பேச்சுத் திறனளிக்கும் பிரம்மபுரீஸ்வரர்




Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly magazine
  

              ஆலயத்தின் முகப்பில் மொட்டைக் கோபுரம் உள்ளது. அடுத்து நந்தி, அதையடுத்து மகா மண்டபம். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா, அண்ணாமலையார் ஆகியோர் அழகு தரிசனம் தருகின்றனர். உட்பிராகாரத்தில் மேற்கே பெரிய பிள்ளையார், சோமாஸ்கந்தர், வள்ளி&தெய்வானை சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, தெற்கே சண்டீஸ்வரர் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. கருவறையின் வடபுறத்தில் நடராஜர்-சிவகாமி.

 இறைவன் சந்நதியை அடுத்து அம்மனுக்கு தனியே சந்நதி உள்ளது. முகப்பில் விநாயகரையும், தண்டாயுதபாணியையும், வடக்கு பிராகாரத்தில் சண்டிகேஸ்வரியையும் தரிசிக்கலாம். திருமகள் தவமிருந்து இத்தலத்தில்தான் மாங்கல்ய பலம் பெற்று திருமாலுடன் சேர்ந்தாள் என்கிறது தல வரலாறு.

ஒருசமயம் சிவபெருமான் கயிலையில் தன் தேவியுடன் வீற்றிருந்தபோது வேதாரண்யம் ஆலயத்தில் இருந்த தீபம் ஒன்று ஒளி குன்றி மங்கத் தொடங்கியது. இதனைக் கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “இத்தீபத்தை இப்போது யார் தூண்டினாலும் அவருக்கு இப்புவனத்தை ஆளும் பாக்கியத்தை அருளுவேன்” என்றார். அப்போது ஒரு எலி அத்தீபத்தில் இருந்த நெய்யை குடிக்க வந்தது. தானறியாமலேயே தன் மூக்கால் தீபத்தைத் தூண்டி பிரகாசமாக எரியச் செய்தது. இறைவன் சித்தப்படி அந்த எலி மறுபிறவியில் விரோசனன் என்ற அரக்கனுக்கு பிள்ளையாக பிறந்தது. மாவலி என்ற பெயர் கொண்டு, அந்த சக்கரவர்த்தி மூவுலகையும் ஆண்டான். அதுமட்டுமல்ல,  இந்திரனோடு   போரிட்டு தேவர்கள் அனைவரையும் கதிகலங்கச் செய்தான். தேவலோகப் பொருட்களை கவர்ந்து திரும்பினான். ஒரு யாகம் செய்ய எண்ணி தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் இடம் ஒன்றை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டான். அதன்படி ஊழிக்காலத்திலும் அழியாது நிலை பெற்று விளங்கக்கூடிய பெருமை பெற்ற தலமான காழியூர் என்ற இடத்தை சுக்கிராச்சாரியார் தேர்வு செய்தார். அத்தலத்தின் தற்போதைய பெயர் சீர்காழி.

மாவலி காழியூர் வந்தான். பிரம்ம தீர்த்தத்தில் நீராடினான். அங்குள்ள ஆலயத்தில் அருள் பாலிக்கும் பிரம்மபுரீஸ்வரரை வணங்கினான். நகரின் தென்கரையில் ஒரு யாகசாலை அமைத்து யாகம் செய்யத் தொடங்கினான். மாவலியால் வேதனைப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர் திருமாலை அழைத்து தேவர்களின் துயரைத் துடைத்து மாவலியை ஒடுக்கி வரும்படி பணித்தார். திருமாலும் முப்புரி நூலணிந்து, தர்ப்பை புல்லும், கமண்டலமும், தண்டும் கையில் கொண்டு ஒரு பிரம்மச்சாரி வேடத்தில்  மாவலி நடத்திய யாகசாலைக்கு வந்து சேர்ந்தார். மாவலியிடம் மூன்றடி மண் யாசித்தார்.

