குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

சரிதா நாயர் டீ ஸ்டால். நிலாவுலயும் சரி, வீராணம் குழாய்லயும் சரி, எங்க இடம் கிடைச்சாலும் தங்க இடமில்லாட்டாலும் டீக்கடை போடுற நாயகர்களில் ஒருவரான நாயர் டீக்கடை. காலங்காத்தால கடன் சொல்லி டீ குடிக்கும் கருத்து கந்தசாமிக்கும் பீலா பெரியசாமிக்கும் இடையில நடக்கும் கான்வர்சேஷன்தான் நம்ம மேட்டர்...

கருத்து கந்தசாமி : என்ன நாயரே, எங்களுக்கு ரெண்டு டீ போடுறது!
நாயர் : எந்தா டீ? ஏற்கனவே நாப்பது ரூபா பாக்கி இருக்கு!
கருத்து கந்தசாமி : அட போய்யா, தமிழ்நாடே நாலு லட்சம் கோடி ரூபா கடன்ல இருக்கு; நீ நாப்பது ரூபாவுக்கு மூஞ்சியைத் தூக்கி முறைக்கிற. டேம் தண்ணிக்குதான் பிரச்னை பண்றீங்கன்னா, டீ தண்ணிக்குமா பிரச்னை பண்ணுவீங்க, போடுங்க நாயரே!
நாயர்: டீ தர்றேன்... ஆனா கருத்து மட்டும் சொல்லாத கந்தசாமி. என்ன டீ வேணும்?
கருத்து கந்தசாமி : எதையும் கலக்காம போட்டா பிளாக் டீ, எதையாவது கலந்து சாப்பிட்டா பிராந்தி, இம்புட்டுதான் வாழ்க்கை! ஏதாவது ஒரு டீய போடுப்பா.

பீலா பெரியசாமி : என்ன கந்தசாமி, பேப்பர்ல என்ன நியூஸ் போட்டிருக்கு?
கருத்து கந்தசாமி : பாஸ்போர்ட், விசாவை வீட்டில் விட்டுட்டு சென்ற ரஜினிக்காக தாமதித்து பறந்த மலேசிய விமானமாம். உழைப்பு அதிகமானா அசதி வர்றதும், களைப்பு அதிகமானா மறதி வர்றதும் சகஜம்தானேப்பா. உலகமே ரசிக்கிற நடிகரா இருந்தாலும், அவரும் நம்மளை மாதிரி சட்டுனு சில விஷயங்களை மறக்கிற மனிதர்தானேப்பா. இருந்தாலும், தனி ஒரு மனிதனுக்காக விமானமே தாமதித்துப் பறந்திருக்குன்னா, அது தமிழனுக்கான பெருமைதானே. கோட்டை ஏறி கொடிய நடுறமோ, வீட்டை சுத்தி செடிய நடுறமோ, எது செஞ்சாலும் நாம தனித்து தெரியணும்ல!

பீலா பெரியசாமி : அட, இது என்னப்பா மேட்டரு? இப்படித்தான் நான் ஒரு தடவை மும்பைல இருந்து ஃப்ளைட்ல சென்னைக்குக் கிளம்பினேன். அதே வண்டில வர வேண்டிய அமிதாப் பச்சன், இதே மாதிரி பாஸ்போர்ட், விசா எல்லாம் மறந்துட்டாரு. ஆளு உசரத்த பார்த்துட்டு ஏதோ ஏ.டி.எம் வாட்ச்மேன்னு நினைச்சு, அவரை இறக்கிவிட  ஃப்ளைட் கண்டக்டரு முடிவு பண்ணிட்டாரு. நான்தான் ஃப்ளைட்டை அமிதாப் வீட்டுப் பக்கமா விடச் சொல்லி, வாசல்ல நிறுத்தி, அவங்க வீட்டுக்காரம்மாகிட்ட பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்து வண்டில ஏத்துனேன். என்ன... தெருவுல அங்கங்க பைக் நின்னதால, ஃப்ளைட்ட கொஞ்சம் வளைச்சு வளைச்சு ஓட்ட வேண்டியதாகிடுச்சு. இதெல்லாம் ஒரு மேட்டராப்பா, மேல படி! மேல படி!

