத்துப் போர்க்கள நிகழ்ச்சிகளைக் கண்டுகொள்ளும் (தற்காலத்திய சாடிலைட் போன்ற) ஆற்றல் மிகுந்த சஞ்சயனிடம் கேட்டு, அவன் விவரிக்க, விவரிக்க, பார்வையற்ற  அவன் விவரம் தெரிந்துகொண்டான்.

மேலே படித்த அந்த  ஸ்லோக உரையாடலின் பொதுவான உரைத் தொகுப்பு இதுதான்: குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது.கௌரவ சேனை, மிகப் பெரியதொரு கடல்போலத் திரண்டிருந்தது. பீஷ்மரின் வழி நடத்துதலில் மிகுந்த உற்சாகத்துடன் கௌரவர்கள் பீடு நடை போட்டபடி சென்றார்கள். பீஷ்மர், கர்ணன், க்ருபாச்சாரியார், அஸ்வத்தாமன், விகர்ணன், கோமதத்தனுடைய மகனான பூரிச்ரவஸ் என்று வீர, தீர பராக்கிரமம் கொண்ட பலரும் அவர்களுக்குப் பின்னால் தத்தமது நெடிய சேனைகளுடன் அணிவகுத்து நின்றனர்.

பாண்டவர் பிரிவில், பஞ்சபாண்டவர் தவிர, காசிராஜன், தேரோட்டுவதில் வல்லவனான சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராட தேசத்து அரசனான ஸாத்யகி, துருபதன், திரௌபதியின் பிள்ளைகள், சுபத்திரை-அர்ஜுனனின் மகனான அபிமன்யு மற்றும் எல்லோருக்கும் மேலாக கிருஷ்ணன் ஆகியோர் அணிவகுத்திருந்தனர்.போர்த் துவக்கத்திற்கு அடையாளமாக கௌரவர்கள் பகுதியிலிருந்து குரு வம்சத்தில் பெரியவரும், பாட்டனாருமான
பீஷ்மர், வீர கோஷமிட்டு தன் சங்கை ஊதினார். அதனை வெற்றிச் சங்கொலியாகவே பாவித்து மகிழ்ந்தான் துரியோதனன். ஆனால், அது வெற்றுச் சங்கொலியாகப் போவதை அவன் மட்டுமல்ல, யாருமே உணரவில்லை.

அவருடைய சங்கொலிக்குப் பிறகு பிற சங்குகளும், பேரிகைகளும் பேராரவாரம் செய்தன. எழுச்சியூட்டும் வகையில் தம்பட்டங்களும், பறைகளும் ஒலிக்க கொம்புகள் முழங்கின.இந்த ஆரவாரம் ஓரளவு குறைந்தபோது எதிர் அணியில் பளீர் என்று சூரிய ஒளி தோன்றியது.வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட, கண்களைப் பறிக்கும் ஒளியுடன் கூடிய ரதத்தை கண்ணன் ஓட்டி வர, அர்ஜுனன் அதன்மீது கம்பீரமாக நின்றிருந்தான்.

தாங்களும் போருக்குத் தயாராக இருப்பதை அறிவிக்க கண்ணன் தன்னிடம் இருந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும் ஊதினார்கள். பராக்கிரமசாலியான பீமன் ஊதிய பௌண்டிரம் என்ற சங்கின் ஒலி உலகையே கிடுகிடுக்க வைத்தது. இதைத் தொடர்ந்து, வில்வீச்சில் வல்லவனான காசிராஜன், சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராட தேசத்து அரசனான தோல்வியே காணாத சாத்யகி, துருபதன், இவர்களோடு திரௌபதியின் பிள்ளைகள், சுபத்திரையின் மகன் அபிமன்யு ஆகியோரும் தனித்தனியே தத்தமது சங்குகளை ஊதி போருக்குத் தாமும் தயாராக இருப்பதைத் தெரிவித்தார்கள்.

எல்லாவற்றிற்கும் உயர் சிறப்பாக, அர்ஜுனனின் தேரின் மீது ஆஞ்சநேயர் கொடி பறந்தது. ராமாவதாரத்திற்குப் பிறகு,  அப்பெருமாளின் பிற அவதாரங்களின்போதும் கூட அவரைப் பிரியாத வரம் வேண்டிய சிரஞ்சீவி அனுமனின் ஆசை கிருஷ்ணாவதாரத்திலும் இந்தவகையில் பூர்த்தி செய்யப்பட்டது.

