மகிஷாசுரமர்த்தினி என்றால் என்ன?



நம் ஆலயங்களில் உள்ள துர்க்கை நான்கே கரங்களுடன் சங்கம், சக்கரம் தாங்கி, அபய-ஊருஹஸ்தங்களுடன் காணப்படுகிறாள். ‘‘மகிஷாசுரமர்த்தினி’’ என்ற மாத்திரத்தில் நம்மில் பலருக்கு இந்தத் திருஉருவம்தான் கண்முன் நிற்கும்.‘‘மர்த்தினி’’ என்பதே எத்தனை சிறப்பான வார்த்தை! மிருது செய்வதே மர்த்தனம்.
மாவாக அரைப்பது மர்த்தனம். அரைக்கும்போது தானியம் அழிந்து விடவில்லை; தனது கெட்டித்தனத்தை விட்டு மிருதுவாகிறது! பிறருக்குப் பயனாகிற உருவத்தை அடைகிறது. மிருதுத் தன்மையை அல்லது மார்தவத்தை - அடைவிப்பதுதான் மர்த்தனம். மகிஷன் கழுத்தைக் காலால் பிசைந்து பார்க்கிறாள் மிருதுவாக்குவதற்காக! அஞ்ஞானத்திடம் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை அவன் மூலம் காட்டுகிறாள்.

இவ்வாறு உலகுக்கோர் எச்சரிக்கையாக அவன் இருப்பதாலேயே பரோபகாரியாகிற பயனை அவனுக்கும் தருகிறாள்!

இவ்வாறு நமக்குப் பாடம் புகட்டுவதால்தான், தேவியின் பாதத்தில் செய்யும் அர்ச்சனை முழுவதையும் மஹிஷன் தன் தலையில் ஏற்கிறான். இது போதாதென்று, தேவியால் சாயுஜ்யம் அளிக்கப்பெற்ற அவனைத் தனியாகவும், அவளுக்கு இடத்தே வைத்து பூஜிக்க வேண்டுமென்று ‘வைக்ருதிக ரஹஸ்ய’த்தில் மேதஸ் கூறுகிறார். சிம்மத்தை வலப்புறமும் அசுரனை இடப்புறமும் வைத்துப் பூஜிக்கச் சொல்வதில் எப்பேர்ப்பட்ட சமத்துவம்?

நம் திருக்கோயில்களில் உள்ள சங்கு - சக்ர தாரிணியான துர்க்கையை விஷ்ணு - துர்க்கை, வைஷ்ணவி என்கிறோம். எனவே, இவள் நீலமேகசியாமளை ஆவாள். நமது மகாலட்சுமி உருவிலும் அவளது பதினெட்டுத் திருக்கரங்களாகி புஜ, பல, பராக்ரமம் காட்டுவது விஷ்ணுவின் சக்தி என்று தானே பார்த்தோம்? தத்துவங்கள் கலந்து கலந்தே காணப்படுவதை இதிலிருந்து உணரலாம்.

தெய்வரூபங்கள் பல இருந்தாலும், இதுதான் பெரிது, அதுதான் பெரிது என்று வாதம் செய்யாமல், சமரஸ உணர்வைப் பெற இவ்விதமான மிச்ரவடிவங்கள் மிகுந்த உதவிபுரிகின்றன. ஸம்ஹாரிணியோடுகூட, ஸம்ஹாரம் செய்யப்பட்டவனையும் பூஜிக்க வைப்பதில் சமரச பாவம் சிகரம் ஏறிவிடுகிறது!