நினைவோ ஒரு பறவை



ஒலியும் ஒளியும்
நான் எல்லாவற்றையும்
பால்கனியிலிருந்து
பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறேன்!
- எழுத்தாளர் பேயோன்

எங்கள் கிராமத்திற்கு தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அப்போது நான் சிறுவனாயிருந்தேன். முப்பது வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி என்பது கிராமத்தில் இருப்பவர்களுக்கு நெல்லுச்சோறு மாதிரி. நகரத்திற்கு யார் வீட்டிற்காவது விருந்துக்குச் செல்கையில் மட்டும்தான் அதைக் காண முடியும்.

எங்கள் கிராமம் பட்டு நெசவைத் தன் தொழிலாகக் கொண்டிருந்தது. அதிகாலையில் எழுந்து தெருக்களில் பட்டு நூலை, நீளமான கட்டைகளில் படர விட்டு, கஞ்சி போட்டு சிக்கெடுப்பார்கள். ‘பாவு போடுதல்’ என்று இதற்குப் பெயர். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என்று வானவில் படுத்துக் கிடப்பது மாதிரி தெருவே பட்டு நூல்களின் வண்ணங்களால் வசீகரமாக இருக்கும்.

நகரத்திலிருந்து எங்கள் கிராமத்திற்குப் புதிதாக வீடு கட்டிக்கொண்டு ஒரு குடும்பம் வந்தது. அவர்களுக்கும் தறி நெய்தல்தான் தொழில். கொஞ்சம் வசதியான குடும்பம். ஏழெட்டு பட்டுத் தறிகள் அவர்கள் வீட்டில் ‘தடக்... தடக்...’ என்று சத்தம் எழுப்பிக்கொண்டு இருக்கும்.

ஒருநாள் மாலையில் அந்த வீட்டின் ஓட்டுக் கூரையின் மீது நான்கைந்து ஆட்கள் ஏறி நின்று எதையோ கட்டிக்கொண்டு இருந்தார்கள். சுமார் நூறடி நீளத்தில் இரும்புக் குழல், மேலே சிதறல் சிதறலாய் அலுமினியத் துண்டுகள். அப்புறம்தான் அதற்குப் பெயர் ‘ஆன்டெனா’ என்றும், அவர்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது என்றும் அறிந்தோம். அதைப் பார்க்க சிறுவர்கள் நாங்கள் அவர்கள் வீட்டு ஜன்னலை முற்றுகையிடுவோம். அந்த வீட்டுப் பையன் எங்களைத் துரத்துவான். அவன் உள்ளே செல்லும் நேரத்தில் மீண்டும் ஜன்னலுக்கு வருவோம். ‘படார்’ என்று ஜன்னல் கதவு அறைந்து சாத்தப்படும்.

அந்தப் பையனை நண்பனாக்க நாங்கள் நாலாவிதமான தந்திரங்களையும் கையாள நேர்ந்தது. கூழாங்கற்கள், டாமா கோலி, சிட்டுக் குருவி முட்டை, தீப்பெட்டிப் படங்கள் ஒட்டி வைத்த நோட்டு, வாழை மட்டைக்கு நடுவில் கண்ணாடியைப் பொருத்திச் செய்த லென்ஸ், குப்பைகளில் பொறுக்கிய பட்டு ஜரிகைத் துண்டுகள், ஈசல் போட்டு வறுத்த பொரி அரிசி என எதை லஞ்சமாகக் கொடுத்தாலும் வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டு, ‘‘நாளைக்குப் பார்க்கலாம், வீட்ல கேட்கணும்’’ என்பான்.

கடைசி அஸ்திரமாக எனக்கு மிகவும் ப்ரியமான என்னுடைய அழகிய பழுப்பு நிற நாய்க்குட்டியை அவனுக்குக் கொடுக்க நேர்ந்தது. புன்னகையுடன் வாங்கிக்கொண்டு, ‘‘நீ மட்டும் சாயந்தரம் வா’’ என்றான்.பின்புக்கும் பின்பு பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் வீட்டில் காசு வாங்கிக்கொண்டு உள்ளே விட்டார்கள். படம் பார்க்க நாலணா, ‘ஒலியும் ஒளியும்’ பார்க்க பதினைந்து காசுகள். ‘ஒலியும் ஒளியு’மிற்குப் பெரும் கூட்டம் அலைமோதும். கூடம் நிரம்பி, நின்று பார்க்கும் இடமும் இல்லை என்றால் கதவை அடைத்துவிடுவார்கள்.