போர்க்களம் பரபரப்படைந்த சமயத்தில் அர்ஜுனனுக்கு ஓர் எண்ணம். தான் யாருடனெல்லாம் போரிட வேண்டியிருக்குமோ அவர்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். நயவஞ்சகமாகத் தங்களை ஏமாற்றிப் பறித்துக் கொண்ட சொத்துகளை போரிட்டுதான் மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவல நிலைக்குத் தங்களை உட்படுத்திய கௌரவர்களைப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வேட்கைத் துடிப்பு
மிகுந்தவனாக இருந்தான் அர்ஜுனன்.

சகுனியின் தூண்டுதலின் பேரில் துரியோதனன் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் பாண்டவர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும், அந்த கௌரவர்களை எப்படியெல்லாம் பழி வாங்க வேண்டும் என்ற வெறியை வளர்த்துக் கொண்டே வந்து, அது போரில் வந்து முடிந்திருப்பதில் அர்ஜுனனுக்குப் பெரும் சந்தோஷம்.

ஆமாம்; போரில் நயவஞ்சக முயற்சிக்கு வாய்ப்பில்லையே! நேருக்கு நேர் மூளும் போரில் வெற்றியா, வீழ்ச்சியா என்ற இரண்டே வாய்ப்புகள்தான். தன் பராக்கிரமம் மட்டுமன்றி, கண்ணனின் சமயோசித அறிவுரைகளும், போர்த்திட்டங்களும் உதவிக்கு இருப்பதால், தான் கொய்யப் போவது வெற்றிக் கனியைத்தான் என்பதில் உறுதியாக இருந்தான் அர்ஜுனன்.

அந்த உற்சாகத்திலேயே, லேசாக தலை தூக்கிய கர்வத்துடன் தன்னை எதிர்க்கத் துணிவோர் யாரென்று பார்க்க விரும்பினான். உடனே தேரோட்டி வந்த கிருஷ்ணனிடம், தான் அவ்வாறு பார்க்கத் தோதாகத் தேரை அந்தக் கோணத்திற்குக் கொண்டுபோய் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்:
ஸேனயோரூபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத (1:21)
யாவதேதாந்நிரீக்ஷேஹம் யோத்துகாமானவஸ்திதான்
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மின் ரணஸமுத்யமே (1:22)

‘கிருஷ்ணா, எதிரெதிரே நிற்கும் இரண்டு படைகளுக்கும் நடுவே என்னுடைய இந்த ‘மே ரத’த்தை நிறுத்துவாயாக. இந்தப் போரைத் தொடங்கு முன்னால் யாருடன் நான் போரிட வேண்டுமோ அவர்களைப் பார்க்க விரும்புகிறேன்.   

யோத்ஸ்யமானானவேக்ஷேஹம் ய ஏதேத்ர ஸமாகதா:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ: (1:23)
‘திருதராஷ்டிரனின் புதல்வனான

துர்புத்தி படைத்த துரியோதனனுக்கு உதவும் பொருட்டு அவனுடன் போர்க்களத்தில் நின்றிருப்பவர்களை எனக்குக் காட்டு. அவர்கள் அனைவரையும் ஒரே அம்பால் வீழ்த்தி என் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்கிறேன்' என்ற ஏகத்துடிப்போடு அர்ஜுனன் கூற கண்ணன் அமைதியாகச் சிரித்துக் கொண்டான். ‘என்ன ஆணவம் இவனுக்கு!’ என்று யோசித்திருப்பானோ, அதுதான் இந்த சிரிப்புக்கு அர்த்தமோ! அர்ஜுனனுடைய இந்தப் பேரார்வம் விரைவிலேயே வடிந்துப் போகப்போவதை கிருஷ்ணன் அறிவான்.

போர்க்களத்தில் ஓர் உண்மையான வீரனுக்கு ஏற்படும் இந்த வீர ஆவேசம் இயல்பானதுதான் என்றாலும் அர்ஜுனன் அந்தப் போர்க்களத்தில் தன் மென் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பான், அதற்கு பதில் சொல்லத் தான் தயாராக இருக்க வேண்டும் என்றும் கிருஷ்ணன் நினைத்துக் கொண்டான்.

