எல்லோருக்கும் கிடைக்கும் இ.க்யூ ரயில் டிக்கெட்!



அவசரப் பயணம்... ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தோம்... கடைசி நிமிடம் வரை வெயிட்டிங் லிஸ்ட் கன்ஃபார்ம் ஆகவில்லை... என்ன செய்வோம்? என்ன செய்ய முடியும்? சர்வ சாகசக் கலைகளிலும் வல்லவராக இருந்தால் அன்ரிசர்வ்டு கோச்சில் இடம்பிடிக்க முயலலாம். அல்லது பிளாட்பாரத்தில் டி.டி.ஆரைப் பார்த்து தாடையைத் தடவிக் கெஞ்ச வேண்டும்.

இது அதனினும் சிரமமான கலை. என்னது? எமர்ஜென்ஸி கோட்டாவா? அப்படி ஒரு நடைமுறை உண்டே தவிர, அதையெல்லாம் பிராக்டிகலாக யாரும் வாங்கி நாம் பார்த்ததே இல்லையே! - இப்படிப்பட்ட சங்கடங்களுக்குத் தீர்வாகத்தான் எமர்ஜென்ஸி கோட்டாவுக்கென்றே தனி செல் அமைத்திருக்கிறது தென்னக ரயில்வே.

இந்திய ரயில்வேவுக்கே இந்த ‘இ.க்யூ செல்’ புதுசு!‘‘சாதாரண மக்களின் நலனுக்காகவும் வசதிக்காகவும்தான் ரயில்வே ஒவ்வொரு திட்டத்தையும் வகுக்கிறது. அவை சரியாக மக்களிடம் போய்ச் சேர்ந்தாலே பாதி பிரச்னைகள் ஒழிந்துவிடும்!’’ எனத் துவங்குகிறார் தென்னக ரயில்வேயின் தலைமை கமர்ஷியல் மேனேஜர் அஜித் சக்சேனா.

‘‘எமர்ஜென்ஸி கோட்டா என்பது இதுநாள் வரையில் வெறும் பேப்பர் நடைமுறையாக இருந்தது. டிக்கெட் கவுன்டரில் போய் அதற்கான படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பயணிகளுக்கு அது தலை போகிற அவசரமாக இருந்தாலும் அதைப் புரிய வைக்க முடியாது. ஒரு அதிகாரியைப் பார்த்து நேருக்கு நேர் பேசினால் வசதியாக இருக்குமே... அவர் நம் கஷ்டத்தைப் புரிந்துகொள்வாரே எனப் புலம்பாதவர் இல்லை. இது எங்களுக்கும் கேட்டதால்தான் இந்த நடவடிக்கை.

இதன்படி தென்னக ரயில்வேயின் ஆறு டிவிஷன்களிலும் எமர்ஜென்ஸி கோட்டாவில் டிக்கெட் வேண்டுபவர்கள், அதற்கென இருக்கும் தனி அலுவலர்களை நேரடியாகச் சந்திக்கலாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதற்கென தனி செல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இஷாக் ஷெரிப் எனும் சிறப்பு அலுவலர் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவரின் தொலைபேசி எண்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு எனத் தென்னக ரயில்வேயில் மற்ற டிவிஷன்களில் சீனியர் டிவிஷனல் கமர்ஷியல் மேனேஜர் எனும் அதிகாரிகள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது எண்களும் விரைவில் தரப்படும். இ.க்யூ பெறுவது எப்படி?

சீரியஸான ஒரு மருத்துவ சிகிச்சை, ஒரு இறப்பு, தவிர்க்கவே முடியாத தேர்வு, உடல்நலம் குன்றியவர்கள், கர்ப்பிணிகள் என அவசர காலப் பயணம் மேற்கொள்பவர்கள் பயணத்துக்கு ஆறு மணி நேரம் முன்பு வரை காத்திருக்கலாம். அதுவரை அவர்களின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாவிட்டால் தயங்காமல் தகுந்த அலுவலரைத் தொடர்புகொள்ளலாம். அலுவலர்களை நேரில் சந்தித்து, தகுந்த ஆதாரங்களைக் காட்டினால் நிச்சயம் இ.க்யூ எனும் எமர்ெஜன்ஸி கோட்டா கிடைக்கும். ‘அதெல்லாம் நமக்கில்லை... அதிகாரம் உள்ளவர்கள் முந்திக்கொள்வார்கள்’ என்ற அவநம்பிக்கை இனி தேவையில்லை.

