இது பீட்டாவின் பீப்!



விநோத ரஸ மஞ்சரி

‘மாடு பிடிப்பதெல்லாம் மாபெரும் பாவம்’ என்று மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு நம் ஜல்லிக்கட்டுக்கு ஆப்பு வைத்த பீட்டா அமைப்பை நினைவிருக்கிறதா? அவர்கள் உருவாக்கியிருக்கும் ஒரு விளம்பரம்தான் இன்று அமெரிக்காவின் பீப் சாங். ‘இத்தனைக் கேவலமாக விளம்பரம் எடுப்பவர்களுக்கு விலங்குகள் நலன் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?’ என ஃப்ரீயா விடும் அமெரிக்காவே ‘அய்யே...’ சொல்லியிருக்கிறது இந்த Adக்கு!

இருவேறு படுக்கை அறைக்காட்சிகளை ஒரே திரையில் காட்டுகிறது இந்த விளம்பரம். அதில் ஒருவன் சைவ உணவு உண்பவன். மற்றவன் அசைவப் பிரியன். தொடங்கிய சில நொடிகளிலேயே அசைவ ஆணுக்கு ‘எல்லாம்’ முடிந்துவிடுகிறது. பெண் கடுப்பாகி அவனைத் தள்ளிவிட்டு தன் செல்போனில் மூழ்குகிறாள். தோற்றுப்போன விரக்தியோடு அவன் வெளியே வந்து தெருவில் நடக்க, மேலேயிருந்து ஒரு விண்டோ ஏ.சி பெயர்த்துக்கொண்டு வந்து அவன் தலையில் விழுகிறது. மறுபக்கமோ சைவ சிகாமணியின் உறவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதன் மூலம் இவர்கள் சொல்ல வரும் கருத்து...

‘வெஜிட்டேரியன்தான் படுக்கையில் புலி. அதனால் எல்லோரும் வெஜிட்டேரியன் உணவுக்கு மாறுங்கள்’ என்பது. ஆனால், அதைச் சொல்ல இதுதான் வழியா? முக்கலும் முனகலும் கதறலுமாக, இது மட்டமான ஒரு ஆபாசப்படம் போலவே இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றன அமெரிக்க சேனல்கள்.
 
பீட்டா இந்த விளம்பரத்தை சி.பி.எஸ் எனும் குறிப்பிட்ட சேனலுக்காகத்தான் உருவாக்கியிருக்கிறது. நம் ஊர் ஐ.பி.எல் கிரிக்கெட் போல அமெரிக்காவின் மிகப் பிரபல கால்பந்தாட்ட லீக்கான ‘சூப்பர் பவுல்’ போட்டிகளுக்கு நடுவே இது வரவேண்டும் என்று பீட்டா விரும்புகிறது. அதற்காக விளம்பரத்தை சி.பி.எஸ் சேனலுக்கு அனுப்பி வைத்து பல நாளாகியும் எந்த மறுமொழியும் இல்லை. பீட்டாவுக்கு இப்படிப்பட்ட ஆபாச விளம்பரங்களும் அதனால் வரும் அவமானங்களும் புதிதல்ல. ஏற்கெனவே 2009ல் இதே ‘சூப்பர் பவுல்’ கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக ‘காய்கறிகளைக் காதலியுங்கள்’ என்ற கோஷத்தோடு இவர்கள் ஒரு விளம்பரத்தை தயாரித்தார்கள்.

அரைகுறை ஆடைகளோடு பெண்கள் வந்து நீள நீளமான காய்கறிகளை காமப் பார்வை பார்க்கும் அந்த விளம்பரத்தை அமெரிக்க சேனல்களே காறித் துப்பி தடை செய்துவிட்டன. ‘‘அதே கதிதான் இந்த விளம்பரத்துக்கும்’’ எனப் பேசிக்கொள்கிறார்கள். மேற்படி இந்த ரெண்டு விளம்பரங்களும் யூ டியூபிலேயே இருக்கின்றன. எந்த யூ டியூப்? நம்ம பீப் சாங் ரிலீசாச்சே... அதே யூ டியூப்தான். நாம ஏன் பீட்டா மேல இன்னும் கேஸ் போடாம இருக்கோம்?

- ரெமோ