நினைவோ ஒரு பறவை



நா.முத்துக்குமார்

(a+b)2 = a2 + b2 + 2ab

பாஷை என்பது வேட்டை நாயின் கால் தடம்; கால் தடத்தை நாம் உற்றுப் பார்க்கும்போது, வேட்டை நாய் வெகு தூரம் போயிருக்கும்.
- சுந்தர ராமசாமி

(‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலில் இருந்து...)

குழந்தைகள் கடவுளிடம் சென்று கேள்வி கேட்டன. ‘நிறம் என்றால் எப்படி இருக்கும்?’ கடவுள் மஞ்சள் வெயிலுடன் மழையைக் குழைத்து வானவில் வரைந்து அனுப்பினார். ‘இசை என்றால் என்ன?’ விடியலின் லயமான நிசப்தத்தில் பெயர் தெரியாத பறவைகளைப் பண் இசைக்க அனுப்பினார்.

‘வாசனை பற்றி விளக்க முடியுமா?’ பள்ளத்தாக்கு முழுக்க பூத்த பூக்களைப் பரிசாக அனுப்பினார். ‘இன்பம் பற்றிச் சொல்ல முடியுமா?’ நிலா காயும் இரவுகளில் கிண்ணம் நிறைய பால் சோற்றுடன் அம்மாக்களை அனுப்பினார்.கடைசியாக ஒரு குழந்தை, ‘துன்பம் என்றால் என்ன?’ என்று கேட்டது. கொஞ்ச நேரம் யோசித்த கடவுள், கையில் பிரம்புடன் கணக்கு வாத்தியார்களை அனுப்பினார். அன்று முதல் இன்று வரை குழந்தைகளின் கனவுகளில் சாக்பீஸ் துண்டுகளுக்கு பற்கள் முளைத்து கணக்கு வாத்தியார்களை மென்று தின்று கொண்டிருக்கின்றன.கணக்கு வாத்தியார்கள் கையில் ஸ்கேலை வைத்துக்கொண்டு, முக்கோணத்தின் மேல் முனையிலிருந்து இடதுபுறமாக சாய்கோணத்தில் பதினைந்து சென்டிமீட்டருக்கு கோடு போடச் சொல்கிறார்கள். குழந்தைகள் நூறு மீட்டர் நீளமாக கோடு போட்டு, விளையாட்டு மைதானத்திற்கு ஓடி விடுகிறார்கள்.

எல்லாக் குழந்தைகளையும் போலவே கணக்கில் புலியாக இல்லாமல் பூனையாகவே என் பால்யம் கழிந்தது. நான் வரையும் வட்டங்கள், விபத்தில் சிக்கிய சைக்கிள் டயரைப் போல நசுங்கியிருக்கும். சதுரங்கள், சம்மணக்கால் போட்டு செவ்வகமாகியிருக்கும். காம்பஸின் கூரிய இரும்பு முனை, காகிதத்தில் கால் ஊன்றி பென்சில் சுற்றி வரும்போதெல்லாம் செக்கு வண்டியில் பொருத்தப்பட்ட மாட்டைப் போல என்னை உணர்வேன். பெரும்பாலும் என் ஜாமெட்ரி பாக்ஸில் கணக்குக்கு பதில் நாவல் பழங்களும் நெல்லிக்காய்களுமே குடியிருந்தன.

கோழிகளைக் கவிழ்க்கும் கூடைகளில் இருந்ததை விட என் கணக்கு நோட்டில் அதிக முட்டைகள் இருந்ததால், எங்கள் வீட்டுத் தோட்டத்தில் வெண்டைக்காய்ச் செடிகள் வளர்க்க ஆரம்பித்தார்கள். வெண்டைக்காய் மூளைக்கு நல்லதாம். மூளை சுறுசுறுப்பானால், கணக்கு தானாக வருமாம்.

