எது குறும்புத்தனம்? எது ஹைபர் ஆக்டிவிட்டி?



‘‘எதுக்குத்தான் சம்மர் ஹாலிடேஸ் வருதோ! பசங்க சேட்டை தாங்க முடியலை!’’ - இதுதான் இன்றைய பெற்றோரின் அல்டிமேட் புலம்பல்! இந்தக் குறும்புத்தனத்தை எ.டி.ஹெச்.டி எனும் ‘ஹைபர் ஆக்டிவிட்டி’ பிரச்னையாக நினைத்து மனநல மருத்துவர்களை நாடும் பெற்றோர் அதிகரித்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. நார்மல் குழந்தைகளை மனப்பிரச்னைக்குள் இழுத்துவரும் இந்த நடைமுறை பற்றிப் பேசினாலே ஆதங்கம் பொங்குகிறார்கள் நிபுணர்கள்!

‘‘மனநோய் பற்றி அரைகுறையா விஷயம் தெரிஞ்சிக்கறதால ஏற்படுற குழப்பம் இது!’’ எனத் துவங்குகிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன். ‘‘சமீபத்துல, ஒரு செய்தி படிச்சேன். அமெரிக்காவுல தன்னுடைய எட்டு வயசு மகனை குறும்பு செய்யிறான்ங்கற ஒரே காரணத்துக்காக மருத்துவமனையில விட்டுட்டுப் போயிட்டாங்க ஒரு அம்மா. அவங்களால இப்படிப்பட்ட குழந்தையைப் பார்த்துக்க முடியலையாம். நம்மூர்ல சேட்டை பண்ற குழந்தையைக் கைவிடுறதில்ல.



ஆனா, அறைக்குள்ள தனியா கட்டிப் போடுறதும், அடிச்சு துன்புறுத்துறதும் அதிகமா நடக்குது. இதனால, குழந்தைங்க மாற மாட்டாங்க. ஆனா, இதெல்லாம் அவங்களுக்குள்ள வேறொரு பயத்தையோ, அழுத்தத்தையோ ஏற்படுத்தி பின்னால பாதிப்பை உண்டாக்கலாம்!’’ என்கிறார் அவர் வேதனையாக!

சரி, சில குழந்தைகள் ஏன் அதிகம் குறும்பு செய்கிறார்கள்? ‘‘குழந்தைகள் குறும்பு பண்ணாம... பின்னே பெரியவங்களா குறும்பு பண்ணுவாங்க? குறும்பு பண்ணினாதான் அது குழந்தை!’’ எனச் சிரித்தபடி ஆரம்பிக்கிறார் சென்னை, ஐசிஎல் இன்டர்நேஷனல் ஸ்கூல் முதல்வர் சுதா மகேஷ்.

‘‘குழந்தைங்க பொதுவா, பொழுது போகலைன்னாதான் அதிகமா குறும்பு பண்ண ஆரம்பிப்பாங்க. எப்பவும் படி படினு சொன்னாலும், அவங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை தொடர்ந்து வலுக்கட்டாயமா செய்யச் சொன்னாலும் குறும்பு பண்ணத் தோணும். அதை மாத்திட்டாலே சேட்டை குறைஞ்சிடும். முதல்ல, குழந்தைகளுக்கு என்ன பிடிக்குதுன்னு பெற்றோர் தெரிஞ்சிக்கணும். அவங்ககூட பாடணும், ஆடணும், கதை சொல்லணும். அப்போதான், அவங்க எரிச்சல் இல்லாம எனர்ஜியா இருப்பாங்க. குறும்பு பண்ற எண்ணமும் வராது!’’ என்கிறார் அவர் தெளிவாக!  

இதே கருத்தை ஆமோதிக்கும் யுனிசெஃப் கல்வி அலுவலரான முனைவர் அருணா ரத்தினம், தன் அனுபவத்தோடு இதனை இணைக்கிறார். ‘‘கல்வின்னாலே மூளை சார்ந்ததுதான்னு நினைக்கிற சமூகம் இது. மூளைக்கான வேலையையே தொடர்ந்து கொடுக்கும்போது, பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற குழந்தையைக் கிள்ளுறது, அடிக்கிறதுனு சேட்டைகள் பண்ணிட்டே இருப்பாங்க. இதைப் பார்த்துட்டு ஆசிரியர்களும் ‘அந்தப் பையனுக்கு கவனம் பத்தலை. பாடத்தை கவனிக்காம விளையாடிக்கிட்டே இருக்கான்’னு சொல்லிடுவாங்க.



பொதுவா பையன்கள்பத்திதான் இந்தப் புகார் நிறைய வரும். அவங்களை அடக்கி வைக்க முடியாது. காரணம், அவங்க உடல் செயல்பாட்டுத் திறன் அப்படி. இதை பெற்றோர் புரிஞ்சிக்கணும். அப்புறம், இப்போ பல பள்ளிகள்ல விளையாட்டு மைதானம் இல்ல. இருந்தாலும் குழந்தைகளை விளையாட விடுறதில்ல. அப்போ எப்படி குழந்தைங்க ஆக்டிவ்வா இருப்பாங்க?’’ எனக் கேட்கிறார் அவர்.

