பங்குனி மாத ராசி பலன்கள் 15-3-2023 முதல் 13-4-2023 வரை



மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்: சுக்கிரன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக இம்மாதம் முழுவதும் நிலைகொண்டுள்ளனர்.  பங்குனி 15ம் தேதியிலிருந்து (29-03-2023) சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய கும்பத்திற்கு மாறுவது மிக நல்ல கிரக சஞ்சார மாறுதலாகும். குரு பகவான் அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிக்கும் இத்தருணத்தில், சுக்கிரன் உங்கள் பக்கம் நிற்பது, பணப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு உதவுகிறது. வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். திருமண முயற்சிகளில் சிறு, சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும், மாத இறுதியில், நல்ல வரன் அமையும்.

உத்தியோகம்: கடந்த சுமார் இரண்டரை ஆண்டுகளாக ஜீவன ஸ்தானத்தில் பலத்துடன் சஞ்சரித்த சனி பகவானால், அலுவலகத்தில் பல இடையூறுகளையும், சக்திக்கு மீறிய உழைப்பையும், மேலதிகாரிகளின் கண்டிப்பையும் அனுபவித்திருப்பீர்கள்!! அதன் விளைவாக, பணியில் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையும் சனியின் அதிகாரத்தில்தான் உள்ளது. இதுவரை அவர் உங்கள் ராசிக்கு அனுகூலமற்ற நிலையில் இருந்ததால்தான், செய் தொழிலில் அதிக லாபம் கிடைக்காத நிலை தொடர்ந்து ஏற்பட்டுவந்துள்ளது. ரஷ்ய - உக்ரைன் போரினால், ஏற்றுமதித் துறையினர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதற்கு சனியின் நிலையே காரணமாகும்.

கலைத் துறையினர்: சுக்கிரன் மிகவும் சுப பலம் பெற்றுள்ள நிலையில், சனி, கும்ப ராசிக்கு மாறுவது ஓர் அதிர்ஷ்டகரமான கிரக சஞ்சார மாறுதல் என்றே மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. இந்த அரிய சந்தர்ப்பத்தை மேஷராசியில் பிறந்துள்ள கலைத் துறை அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வாய்ப்பு அடுத்துவரும் சுமார் இரண்டரை வருட காலத்திற்கு நீடிக்கிறது.  முயற்சிகளனைத்தும் வெற்றியடையும். திரைப்படத் தயாரி்ப்பாளர்களுக்கும், பின்னணிப் பாடகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் லாபகரமான காலகட்டம் ஆரம்பமாகியுள்ளதை கிரக நிலைகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல் துறையினர்:  அரசியல் துறையைத் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டுள்ள சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவரும் சுப பலத்துடன் நிலைகொண்டுள்ள இத்தருணத்தில், சனி பகவானும் சாதகமாக மாறுவது மிக நல்ல கிரக நிலையாகும். 2024ல் மிக முக்கிய தேர்தலும் நிகழவுள்ள இத்தருணத்தில், மிக முக்கிய கிரகமான சனி சுப பலம் பெற்றிருப்பது, உங்கள் அரசியல் வெற்றிக்கு அஸ்திவாரமாகத் திகழ்கிறது. இந்திய நாட்டின் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள இந்தத் தேர்தலில் மேஷ ராசி அன்பர்களுக்கு மிக முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க இருக்கிறார்கள் சனி, சுக்கிரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும்!

மாணவ - மாணவியர்: ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படுவதால், பாடங்களில் மனத்தை ஊன்றிச் செலுத்த இயலும். தேர்வுகளில் எவ்விதக் கடின முயற்சியுமின்றி நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள்! இறுதியாண்டு படிக்கும் பல மேஷ ராசியினருக்கு, உடனுக்குடன் நல்ல வேலையும் கிடைக்கும். விவசாயத் துறையினர்: பயிர்கள் செழித்து வளரும்; வருமானம் உயரும். பழைய கடன்கள் அடைபடும். ஆடு, மாடுகள் அபிவிருத்தியடையும். புதிய விளைநிலம், வீடு, கால்நடைகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. எதிர்பார்த்திருந்த அரசாங்க உதவிகள் ேதடி வரும்.

பெண்மணிகள்: நல்ல காலம் இப்போது பிறந்துள்ளதை, கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பல பிரச்னைகள் நீங்கி, மனத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். உடல் உபாதைகள் நீங்கும்.அறிவுரை:  ராகு ஒருவர் மட்டுமே உங்களுக்குச் சாதகமாக அமையவில்லை, இம்மாதத்தில்! ஆதலால், அதிக அலைச்சலும், கடினமான உழைப்பும், தேவையற்ற பிரயாணங்களும் இருக்கக்கூடும். பரிகாரம் பலனளிக்கும்.

பரிகாரம்: பரிகாரத்திற்கு, ராகுவை, சனிக் கிரகமாகக் கருதிச் செய்ய வேண்டும் என பூர்வ ஜோதிட கிரந்தங்கள் கூறுகின்றன. ஆதலால்,  திருநள்ளாறு அல்லது திருக்கொள்ளிக்காடு சனி பகவானின் தரிசனம் நல்ல பலனைத் தரும். செல்லும்போது, தவறாமல் எள் எண்ணெய் தீபங்கள் ஐந்து ஏற்றி வைக்கவும்.

அனுகூல தினங்கள்
பங்குனி: 1, 2, 6-9, 13-16, 20-23, 27, 28.  
 சந்திராஷ்டம தினங்கள்
பங்குனி: 26 முதல் 28 பிற்பகல் வரை.                

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: குரு, சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் அனுகூலமான நிலைகளில் இம்மாதம் முழுவதும் சஞ்சரிக்கின்றனர். இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமாகிய மகரத்தில் நிலைகொண்டிருந்த சனி பகவான், அவருடைய மற்றொரு வீடும், உங்கள் ராசிக்குத் தொழில் ஸ்தானமுமாகிய கும்ப ராசிக்கு மாறுகிறார்.  குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். சுபச் செலவுகள் அதிகமாக இருப்பினும், பண வசதி நல்லபடி இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள்! விரயத்தில், ராகு இருப்பினும், ஆரோக்கியம் நல்லபடியே நீடிக்கும் இம்மாதம் முழுவதும்!!

உத்தியோகம்: உத்தியோகத் துறை, சனி பகவானின் அதிகாரத்தில்தான் உள்ளது. தொழில் ஸ்தானத்தில், சனி நிலைகொண்டிருப்பதன் பலன்களை “பாஸ்கர ஸம்ஹிதை” என்னும் பண்டைய நூல் விவரித்துள்ளது. கும்ப ராசி சஞ்சார காலத்தில், ரிஷப ராசி உத்தியோகஸ்தர்களுக்கு, கடுமையான உழைப்பையும், சக்திக்கு மீறிய பொறுப்புகளையும், அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்லவேண்டிய அவசியத்தையும், அசதியையும் ஏற்படுத்தினாலும், ஊதியம் மற்றும் பதவி  உயர்வையும், தவறாமல், அளித்தருள்வார்.

 தொழில், வியாபாரம்: இந்த இரு துறைகளுக்கும்கூட, சனி பகவான்தான் அதிபதி! இவரது கும்ப ராசி சஞ்சார காலத்தில், நல்ல லாபத்தைக் கொடுப்பார். சில தருணங்களில், சகக் கூட்டாளிகளினாலும், ஊழியர்களினாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஜனன கால தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், வருமான வரித் துறையினால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கூடியவரையில், ஆவணங்களைச் சரிபார்த்து, பிழை ஏதும் இல்லாமல் வைத்துக்கொள்வது, இத்தருணத்தில் மிகவும் அவசியம். வெளிநாட்டுப் பயணங்கள், தொழில் முன்னேற்றத்திற்கு உதவும்.