எங்கள் சேமிப்புகள் இப்போது குச்சி ஐஸுக்கும் மாங்காய்த் துண்டங்களுக்கும் செலவாவதில்லை.அப்போது எல்லாம் தூர்தர்ஷன் ஒன்று மட்டுமே. மற்ற சேனல்கள் கிடையாது. கூடத்தின் இரண்டு பக்கமும் தறி மேடைகளும், குழிகளும் இருக்க, ஓரமாய் தொலைக்காட்சிப் பெட்டி அமர்ந்திருக்கும். எல்லோரும் உட்கார்வதற்காக தறி நூலைச் சுருட்டிக் கட்டுவார்கள். ‘‘படம் போட்டுருவாங்கக்கா, சீக்கிரம் சுத்துங்க’’ என்போம். ‘‘பேசாம இருந்தா பாருங்க... இல்லைன்னா காசை வாங்கிட்டு வெளியில போங்க’’ என்பார்கள். அமைதியாகி விடுவோம்.

பின்பு தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கற்பூரம் ஏற்றிக் காட்டி திருஷ்டி கழிப்பார்கள். கண்ணாடிப் பிள்ளையார் மாதிரி தொலைக்காட்சி மாறிவிடும். கோயில் கதவு திறப்பது போல அதன் இரு பக்கக் கதவுகளும் திறக்கும். முதல் போணியாக எங்கள் நண்பர்களில் செந்தில் காசு தருவான். ராசியான கையாம். அவனது கறுத்த கைகளில் கர்வம் குடியேறும்.

 நாங்கள் சுருண்டு வளைந்த கைகளால் அடுத்தடுத்து காசு கொடுப்போம். படத்திற்கு நடுவில் விளம்பரம் மற்றும் செய்தி வருகையில் தொலைக்காட்சியை அணைத்து விடுவார்கள். கரன்ட் ஆகிவிடுமாம். திரும்பவும் சரியாகப் படம் தொடரும் நேரத்தில் போடுவார்கள். விளம்பரம் முடியும் நேரம் எப்படி துல்லியமாக அவர்களுக்குத் தெரியும் என்பது ஆச்சரியமாக இருக்கும். ஒரு நொடி முன்பின் இருக்காது. அவர்கள் தொலைக்காட்சியைப் போடும்போது, ‘திரைப்படம் தொடர்கிறது’ என அறிவிப்பு வரும்.

மறுநாள் பள்ளியில், நேற்று பார்த்த படத்தின் கதையே முதல் பாட வேளையை
அபகரித்துவிடும். ஊருக்குப் பொதுவாய் பஞ்சாயத்துத் தொலைக்காட்சி வரும் வரை இந்த அட்டகாசம் தொடர்ந்தது. இன்று ஒரே வீட்டில் மூன்று தொலைக்காட்சிப் ெபட்டிகள் இருக்கின்றன. ப்ளஸ் மைனஸ் பூஜ்யம் என்று திருப்தியுறாமல் ரிமோட் பட்டன்கள் சூன்யத்தில் அலைகின்றன. கதை சொல்லும் பாட்டிகளை திண்ணைக்கு அனுப்பி விட்டு கூடத்தில் அமர்ந்து பொய் சொல்கின்றன தொலைக்காட்சிப் பெட்டிகள். அலமாரியில் தூசு படியும் புத்தகங்களின் வரிகளில் கண்ணாடி பிம்பங்கள் கத்தி பாய்ச்சுகின்றன. தொலைக்காட்சி ஒரு கறுத்த நிழலைப் போல் நம்மைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

முப்பது
வருடங்களுக்கு முன்பு
தொலைக்காட்சி என்பது
கிராமத்தில்  இருப்பவர்களுக்கு
நெல்லுச்சோறு மாதிரி.
நகரத்திற்கு
யார்
வீட்டிற்காவது  விருந்துக்குச்
செல்கையில்
மட்டும்தான் அதைக்
காண முடியும்.

கதை
சொல்லும்
பாட்டிகளை
திண்ணைக்கு அனுப்பி விட்டு
கூடத்தில்
அமர்ந்து
பொய் 
சொல்கின்றன தொலைக்காட்சிப் பெட்டிகள்.
அலமாரியில்
தூசு படியும் 
புத்தகங்களின் வரிகளில்
கண்ணாடி
பிம்பங்கள் கத்தி பாய்ச்சுகின்றன.

(பறக்கலாம்...)

நா.முத்துக்குமார்

ஓவியங்கள்: மனோகர்