‘‘ஒரு குழந்தை உள்ள வீட்டில் சேட்டைகள் அதிகமாகத்தான் இருக்கும்’’ என இதில் இன்னொரு கோணம் பிடிக்கிறார் தேவநேயன். ‘‘ஒரே குழந்தைனு செல்லம் அதிகமா கொடுத்துடுறாங்க. கேட்கிறதெல்லாம் வாங்கிக் கொடுக்கறாங்க. பாதுகாப்பா வளர்க்கிறாங்க. ‘அதைச் செய்யாதே... இப்படி இருக்காதே’னு கண்டிக்கவும் செய்யறாங்க. ஆனா, சரியான சமயத்துல நெறிப்படுத்தத் தவறிடுறாங்க. இதே இன்னொரு குழந்தை இருந்தா பகிர்தல் அதிகமா நடக்கும்.

ஒருத்தரைப் பார்த்து இன்னொரு குழந்தை பழகும். ஆனா, தனியா வளரும் குழந்தைகள் டி.வி, ஊடகம், கம்ப்யூட்டர்னு சுற்றுப்புறத்தில் இருந்துதான் கத்துக்கறாங்க. வன்முறையைத் தூண்டுற விளையாட்டுகள்தான் நிறைய விளையாடுறாங்க. இதிலிருந்து அவங்க கவனத்தை திசை திருப்பணும். டி.வி பார்க்கக் கூடாதுனு தடை போடுறதைவிட, அதற்கு பதிலா அவங்களோட சேர்ந்து நல்ல விஷயங்களைப் பார்க்க பெற்றோர் பழகணும். எது யதார்த்தம், எது நிஜம்னு எடுத்துச் சொல்லணும். எப்பவும் பாசிட்டிவா பேசி அவங்களை சரிப்படுத்தினாலே சேட்டை குறைஞ்சி சிறப்பா வந்துடுவாங்க!’’ என்கிறார் அவர் முடிவாக!  

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவரான கார்த்திக், ‘‘சில குழந்தைகளுக்குத்தான் இயல்பா படிப்புல ஆர்வம் இருக்கும். சிலர் விளையாட்டுலதான் ஆர்வமா இருப்பாங்க. அவங்களை அப்படியே கொண்டு போகணும். ஃபிசிக்கல் செயல்பாடுகள் நல்லாயிருந்தா ஒரு கட்டத்துல மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாகிடும். ஆனா, நிறைய பெற்றோர், குழந்தை படிக்கலைன்னாலே ஏ.டி.ஹெச்.டி பிரச்னைதான்னு தவறா புரிஞ்சிட்டு வர்றாங்க.

அப்படிப்பட்ட பேரன்ட்ஸுக்குத்தான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டியிருக்கு. பொதுவா, ஹைபர் ஆக்டிவிட்டி குழந்தைங்க எந்த ஒரு விஷயத்திலும் பத்து நிமிஷத்துக்கு மேல கவனம் செலுத்த மாட்டாங்க... அது விளையாட்டா இருந்தாலும் சரி! படிப்புல கவனம் செலுத்தாம ரெண்டு மணி நேரம் விளையாடுற குழந்தையை எப்படி ஹைபர் ஆக்டிவிட்டினு சொல்ல முடியும். அதான், ரெண்டு மணி நேரம் கவனமா விளையாடுதே!

பொதுவா, எந்தக் குழந்தையுமே ஏழு வயசு வரை துறுதுறுனுதான் இருக்கும். அதுவரை ஹைபர் ஆக்டிவிட்டி பத்தி கவலைப்படவே கூடாது. அதுக்குப் பிறகு தன்னையும் காயப்படுத்தி மற்றவங்களுக்கும் பிரச்னை ஏற்படுத்தினா டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகலாம்!’’ என்கிறார் அவர் அழுத்தமாக!

கோடை விடுமுறை ஆரம்பித்திருக்கும் இந்நேரத்தில் நிச்சயம் குழந்தைகளின் குறும்புத்தனம் இருக்கத்தான் செய்யும். அவர்களின் பொழுதுகளை எப்படி பயனுள்ளதாக்குவது? நிபுணர்கள் தந்த ஆலோசனைகள்.

* வாரம் ஒரு முறை அருங்காட்சியகம், அறிவியல் மையம், நூலகம் என எங்காவது பயனுள்ள இடங்களுக்கு அழைத்துப் போகலாம்.
* அருகிலுள்ள குழந்தைகளின் நண்பர்களை வைத்து ஒரு டீம் உருவாக்கி நாடகம், நடனம், கதை சொல்லுதல் என செய்யச் சொல்லலாம்.
* டீ போடுவது, காய்கறி நறுக்குவது, தோசை சுடுவது, வெஜிடபிள் சாலட் தயாரிப்பது என சின்னச்சின்ன வேலைகளைச் செய்முறையாகக் கற்றுக் கொடுக்கலாம். பிறகு, அவர்களைச் செய்யச் சொல்லலாம்.
* துணிகளை அடுக்கி பீரோவில் வைப்பது, புத்தகங்களை ஒழுங்குபடுத்துவது, சாப்பிடும்போது தண்ணீர் எடுத்து வைக்கச் சொல்வது, தட்டுகளைக் கழுவுவது, அறையைப் பெருக்குவது, தோட்ட வேலை (தோட்டம் இல்லாவிட்டால் மாடித் தோட்டம்) போன்ற வேலைகளை செய்யச் சொல்லி விடுமுறைக்குப் பிறகும் வழக்கப்படுத்தலாம்.
* யோகா, நீச்சல், அத்லெட்டிக் என அவர்களின் விருப்பமான விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பலாம்.

- பேராச்சி கண்ணன்