கலைத் துறையினர்: சனி மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கு அதிகாரம் கொண்ட சுக்கிரனும், மிகவும் அனுகூலமாக இருப்பதால், இத்துறையில் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் மற்றும் நடிகைகள், விநியோகஸ்தர்கள் ஆகிய அனைவருக்கும் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய மாதம் இப்பங்குனி!!
அரசியல் துறையினர்: அரசியலில்  ஈடுபட்டுள்ள அனைவருக்கும், மகிழ்ச்சியான மாதமிது! கட்சியில் உருவாகியிருந்த உட்பூசல்கள்  இம்மாதம் நி்வர்த்தியாகும். மிக முக்கியமான பொறுப்பு ஒன்று உங்களிடம் ஒப்படைக்கப்படும்.  

மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன் எவ்வித தோஷமுமில்லாமல் சஞ்சரிக்கின்றார்.  வித்யா ஸ்தானமும், நல்ல சுப பலம் பெற்று நீடிப்பதால், படிப்பில் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வுகளில், கிரகிப்பு சக்தியும், மிகத் தெளிவாக பதிலளிக்கும் திறனும், ஓங்கும்.  இவை உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.  விவசாயத் துறையினர்: சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனைவரும், சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிடைப்பது நிச்சயம். அடிப்படை வசதிகளான தண்ணீர்,  விதை,  உரம்,  கால்நடைகள் ஆகியவற்றிற்கு எவ்விதக் குறைவும் இராது. அரசாங்கச் சலுகைகள் சரியான தருணத்தில் கிடைக்கும்.

பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும்தான் ெபண்மணிகளின் வாழ்க்கைத் தரத்தை, நிர்ணயிப்பவை என காளிதாஸரின் “உத்திரகாலாம்ருதம்” விவரித்துள்ளது. இந்த இருவருமே உங்களுக்கு  பலம் பெற்று, உலா வருவதால், இப்பங்குனியில், திருமண வயதிலுள்ள நங்கையருக்கு, மனத்திற்கு உகந்த வரன் தேடி வரும். வேலைக்கு முயற்சிக்கும் நங்கையருக்கு, வெற்றி நிச்சயம்.
அறிவுரை:  சுப பலம் பெற்றுள்ள குரு, சுக்கிரன், ெசவ்வாய் ஆகியோர் கொடுப்பதை, விரயம் செய்துவிடாமல், திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.

பரிகாரம்: சனி மற்றும் ராகுவின் நிலைகளினால், அதிக உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும், அசதியும், உடலை வருத்தும். மனத்தில் சற்று விரக்தியும் ஏற்்படக்கூடும். ஆதலால், பரிகாரம்  இத்தகைய துன்பங்களை அடியோடு போக்கும். 24 சனிக்கிழமைகள் அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் எரியும் தீபத்தில் சிறிது எள்ளெண்ணெய் சேர்த்துவரலாம்.
காகத்திற்கு, சிறிது நெய், பருப்பு, கருப்பு எள் சேர்த்த ஐந்து சாத உருண்டைகளை தி்னமும் வைப்பது அற்புதமான பரிகாரமாகும்.

அனுகூல தினங்கள்
பங்குனி: 3-8, 13-15, 20-23, 27.
சந்திராஷ்டம தினங்கள்
பங்குனி: 1,2. மீண்டும் பங்குனி 28 பிற்பகல் முதல் 30 வரை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: கோள்சார விதிகளின்படி, இந்தப் பங்குனி மாதம் உங்களுக்கு பல யோக பலன்களை அளிக்க உள்ளது. பங்குனி 15ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தினமாகும்! கடந்த இரண்டரை வருடங்களாக அஷ்டமச் சனி நிலையினால், பலவிதத் துன்பங்களையும்,  உடல் உபாதைகளையும், பிரச்னைகளையும் சந்தித்து வந்த உங்களுக்கு, அந்தத் தோஷம் நீங்குகிறது. பல குடும்பப் பிரச்னைகள் படிப்படியாக தீர ஆரம்பிப்பதால், மனத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த “டென்ஷன்” மனநிலை நீங்கும். மனத்தில் அமைதி பிறக்கும். பூர்வ புண்ணிய ராசியில் கேது அமர்ந்திருப்பதால், தீர்த்த, தல யாத்திரை சென்று வருவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

லாப ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள சுக்கிரன் மற்றும் ராகுவினால், நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில்  வெற்றி கிடைப்பதற்கு சுக்கிரனின் நிலை சுப பலம் பெற்றுள்ளது. உத்தியோகம்: சனியின் கும்ப ராசி மாறுதலினால்  மாறும். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை துளிர்க்கும். பலருக்கு, வேலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.  

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரம் ஆகிய இரண்டு துறைகளும் சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. வரும் பங்குனி 15ம் தேதியிலிருந்து அவர் சாதகமாக மாறுவதால், வர்த்தகத் துறையினருக்கு, லாபகரமான மாதமிது. புதிய முதலீடுகளில் இறங்குவதற்கு தக்க தருணமாகும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாட்டுச் சந்தைகளில் புதிய வாய்ப்புகள் கதவைத் திறக்கும்.

லாபம்  படிப்படியாக உயரும்.தொழிற் சாலையை விஸ்தரிப்பதற்கு அனைத்து   உதவிகளும் உடனுக்குடன் கிடைக்கும். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும். அரசாங்க அனுமதி எவ்விதப் பிரச்னையுமின்றிக் கிடைக்கும். உற்பத்தியாளர்களுக்கு, அவசியமான அடிப்படை மூலப்பொருட்கள்   நியாயமான விலைக்குக் கிடைக்கும்.

கலைத் துறையினர்: கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருக்கும் இத்தருணத்தில்,  சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தை விட்டு, பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுவது, கலைத் துறையினருக்கு அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை கிடைத்துள்ளதை குறிப்பிடுகிறது.

அரசியல் துறையினர்:  இந்திய அரசியலில் எதிர்பாராத பல மாறுதல்கள் ஏற்படவுள்ளதை இம்மாத கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதன் காரணமாக, நீங்கள் பல புதிய முடிவுகளை எடுக்கவேண்டிய அவசியமேற்படும். உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணத்தில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை சனி, ராகு மற்றும் சுக்கிரனின் சஞ்சார நிலைகள் உணர்த்துகின்றன.

மாணவ - மாணவியர்: வித்யா காரகரும், வித்யா ஸ்தானமும் சுப பலம் பெற்றிருப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இம்மாதத்தில். சனி பகவானின் அஷ்டம ஸ்தான சஞ்சாரத்தினால் ஏற்பட்ட தோஷம் நீங்கிவிடுவதால், உடலில் ஏற்பட்ட அசதி, சோர்வு ஆகியவை நீங்கி உற்சாகம் மேலிடும். கிரகிப்பு சக்தி உயரும். உயர் கல்விக்கு, பல வித உதவிகள் கிடைக்கும். அதற்கான பூர்வாங்க முயற்சிகளில் ஈடுபடலாம், இந்தப் பங்குனி மாதத்தில்!!

விவசாயத் துறையினர்: செவ்வாய், ஜென்ம ராசியில் நிலைகொண்டிருப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். அதனால், தினமும் வயல் பணிகளைக் கவனிப்பதற்கு இயலாமற்போகும். மற்றபடி, விளைச்சல் திருப்திகரமாகவே இருக்கும். சிறு, சிறு மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை.