மண்ணில் பதியனிடப்பட்ட சின்ன கணக்கு வாத்தியாரைப் போல, வெண்டைக்காய்ச் செடி வளர்ந்து கொண்டிருந்தது. கணக்கு வாத்தியாரின் குடையைப் போல வெண்டைக்காய்கள் காய்த்தன. ஒரு சுபமுகூர்த்த நாளில் வெண்டைக்காயைச் சமைத்துக் கொடுக்க, அதன் கொழகொழத் தன்மை தொட்டவுடன் பிடிக்காமல் போனது. அன்று முதல் கணக்குக்கு அடுத்து வெண்டைக்காயும் எதிரியானது.

கணக்குடன் குத்துச்சண்டை போட்டுக்கொண்டே பத்தாம் வகுப்பு வரை வந்துவிட்டேன். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனைப் போல, என் அப்பா என்னை ஒரு மாஸ்டரிடம் டியூஷனுக்கு அனுப்பினார். இந்தத் தொடருக்காக அவர் பெயர் நடராஜன் என்று வைத்துக்கொள்வோம். நடராஜன் மாஸ்டர், அரசுக் கல்லூரியில் கணக்குப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அறுபதுகளின் மத்தியில் வயது; ஆறடி உருவமும் அதற்கேற்ற உடலும் கொண்டவர். என் அப்பாவுக்கு அவர்தான் கணக்கு சொல்லிக் கொடுத்தாராம். எங்கள் ஊரில் ஏறத்தாழ எல்லாப் பையன்களும் அவர்களின் அப்பாக்களும் அவரிடம் கணக்கு கற்றவர்களே!

பெருமாள் கோயிலுக்கு அருகில் அவர் வீடு இருந்தது. கோயில் மதில் சுவரின் கடைசி முனை வரை மாணவர்களின் மிதிவண்டிகள் நிற்கும். முன்புறம் திண்ணை வைத்த நீளமான வீடு. வாசலில் இருந்து பார்த்தால், இருட்டுப் பிராகாரங்களைத் தாண்டி தூரத்தில் தோட்டத்தில் மஞ்சள் வெளிச்சத்தில் துளசி மாடம் தெரியும். முன்பக்க அறையிலேயே டியூஷன் நடக்கும். மற்ற அறைகள், புரியாத கணக்குகளைப் போல மூடியே கிடக்கும்.

அதிகாலையில் எழுந்து நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு டியூஷன் எடுக்க ஆரம்பிப்பார். காலையில் ஆறிலிருந்து ஏழு வரை பத்தாம் வகுப்பு, ஏழிலிருந்து எட்டு பிளஸ் 2 பையன்கள், எட்டிலிருந்து ஒன்பது கல்லூரி மாணவர்கள், மாலை ஆறிலிருந்து எட்டு பொறியியல் மாணவர்கள், எட்டிலிருந்து பத்து உயர்கணிதம் படிப்பவர்கள் என டியூஷன் மாணவர்கள் குவிந்துகொண்டே இருப்பார்கள்.

நடராஜன் மாஸ்டர் எங்களை கணக்கு என்ற யானைக்கருகில் அழைத்துச் சென்று, அதன் தும்பிக்கையைத் தைரியமாகத் தொட வைத்தார். ‘‘ஒண்ணும் பண்ணாது... பயப்படாதே’’ என்று மேலே ஏற்றி அமர வைத்தார். உலகத்திலேயே சுலபமானது கணக்குப் பாடம்தான் என்று உணர வைத்தார்.

‘‘பத்தாவது பப்ளிக் பரீட்சையில் கணக்குல யாரு நூத்துக்கு நூறு எடுக்குறானோ அவனுக்கு என் பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தர்றேன்!’’ என்று போட்டி போட வைத்தார். நான் அறுபத்தைந்து மதிப்பெண் மட்டுமே எடுத்து, முப்பத்தைந்து மதிப்பெண் இடைவெளியில் அவர் பெண்ணை இழந்தேன். நான்கைந்து புத்திசாலி மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்து, அவர் பொண்ணுக்கான சுயம்வரத்தில் நின்றார்கள்.