 வந்திருப்பது திருமால் என்றுணர்ந்த குலகுரு சுக்கிராச்சாரியார், வரப்போகும் துயரையும் ஊகித்து, மாவலியை தடுத்தார். ஆனால், மாவலியோ அந்த பிரம்மச்சாரிக்கு அவன் கேட்ட தானத்தை வழங்குவதாக வாக்களித்தான். உடனே, மகாவிஷ்ணு விஸ்வரூபமெடுத்து மண்ணுலகை ஓரடியாலும், விண்ணுலகத்தை ஓரடியாலும் அளந்துவிட்டு “மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்று மாவலியிடம் கேட்டார். உடனே, மாவலி தன் சிரசைக் காட்ட, திருமாலும் அவன் சிரசின் மேல் மூன்றாவது அடியாக தன் பாதத்தைப் பதித்து அவனை பாதாள லோகத்தில் அமிழ்த்திக் கொன்றார். மாவலியின் கதை முடிந்தது.

ஆனால், திருமாலின் கதை தொடர்ந்தது. ஆம்! மாவலியை கொன்றதால் திருமால் அகந்தை கொண்டு மூவுலகமும் நடுநடுங்க ஆர்ப்பரித்தார். அவரைக் கட்டுப்படுத்த எண்ணிய சிவபெருமான் வடுகனாக உருவெடுத்து மகாவிஷ்ணுவின் எதிரே வந்து, தம்முடைய கரத்தால் அவரது மார்பில் அடித்து அவரை தரையில் வீழ்த்தினார். பதறிய திருமகள், திருமாலை மீட்டுத் தந்தருள வேண்டுமென சிவபெருமானை வேண்டினார். அவ்வாறே இறைவன் அருள, திருமால் தரையிலிருந்து மீண்டு எழுந்தார். பின், சிவபெருமானை வணங்கிய திருமால் தனது தோலையும், எலும்பையும் அவர் தரித்துக் கொள்ள வேண்டுமென வேண்டினார். அதன்படி திருமாலின் தோலை சட்டையாகவும், எலும்பை சதையாகவும் தரித்த சிவபெருமான், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே மலைச்சிகர தென்திசையில் சட்டைநாதர் என்ற பெயருடன் வீற்றிருக்கலானார். திருமாலின் உயிரை சிவபெருமானிடமிருந்து மீட்ட திருமகள் இறைவனை நோக்கி தவமிருந்து திருமாலுடன் சேர்ந்து ‘திருக்கோலக்கா’ என்ற இத்தலத்தில் திருக்கோலம் கொண்டார்.

சீர்காழியில் ஞானப்பால் உண்ட சம்பந்தருக்கு அப்போது வயது மூன்று. தன் தந்தையாருடன் திருக்கோலக்கா வந்த சம்பந்தர் அங்கு அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வணங்கினார். பின்னர் தன் கையால் தாளம் போட்டபடி பாடத் தொடங்கினார். குழந்தையின் கை சிவந்தது. இறைவனின் மனம் நெகிழ்ந்தது. உடனே பொன்னால் ஆன தாளத்தை, சம்பந்தரின் கைகளில் வந்து பொருந்துமாறு அருளினார். தாளத்திற்கு உறுதுணையாக பிரிக்க முடியாத நாதத்தை அம்மை ஓசை நாயகி அவருக்கு அருளினார். பொற்றாளம் பெற்ற சம்பந்தர் பதிகங்கள் பாடிக்கொண்டு இறைவனை வழிபட, ஒவ்வொரு தலமாக பயணம் மேற்கொண்டார். முதன் முதலாக சம்பந்தர் பதிகம் பாடுவதற்கு தாளம் கொடுத்தருளிய தலமிது. எனவே, இங்கு அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபட்டு பேச்சு வராத குழந்தைகள் பேசும் திறன் பெறலாம் என பக்தர்கள் நம்புகின்றனர்.

நாகை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா.
ஜெயவண்ணன்