முருகனுக்கு முடிப்பு கட்டு




Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly magazine
  

            குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, பிற மாநிலங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் ஸ்கந்தகிரி என்ற தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார், சுப்பிரமணியர்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் முதலில் இத்தலத்தில் கோயில் கொண்டவர், சுந்தர விநாயகர். காஞ்சி மகா முனிவரின் ஆலோசனைப்படி, அவருடைய ஆசியுடன் இந்த விநாயகர் இங்கே எளிதாக எழுந்தருளினார். வாழ்வின் மாற்றங்களுக்கும், திருப்பங்களுக்கும் தம்மால் ஈடுகொடுக்க முடியாமல், இறையருளே நல்வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கோயிலுக்கு மக்கள் வரத் துவங்கினர். பக்தர்களின் எண்ணிக்கை பத்து, நூறு, ஆயிரமாக வளர வளர, அவரவர் தெய்வ நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும் ஏற்ற வகையில் அடுத்தடுத்து சந்நதிகள் தோன்ற ஆரம்பித்தன.

உயரம் குறைந்த ஆனால், அழகான ராஜகோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்தால் நேரெதிரே பெரிய தேர் நிற்கிறது. இடது பக்கமாகத் திரும்பி குழாய் நீரில் கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு படியேற வேண்டும். குழாயடிக்குப் பக்கத்திலேயே ஓர் அறிவிப்பு & ‘எலுமிச்சம் பழத்தை இங்குதான் பிழிய வேண்டும்.’ எதற்காக இந்த அறிவிப்பு? துர்க்கை சந்நதியில் எலுமிச்சை மூடி விளக்கேற்றுபவர்கள் அங்கேயே பழத்தை இரண்டாக நறுக்கி, பிழிந்து மூடியை விளக்காக்குவதைத் தவிர்ப்பதற்காகத்தான். இது, கோயில் வெகு நேர்த்தியாக, சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருவதன் பல வழிகளில் ஒன்று.

46 படிகள் ஏறி மேலே சென்றால், முதலில் நமக்கு சுந்தர விநாயகர் தரிசனம் தருகிறார். அவருக்கு வலது பக்க சுவரை ஒட்டி அகஸ்தியர், அருணகிரிநாதர் என்று துவங்கி, வீரசூரன், ஜெயவீரமார்த்தாண்டன், வீரபத்மன் என்று தொடர்ந்து, நால்வர் என்று அடுத்தடுத்து அழகுச் சிலைகள் அணிவகுக்கின்றன.

சுந்தர விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன் அழகாக கொலுவீற்றிருக்கிறார். அந்தப் பகுதி மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பக்தர்களையும் ஈர்த்தவர் இவர். ஆந்திர மாநில அரசியல் பிரமுகர்கள் பலரும் இவருக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து தம் வேண்டுகோள் நிறைவேறப் பெற்றிருக்கிறார்கள். இந்தச் சிறப்புக்காகவோ, இப்படி ஒரு தலத்தில் தானே முழு முதல் கடவுளாய் சந்நதி கொண்டவர் என்றோ எந்தப் பெருமையும் கொள்ளாதபடி கண்களில் கருணையைத் தேக்கி, பக்தர்கள் மீது பிரவகிக்கும் ஆனந்தத் தோற்றம் இவருக்கு. வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், பக்தியை மேலும் பெருக்கிக் கொள்ளவும் மட்டுமல்லாமல், என்னவோ இவரை தரிசித்தால் தன் தோளை அரவணைத்தபடி நல்வழியில் நடத்திச் செல்லக்கூடியவர் என்ற நட்புணர்வாயும் பக்தர்கள் திரும்பத் திரும்ப வந்து தரிசனம் செய்கிறார்கள். நம்மை அப்படியே நிறுத்தி வைக்கும் பரவசத் தோற்றம். சந்நதியை விட்டு நகர கால்கள் முயன்றாலும், மனம் தயங்கும் அனுபவம்.