பயணிகளுக்கான பொறுப்பு!அதே சமயம் முக்கியமல்லாத காரணங்களுக்காக இ.க்யூ டிக்கெட் வேண்டும் என யாரும் நிர்ப்பந்திக்க மாட்டார்கள் என நம்புகிறோம். இதனால் நியாயமாக இ.க்யூ தேவைப்படுவோருக்கு அது கிடைக்காமல் போகலாம். சமூகப் பொறுப்போடு பயணிகள் நடந்துகொள்ள வேண்டும். அதே போல் இந்தப் பெட்டியில்தான் இ.க்யூ டிக்கெட் வேண்டும் என்றும் அடம் பிடிக்கக் கூடாது. பயணத்துக்கு 6 மணி நேரம் முன்னதாக முன்னுரிமை அடிப்படையில்தான் இந்த வகை டிக்கெட் வழங்கப்படும்!

எமர்ஜென்சியில் இதுவும் இருக்கு!இ.க்யூ கோட்டா என்பதே டிக்கட் மட்டும்தான் என்று நினைக்கவேண்டாம். இதில் ஆம்புலன்ஸ் உதவி, வீல் சேர், சிறப்பு உணவுக்கான ஆர்டர் செய்வது, மருத்துவ உதவி போன்ற எல்லா தேவைகளையும் ஒரு விண்ணப்பதாரர் கோர முடியும். எமர்ஜென்ஸிக்கு எத்தனை டிக்கெட்?

ஒரு  ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பில் 20, முதல் வகுப்பு ஏ.சியில் 8, செகண்ட்  ஏ.சியில் 10, மூன்றாம் வகுப்பு ஏ.சியில் 12 என மொத்தம் 50 இருக்கைகள்  எமர்ஜென்சி கோட்டாவுக்கு ஒதுக்கப்படுகின்றன. உண்மையான அவசரப் பயணம் எனில்  இதில் ஒன்றைக் கேட்டுப் பெறுவது ரயில் பயணிகளின் உரிமை! சென்னையில் இ.க்யூ  பெற தொடர்பு எண்கள்... 044-25354405, 9003160969.

இ.க்யூ என்பது எப்போதாவது தவிர்க்க முடியாத அவசரத்துக்கான ஒதுக்கீடு மட்டுமே! இதை ரெகுலராக யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். அதேசமயம், ஒரு ரயிலில் இ.க்யூவுக்கான கோரிக்கைகள் வரவில்லை என்றால், அந்த டிக்கெட்டுகள் அப்படியே காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பொதுப் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிடும்!’’ என சொல்லி முடிக்கிறார் அஜித் சக்சேனா.

புகார் எண்கள்

ஓடும் ரயிலில் குடிகாரர்களின்  அட்டகாசம், ஈவ் டீஸிங், திருட்டு, கொள்ளை என அசம்பாவிதங்கள் நடக்கும்போது,  போனில் புகார் தெரிவிக்க வழி உண்டு. ஓடும் ரயிலில் உள்ள அதிகாரிகளுக்கு  இது உடனடியாகத் தெரிவிக்கப்பட்டு பிரச்னை தீர்க்கப்படும்.

ஒருவேளை  ரயில்வே அதிகாரிகளே பிரச்னையாய் இருந்தால், அந்த பிரச்னைகளும் ேமலதிகாரிகளால் தீர்க்கப்படும். டிவிஷன் அதிகாரிகள் கேட்காதபோது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு  இயங்கும் சிறப்பு அதிகாரிகளின் எண்களுக்கு அழைக்கலாம். தொடர்பு எண்கள்... சென்னை: 044-25354475; திருச்சி: 0431-2418992; மதுரை: 0452-2308250; சேலம்: 0427-2431010; திருவனந்தபுரம்: 0471-2326484; பாலக்காடு: 0491-2552755.

ரயில்வே புகார்களை இனி ட்விட்டரிலும் பதிவு
செய்யலாம். இதற்கான ட்விட்டர் ஐ.டிகள்...
சென்னை: DRMchennai - DrmChennai    
SrDCMChennai- @SrDCMChennai
மதுரை: DRMMadurai - @drmMadurai
பாலக்காடு: DRMPalakkad - propgt14
திருவனந்தபுரம்: DRM Trivandrum -@TVC138
சேலம்: SalemDRM - @SalemDrm

* ரிசர்வேஷனை மட்டும்தான் ஆன்லைனில் செய்ய முடியும் என்பது பழைய கதை. தற்போது லோக்கல் ரயில் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் வரை அனைத்துக்குமான சாதாரண ரிசர்வ் செய்யாத டிக்கெட்டை UTS எனும் ஸ்மார்ட் போன் ஆப் மூலமே எடுக்கலாம்.

* ரயில்வே தொடர்பான சந்தேகங்கள் அனைத்துக்கும் ஒரே சேவை எண் 139. இரவு நேரப் பயணத்தில் நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததும் நமக்கு அலர்ட் தரும் சேவையும் கடந்த வருடம் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ALERT என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு நமது பி.என்.ஆர் எண்ணையும் டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும்!

* ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் வேறு பாதுகாப்பான இருக்கைக்கு மாற விரும்பினால் 9003160980 என்ற எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்