மூன்று முதல்வர்கள்



வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவிய வீடியோ அது. விபத்தில் சிக்கி உடல் இரண்டு துண்டுகளான நிலையில் ஒரு இளைஞர், ‘‘நான் பிழைப்பது கஷ்டம். என் உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யச் சொல்லுங்கள்’’ என தன்னைக் காப்பாற்ற வந்தவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுப்பார்.

அந்த இளைஞர், கடந்த மாதம் 16ம் தேதி இறந்த ஹரீஷ் நஞ்சப்பா. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் கெரேகவுடனஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ‘‘ஹரீஷின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. தன் வலியைப் பொருட்படுத்தாமல், அடுத்தவர்களின் வலியை உணர்ந்தார்’’ என நெகிழ்ச்சியோடு சொன்னார் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா. அதோடு நிற்காமல், எதிர்காலத்தில் ஹரீஷ் போன்றவர்கள் விபத்தில் சிக்கி மரணம் அடைவதைத் தடுக்க ஒரு திட்டமும் கொண்டு வந்திருக்கிறார்.

இதன்படி, விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும், முதல் 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கும். யாராலோ காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்படும் அப்பாவிகள் உயிர் காக்கப்படுவதை உறுதி செய்யவே இப்படி! சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்தால் நடவடிக்கை உண்டு.ஹரீஷ் பெயரில் அறிமுகமாகும் இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்தவர், ஹரீஷின் தாயார் கீதம்மா.

தலைநகர் பாட்னாவில் புதிய பேருந்து சேவைகளைத் துவக்கி வைக்க வந்தார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார். ஒரு பஸ்ஸின் உள்ளே ஏறி அதில் இருக்கும் வசதிகளைப் பார்த்தவர், அப்படியே அதில் உட்கார்ந்து அடுத்த நிறுத்தம் வரை பயணித்தார். விழா நடந்த காந்தி மைதானத்திலிருந்து பாட்னா ஸ்டேஷன் வரை டிக்கெட் ஐந்து ரூபாய். பஸ்ஸின் கண்டக்டர் ஒரு பெண். ‘இவர் முதல்வர் ஆயிற்றே’ என யோசிக்காமல், டிக்கெட்டைக் கிழித்து நிதிஷ் குமார் கையில் கொடுத்துவிட்டார் அவர்.

முதல்வர் தன் எல்லா பாக்கெட்களையும் தடவிப் பார்க்கிறார். அவரிடம் ஒரு பைசா கூட இல்லை. பக்கத்தில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரிடம் 5 ரூபாய் கடன் வாங்கி கண்டக்டரிடம் கொடுத்தார். இந்த சம்பவம் பற்றி கூச்சமின்றி தனது உரையிலும் குறிப்பிட்டார்.

கேரளாவின் கோழிக்கோடு அருகேயுள்ள நடக்காவு என்ற கிராமத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் பயிற்சி நிலையத் திறப்பு விழா. முதல்வர் உம்மண் சாண்டி திறந்து வைக்க வந்தார். பள்ளிக் குழந்தைகள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, அவர்களைத் தாண்டி மேடைக்கு நடந்தார். அப்போது குழந்தைகள் பக்கமிருந்து ‘உம்மண் சாண்டி’ என ஏதோ ஒரு மழலைக்குரல், முதல்வரை பெயர் சொல்லி அழைத்தது.

முதல்வர் நின்று திரும்பிப் பார்த்தார். கூப்பிட்ட குழந்தையை புன்னகையோடு அருகில் அழைத்தார். அது, இரண்டாம் வகுப்பு படிக்கும் ஷிவானி என்ற சிறுமி. ‘‘எங்க கிளாஸ்மேட் அமல்கிருஷ்ணா வீடு இல்லாமல் தவிக்கிறான். அவனோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. நீங்கதான் அவனுக்கு வீடு தரணும்’’என ஷிவானி முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறாள். அபய்சங்கர், ஜெகன், விஷ்ணுநாத் என இன்னும் மூன்று சிறுவர்களும் சேர்ந்துகொண்டு, அமல்கிருஷ்ணா குடும்பத்தின் கஷ்டத்தைச் சொன்னார்கள்.

அந்த மேடையிலேயே அமல்கிருஷ்ணா குடும்பத்துக்கு வீடு கட்ட 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, தன்னலமற்ற கோரிக்கை வைத்த குழந்தைகளை மேடைக்குக் கூப்பிட்டு பாராட்டினார்.- தமிழகத்துக்கு இதெல்லாம் அதிசயம். எளிய மனிதனின் நெகிழ வைக்கும் மரணத்தில் முதல்வர் தூக்கம் தொலைப்பாரா? முதல்வர் பஸ்ஸில் போவதும், அவரையே டிக்கெட் எடுக்கச் சொல்வதும், முதல்வரை ஒரு குழந்தை பெயர் சொல்லி அழைப்பதும் இங்கே நிகழ்ந்திருந்தால்... ‘ஸ்டிக்கர் பாய்ஸ்’ என்ன செய்திருப்பார்கள்?

- எஸ்.உமாபதி