ஏவமுக்தோ ஹ்ருஷீகேசோ குடாகேசேன பாரத
ஸேனயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்  (1:24)
பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்
உவாச பார்த்த பச்யைதான் ஸமவேதான்குரூனிதி (1:25)

நெடிதுயர்ந்த அந்தத் தேரை கண்ணன் மெல்ல செலுத்திச் சென்று பீஷ்மர், துரோணர் மற்றும் கௌரவர்களைச் சேர்ந்த பிற மன்னர்களையும் அர்ஜுனனுக்குக் காட்டினான். ‘‘பார்த்துக்கொள் அர்ஜுனா, நீ போரிட வேண்டிய எதிரிகள் இவர்கள்தான். இவர்களைதான் உன் வில்லாற்றலால் நீ வீழ்த்தப் போகிறாய்’’ என்றான். இங்கே அர்ஜுனனை ‘குடாகேசன்’ என்று வர்ணிக்கிறான் கண்ணன். அதாவது அர்ஜுனன் தூக்கத்தை வென்றவன், எப்போதும் சுறுசுறுப்பாகத் திகழ்பவன் என்று பொருள்.

தத்ராபச்யத் ஸ்திதான் பார்த்த: பித்ரூனத பிதாமஹான்
ஆசார்யான்மாதுலான்ப்ராத்ரூன் புத்ரான் பௌத்ரான் ஸகீன் ஸ்ததா (1:26)

அதுவரை பழிவாங்கும் வேட்கையால் கொந்தளித்துக் கொண்டிருந்த அர்ஜுனன்,
தான் பொருத வேண்டிய எதிரிகளைப் பார்த்ததும் திடீரென மனம் மயங்கினான். ஆமாம். தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்ற சொந்த பந்த
உணர்வுதான். அவன் எதிரிக் கூட்டத்தில் யாரைக் கண்டான்?சொந்த பாட்டனார்கள், இளவயதில் கல்வி போதித்த ஆசார்யர்கள், அன்புடன் தூக்கிக் கொஞ்சி விளையாடிய மாமன்மார்கள், சகோதரர்கள், அவர்களுடைய பிள்ளைகள், இனிதாய்ப் பழகி வந்த நண்பர்கள்...

அதிர்ச்சியுற்றான் அர்ஜுனன். எப்படி இவர்களுக்கு எதிராக வில்லேந்துவது? குறிபார்ப்பது, அம்பை எய்துவது... உடன் பிறந்தவர்களையே வீழ்த்த
வேண்டிய கட்டாயம்…. தர்மத்துக்காகத்தான் போரிடுகிறேன் சரி, ஆனால், என்னுடன் பழகியவர்களை, என் ரத்த பந்தங்களை எப்படி எதிரிகளாக பாவிப்பேன்? எப்படி எதிர்ப்பேன்.. எண்ணி எண்ணித் தடுமாறினான் அர்ஜுனன்.

அவனுக்கு இப்படி ஒரு மனமாற்றம் எப்படி ஏற்பட்டது? துரியோதனாதியர்களைப் பூண்டோடு அழிக்கும் மனதிடத்தோடு போர்க்களத்துக்கு வந்த அவன், திடீரென்று சொந்தம், பாசம் என்று லோகாதய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பானேன்?ஒருவேளை இதுவும் கண்ணனின்
மாயமோ? மனித தர்மங்களைத் தான் விளக்க, தனக்காகவே அவன் ஏற்படுத்திய மாயமோ இது?

பகைமை உறவுக்கும், பாசத்துக்கும் இடையே அல்லாடலாம்; ஆனால் போர் அப்படியா? யாராக இருந்தாலும் எதிரிதானே? அந்த எதிரியின் உயிரைப் பறிப்பதுதானே யுத்த தர்மம்? ஓர் உண்மையான வீரனாக வந்த அர்ஜுனன் இப்படித் தயங்குகிறான் என்றால் அதுவும் கண்ணனின் லீலையாக இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்? அர்ஜுனனுடைய கண்களில் நீர் திரையிட்டது. பளபளத்த விழிகளின் அவநம்பிக்கை ஒளியுடன் கண்ணனை அவன் பரிதாபமாகப் பார்த்தான்.

