மிதுன லக்னத்துக்கு புதனும் சனியும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 29

ஊழ்வினைக் கிரகமாகிய சனியும், புத்திக்குரிய கிரகமான புதனும் சேர்வது என்பது பெரும் யோகங்களைத் தரும் அமைப்பு. மிதுன லக்னத்திற்கு சனி அஷ்டமாதிபதியும், பாக்யாதிபதியும் ஆவார். புலிப்பாணி ஜோதிடம், கேரள மணிகண்ட ஜோதிடம், குமாரசுவாமியம் உள்ளிட்ட பல நூல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஊழ்வினைக் கிரகம் சனி என்றால், அதைக் கடக்கத் துணை புரியும் கிரகமே புதனாகும்.

இந்த இரு கிரகங்கள் ஏற்படுத்தும் வேதிமாற்றத்தால் இவர்கள் வாழ்வில் வேகம் பெருக்கெடுத்தோடும். அதாவது, சனி தூங்கவிடாமல் ஏதேனும் சாதிக்கத் தூண்டிக் கொண்டே இருப்பார். மற்றவர்களின் மத்தியில் வித்தியாசப்படுத்திக் காட்டுவார். இதனால் நீடித்த உழைப்பும் ஆழமான சிந்தனையும் ஏற்படும். இந்த கிரகங்களின் சேர்க்கையால் ஒரு செயலைத் தொடங்கி இறுதி வரையிலும் ஓயாது தொடர்வார்கள்.

இவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அதில் முழுத் தேடலோடு ஈடுபடுவார்கள். அனுபவ அறிவோடு திகழ்வார்கள். சனி எட்டுக்குரியவனாக இருப்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று பிரகாசிப்பார்கள். சனி பகவான் ஒன்பதாம் வீட்டுக்குரியவராக இருந்து லக்னாதிபதியோடு சேர்வதால், தந்தையிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். பல மடங்கு தந்தையை விட கௌரவம் பெறுவார்கள். சிறுவயதிலிருந்தே சேமிப்புப் பழக்கங்கள் இருக்கும். வாங்கி, விற்கும் வணிக குணமும் இருக்கும். அடித்தட்டில் வாழும் அன்றாட மக்களின் தேவையையும் அறிந்து வைத்திருப்பார்கள். எல்லா விதமான மக்களுக்கும் பயன்படுகிற மாதிரி யோசிப்பார்கள்.

இந்த சேர்க்கை எந்தெந்த இடங்களில் அமைவது எப்படிப்பட்ட பலன்களைத் தரும்?மிதுன லக்னத்திலேயே - அதாவது ஒன்றாம் இடத்தில் புதனும், சனியும் அமர்ந்திருந்தால் மிகவும் வசீகரமாக இருப்பார்கள். எப்போதும் இளமையோடு காட்சியளிப்பார்கள். தோற்றப் பொலிவு விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இவர்களைச் சுற்றிலும் எப்போதும் நண்பர்கள் பட்டாளம் இருந்தபடி இருக்கும். தலைமைப் பொறுப்பை வகிக்கும் பக்குவத்தை சிறுவயதிலிருந்தே பழகிக் கொள்வார்கள். அதுபோல,  சவால்களை சந்தித்தபடி இருப்பார்கள். வெளித்தோற்றத்தை வைத்து இவர்களை மதிப்பிட முடியாது. இவர்கள் சுதந்திரப் பிரியர்களும் கூட. அதனால், எத்தனை நெருங்கிய நண்பர்களானாலும் ஒரு இடத்தில் நிறுத்தி வைப்பார்கள்.

கடக ராசியில் - அதாவது இரண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் ‘அவசரக் குடுக்கை’ என்று பெயரெடுப்பார்கள். ஆரம்பக் கல்வியில் சுமாராகப் படித்தாலும் உயர்கல்வியில் நல்ல தேர்ச்சியைப் பெறுவார்கள். ஆழமான பேச்சும், அமைதியான சுபாவமும் கொண்டு விளங்குவார்கள். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். பத்து பேரை வழி நடத்திச் செல்லும் குணமிருக்கும்.