பெண்மணிகள்: சனி பகவானின் அஷ்டம ராசி சஞ்சாரத்தினால் தொடர்ந்து ஏற்பட்ட கவலைகள், வீண் அலைச்சல்கள், வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் ஆகியவை நீங்கும். திருமண வயதை எட்டியுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிகளில் கவனம் செலுத்த இயலும்.
பரிகாரம்: தினமும் உங்கள் இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் (மறைந்த முன்னோர்கள்) மனத்தால் நினைத்து, பூஜித்துவந்தால் போதும். அளவற்ற நன்மைகள் உங்களைத் தேடிவரும்.

அனுகூல தினங்கள்:
பங்குனி: 1, 2, 6, 7, 11-15, 19-22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 3ம் தேதி முதல், 5 காலை வரை.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து, ராசியைப் பார்ப்பதால், பிரச்னைகளின் கடுமை குறையும். சனி பகவான், உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு மாறுவது, அளவோடு சிரமங்களை ஏற்படுத்தும். பொதுவாக, சனியின் அஷ்டம ராசி சஞ்சார தோஷம் சற்றுக் கடுமையாகவே பாதிக்கும் என்பது ஜோதிடக் கலையின் பொது விதியாகும்.  ஆனால், உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியே சனி பகவானாக இருப்பதால், பாதிப்பு கடுமையாக இராது (ஆதாரம்:  “பிருஹத் ஜாதகம்” மற்றும் “பூர்வ பாராசர்யம்” ஆகிய மிகப் புராதன ஜோதிட நூல்கள்). ஆயினும், அலைச்சலும், குடும்ப சம்பந்தமான பிரச்னைகளினால், கவலையும், பண விரயமும் ஏற்படும்.

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு சனி பகவான்தான் அதிகாரியாவார். அவர், அனுகூலமற்ற ராசிக்கு மாறுவதால்,  உங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். எக்காரணத்தைக் கொண்டும், மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எத்தகைய தருணங்களில், எந்தெந்த விஷயங்களில் நாம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்பதை வழிகாட்டி உதவும் நண்பன் ஜோதிடம்! சிறு தவறும், உங்கள் நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும். பங்குனி 23ம் தேதி வரை சுக்கிரன் அனுகூலமற்று இருப்பதால், உடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவரால் அவமானப்பட நேரிடும். மிக, மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டிய தருணமிது.

 தொழில், வியாபாரம்: புதுப் ேபாட்டிகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். தொழிலதிபர்களுக்கு, ஊழியர் சம்பந்தமான பிரச்னைகள், உற்பத்தியை பாதிக்கும். வருமானவரித் துறை அதிகாரிகளினால், பிரச்னைகள் ஏற்படக்கூடும். கலைத் துறையினர்: சுக்கிரன் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதாலும், குரு பகவான் அனுகூலமாக உள்ளதாலும், சனியின் அஷ்டம ஸ்தான சஞ்சார தோஷம் அளவோடு நிற்கும். வாய்ப்புகள் குறையாது. இருப்பினும், கடுமையாக உழைக்க நேரிடும். வேலை வாங்காமல், கூலி கொடுக்கமாட்டார், சனி பகவான்! திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, பல காரணங்களினால், படத்தை முடித்து, வெளியிடுவதற்குத் தடங்கல்களும், அதனால் பல பிரச்னைகளும், பண விரயமும் ஏற்படும்.

அரசியல் துறையினர்: மேலிடத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு பாதிக்கப்படும். நீதிமன்ற வழக்குகளில், சாதகமான தீர்ப்பை எதிர்பார்ப்பதில் பயனில்லை. முக்கிய விஷயங்களில் உங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிடாமல், மௌனம் சாதிப்பது உங்கள் எதிர்கால அரசியல் நலனுக்கு உகந்ததாகும்.
மாணவ - மாணவியர்: இரவில் நெடுநேரம் கண் விழித்து படிப்பதையும், அவசியமில்லாமல் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதையும், தவறான பழக்க வழக்கங்களைக் கொண்ட சக மாணாக்கர்களுடன் பழகுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

விவசாயத் துறையினர்: விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். ஆயினும், வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். இரவு நேரப் பணிகளின்போது, சற்று விழிப்புடன் இருப்பது அவசியம். பழைய கடன்கள் மன நிம்மதியை பாதிக்கும். பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, பெரிய பிரச்னை என்று எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. எளிய சிகிச்சையினால், உடனுக்குடன் குணமும் ஏற்படும். திருமண வயதிலுள்ள நங்கையருக்கு, வரன் அமைவதில் குழப்பங்கள் மேலிடும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, மேலதிகாரிகளினால் சிரமங்கள் ஏற்படும்.

அறிவுரை: உடல் நலனிலும், மன நலனிலும் நீங்கள் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். அஷ்டம ராசி சனி சஞ்சாரகாலத்தில் கடக ராசியினர் கடுமையாக  பாதிக்கப்படமாட்டார்கள் என  புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. ஆரோக்கியத்தில் மிககவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும், இந்நூல்கள் விளக்கியுள்ளன. பரிகாரம்: மிகவும் அவசியம். தினமும் காலையில் ஸ்ரீகந்தர் சஷ்டிகவசமும், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமமும் சொல்லி வந்தால் போதும். இரண்டுமே அளவற்ற மந்திர சக்தி பெற்றவை.

அனுகூல தினங்கள்:
பங்குனி: 3, 4, 8-11, 16-18, 23-26, 29, 30.
 சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 5 காலை முதல், 7 பிற்பகல் வரை.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்: இதுவரையில், உங்களுக்குச் சாதகமாக சஞ்சரித்த சனி பகவான், அனுகூலமற்ற கும்ப ராசிக்கு மாறுவது, நன்மை தராது! சுக்கிரன் மற்றும் செவ்வாய், கேது ஆகியோர் சாதகமாக உள்ளனர். கும்ப ராசி, சிம்ம ராசியினருக்கு களத்திர ஸ்தானமாகும். அதாவது, மனைவியைக் குறிக்கும் ராசி. இத்தருணத்தில் குருவும் உதவிகரமாக இல்லை!! கணவர் - மனைவியரிடையே கருத்துவேற்றுமை ஏற்பட்டு, குடும்ப அமைதி பாதிக்கப்படக்கூடும். மனைவியின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். வரவிற்கு மேல் செலவுகள் ஏற்படுவதால், பணப் பிரச்னையும் கவலையை அளிக்கும். சுக்கிரனும், செவ்வாயும் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், அவ்வப்போது நிதியுதவியும் எளிதில் கிடைக்கும்.

உத்தியோகம்: உங்கள் ராசிக்கு, ஜீவனாதிபதியான சுக்கிரனும், பாக்கியாதி பதியாகிய செவ்வாயும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பது பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.  அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை ஏற்க நேரிடும்.  

