தெளிவு பெறுஓம்



கத்திரிவெயிலை அக்னி நட்சத்திரம் என்று ஏன் அழைக்கிறார்கள்?

- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில்காலம் என்று குறிப்பிடுகிறார்கள்.27 நட்சத்திரங்களில் அக்னி என்ற நெருப்புக் கடவுளை தனது தேவதையாகக் கொண்டிருக்கும் நட்சத்திரம் கார்த்திகை. ‘அக்னிர் ந பாது க்ருத்திகா’ என்று வேதம் சொல்கிறது. அதனால்தான் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாட்களில் நெருப்பு வடிவில் இறைவனை தரிசனம் செய்கிறோம்.

அக்னி ஸ்தலம் ஆகிய திருவண்ணாமலையின் உச்சியில் ஜோதியை ஏற்றுகிறார்கள். அக்னியைத் தனது தேவதையாகக் கொண்ட கிருத்திகை நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிப்பதால்தான் இந்த நாட்களை ‘அக்னி நட்சத்திரம்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். கிருத்திகைக்கு முன்னதாக வருகின்ற பரணி நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள், கிருத்திகை நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள் மற்றும் அடுத்தபடியாக வருகின்ற ரோகிணி நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் என சூரியன் சஞ்சரிக்கும் காலத்தினை அக்னி நட்சத்திர காலமாக வரையறுத்திருக்கிறார்கள்.

பொதுவாக சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரை அதாவது மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்த அக்னி நட்சத்திரத்திற்கு உரிய காலம் வரும். அக்னியை தேவதையாகக் கொண்ட கிருத்திகையின் நட்சத்திரக் கூட்டத்திற்குள் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த காலத்தினை அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிடுகிறார்கள்.
?தசாவதாரத்தில் ஸ்ரீராமனையும், ஸ்ரீ கிருஷ்ணனையும் கொண்டாடுவதைப் போல் மற்ற அவதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லையே, ஏன்?

 - அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.

தசாவதாரத்தின் தத்துவம் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை உணர்த்துவதே ஆகும். உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஜீவாதாரமாக விளங்குவது நீர். முதலில் இந்த உலகத்தில் தோன்றியதும் நீர் வாழ் உயிரினமே. அந்த நீரில் வாழுகின்ற மீன் ஆக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினமான ஆமையாக கூர்மாவதாரம், நிலத்தில் மட்டும் வாழுகின்ற மிருகமாக வராஹ அவதாரம், மனிதன் பாதி, மிருகம் பாதியாக நரசிம்ம அவதாரமும், சிறு குழந்தையாக வாமன அவதாரமும் எடுத்த பகவான் முழுமனிதனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் பரசுராமர்.

ஆனால் இந்த பரசுராமர் காட்டிலேயே அலைந்து திரிந்து வாழுகின்ற மனிதனாக, ஒரு காட்டுவாசியாக தன் கையில் எப்போதும் கோடாரியை வைத்துக்கொண்டு கோபத்தை அடக்க இயலாத மனிதனாக வாழ்ந்தவர். ஆனால் இந்த உலகத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர்.

தனி மனித ஒழுக்கத்தையும் வாழ்விற்கான இலக்கணத்தையும் வகுத்து அதனை அடுத்தவர்களுக்கு போதனை செய்யாமல் தனது வாழ்வில் கடைபிடித்ததன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற வாழ்க்கை கலாச்சாரத்தை அவர் வாழ்ந்த யுகத்திலேயே கடைபிடித்து யுகங்களைத் தாண்டி உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் உத்தமன்.

பலராம அவதாரம் என்பது பசுக்களையும், வேளாண்மையையும் மனிதன் பரிபாலனம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினாலும் துவாபர யுகத்தில் அவரது சமகாலத்திலேயே வாழ்ந்த கிருஷ்ணன் பலராமனை பின்னுக்குத் தள்ளி மக்களின் மனதில் முன் நிற்கிறார். அதற்குக் காரணம் கண்ணன் செய்த லீலைகள் அல்ல, குறும்புக்கார பிள்ளையாக விளையாடியது காரணம் அல்ல, எல்லாவற்றையும் தாண்டி எட்டாவது அறிவினைப் பெற்ற ஒரு ஞானியாக, தத்துவ சிந்தனைகளை இந்த உலகிற்கு அளித்தவனாக நிற்பவன் ஸ்ரீ கிருஷ்ணன். பகவத்கீதை என்ற தத்துவ நூலின் மூலம் இந்த உலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவன்.

ஸ்ரீராமன் தனிமனித ஒழுக்கத்தை போதித்ததாலும், ஸ்ரீகிருஷ்ணன் வாழ்வியல் தத்துவத்தை உபதேசித்ததாலும் தசாவதாரத்தில் இவர்கள் இருவரும் தனிச்சிறப்பு பெறுகிறார்கள். அதனால்தான் ராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவின் இதிகாசங்கள் என போற்றப்படுகின்றன.?கோயில்களில் மூலஸ்தானத்தில் திரைபோட்டு அலங்காரம் செய்யும்போது வெளியில் பிராகாரம் சுற்றி மற்ற சந்நதிகளை தரிசனம் செய்து வரலாமா?

 - அ. ஆரிமுத்து, வாழைப்பந்தல்.

தாராளமாக தரிசனம் செய்து வரலாம். அபிஷேகம் பூர்த்தியாகும் வரை நின்று மூலஸ்தானத்தை தரிசனம் செய்த பின் அலங்காரம் செய்வதற்காக திரையிட்டு மறைப்பது வழக்கம். அந்த நேரத்தில் பிராகாரத்தில் அமைந்திருக்கும் மற்ற சந்நதிகளுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மீண்டும் மூலஸ்தானத்திற்கு வந்து முழுமையான அலங்காரத்தில் இறைவனுக்குச் செய்யப்படும் தீபாராதனையை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். முழுமையான அலங்காரத்தோடு இறைவன் தீப ஒளியில் ஜொலிப்பதைக் காணும்போது உள்ளத்தில் உண்டாகும் பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பதை விட அனுபவித்துத்தான் உணர இயலும்.