செஸ், கேரம், ஷட்டில் காக் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்துவார்கள். தன்னிடம் இருக்கிறதோ, இல்லையோ, பிறருக்கு உதவி செய்யத் தயங்க மாட்டார்கள். இலக்கிய அறிவு மிகுந்திருக்கும். சாஸ்திரங்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பார்கள். எப்போதும் கையில் பணப் புழக்கம் இருந்தபடி இருக்கும். சாது மிரண்டதுபோல திடீரென்று கோபம் கொண்டு குத்தீட்டிப் பேச்சால் எல்லாரையும் காயப்படுத்துவார்கள்.

சிம்ம ராசியான மூன்றாவது இடத்தில் புதனும் சனியும் மறைவது நல்லதாகும். இளைய சகோதரர, சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பார்கள். பலரும் சொல்வதை நன்கு கேட்டு வைத்துக்கொண்டு, தேவையான சமயத்தில் வெளிப்படுத்தும் கேள்வியறிவு மிகுந்தவர்களாக இருப்பார்கள். அவ்வப்போது காது மந்தத்தன்மை ஏற்படும். போகத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள்.

 யாரையாவது நேசித்தால் ஒரேடியாக நேசிப்பார்கள். திடீரென்று தூக்கியும் போடுவார்கள். எல்லோரும் மறந்த பண்பாட்டை புத்துயிர் கொடுத்து பேசுவார்கள்; அல்லது எழுதுவார்கள். சரீரத்தை அதற்குரிய பயிற்சியைச் செய்து வஜ்ஜிரம் போன்று வைத்துக் கொள்வார்கள். ஒரு விஷயத்தைத் தொட்டால் கடைசிவரை முயன்று சாதித்து விட்டுத்தான் வெளியே வருவார்கள்.

கன்னி ராசியான நான்காம் இடத்தில் புதன் ஆட்சி பெறுகிறது. சனியும் சேர்ந்துகொள்கிறது. இப்படி அமைப்பு உள்ளவர்கள் கல்வி நிறுவனங்களை வைத்து நடத்துவார்கள். சொகுசான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். வீடு, வாகனமெல்லாம் சிறிய வயதிலேயே நிறைவாக அமைந்துவிடும். தாயே இவர்களுக்கு குருவாக இருப்பார்கள்.

எந்த விஷயமானாலும் தாயாரிடம் பேசிவிட்டுத்தான் பிறகு முடிவெடுப்பார்கள். சுவையான பானங்களை விரும்பி அருந்துவதுடன், குளிர்பானக் கடையையும் வைத்து நடத்துவார்கள். பழைய புராணங்களிலுள்ள விஷயத்தையெல்லாம் நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு கூறும் திறமை பெற்றிருப்பார்கள். தாயாரின் சொந்த பந்தங்களோடு அதிக நெருக்கம் கொள்வார்கள். விவசாயத்தில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.

துலாம் ராசியான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் லக்னாதிபதியான புதனுடன், பாக்யாதிபதியான சனி அமர்வதால் உங்களின் வாரிசுகள் பெரிய அளவில் புகழ்பெற்று விளங்குவார்கள். குலதெய்வத்திற்கு கோயில் கட்டுவார்கள். நிறைய தான, தர்மங்கள் செய்து எல்லோராலும் பாராட்டப்படுவார்கள். திடீரென்று வட இந்திய யாத்திரை புறப்பட்டுச் செல்வார்கள். ஆங்காங்கு ஆசிரமங்களுக்குச் சென்று தங்கிவிட்டு வருவார்கள். மூதாதையர்கள் மீது பிரியத்தோடு இருந்து அவர்கள் வாழ்ந்த வீட்டை அப்படியே பழமை மாறாமல் வைத்துக் கொள்வார்கள். தாய்மொழி மீது மிகுந்த பற்றுடையவர்களாக இருப்பார்கள். கவித்துவமான பேச்சால் எல்லோரையும் கவர்வார்கள்.