தொழில், வியாபாரம்: சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவரும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! விற்பனையும், லாபமும் படிப்படியாக அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றுவர வேண்டியிருக்கும்.  ஏற்றுமதித் துறையினருக்கு, வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு ெசன்றுவரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

கலைத்துறையினர்: வருமானம் உயரும். புதிய வாய்ப்புகள் உற்சாகத்தை ஏற்படுத்தும். திருமணமாகியுள்ள கலைத்துறையினருக்கு, குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும்.  கணவர்-மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படும். தற்போதைய தசா, புக்திகள் பாதகமாக இருப்பின், விவாகரத்தில் முடியும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. திரைப்படத் துறையினருக்கு, பெண் நடிகை ஒருவரால், அவப்பெயர் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. ஆடம்பரச் செலவுகளிலும், உல்லாசப் பயணங்களிலும் பணம் விரயமாகும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள் இதுவரை சாதகமாக இல்லாததால், கட்சியில் நிலவிய உட்பூசல்களினால், மன அமைதி பாதிக்கப்பட்ட உங்களுக்கு, மனத்தில் தெளிவு பிறக்கும்.  உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றபடி, கவலைப்படும் அளவிற்கு எவ்விதப் பிரச்னையும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை, இந்தப் பங்குனி மாதத்தில்.

மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றத்திற்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்கள் அனைவரும் உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும். பாடங்களில் மனம் உற்சாகத்துடன் ஈடுபடும். கிரகிப்புத்  திறனும், நினைவாற்றலும் கூடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள். சனி பகவானின் நிலையினால், தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது, உங்கள் நலனுக்கு உகந்ததாகும்.

விவசாயத் துறையினர்: செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சுக்கிரனும் அவருக்குப் பக்கபலமாக வலம் வருவதால், விளைச்சலும், வருமானமும் எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பது மனத்திற்கு உற்சாகத்தையளிக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம்.
பெண்மணிகள்: கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் வலியுறுத்துகின்றன. குடும்பப் பிரச்னைகள் வேதனை தரும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் நல்லது. உறவினர்களின் மனப்பான்மை வேதனையை அளிக்கும்.

அறிவுரை: சனி பகவானின் நிலை மட்டும் இம்மாதம் அனுகூலமாக இல்லை. பரிகாரம்: 24 சனிக்கிழமைகள் உங்கள் வீட்டுப் பூஜையறையில், மாலையில் மண் அகலில் ஐந்து எள் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். சனிக்கிழமை ஒன்றில் திருமலை - திருப்பதி சென்று, திருவேங்கடத்து இன்னமுதனை தரிசித்துவிட்டு வந்தாலும் போதும்.

அனுகூல தினங்கள்:
பங்குனி: 4-6, 10-12, 17-19, 23-25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 7  பிற்பகல் முதல், 9 மாலை வரை.

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் சேர்ந்து சுபபலம் பெற்று சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவானும் கும்ப ராசிக்கு மாறுவது சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய கிரக அணியாகும். வருமானம் திருப்திகரமாக உள்ளது. குடும்பத்தில் வீண் செலவுகள் குறையும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனத்திற்கு நிம்மதியை அளிக்கும். திருமண முயற்சிகள் எளிதில் கைகூடும். ராகுவின் அஷ்டம ஸ்தான சஞ்சார நிலையினால், அவ்வப்போது சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.

உத்தியோகம்: “ஜீவன காரகர்” எனப் போற்றப்படும் சனி பகவான், உங்களுக்கு மிகவும் ஆதரவாக மாறுவதால், தற்போது பார்த்துவரும் உத்தியோகத்தில், நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நிறுவன மாற்றத்திற்கு விருப்பமிருப்பின்,  இம்மாதத்தில் முயற்சிக்கலாம்.

 தொழில், வியாபாரம்: மிகவும் அனுகூலமான மாதமிது. தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய கிளைகள் திறப்பதற்கு ஏற்ற மாதமாகும்.  ஆயத்த ஆடைகள், தங்க ஆபரணங்கள், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவற்றின் விற்பனை எதிர்பார்ப்பிற்கு அதிகமாகவே இருக்கும். 

வெளியூர்ப் பயணங்கள் விற்பனையை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும். அலைச்சலும், வெளியூர்ப்பயணங்களும் அதிகமாக இருப்பினும், அதற்கேற்ற லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் ஆகிய அனைவருக்கும் நல்ல லாபத்தை, சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய மூவரும் பெற்றுத் தருவார்கள். அஷ்டம ஸ்தானத்தில் ராகு தொடர்ந்து நீடிப்பதால், வெளியூர்ப் பயணங்களின்போது ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

கலைத் துறையினர்: சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும் சுபபலம் பெற்ற நிலைகளில் சஞ்சரிக்கின்றன. புதிய வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் பின்னடைவையே சந்தித்து வந்த இத்துறைக்கு, புத்துயிர் அளிக்கும் அளவிற்கு நன்மை செய்ய காத்துள்ளன, இந்தப் பங்குனி மாதத்தில். நிதி நிறுவனங்களின் ஆதரவு எளிதில் கிட்டும். திரைப்படத் துறையினருக்கு, அதிர்ஷ்டகரமான மாதமிது என உறுதியாகக் கூறலாம். புதிதாக சினிமாத் துறையில் காலடி பதிக்க ஆர்வம் மிகுந்துள்ளவர்களுக்கு, வாய்ப்புகள் கதவைத் திறக்கும். 

வருமானமும் உயரும்.  அரசியல் துறையினர்: சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய மூவரும் அரசியல் துறையுடன் சம்பந்தப்பட்ட கிரகங்களாவர். இம்மூவரும் அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும். கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சித் தலைவர்கள் முக்கிய விஷயங்களில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். அனைத்து கட்சிகளிலும் நிலவும் உட்கட்சிப் பூசல்களிலிருந்து, தனித்து நிற்கும் மனவுறுதியை செவ்வாய் அளித்தருள்கிறார்.

மாணவ - மாணவியர்: மிகவும் சாதகமான மாதம் இது. பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். படித்தவற்றை, தேர்வுகளின்போது, மிகத் தெளிவாக எழுதுவதற்கு நினைவாற்றல் உதவும், உயர் கல்விக்கு வெளிநாடு செல்ல விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே திட்டமிடலாம். ஆசிரியர்களின் ஆதரவும், உதவியும் தக்க தருணத்தில்  கிடைக்கும்.

விவசாயத் துறையினர்: வயல்களிலிருந்து வீசும் தென்றல்காற்று, உங்கள் உழைப்பின் உயர்வையும், பலனையும் எடுத்துக்காட்டும். எதிர்பார்ப்பிற்கு சற்று அதிகமாகவே விளைச்சல் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதாரத்தை சீர்திருத்திக்கொள்ள ஏற்ற மாதம் இந்தப் பங்குனி.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலனுக்கு குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் சுப பலம் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய கிரக நிலை இம்மாதம் அமைந்துள்ளதால், கன்னி ராசியில் பிறந்துள்ள அனைத்து பெண்மணிகளுக்கும், மகிழ்ச்சிகரமான காலகட்டம் இது. இந்தத் தோஷம் பரிகாரத்திற்கு உட்பட்டதேயாகும்.  

அறிவுரை: பெரும்பான்மையான கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. பிரச்னைகளை ஏற்படுத்துவது, ராகு மட்டுமே. சிறு உடல் உபாதையானாலும், மருத்துவரின் ஆேலாசனை பெறுவது நல்லது.
பரிகாரம்: ஒருமுறை திருநாகேஸ்வரம் அல்லது காளஹஸ்தி சென்று தீபமேற்றி வைத்து தரிசித்துவிட்டு வந்தால், மிக நல்ல பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்:
பங்குனி: 1-3, 6-8, 12-15, 20-22, 26-28.
 சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 9 மாலை முதல், 11 இரவு வரை.

