கொட்டப் போகுது கோடை மழை!



‘வெதர்மேன்’ அலர்ட்

ஸ்பைடர்மேன், பேட்மேன், சூப்பர்மேன் போல இவரும் புகழ்பெற்றுவிடுவார் போல. சென்னையை மழை உலுக்கியெடுத்த சமயத்தில் செம ஹிட் ஆகிவிட்டார் இந்த ‘வெதர்மேன்’. கனமழை வரும் என ஒரு மாதத்துக்கு முன்பே சொன்னதில் தொடங்கி, எவ்வளவு பெய்யும், எவ்வளவு நேரம் பெய்யும் என இவர் தன் வலைப்பதிவில் தெரிவித்த வானிலை அறிக்கை அத்தனையுமே துல்லிய ரகம். ‘மழை போலவே இந்த வருடம் வெயிலும் வாட்டி எடுக்கும்’ என சென்னை மக்கள் பயந்திருக்கும் வேளையில் அதே வெதர்மேன் சொல்கிறார்... ‘‘மே மாதம் சென்னைக்கு மழை மாதம்’’ என்று!

‘‘என் பேர் பிரதீப்ஜான்ங்கறது எனக்கே மறந்துபோச்சு. அந்தளவு என்னோட ‘tamilnaduweatherman’ங்கற ப்ளாக் பேரே எனக்கு நிலைச்சுடுச்சு!’’ என புன்னகையோடு துவங்குகிறார் பிரதீப்.‘‘இந்த ஆண்டு வெயில் அதிகமா இருக்கும்னு மக்கள் நினைக்கிறது சரிதான். குறிப்பா, மார்ச்லயும் ஏப்ரல்லயும் வழக்கத்தைவிட ஒண்ணு முதல் ரெண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகம் அடிக்கும். பொதுவா, எல் நினோ வந்திட்டுப் போன மறு வருஷம் வெயில் அதிகம் இருக்கும். இதுக்கு துல்லியமான காரணம் சொல்ல முடியாது.

காலம்காலமா இப்படித்தான் நடக்குது. உதாரணத்துக்கு, 1997ம் வருஷம் எல் நினோ காலம். அதுக்கு அடுத்த ஆண்டுல செம வெயில். அதைத் தாங்க முடியாம நிறைய பேர் இறந்து போனாங்க. அது மாதிரி 2002ல எல் நினோ வந்துச்சு. 2003ல வெயில் 45 டிகிரி அடிச்சது. அதுதான் இதுவரையிலான தமிழ்நாட்டின் உச்சபட்ச வெயில்!

அதே அளவு இந்த வருஷமும் இருக்கும். அதாவது, நார்மலை விட கூடுதலா அடிக்கும். இந்த ஜனவரியில இருந்து வெயிலின் அளவை வாட்ச் பண்ணிட்டு இருக்கேன். போன வருஷம் இதே மாதங்கள்ல இருந்ததுக்கும் இந்த வருஷம் இருக்குறதுக்கும் ஒப்பிட்டுப் பார்த்தா ஒரு டிகிரி கூடுதலா இருக்கு. இது ஏப்ரல்ல ரெண்டு டிகிரியா உயரும்!’’ என்கிறார் பிரதீப் ஜான்.

இவர் வார்த்தைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், கடந்த அக்ேடாபரில் ‘குங்குமம்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்திற்கு காற்றழுத்தத் தாழ்வால் வழக்கத்தைவிட அதிக மழை இருக்கிறது’’ என கணித்துச் சொன்னவர் இவர்தான். அதுவரை வெறும் எழுநூறு பேர் மட்டும் லைக் செய்திருந்த இவரது பிளாக், சென்னை மழை சமயத்தில் 72 ஆயிரம் லைக்ஸை தொட்டது. மழையன்று மட்டும் ஏழு லட்சம் பேர் இவரது பிளாக்கை பின்தொடர்ந்து இருக்கிறார்கள்.