விருச்சிக ராசியான ஆறாம் இடத்தில் இவ்விரு கிரகங்கள் சேர்ந்து அமர்ந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. அதிலும் செவ்வாயின் இடத்தில் புதனும் சனியும் சேர்ந்திருப்பதால், பகைவர்களின் தொந்தரவு இருந்துகொண்டே இருக்கும். எதிரிகள் ஏதேனும் வழக்கு போட்டபடி இருப்பார்கள். தேவையற்ற ஆடம்பரத்தால் கடன் தொல்லையும் மிகும். மேலும் ஏதேனும் ஒரு நோய் வந்து படுத்தியபடி இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் பயந்தபடி இருப்பார்கள். பெரிய நீர்நிலைகளில் இறங்கும்போதெல்லாம் எச்சரிக்கை தேவை. வாகனங்களை இவர்களின் பெயரில் வைத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

தனுசு ராசியான ஏழாம் இடத்தில் புதனும் சனியும் ஒன்றாக அமர்வதால், ஓரளவு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நன்கு வசதியுள்ள, படித்த வாழ்க்கைத்துணை அமையும். இவர்களை விட அந்தஸ்தில் மேலே உள்ளவர்களே வாழ்க்கைத்துணையாக வருவார்கள்.

சில காலம் வேலை நிமித்தமாக வாழ்க்கைத்துணையை விட்டு அன்னிய தேசத்தில் இருக்க வேண்டியிருக்கும். தொழில் செய்து சம்பாதிப்பதைவிட திறமைக்கேற்ற சன்மானங்களையே நிறைய பெறுவார்கள். மிகச் சிறந்த அலங்காரப் பிரியர்களாக விளங்குவார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபடும்போது நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகர ராசியான எட்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமைவது என்பது ஓரளவு நற்பலன்களைக் கொடுக்கும். தீர்க்கமான ஆயுள் பெற்றிருப்பார்கள். திடீர் பயணங்களால் நிறைய வருமானம் உண்டு. இரவில் பயணிக்கும்போது எப்போதுமே உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சிறிய பிரச்னை என்றாலும் நிலைகுலைந்து போவார்கள். சிறுசிறு தோல்விகளுக்கெல்லாம் முயற்சியைக் கைவிட்டு விடுவார்கள். நீர்க்கடுப்பு, அவ்வப்போது சளி பிடித்தல் போன்ற தொந்தரவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தேவையற்ற இடங்களில் கடுமையாகப் பேசி கெட்ட பெயர் எடுப்பார்கள்.

கும்ப ராசியான ஒன்பதாம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தில் புதனும் சனியும் அமைவதென்பது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். ஒன்பதில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். பாக்யாதிபதி புதன், பாக்கிய ஸ்தானத்திலேயே அமர்ந்திருப்பது மிகவும் விசேஷமாகும். பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். குறுநில மன்னர்கள் போல வாழ்பவர்களெல்லாம் இந்த அமைப்பில் உண்டு. ‘பத்துப்பட்டி கிராமமும் இவர் சொன்னால் கேட்கும்’ என்பது போல செல்வாக்கோடு திகழ்வார்கள். தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு.

தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவார்கள். நிறைய சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். புண்ணிய காரியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். சற்றே தடித்த தொடை உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனாலும், வேக நடை கொண்டவர்களாக இருப்பார்கள். ரசிப்புத் தன்மை மிகுதியாக இருக்கும். சுயகௌரவத்தோடு தன்மானம் மிக்கவர்களாகவும் விளங்குவார்கள். 

மீன ராசியான பத்தாம் இடத்தில் புதனும் சனியும் இருப்பது சிறப்பான பலன்களைத் தரும். பொதுவாகவே சனி பகவான் மீனத்தில் இருப்பது விசேஷமாகும். புதன் இங்கு நீசமானாலும், சனி வலுவாக இருப்பதால் எதிலுமே திட்டமிட்டு செயல்படுவார்கள். கணக்கு பார்த்து செலவு செய்வார்கள். நெருக்கடியான நேரத்தில் கூட தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். தான தர்மங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். சமூகப் பிரச்னைகளில் தலையிட்டு தீர்வு காண முயற்சிப்பார்கள்.