துலாம்

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: சென்ற இரண்டரை வருடங்களாக, சனி பகவானின் அர்த்தாஷ்டக சஞ்சார நிலையினால், பல வகைகளிலும் பிரச்னைகளையே சந்தித்தும், மன நிம்மதியை இழந்தும் வருந்திய துலாம் ராசி அன்பர்களுக்கு, அந்தத் தோஷம் இப்போது அடியோடு விலகிவிட்டது. ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். மனைவியின் உடல்நலனிலும் முன்னேற்றம் ஏற்படும். மன நிம்மதியை பாதித்துவந்த பல பிரச்னைகள் நல்லபடி நீங்குவதை அனுபவத்தில் பார்க்கலாம். கணவர் - மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் நிலவும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளையின் வரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவானின் சஞ்சார நிலை அனுகூலமாக மாறுவதால், அலுவலகத்தில் ஏற்பட்டுவந்த பல பிரச்னைகள் நீங்கி, நன்மைகள் ஏற்படும். சிலருக்கு, நிறுவன மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. மேலதிகாரிகளுடன் ஏற்பட்டுவந்த கருத்துவேறுபாடுகள் விலகுவதால், மன நிம்மதியுடன் உங்கள் பணிகளில் கவனத்தைச் செலுத்தலாம்.

தொழில், வியாபாரம்: உற்பத்தியை அதிகரித்து, விற்பனையை உயர்த்துவதற்கு ஏற்ற மாதம் இந்தப் பங்குனி. சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதி நிறுவனங்களின் ஆதரவு கிடைப்பது, தக்க தருணத்தில் உதவும் புதிய கிளைகள் திறப்பதற்கு, கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. சந்தை நிலவரம் சாதகமாக உள்ளதை, கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஏற்றுமதி - இறக்குமதித் துறை அன்பர்களுக்கு, லாபகரமான மாதமாகும்.

கலைத் துறையினர்: ஓரளவு நன்மைகளை இம்மாதம் எதிர்பார்க்கலாம்.  ஏனெனில், சுக்கிரன் பூரண சுப பலம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, திரைப்படத் துறை மற்றும் சின்னத் திரைக் கலைஞர்களுக்கும், அளவோடு லாபம் கிடைக்கும். சக்திக்கு மீறி, முதலீடு செய்து படத் தயாரிப்பில் ஈடுபடவேண்டாம். நன்மைகளும், பிரச்னைகளும் மாறி, மாறி ஏற்படக்கூடிய மாதமிது கலைத்துறை அன்பர்களுக்கு! திருமணமான கலைத்துறையினருக்கு, குடும்பச் சூழ்நிலை நிம்மதியைத்தரும். கவலையளித்துவந்த பல பிரச்னைகள் சமரசத்தில் முடியும்.    

அரசியல் துறையினர்:  கட்சியில் ஆதரவு நீடிக்கிறது. இருப்பினும்,  சிலரது மறைமுக சூழ்ச்சிகளும், பேச்சுக்களும் மனத்திற்கு வேதனையை அளிக்கும். மேலிடத் தலைவர்களின் ஆதரவு சற்று குறையும், கட்சி மாறிவிடலாம் என்ற எண்ணம் மனதில் தீவிரமாக வளரும்.  உட்கட்சிப் பூசல்களினால், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் உருவாகும். எந்தக் குழுவில் சேர்வது? என்பதை நிர்ணயிக்க இயலாமல், குழப்பம் மேலிடும்.

மாணவ - மாணவியர்: சனி பகவானின் அர்த்தாஷ்டக தோஷம் நீங்கிவிட்டதால், மனத்தில் ஏற்பட்டிருந்த, தாழ்வு மனப்பான்மை அகலும்.  மீண்டும் பாடங்களில் மனம் ஈடுபடும். உடல் நலனிலும் முன்னேற்றத்தைக் காணலாம். விவசாயத் துறையினர்: உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிடைக்கும், இருப்பினும், கைப்பணம் பலவழிகளிலும் விரயமாகும், என்றோ பட்ட கடன்கள் கவலையை அளிக்கும். கால்நடைகள் நோயினால் பாதிக்கப்படக்கூடும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

பெண்மணிகள்: நிம்மதியான மாதமிது, பெண்மணிகளுக்கு. முக்கியமாக, உடலை வருத்திய பல உபாதைகள் நீங்கும். குடும்பச் சூழ்நிலையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்குவதால், மனத்தில் அமைதி பிறக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில்  பல நன்மைகள் காத்துள்ளன. வேலையில்லாத பெண்களுக்கு, முயற்சி வெற்றியளிக்கும். திருமண வயதை அடைந்துள்ள கன்னியருக்கு வரன் அமைவதில் சிறு தடங்களும், குழப்பமும் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும்.

அறிவுரை: சப்தமஸ்தானத்தில் ராகு நீடிப்பதால், மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பரிகாரம் தோஷத்தைப் போக்கும்.
பரிகாரம்: தினமும் ஒரு ஸர்க்கமாவது ஸ்ரீமத் சுந்தர காண்டம் படித்துவருவது, நல்ல பலனையளிக்கும். சுந்தர காண்டத்திற்கு, “சர்வ கிரக தோஷப் பரிகார ரத்னம்” என்ற பெருமையும்  சர்வதோஷ நிவாரணி என்ற புகழும் உண்டு. கைமேல் பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்:
பங்குனி: 1, 2, 6-9. 14-17, 20-22. 26-28.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 11 இரவு முதல், 13 வரை.

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்: இதுவரை, உங்கள் ராசிக்கு நன்மை செய்யும் மகரத்தில் சஞ்சரித்த சனி பகவான், அர்த்தாஷ்டக தோஷத்தை விளைவிக்கும் கும்ப ராசிக்கு மாறுவது, நன்மை செய்யாது. ஆயினும்,  குருவும், ராகுவும் அனுகூலமாக உள்ளனர் இம்மாதம் முழுவதும்! வரவும், செலவும் சமமாக இருக்கும்.

பணப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வார், சுப பலம் பெற்றுள்ள குரு பகவான். ராகுவின் சுப பலத்தினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  உறவினர்களிடையே ஏற்படும் வாக்குவாதங்கள்,  கருத்துவேற்றுமைகள் மனத்தில் "டென்ஷனை" ஏற்படுத்தும். நண்பர்களுக்கு, உதவி செய்வதற்காக உத்தரவாத கையெழுத்து போடுவதையும், பிறரிடம் கடன் வாங்கிக் கொடுப்பதையும் தவிர்க்க கிரக நிலைகள் முன்னெச்சரிக்கை செய்கின்றன.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி, அர்த்தாஷ்டக ராசிக்கு மாறுவதால், பணிகளில்  மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். அலுவலகப் பொறுப்புகளில் பொறுமை அவசியம். புதிதாக வேலைக்கு முயற்சி செய்யும் விருச்சிக ராசியினர், தரகர்களிடம் பணம் கொடுத்து, ஏமாந்துவிடவேண்டாம். பொறுமை அவசியம்.

 தொழில், வியாபாரம்:  நியாயமற்ற  போட்டிகளைச் சமாளித்து, லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். சந்தை நிலவரமும், அனுகூலமாக இருக்காது, இம்மாதம் முழுவதும்! தொழில் துறையினர், உற்பத்தியை அளவோடு வைத்துக்கொள்வது, சரக்குகள் தேங்கிவிடாமலிருப்பதற்கு உதவும். புதிய முதலீடுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய தருணமிது என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கலைத் துறையினர்: இம்மாதம் முழுவதும், கலைத் துறைக்கு அதிகாரம் பெற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் உருவாகும். குறிப்பாக, தயாரிப்பாளர்களுக்கு, திரைப்படம் பாதியில் நின்றுபோகும்! எதிர்பார்த்திருந்த பண உதவி கைக்குக் கிடைப்பதில் ஏமாற்றமே மிஞ்சும். இருப்பதைக் கொண்டு, சமாளிக்க வேண்டிய மாதமாகும். திட்டமிட்டுச் செலவு செய்தால், கஷ்டமில்லாமல் கடந்துவிடலாம் இப் பங்குனி மாதத்தினை!!