‘‘பிளஸ் 2விலும் சென்டம் வாங்குடா... என் பொண்ணைக் கட்டித் தர்றேன்’’ என்றார் புன்னகைத்தபடி! அவரது குடும்பம் சென்னையில் இருந்தது. எங்கள் ஊரில் தங்கி டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தார். ‘அவருக்கு மூன்று அழகான பெண்கள்’ என்றும்; ‘அவருக்குக் கடைசி வரை திருமணமே ஆகவில்லை... கணக்கிற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து விட்டார்’ என்றும்; ‘கல்யாணம் ஆகிவிட்டது... பெண்கள் கிடையாது... ஒரே ஒரு பையன் அமெரிக்காவில் இருக்கிறான்’ என்றும் அவரது குடும்பத்தைப் பற்றிப் பலவிதமான வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன. நூற்றுக்கு நூறு எடுத்து அவருக்கு மருமகனாக முடியாதென்பதால் அந்த வதந்திகளில் நான் கலந்துகொள்வதில்லை.

நடராஜன் மாஸ்டருக்கு ஊரில் கடவுளுக்கு அடுத்தபடியான மரியாதை இருந்தது. பெரும்பாலும் அனைவரும் அவரிடம் படித்த மாணவர்கள் என்பதால், சாலையில் அவர் நடந்து சென்றால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள்கூட வண்டியை நிறுத்தி இறங்கி வணக்கம் சொல்வார்கள். பள்ளி முடிந்து கல்லூரியில் நான் வேறு பாடம் எடுத்ததால், கணக்கு டியூஷன் செல்லும் படலம் முடிந்தது. தங்கிய மரத்தைத் திரும்பிப் பார்க்கும் பறவை போல, அவர் வீட்டுப் பக்கம் செல்கையில் அவர் ஞாபகம் வரும்.

நான் கல்லூரி மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கையில், நடராஜன் மாஸ்டர் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து விட்டார் என்றும், உடலைச் சென்னைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்றும் தகவல் வந்தது. அவரது சென்னை முகவரி தெரியாததால் செல்ல முடியவில்லை.

நடராஜன் மாஸ்டரின் தற்கொலைக்கு நான்கு வெவ்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டன. ஒன்று, அவரது மகள் யாருடனோ ஓடிவிட்டாள்; இரண்டு, அவருக்குத் தீராத வயிற்றுவலி; மூன்று, அமெரிக்காவில் இருக்கும் அவர் மகன் விபத்தில் இறந்து விட்டான். நான்கு, இறப்பதற்கு முந்தைய நாள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மப்ளர் கட்டிக் கொண்டு ‘பாவாடை கட்டிய கிராமத்திலே’ என்கிற மலையாளப் படத்தின் இரவுக் காட்சிக்குச் சென்றிருக்கிறார். இடைவேளையில் இவரைப் பார்த்துவிட்ட பழைய மாணவர்கள் சிலர், ‘‘நடராஜன் சாருக்கு ஒரு பிட்டைப் போடு’’ என்று கிண்டல் செய்து சத்தம் போட்டிருக்கிறார்கள். மரியாதை தொலைந்த அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

நான்கு காரணங்களில் எது உண்மை என்று நடராஜன் மாஸ்டருக்கும் அவர் தூக்குப் போட்ட கயிற்றுக்கும் மட்டுமே தெரியும். கணக்கைப் போலவே அவரது வாழ்வும் புதிராகவே முடிந்தது.

ஒரு குழந்தை, ‘துன்பம் என்றால் என்ன?’ என்று கேட்டது. கொஞ்ச நேரம் யோசித்த கடவுள், கையில் பிரம்புடன் கணக்கு வாத்தியார்களை அனுப்பினார்.

காம்பஸின் கூரிய இரும்பு முனை, காகிதத்தில் கால் ஊன்றி பென்சில் சுற்றி வரும் போதெல்லாம் செக்கு வண்டியில் பொருத்தப்பட்ட மாட்டைப் போல என்னை உணர்வேன்.

(பறக்கலாம்...)

ஓவியங்கள்: மனோகர்