பெரும்பாலும் சுயதொழிலில்தான் ஈடுபடுவார்கள். வேலை என்று பார்த்தாலும் ஒரு டீம் லீடர் மாதிரி பெரிய பதவியில்தான் அமர்வார்கள். மெரைன் எஞ்சினியர், பப்ளிகேஷன்ஸ், பல் டாக்டர், சரும நோய் நிபுணர், பட்டுப்பூச்சி வளர்ப்பு, கோழிப்பண்ணை என்று பல்வேறு துறைகளில் இறங்கி சாதிப்பார்கள். பிரபலங்களிடம் எப்போதும் நட்போடு இருப்பார்கள். பதற்றத்தன்மையுள்ள பங்குதாரர்களை தவிர்ப்பது நல்லது.

மேஷ ராசியான பதினோராம் இடத்தில் - பரணி நட்சத்திரத்தில் புதனும் சனியும் இணைந்திருந்தால் மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மைகள் நடக்கும். மத்திம வயதில் விட்ட குறை தொட்ட குறையாக நட்பு வந்துபோகும். அஸ்வினி நட்சத்திரத்திலோ, கிருத்திகை நட்சத்திரத்திலோ சனியும் புதனும் இடம்பெற்றிருந்தால் பணப் பற்றாக்குறை, சகோதர உறவுகளுடன் பகைமை, நிரந்தர வேலை இல்லாத நிலை, அதிகமாக செலவு செய்து கொண்டே இருத்தல், வாகன விபத்துகள் என்றெல்லாம் நடந்தேறும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பார்கள்.

ரிஷப ராசியான பன்னிரண்டாம் இடத்தில் சனியும் புதனும் இணைகின்றனர். பன்னிரண்டாம் இடமாக இருந்தாலும் யோகாதிபதி சுக்கிரனுடைய வீடு இது. எனவே, நன்றாகவே இருக்கும். படுக்கை அறைக்கு நிறைய செலவு செய்வார்கள். பிடித்தமானவர்களுக்கு செலவழிக்கத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். தவிர்க்க முடியாத செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். சில நேரங்களில் மன அமைதி இல்லாமல் சஞ்சலமாக இருப்பார்கள்.

இந்த புதனும் சனியும்  சேர்ந்த அமைப்பு என்பது பெரும்பாலும் நற்பலன்களையே அளிக்கக் கூடியதாகும். புத்தி பலமும், அதீத உடல் பலத்தையும் கொடுக்கக் கூடியதாகும். பெரும்பாலான ஸ்தானங்களில் நற்பலன்களையே தரும். எனினும், பகை பெற்றாலோ, இவ்விரு கிரகங்கள் நீசமடையும்போதோ சில எதிர்மறை பலன்களைத் தரும். உடலில் பலமிருந்தாலும், உழைக்க முடிந்தாலும், புத்தி அதற்கு ஒத்துழைக்காது. நிறைய யோசனைகள் தோன்றினாலும் அதைச் செயல்படுத்துவதில் சோம்பல் வந்து முன்னே நிற்கும்.

இதுபோன்ற சிற்சில பிரச்னைகளைக் களைவதற்கு ஆவராணி எனும் தலத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் அருளும் ஆபரணதாரிப் பெருமாளை தரிசித்து வாருங்கள்.  ஏழுதலை ஆதிசேஷன் மெல்ல தலைதாழ்த்தி எம்பெருமானைப் பணியும் விதம் பார்க்க ஆச்சரியம் பெருகும். தாமரை போன்ற கண்கள். அனந்தநாராயணப் பெருமாள் ஒரு கரம் தலையைத் தாங்க, மற்றொரு திருக்கரம் முழங்கால் வரை நீண்டிருக்கும் ஒய்யாரம் உயிரை நெருடும். நீருண்ட மேகம் போன்ற மேனி.

சிரத்தின் மேல் மணிமகுடம். காதுகளில் அசைந்தாடும் குண்டலம். பவளவாய் புன்முறுவல். சாந்த ஸ்வரூபியாக பெருமாள் சயனத் திருக்கோலத்தில் காட்சி தரும் அழகு காணுதற்கரியது. இப்பெருமாளை வேதவியாசரும், ப்ருகு முனிவரும் தலைப்பகுதியிலும், திருப்பாதத்தருகிலும் முறையே அமர்ந்து சேவிக்கிறார்கள். இத்தலம் நாகப்பட்டினம் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்