அரசியல் துறையினர்:  சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவருமே உங்களுக்கு அனுகூலமாக இல்லாத நிலையில், சனியும் பாதக நிலைக்கு மாறுவதால், சற்று சிரமமான காலகட்டமிது என்றே கூறவேண்டியுள்ளது. கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் உருவாகக்கூடும். மேல்மட்டத் தலைவர்கள் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். மக்களிடையேயும் செல்வாக்கு குறையும். பேச்சிலும், அரசியல் தொடர்புகளிலும் எச்சரிக்கையுடனும், சாதுர்யத்துடனும் நடந்துகொள்ளவேண்டிய மாதமிது! தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், சட்ட சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும் சாத்தியக்கூறும் உள்ளது.

மாணவ - மாணவியர்: வித்யா ஸ்தானமும், கல்விக்கு அதிபதியான புதனும் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், படிப்பில் நல்ல ஈடுபாடு நீடிக்கும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சனியின் நிலையினால், சில தருணங்களில் ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். ஆதலால், இரவு நேரத்தில் அதிகமாகக் கண்விழித்துப் படிக்க வேண்டாம்,

விவசாயத் துறையினர்: விவசாயத்திற்கு அதிகாரியான செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், வயல் பணிகள் கடுமையாக இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு விளைச்சலும், லாபமும் இராது. அண்டை நிலத்தவரோடு மனஸ்தாபம் ஏற்படும். சற்று விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் நடந்துகொள்வது, அவசியம். பெண்மணிகள்: குரு பகவான், உங்கள் பக்கம்தான்! ஆனால், பெண்மணிகளின் நன்மைகளுக்கு, சுக்கிரனும் பொறுப்பாவார் என பண்டைய ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. இம்மாதம் சுக்கிரன் அனுகூலமாக இல்லை. பரிகாரம் உதவும்.

அறிவுரை: எத்தகைய சூழ்நிலையிலும், முன்கோபத்தையும், உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்க்கவும்.
பரிகாரம்:  தினந்தோறும் ஸ்ரீமகாலட்சுமியையும், ஸ்ரீஅம்பிகையையும் பூஜித்துவந்தால் போதும். எத்தகைய தோஷமானாலும், சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 2-4, 9-12, 17-19, 23-26, 29, 30.
 சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 14 முதல், 16 மாலை வரை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: பங்குனி மாதம் 15ம் தேதியுடன் கடந்த ஏழரை வருடங்களாக உங்களை வருத்தி வந்த “ஏழரைச் சனிக் காலம்” நீங்கி, நல்ல காலம் உதயமாகிறது. ஜோதிடக் கலையின் கோள்சார விதிகளின்படி, ஏழரைச் சனிக் காலம் என்பது, கிரகணக் காலம் போன்றதாகும்.  சிலருக்கு, மிகக் கடினமான சோதனைகளும், பலருக்கு மிதமான துன்பங்களும் ஏற்படும். அவரவரது ஜாதகத்தின் பூர்வபுண்ணிய ராசியின் அடிப்படையில்தான் சனி பகவான் தனது ஏழரைக் கால அதிகாரத்தின்போது சிரமங்களை ஏற்படுத்துவார் என்பதையும் “பூர்வ பாராசர்யம்”, “காலப்ரகாஸிகா” ஆகிய புராதன ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன.

உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்டுவந்த, பல பிரச்னைகள் நீங்களே வியக்கும்படி நல்லபடி தீரும். நிம்மதியாக பணிகளில் கவனம் செலுத்தலாம். பலருக்கு, வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் தனுர் ராசி அன்பர்களுக்கு, விரைவில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, வேலைபார்க்க வேண்டுமென்ற விருப்பமிருப்பின், இம்மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து அதற்கான திட்டங்களையும், பூர்வாங்க முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

 தொழில், வியாபாரம்: அதிர்ஷ்டகரமான காலட்டம் ஆரம்பமாகியுள்ளது, இம்மாதத்தில்! வர்த்தகத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பின்னடைவு நீங்கும். விற்பனை அதிகரிக்க ஆரம்பிக்கும். லாபமும் படிப்படியாக உயர்வதை அன்றாட விற்பனையின்மூலம் அறிந்துகொள்ள முடியும். சகக்கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் கைகொடுக்கும்.

கலைத் துறையினர்: கலைத் துறையை தங்கள் பிடியில் கொண்டுள்ள சுக்கிரன், மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்வதாலும், ஏழரைச் சனி முடிந்துவிட்டதாலும், அதிர்ஷ்டகரமான காலகட்டம் ஆரம்பமாகியுள்ளது என உறுதியாகக் கூறலாம். திரைப்படத் தயாரிப்பளர்கள், இயக்குநர்கள், நடிகர் மற்றும் நடிகையர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.

அரசியல் துறையினர்: கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுத் தருவார்கள் புதனும் சனி பகவானும். சிலருக்கு, கட்சிமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உருவாகும்.  அது உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு, உதவிகரமாக அமையும். மாணவ - மாணவியர்: கல்வியில் ஏற்பட்டுவந்த பல பிரச்னைகள் நீங்கும். குடும்பச் சூழ்நிலையினால், அடிக்கடி பள்ளியை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் சென்ற சில வருடங்களாகவே ஏற்பட்டிருக்கும். அந்நிலை, மாறி ஒரே பள்ளியில் தொடர்ந்து  படிக்கும் அனுகூலமான நிலை உருவாகும், இது உங்கள் கல்வி முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும்.

விவசாயத் துறையினர்: சனி பகவானின் அனுகூலமற்ற நிலையினால், பல வகைகளிலும் பிரச்னைகளையே சந்தித்து வந்த உங்களுக்கு, அவையனைத்தும் நீங்கி, மன நிம்மதியுடன் வயல் பணிகளில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது, சனிக்கிரகத்தின் கும்ப ராசி மாறுதல். ஜனன கால ஜாதகத்தில், செவ்வாய் சுப பலம் பெற்று, அவரது அதிகார காலமும் சேர்ந்திருப்பின், புதிய விளைநிலம் மற்றும், புதிய கால்நடைகளை வாங்கும் யோகமும் கிட்டும்.

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, அனுகூலமான மாதமாகும். முக்கியமாக, உடலைத் தொடர்ந்து வருத்திவந்த உபாதைகள் இனி படிப்படியாக நீங்குவதால், அன்றாட வாழ்க்கையில் உற்சாகம் ஏற்படும். திருமண வயதுப் பெண்களுக்கு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் நங்கையருக்கு, நல்ல வேலை கிடைக்கும்.  ஜீவன காரகரான சனி பகவான் அனுகூல நிலைக்கு மாறிவிட்டதால்! புத்திர பாக்கியம் தடைப்பட்டிருந்த பெண்மணிகளுக்கு, மழலைப் பேறு கிடைக்கும்.

அறிவுரை: தற்போது கிரக நிலைகள் அனுகூலமாக மாறியிருப்பதால், அத்தகைய வீண் கவலைகளிலிருந்து, நீங்களே உங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்.
பரிகாரம்: தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபத்தில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துவிட்டு தரிசித்து வரவும்.
அனுகூல தினங்கள்: பங்குனி:  1, 4-8, 12-15, 19-22, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்:பங்குனி:  16 மாலை முதல், 18 வரை.