கருத்து கந்தசாமி : சுப்ரீம் குமாரின் கட்சி இரண்டா உடைந்ததாம். வயசான காலத்துல நடக்க குச்சி சப்போர்ட் வேணும்னா, வலிக்காம வயிற நிரப்பிக்க கட்சி சப்போர்ட் வேணும். என்ன நான் சொல்றது? அதுவுமில்லாம, பஜ்ஜின்னா பிச்சு சாப்பிடுறதும், கட்சின்னா உடைச்சு பார்க்கிறதும் சகஜம்தானேப்பா. அடுத்தவன் பார்க்கிற வேட்டிய அரசாங்கம் கொடுத்தாலும், நம்ம மானம் காக்கிற டவுசர நாமதான் வாங்கிக்கணும். ஒரு கட்சித் தலைவரால எல்லார் இலையிலும் கிழங்கு வைக்க முடியாட்டி, அவருக்கு நலங்கு வைக்கிறது தவறில்லைங்கிறேன்!

பீலா பெரியசாமி : அட போப்பா, அவரு கட்சிய உடைக்கிறப்ப நான் அந்த வழியாத்தான் கவர்னர பார்க்க போயிக்கிட்டு இருந்தேன். கட்சியின் ஒட்டு மொத்த தொண்டர்களும் ஒண்ணா கூடியிருந்தாங்க. கட்சி ஆபீஸ் முழுக்க ஒரே சத்தம், ஒரே யுத்தம். நான்தான் பஞ்சாயத்து பண்ணி பைசல் செஞ்சு, திருப்பதி லட்டு மாதிரி கட்சிய ரெண்டா புட்டுக் கொடுத்தேன். அப்புறம் ரெண்டு கோஷ்டிகளின் மொத்த தொண்டர்களும் நாலு பைக்ல ஏறி வீட்டுக்குப் போயிட்டாங்க. சமூக சேவை செய்யறதுன்னா எனக்கு சமந்தா போட்டோவ பார்க்கிற மாதிரி! சரி, அடுத்த அயிட்டத்த சொல்லு!

கருத்து கந்தசாமி : பெட்ரோல் விலை 4 பைசாவும், டீசல் விலை 3 பைசாவும் குறைச்சு இருக்காங்களாம். இடது கைல தடவினா என்ன, வலது கைல தடவினா என்ன, வழுக்கைல முடிதான் அகப்படுமா? இவங்க பெட்ரோல் விலை பத்து காசு குறைச்சா மட்டும் பஞ்சரான டிரெயின்தான் புறப்படுமா? பம்பு செட்டு பக்கம் படுத்துக் கிடக்குதாம் பொருளாதாரம், இவங்க அஞ்சு பைசா குறைக்கிறதுனால மேம்பட்டுடுமா நம்ம வாழ்வாதாரம்? பத்தாத சைசுல பனியன் போட முடியாது, பத்து பைசா மிச்சம் பண்ணி பாலம் கட்ட முடியாது.
பீலா பெரியசாமி: இப்படித்தான் 1977ல பெட்ரோல், டீசல் விலை 5 பைசா குறைச்சாங்க, விட்டேனா நானு. நேரா பெட்ரோல் பங்க் போயி பத்து காசுக்கு பெட்ரோல் போடுங்கனு பிரச்னை பண்ணிட்டேனே. அப்புறம், இங்க் ஃபில்லரால ரெண்டு சொட்டு விட்டுத்தான் அனுப்பினாங்க. பெட்ரோல் விலைய அவங்க 4 பைசா குறைக்கிறப்ப, நாங்க  வண்டிக்கு பத்து பைசாக்கு பெட்ரோல் போட சொல்லக் கூடாதா சார்? அடுத்து என்னனு பாரு...

கருத்து கந்தசாமி : ஸ்டார் கிரிக்கெட்டில் 64 பந்துகளில் செஞ்சுரி போட்டு சாதனை படைத்தார் நடிகர் விக்ராந்த். நடிகருங்கன்னா டிஸ்கோ ஆடுவாங்க, சிலர் கதகளி, பிரேக் டான்ஸ், ஏன் பரதநாட்டியம் கூட ஆடுவாங்க. ஆனா, கடைசி வரை நம்ம விக்ராந்த கிரிக்கெட் ஆட மட்டுமே விட்ருவாங்க போல. அடிக்கிறதுக்கு கிரவுண்டுல வாய்ப்பா கொடுக்கறாங்க, ஆனா நடிக்கிறதுக்கு கோலிவுட்ல வாய்ப்ப மட்டும் ஏய்க்கிறாங்க.