ஆடிக் கிருத்திகை லட்சார்ச்சனை கமிட்டி என்ற ஓர் அமைப்பின் சீரிய முயற்சியால் உருவாகியிருக்கும் இக்கோயிலில், விநாயகரை வலமாக வந்தால், உற்சவ தெய்வச் சிலைகளை ஒரு மண்டபத்துக்குள் காணலாம். அவற்றில் வெள்ளியாலான காமாட்சி அம்மன் சிலை அழகு மிக்கது. லிங்க ரூபமான இறைவனை தழுவியபடி அமர்ந்திருக்கும் தோற்றம்!

இங்குள்ள நடராஜர் சந்நதி சிதம்பரத்துக்கு ஒப்பானது என்கிறார்கள். சிதம்பரம் தலத்தில் நடைபெறுவது போலவே எல்லா அபிஷேகங்களும், ஆராதனை முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

ஸ்ரீதேவி&பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், அப்படியே காஞ்சி வரதராஜரை நினைவுபடுத்துகிறார். இவருக்கான வழிபாடெல்லாம் காஞ்சியைப் போலத்தான் நடைபெறுகின்றன. அஷ்டாக்ஷர ஸ்வரூபியான இவருடைய சந்நதி எண்கோண அமைப்பில் உருவாகியிருக்கிறது.

ஷட்கோணத் தாடங்கத்துடன் ஜெயதுர்க்கா அருள்பாலிக்கிறார். அன்னையின் சந்நதிக்கு முன்னால், இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் அழகுச் சிலைகளாக அமர்ந்திருக்கிறார்கள்.
ஏகாம்பரேஸ்வரர் சந்நதி கஜபிருஷ்டம் மாதிரியான விருத்தாகார அமைப்பில் உருவாகியிருக்கிறது. அந்த லிங்கத் திருமேனி, சந்திரன்&சூரியன், வில்வ மாலை, ருத்ராட்ச மாலை அலங்காரத்தால் வைரமாய் ஜொலிக்கிறது. ஈசனுக்கு இடப்புறம் தரிசனம் தரும் காமாட்சி அம்மனின் சந்நதி பல்லவர் பாணி கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அன்னையின் கழுத்தில் ஸ்ரீசக்ரம் மாலையாகத் தொங்குகிறது. அன்னையை தரிசிக்கும் போது, ஸ்ரீசக்ரமும் நம் கண்களில் பட, நம் கரங்கள் நம்மையறியாமல் கூப்புகின்றன. மனதில் நெகிழ்ச்சி பரவுகிறது. சுப்பிரமணியர், வள்ளி & தேவசேனாவுடன் அலங்காரத் தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார். பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டுகிறார் இந்த ஸ்கந்தகிரி நாயகன்.

‘முடிப்பு கட்டுதல்’ என்று ஒரு பிரார்த்தனையை இங்கே பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். திருமணம் கைகூடாமல் தவிக்கும் இளைஞர்கள் பிரார்த்தனை மேற்கொண்ட சில நாட்களிலேயே மனம் போல மாங்கல்யம் கிடைக்கப் பெறுகிறார்கள். அதேபோல மகப்பேறுக்காக ஏங்கி நிற்கும் தாய்மார்கள் தொட்டில் கட்டுவதாகப் பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த பாக்கியம் கிடைக்கப் பெற்றபின் நன்றியுடன் கட்டி வைத்திருக்கும் தொட்டில்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டுகிறது.

கோயிலில் சிறு தேர் ஒன்றும் உள்ளது. தேர் இழுப்பதாகப் பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்காக கோயிலுக்குள்ளேயே இறைவனைத் தாங்கி, சுற்றி வருகிறது. கோபுரத்தின் கீழே பார்த்த பெரிய தேர், உற்சவங்களின்போது, சுவாமியை சுமந்துகொண்டு ஊருக்குள் வலம் வருகிறது.  ஸ்கந்தகிரி முருகன் சகல சம்பத்தும் தரக் காத்திருக்கிறார்.
சுபஹேமா