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: ஏழரைச் சனியின் ஜென்மச் சனிக் காலம் முடிந்து, கடைசி பகுதி ஆரம்பமாகியுள்ள நிலையில், சூரியனும், சுக்கிரனும், செவ்வாயும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர் இந்தப் பங்குனி மாதம் முழுவதும்! இதே தருணத்தில், உங்கள் ராசியின் களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கு, குருபகவானின்  சுபப் பார்வையும் கிடைக்கிறது.

வருமானத்திற்குக் குறைவிராது. இதுவரை தொடர்ந்து ஏற்பட்டுவந்த அலைச்சலும், வெளியூர்ப்பயணங்களும் இனி இராது. வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். திருமணச் செலவுகள் எதிர்பார்த்ததைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும். சுக்கிரனின் நிலையினால், உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். நீதிமன்ற வழக்குகளில், நியாயம் கிடைக்கும்.

உத்தியோகம்: ஜென்மச் சனியினால், ஏற்பட்டிருந்த தோஷம் நீங்கிவிட்டது. நிர்வாகத்தினர் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோரின் ஆதரவு கிடைக்கும், தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு ஊதிய உயர்வையும், பதவியுயர்வையும் எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். சக ஊழியர்களின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலையில்லாமல் வருந்தும் மகர ராசியினருக்கு, அதிகம் பாடுபடாமல், மனத்திற்கு உகந்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

 தொழில், வியாபாரம்: ஜென்மச் சனி தோஷத்திலிருந்து இப்போது விடுபட்டுள்ள உங்களுக்கு, பிற கிரகங்களும்கூட சிறந்த சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏற்ற தருணமிது. சந்தை நிலவரம் விற்பனையை அதிகரிப்பதற்கு அனுகூலமாக இருக்கும். கலைத் துறையினர்: சுக்கிரன், அனுகூல நிலையில் சஞ்சரிப்பதால், கலைத் துறை அன்பர்களுக்கு, மிகவும் அனுகூலமான மாதம் இப்பங்குனி!

திரைப்படத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். தயாரிப்பாளர்களுக்கு,  நிதியுதவி எளிதில் கிட்டும். மாநில அரசின் ஆதரவு உற்சாகத்தைத் தரும். உங்கள் திரைப்படங்கள்  நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஏராளமான ஊழியர்களுக்கு, இருண்ட காலம் நீங்கி, நல்ல காலம் உதயமாகிறது. பின்னணிப் பாடகர்களுக்கு, நல்ல வாய்ப்புகளும் , புகழும் கிட்டும். சிலருக்கு, அரசியல் தொடர்புகளினால், நன்மைகள் கிட்டும்.

அரசியல் துறையினர்:  ஜென்ம ராசியில் நிலைகொண்டிருந்த சனி பகவானால், பல ஏமாற்றங்களுக்கும், மனக் குழப்பங்களுக்கும், பிரச்னைகளுக்கும் ஆளாகி, மனோ தைரியம் குன்றிருந்த அரசியல் துறையினருக்கு, புத்துயிர் அளிக்கும் மாதம் இந்தப் பங்குனி! மாணவ - மாணவியர்: சனி பகவான், ஜென்ம ராசியை விட்டு, விலகிவிட்டதால், மனத்தில் அமைதி பிறக்கும். இதுவரை ஏற்பட்டிருந்த குழப்பங்கள், சபலங்கள், கல்வி முன்னேற்றத்தில் பின்னடைவு ஆகியவை நீங்கி மனம் அமைதிபெறும். வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள்!!

விவசாயத் துறையினர்: செவ்வாய், உங்களுக்குச் சற்று தாராளமாகவே நன்மைகளைச் செய்வதற்கு ஏற்றபடி சஞ்சரிக்கின்றார். விளைச்சலும் வருமானமும் மனத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய கால்நடைகள் சேரும். "கோ சாலைகளுக்கு" மிகவும் உதவிகரமான மாதமாகும், இந்தப் பங்குனி. விளைச்சலும், வருமானமும், பால் விற்பனையும் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.  

பெண்மணிகள்: திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமைந்து திருமணமும் நடைபெறும். வேலைக்கு முயற்சிக்கும் பெண்களுக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குத் திருப்தியளிக்கும் உத்தியோகம் கிடைக்கும் என கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன.அறிவுரை: ஜென்மச் சனி தோஷம் நீங்குகிறது. இதனை "கண்டச் சனி" எனக் கூறுவர் பெரியோர். இனி கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பரிகாரம்: மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிராகாரத்திலுள்ள, சித்தர் சந்நதியில் வியாழக்கிழமைதோறும் நெய் தீபம் ஏற்றிவைத்து தரிசிப்பது கைமேல் பலனளிக்கும். இதற்கு வசதியற்றவர்கள், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் செய்யலாம். அதே பலன் கிட்டும்.அனுகூல தினங்கள்: பங்குனி: 1-3, 6-9, 13-16, 22-24, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்:பங்குனி: 19 முதல் 21 மாலை வரை.

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் பிரவேசிக்கிறார்.  கோள்சார விதிகளின்படி, இவர் சுமார் இரண்டரை வருட காலம் கும்ப ராசியில் சஞ்சரிக்க வேண்டும். கும்பம், சனியின் ஆட்சிவீடாக இருப்பதால், சிரமங்கள் மிகக் கடுமையாக இராது. தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அடிக்கடி ஏதாவதொரு ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதால், மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். 

கண்டச் சனி அதிகார காலத்தின்போது, திருமண முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு இருப்பதை காளிதாஸரின் “உத்திர காலாம்ருதம்”என்னும் ஜோதிட நூல் விளக்கியுள்ளது.சுபச் செலவுகள் அதிகளவிலேயே இருக்கும். கூடிய வரையில், வீண் அலைச்சல்களையும், கடின உழைப்பையும் தேவையற்ற கவலைகளையும் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.நெருங்கிய உறவினர்களின் மறைமுகத் தொல்லைகள் வேதனையைத் தரும்.  

உத்தியோகம்: பொறுப்புகள் கூடும். சக்திக்கு மீறி உழைக்க வேண்டிவருவதால், பார்த்துவரும் வேலையில் வெறுப்பும், விரக்தியும் மேலிடும். ஒருசிலர் மேலதிகாரிகளின் சீற்்றத்திற்கு ஆளாகக்கூடும். நியாயமாக உங்களுக்கு அளிக்கவேண்டிய ஊதிய உயர்வு, ஒத்திப்போடப்படும். அதனால், பணியில் அதிருப்தி உருவாகும். வேறுவேலைக்குச் சென்று விடலாம் என்ற மனப்போக்கு ஏற்படக்கூடும். பொறுமை, நிதானம் அவசியம். உணரச்சிவசப்படுவதைத் தவிர்த்தல் வேண்டும்.  

 தொழில், வியாபாரம்: நன்றாக நடந்துவந்த விற்பனையில், பின்னடைவு ஏற்படக்கூடும். லாபம் குறையும். சந்தை நிலவரம் புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும். சகக் கூட்டாளிகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்து, வேலைபார்க்கும் ஊழியர்களினால், பிரச்னைகள் ஏற்படும். “படுத்தால், பிரச்னை; எழுந்தால் கவலை...!” என்ற நிலைதான். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைப்பதும் கடினம். உற்பத்தியாளர்களுக்கு, மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதால், பணப் பிரச்னை ஏற்படக்கூடும்.