‘‘மார்ச், ஏப்ரல், மே மாசங்களை நாம வெயில்காலம்னு சொன்னாலும் அதை ‘ப்ரீ மான்சூன் டைம்’... அதாவது மழைக்கு முந்தைய மாதங்கள்னுதான் விஞ்ஞானம் சொல்லுது. ஸோ, அந்தக் காலங்கள்ல மழை சகஜம்தான். மார்ச், ஏப்ரல்ல தமிழகத்தின் உள் மாவட்டங்கள்ல ஒரு மழை பெய்யும். மாம்பழம் விளையற இடங்கள்ல பெய்யிறதால அதை நாம ‘மேங்கோ ஷவர்ஸ்’னு சொல்ேவாம். இந்த வருஷம் ஓவர் வெயில் காரணமா அதெல்லாம் கூட குறைவாதான் பெய்யும்.

ஆனா, மே மாசம் அந்த நிலை அப்படியே மாறும். இடி, மின்னல்னு டெர்ரரா மழை பெய்ய வாய்ப்பிருக்கு. பொதுவா மே மாசத்துல அரபிக் கடல்லயோ, வங்காள விரிகுடாவுலயோ புயல் உருவாகுறதும், அது நமக்கு சம்மந்தமே இல்லாம வேற எங்கேயோ நகருறதும் சகஜம். ஆனா இந்த வருஷம் அந்தப் புயல்கள்ல ஒண்ணு சென்னைக்கோ தென் தமிழ்நாட்டுக்கோ விசிட் அடிக்கலாம்.

கடந்த 2010ல மே 19ம் தேதிதான் ‘லைலா’ புயல் வந்துச்சு. அப்படி ஒண்ணை நாம இந்த வருஷம் எதிர்பார்க்கலாம். புயலோட போக்கை கணிக்கிறது ரொம்பக் கஷ்டம். அதனால கண்டிப்பா புயல் வரும்னு உறுதியா சொல்ல முடியாது. ஆனா, மழை கட்டாயம் இருக்கும். சென்னை மக்கள் தயாராகிக்கலாம்’’ என்கிறவர் அடுத்து சொல்லும் தகவல் கிரிக்கெட் ரசிகர்களின் பல்ஸை எகிற வைப்பவை!

‘‘டி20 உலகக் கோப்பை தொடங்கிடுச்சு. இந்த மேட்ச்கள் வடஇந்திய நகரங்கள்லதான் அதிகமா நடக்குது. இதுல, நிறைய மேட்ச் வாஷ் அவுட்டாகலாம். ஏன்னா, மத்திய தரைக்கடலிலிருந்து பாகிஸ்தான் வழியா வர்ற மேகங்களால அதிகளவு மழை பெய்யிற காலம் இது! இதை, ‘வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்’னு சொல்வோம்.

அதே மாதிரி அரபிக் கடல்ல இருந்து வர்ற காற்றும், வங்காள விரிகுடாவுல இருந்து வர்ற காற்றும் ஒண்ணுக்கொண்ணு மோதி இந்தியாவின் மத்திய பகுதியில மழையை ஏற்படுத்தும். இந்த டைம்ல மழையோ அல்லது கன மழையோ பெய்ய சான்ஸ் நிறைய! இந்த வானிலை முன்னறிவிப்பை எல்லாம் எப்படி கவனிக்காம விட்டாங்கனு தெரியலை. இதுவே, தென்னிந்தியாவுல அதிக மேட்ச்கள் வச்சிருந்தா பாதிப்பு இருந்திருக்காது!’’ என்கிறார் அவர்.
‘‘கடந்த 2010ல மே 19ம் தேதிதான் ‘லைலா’ புயல் வந்துச்சு. அப்படி ஒண்ணை நாம இந்த வருஷம் எதிர்பார்க்கலாம்.’’

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்