நியூஸ் வே



பிரபுதேவா தயாரிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் தமன்னா. த்ரில்லரை கையில் எடுத்திருக்கும் விஜய், தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் கொண்டு வருகிறார்கள்.

‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸ் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்வதென சபதம் செய்திருக்கிறார். ‘பெண்ணுக்கு கத்திச் சண்டை, வில்வித்தை, மல்யுத்தம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்’ என கிண்டல் செய்திருக்கிறார் சக நடிகர் ராணா.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 300 வெற்றிகளை ருசித்த முதல் மனிதர் ஆகியிருக்கிறார் ரோஜர் ஃபெடரர். அதிக டைட்டில்கள் வென்றது, அதிக முறை ஃபைனலில் ஆடியது, அதிக முறை செமி ஃபைனலில் ஆடியது போன்ற சாதனைகளும் இவர் வசமே!

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி அம்ருதா நல்ல பாடகர். ப்ரியங்கா சோப்ரா நடிக்கும் ‘ஜெய் கங்காஜல்’ படத்தில் ஒரு பக்திப் பாடல் பாடி, பின்னணிப் பாடகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் அம்ருதா.

ஷங்கரின் ‘2.0’ ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டு, மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் கிளைமேக்ஸுக்கு பறந்துவிட்டார் ரஜினி. ரஜினியைப் பார்த்து பரவசமாகி விட்டார், அதே விமானத்தில் பயணம் செய்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். உடனே செல்ஃபி எடுத்து ட்வீட்டியும் விட்டிருக்கிறார்.

கணவர் கிருஷ்ண வம்சியின் டைரக்‌ஷனில் தெலுங்கில் ஹாரர் படம் ஒன்றில் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அதில் அனுஷ்கா ஹீரோயின் என தெலுங்கில் செய்திகள் ரவுண்ட் அடித்தது. இப்போது அனுஷ்காவிற்கு பதில் சமந்தா நடிக்கிறார்.

உலகின் அதிவேக உயிரினம் என்ற பெருமைக்குரிய பெண் சிறுத்தைப்புலி சாரா, சமீபத்தில் இறந்து விட்டது. 100 மீட்டர் தூரத்தை 5.95 நொடிகளில் கடந்து சாதனை படைத்த இது, அமெரிக்காவின் சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் வசித்து வந்தது. சிறுத்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்ற பெருமைக்குரியவள் சாரா.

ஆபரேஷனுக்குப் பிறகு வேகமாகத் தேறிவரும் அஜித், இரண்டு மாதங்கள் லண்டன் டூர் அடிக்கிறார். அநேகமாக இங்கே தேர்தல் சூடு பறக்கும்போது அவர் லண்டனில் இருக்கக்கூடும் என்கிறார்கள்.

‘பிரேமம்’ படம், விஜய்யை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டது. உடனே அதன் ஹீரோ நிவின்பாலியை சென்னைக்கு வரவழைத்து பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். விஜய்யின் அன்பில் திக்குமுக்காடி நிவினும் நெகிழ்ந்துவிட்டார்.

நடிகை சங்கவி - தொழிலதிபர் வெங்கடேஷ் திருமணம் சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. சங்கவியின் நெருங்கிய தோழியான நடிகை மீனா, தன் குழந்தை நைனிகா, தனது அம்மா ஆகியோருடன் நேரில் சென்று வாழ்த்தியிருக்கிறார்.

செல்ஃபி ஆர்வமுள்ள பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருந்தாலும், நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் உமாபாரதிக்கு செல்ஃபி பிடிக்காது. சமீபத்தில் ஒரு பா.ஜ.க. தொண்டர் உமாவோடு செல்ஃபி எடுக்க, போனைப் பிடுங்கி தன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்த உமா, அந்தப் படத்தை அழிக்க கோபத்தோடு உத்தரவிட்டார்.

இந்த பர்த் டேவை குடும்பத்தினர், ரசிகர்களோடு அடக்க ஒடுக்கமாகக் கொண்டாடியிருக்கிறார் சிம்பு. கூடவே, அவரது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஆடியோவையும் வெளியிட்டு ஹேப்பியாகியிருக்கிறார்.

பணி வாய்ப்புகளைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்களில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். சுமார் 1 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். உலகம் முழுக்க வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களில் 400 பேரில் ஒருவர் இந்தியர்.