தான்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய ஸர்வான்பந்தூனவஸ்திதான்க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதன்னிதமப்ரவீத் (1:27)அர்ஜுனனின் உள்ளத்தில் இரக்கம் கசிந்தது. குந்தியின் மகனாகிய அவன், அந்தத் தாயைப்போல, ஒரு தாய்க்கே உரிய கருணை மிகக் கொண்டு மனம் கலங்கினான். எதிரிப் படையினரை மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தான். தன் போர்க்குணத்தைத் தூண்டிவிடக்கூடிய ஒரு எதிரி இருப்பாரா என்று கண்களால் துழாவினான். ஆனால் எல்லோருமே அவனுக்கு வேண்டியவர்கள். அவனோடு ஏதோ ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டவர்கள். அவன் தடுமாறும் உள்ளத்தோடு போராடினான். அதுவரை அவனுள் இருந்த போர்த்திறம், இந்த ‘அஞ்ஞானம்’ என்ற இருளால் மங்கத் தொடங்கியது.

த்ருஷ்ட்வேமம் ஸ்வஜனம்க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிசுஷ்யதி (1:28)
வேபதுஸ்ச சரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே (1:29)

அர்ஜுனனுக்கு உடல் பதறியது. தன்னெதிரே நிற்பவர்கள் யார்? எதிரிகளா? பரம்பரை எதிரிகளா? பழிதீர்க்கப்பட வேண்டியவர்களா? ‘இல்லை, இவர்கள் அனைவரும் என் சொந்தக்காரர்கள். என் ரத்த பந்தங்கள். இவர்களைப் பார்க்கப்பார்க்க, ‘இவர்களையா கொல்ல வேண்டும்?’ என்ற ஆயாசம் என்னுள் தோன்றுகிறது. அதனால் உள்ளம் சோர்வடைகிறது, உடல் தளர்கிறது. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து, வறண்டு போகிறது. உடல் நடுங்குகிறது. மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. கையிலிருந்து வில் நழுவுகிறது. உடலெல்லாம் தகிக்கிறது. ரதத்தின் மீது கால்களை உறுதியாக ஊன்றி நிற்கவும் முடியவில்லை; மனம் மேலும், மேலும் குழம்பித் தவிக்கிறது.

ந ச சக்னோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மன:
நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ (1:30)

‘கேசவா’ என்று குரல் நடுங்க அழைத்தான் அர்ஜுனன். (‘கேசவன்’ என்ற சொல்லுக்கு மூன்று வகையாகப் பொருள் கொள்ளலாம். 1. கேசின் என்ற அரக்கனை வதைத்தவன்; 2. அழகான தலைமுடியைக் கொண்டவன்; 3. க-பிரம்மா, அ-விஷ்ணு, ஈச-ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருவராகி நிற்பவன்) ‘பலவிதமான தீய சகுனங்கள் எனக்குள் தோன்றுகின்றன; என் கண்களுக்கும் புலப்படுகின்றன.

அந்தத் தீய சகுனங்கள் எதிர்காலப் பேரழிவை எனக்கு உணர்த்துகின்றன. இவை என்னை அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் தடுக்கின்றன. சொந்தங்களையும், பந்தங்களையும் போர் என்ற சுயநல எண்ணத்தோடு நான் எதிர்க்கிறேன். இதில் வெற்றி பெற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தமும் என்னை நெருக்குகிறது. ஆனால் இது நியாயமா? என் சொந்தங்களையும், பந்தங்களையும் நானே என் கரங்களால் கொல்வது தர்மமா? அவர்களை இழந்துவிட்டு அப்புறம் எனக்குக் கிடைக்கப்போகும் நன்மைதான் என்ன? அல்லது இந்தப் போரால் யாருக்குதான் நன்மை?’