பீலா பெரியசாமி : அட, இதென்னப்பா செஞ்சுரி? 1974ல இந்திய அணிக்கு செலக்‌ஷன் மேட்ச். கடைசி ஓவரு... நானும் கவாஸ்கரும். ஆறு பாலுக்கு 20 ரன்னு தேவை, ஜெயிக்க வச்சோம்ல.
நாயர் : எப்படி?! பவுலிங் போட்ட எதிர் டீமையா?
பீலா பெரியசாமி : போய்யா! குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் புடிச்சுக்கிட்டு இருந்த சச்சினு ‘பேட் புடிச்சா நல்லா வருவான்’னு கணிச்சு சொன்னதே நான்தான். நீ அடுத்த செய்திய வாசி...

கருத்து கந்தசாமி : மதுரையில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு நடைபெற்றதாம். மூடுன ஹோட்டலுக்கு முப்பது பேரு சர்வராம், முடிஞ்சு போன பட்டிமன்றத்துக்கு மூணு பேரு நடுவராம். அய்யா, கடலை மாவ கரைச்சு எண்ணெய்ல விட்டா பஜ்ஜியாகும்... ஆனா கிரிக்கெட் டீம் அளவுக்கு ஆள் வச்சிருக்கிறதெல்லாம் கட்சியாகுமா? பத்தாத ஜீன்ஸுக்கு எதுக்கு பட்டனு, வெள்ளிக்கிழமை மதியத்துக்கு எதுக்குய்யா மட்டனு?
பீலா பெரியசாமி : இப்படித்தான் ஒரு சமயம், ‘நாலு பேருக்கு மேல ஆளிருந்தா கூட்டணிக்கு வாங்க’னு கூப்பிட்டாங்க. ஞாயிற்றுக்கிழமை சும்மாதானே இருக்கோம்னு நானும் போயிட்டேன். போனாக்கா, ஒரு கட்சித் தலைவர் யாரைக் கண்டாலும் முறைக்கிறாரு, ஒரு கட்சித் தலைவர் ரோட்டக் கண்டாலே நடக்கிறாரு, ஒரு கட்சித் தலைவர் ஆளுங்கட்சியப் பார்த்தாவே சிரிக்கிறாரு, ஒரு கட்சித் தலைவர்கிட்ட தொண்டர்கள் எண்ணிக்கைய கேட்டா முழிக்கிறாரு. தொகுதி வேட்பாளர்களை விட முதல்வர் வேட்பாளர்கள் அதிகமிருக்கும் கூட்டணியா தெரிஞ்சதால, இதுக்கு பாட்டனி புக்க படிச்சாலே பொழுது போகும்னு வந்துட்டேன். வேற நல்ல செய்தியா படிச்சு சொல்லுப்பா...
கருத்து கந்தசாமி: தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க சின்ன கட்சினு அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்காரு. இதைக் கேட்கிறப்ப என்ன தோணுதுன்னா, ‘பளபளப்பா காட்டிக்க என்ன பூசு’னு சொல்லுச்சாம் பாண்ட்ஸ் பவுடரு... ‘அட, உன் வாசம் சரியில்ல’னு சொல்லுச்சாம் எறும்பு பவுடரு. கம்பளிப் பூச்சிங்கிறதுனால அது கம்பளி போர்த்தி போகப் போகுதா, இல்ல மூட்டைப் பூச்சிங்கிறதுனால அது மூட்டை தூக்கி சாவுதா?

டீக்கடை நாயர் : யோவ், பெஞ்சுல உட்கார்ந்துக்கிட்டு பெங்களூருல இருக்கிறவனுக்கு கேட்கிற மாதிரி கூட நீ செய்திய படி, ஆனா தயவுசெய்து கருத்து சொல்றேன்னு கடுப்ப கிளப்பாத!
பீலா பெரியசாமி : சரியா சொன்னய்யா, இப்படித்தான் 1980கள்ல...
டீக்கடை நாயர் : ஐயா சாமி! அந்தாளு சொல்ற கருத்த கூட கேட்டுரலாம்... ஆனா உன் கப்சாவதான்யா தாங்க முடியல. மூக்கடைச்சு தும்மினா ஜலதோஷம், நீங்க வாயை மூடிக்கிட்டு கிளம்புனா சந்தோஷம்.

ஓவியங்கள் : அரஸ்