கலைத் துறையினர்: எதிர்பார்த்திருந்த புதிய வாய்ப்புகள், ஏமாற்றத்தைத் தரும்.  வருமானம் பாதிக்கப்படும். ஸ்டண்ட் நடிகர்கள் ஆபத்தான பாத்திரங்களில் நடிக்கும்போது, விழிப்புடன் இருப்பது அவசியம். ஏனெனில், ஜென்மச் சனி ஏற்படுத்தும் தோஷத்தினால், விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது அவசியம்.

அரசியல் துறையினர்: இம்மாதம் முழுவதும், கிரக நிலைகள் சாதகமாக இல்லை. பேச்சிலும், செயலிலும் பிற தொடர்புகளிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது, மிக, மிக அவசியம். சிலர்நீதிமன்ற வழக்குகளில் அகப்பட்டுக்கொள்ள சாத்தியக்கூறு உள்ளது. தனக்குத் தானே எதிரியாக செயல்படுவதற்கு, கிரக நிலைகளின்படி, வாய்ப்புள்ளது.

மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன் மற்றும், இதர கிரகங்கள் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலுமின்றி, நீடிக்க்ிறது. ஜென்ம ராசி தோஷத்தினால், அடிக்கடி ஆேராக்கியக் குறைவு ஏற்படக்கூடும். சற்று கவனமாக இருந்தால் தவிர்க்கலாம். விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்கள்,  அனுகூலமில்லாத நிலைகளில் சஞ்சரி்க்கும் நிலையில், சனி பகவானும், ஜென்ம ராசி்க்கு மாறுவது சிரமங்களை ஏற்படுத்தும். பழைய கடன்கள் நீடிப்பதால், மனத்தை கவலை அரிக்கும்.

பெண்மணிகள்: உங்கள் ஆரோக்கியத்தைச் சற்று கவனித்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. குறிப்பாக, வயது சம்பந்தமான உபாதைகள், மாதவிடாய்க் கோளாறுகள், கை, கால்கள், மூட்டுகள் ஆகியவற்றில் வலி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்டக்கூடூம். அறிவுரை: கூடியவரையில், அதிக உழைப்பையும், தேவையற்ற கவலைகளையும்,  குறைத்துக்கொள்ளல் அவசியம்.பரிகாரம்:  தினமும், ஒரு தஸகம் ஸ்ரீமத் நாராயணீயம் படித்து, ஸ்ரீ குருவாயூரப்பனை பூஜித்துவந்தால் போதும். கண்டச்சனி தோஷத்திற்கு  கண் கண்ட பரிகாரமிது.

அனுகூல தினங்கள்:
பங்குனி: 1, 2, 6-9, 13-15, 19, 20, 24-26, 30.
 சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 21 மாலை முதல், 23 பின்னிரவு வரை.

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: மீனம் ராசி அன்பர்களுக்கு, ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. ஜென்ம ராசியில் குரு பகவான் அமர்ந்திருக்கின்றார். “ஜென்ம குரு வனத்திலே....!” என்றொரு மூதுரை நெடுங்காலமாக நம் நாட்டில் வழங்கிவருகிறது.  அதாவது, ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும்போது, குடும்பத்தைவிட்டு, தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும் என்பதே பொருள். ஸ்ரீராமபிரான், 14 ஆண்டுகள் வனவாசத்திற்குச் சென்றபோது, அவரது ஜாதகப்படி, குரு பகவான் அவரது ஜென்ம ராசியில் நிலைகொண்டிருந்ததே இத்தகைய பழமொழி ஏற்பட்டதற்குக் காரணமாகும்.

குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செலவு செய்வது மிகவும் அவசியம். சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால்  பூரண குணம் கிடைக்கும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறை, சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. பொறுப்புகள் கூடும்; உழைப்பு கடினமாகும்.  நிர்வாகத்தினருடன் கருத்துவேற்றுமை உருவாகும். சக ஊழியர்களினாலும், மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். விழிப்புடன் இருக்கவேண்டிய தருணமிது.

 தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையும் சனி பகவானின் பொறுப்பில்தான் உள்ளது. வியாபாரத்தில், கடினமான போட்டிகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். மிகவும் பாடுபட்டே, லாபத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.  நிதிநிறுவனங்களினாலும், பிரச்னைகள் ஏற்படும். இது உங்கள் மன நிம்மதியைப் பாதிக்கும்.

கலைத் துறையினர்: பெரும்பான்மையான கிரகங்கள், அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிக்கும் நிலையில், ஏழரைச் சனியும் ஆரம்பமாகிறது! ஸ்டண்ட் நடிகர்கள் ஆபத்தான பாத்திரங்களில் நடிக்கும்போது, மிக, மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் வற்புறுத்திக்காட்டுகின்றன. ஏனெனில், விபத்துகள் ஏற்படக்கூடும்.

அரசியல் துறையினர்: கட்சியில், ஆதரவும், செல்வாக்கும் பாதிக்கப்படக்கூடும். மேலிடத் தலைவர்களுடன் அபிப்ராய பேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்துள்ள சுக்கிரன் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், பிரச்னைகள் அனைத்தும் அளவோடுதான் இருக்கும். பரிகாரம் அவசியம்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரியான புதன், சாதகமாக இல்லாத தருணத்தில், இந்த ஏழரைச் சனிக் காலம் ஆரம்பமாகிறது. சக மாணவ, மாணவியருடன் பழகுவதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியம். விடுதிகளில், தங்கிப் படித்துவரும் மீன ராசி மாணவர்கள், தவறான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள சக மாணவர்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

விவசாயத் துறையினர்: விளைச்சலும், வருமானமும் எதிர்பார்த்திருந்த அளவிற்கு இராது! ஆடு - மாடுகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். பெண் அல்லது பிள்ளை விவாக சம்பந்தமாக புதிய கடன்களை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஓய்வில்லாத அலைச்சலும், உழைப்பும், குடும்பக் கவலைகளும் உடல் நலனை சற்று பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. தேவைக்கு அதிக தண்ணீர் வரத்தினால், பயிர்கள் சேதமடையும். இரவு நேர வயல் பணிகளில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும், விஷ ஜந்துக்களினால் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பெண்மணிகள்: ஏழரைச் சனியின் ஆரம்ப நிலையில் உள்ள உங்களுக்கு, ராசி நாதனும், அனுகூலமாக இல்லை! இருப்பினும், பெண்கள் நலன்களைப் பாதுகாக்கும் சுக்கிரன், சுப பலம் பெற்று விளங்குவதால், எந்தப் பிரச்னையானாலும், அளவோடுதான் இருக்கும். கருவுற்றுள்ள பெண்மணிகள், உடல் நலனை பேணிக்காப்பதில், அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அறிவுரை: சனி பகவான், ராசிக்கு விரய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளதால், பல வழிகளிலும் பணம் விரயமாகும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நல்லது. திட்டமிட்டுதான் செலவு செய்ய வேண்டும்.

பரிகாரம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, காளஹஸ்தி, பூவரசன்குப்பம், அஹோபிலம், சிம்மாச்சலம் திருத்தல தரிசனம் மிகச் சிறந்த பரிகாரங்களாகும். ஸ்வாதி நட்சத்திரத் தினத்தன்று, உபவாசமிருப்பதும், கைமேல் பலனளிக்கும் அற்புதப் பரிகாரங்களாகும்.  
அனுகூல தினங்கள்:
பங்குனி: 1, 2, 6-9, 13-15, 19-22, 26, 27.
சந்திராஷ்டம தினங்கள்:பங்குனி: 23 பின்னிரவு முதல், 25 வரை.

பகவத் கைங்கர்ய,
ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி
A.M.ராஜகோபாலன்