ஒரு செயல் நிறைவேறாமல் போகும் என்பதை முன்கூட்டியே சூசகமாகத் தெரிவிப்பதுதான் தீய சகுனம். ஆனால் சகுனம் பார்க்கும் தருணமா அது? போர் அறிவித்துவிட்ட பிறகு பாணத்தை விடுவது விவேகமா, சகுனம் என்று சொல்லிக்கொண்டு தயங்கிப் பின்வாங்குவது விவேகமா? ‘அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்’ என்று சொல்வதுபோல, கலக்கமடைந்த மனசுக்கு, தான் ஈடுபட விரும்பாத செயலிலிருந்து நழுவி ஓடுவதற்கு ஒரு சமாதானமாக அமைவதுதான் இதுபோன்ற சகுனமெல்லாம். அந்தத் தோற்றம் உண்மையல்ல;மன பிரமை. தப்பித்துக்கொள்வதற்கான கற்பனை உபாயம்.

கிருஷ்ணன் அவனைப் பேசவிட்டு அமைதி காத்தான்; ஆனால் வேடிக்கை பார்க்கவில்லை. அர்ஜுனனின் கலக்கப் பிதற்றல்களுக்கு வடிகால் அமைப்பதுபோல புன்முறுவலுடன் அவனைப் பேச விட்டான்.

ந ச ச்ரேயோனுபச்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே (1:31)
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகானி ச
கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர்ஜீவிதேன வா (1:32)
யேஷாமர்த்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா ஸுகானிச
த இமேவஸ்திதா யுத்தே ப்ராணான்ஸ்த்யக்த்வா தனானி ச (1:33)

ஆசார்யா பிதர புத்ராஸ்ததைவ ச பிதாமஹா
மாதுலாச்வசுரா பௌத்ரா ஸ்யாலா ஸம்பந்தினஸ்ததா (1:34)
கிருஷ்ணனின் இரக்கம் மிகுந்த பார்வையால் மேலும் உணர்ச்சிவசப்பட்டான்
அர்ஜுனன். தன்னுடைய மனப் புழுக்கத்தை இந்த கிருஷ்ணன் புரிந்து
கொள்கிறானா, தனக்குச் சாதகமாக ஏதாவது சொல்வானா என்றெல்லாம் எதிர்பார்க்கிறான்.

ஆகவே தொடர்ந்து, பொங்கும் தன் மனதை வெளிப்படுத்துகிறான்: ‘கிருஷ்ணா, நான் வெற்றியை விரும்பவில்லை. என் சொந்த பந்தங்களை அழித்து அதனால் அடையும் வெற்றி எனக்கு வேண்டாம். எனக்கு ராஜ்யம் வேண்டாம், அந்த ராஜ்ய பரிபாலனங்களால் கிடைக்கும் சுகங்கள் எதுவும் வேண்டாம். போர் வெற்றியால் எனக்குக் கிடைக்கப்போகும் ராஜ்யமும் சரி, அது கொடுக்கப்போகும் சுக போகங்களும் சரி, எதனாலும் எனக்கு எந்த மகிழ்ச்சியோ, லாபமோ இல்லை.

‘யாருக்காக இந்தப் போர்? எதற்காக இந்தப் போர்? இந்தப் போரின் வெற்றியால் கிட்டும் ராஜ்யமும், அது கொடுக்கும் சுகபோகமும் என் மனசுக்கு நிறைவைத் தந்துவிடுமா? நான் யாருக்காகப் போரிடுகிறேன்? எதற்காகப் போரிடுகிறேன்? இந்த அரச செல்வாக்கும், சுகபோகங்களும் என்னால் தனியே அனுபவிக்கக்கூடியவையா?

சொந்தங்களும், பந்தங்களும் ஒன்றுகூடி சேர்ந்து அனுபவிப்பதற்காகத்தானே இந்த சொத்துகளும், செல்வங்களும்? ஆனால் இந்தப் போர் காரணமாக அவர்களையெல்லாம் இழந்துவிட்டு என்ன சுகத்தைப் பெரிதாக நான் அனுபவித்துவிடப் போகிறேன்? அவர்கள் இல்லாததே மிகப் பெரிய குற்ற உணர்ச்சியாக என்னைக் குத்திக் குடைந்து கொண்டிருக்காதா? அப்படி நான் அனுபவிக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த சுகம், இவர்களுடைய இறப்பால் எனக்கு கிடைத்தது என்ற உண்மை என்னைத் தலைகுனிய வைக்காதா?'

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்