நடிகர் சங்கத் தேர்தல் ரகசியம்!



நான் உங்கள் ரசிகன் - மனோபாலா

‘யாரடி நீ மோகினி’ ஷூட்டிங்கில் தனுஷ், ‘‘ஆறு மணி வரைதான் இருப்பேன்!’’னு சொன்னதும் எனக்கு ஆச்சரியம். ‘‘என்ன தம்பி? அப்படி என்ன அவசரம்... எங்கே கெளம்புறீங்க?’’னு கேட்டேன். தனுஷும் சீரியஸா, ‘‘ஆறு மணிக்கு ஜிம்முக்குப் போகணும்’’னார். எனக்கு சிரிப்பு வந்திடுச்சு. ‘‘நம்ம ரெண்டு பேருக்கும் எதுக்குப்பா ஜிம்மு?’’னு கேட்டேன். எல்லாரும் சிரிச்சிட்டாங்க.



இது வெறும் காமெடி இல்ல... தனுஷை ‘புரூஸ் லீ’னு எல்லாரும் சொல்றதுக்குக் காரணமே அவரோட ஃபிட்னஸ் பாடிதான். இயக்குநர்கள் எவ்வளவுதான் திறமையா வேலை வாங்கினாலும், அதுக்குப் பொருத்தமான நடிகன்தான் ஒரு கேரக்டருக்கு உயிர் கொடுக்க முடியும். ‘ஆடுகளம்’ அப்படி ஒரு உதாரணம். துல்லியமா கவனிச்சீங்கன்னா... அந்தப் படத்துல கோழிச் சண்டைக்கு முன்னாடி, எதிராளியின் கோழியை ஷார்ப்பா ஒரு லுக் விடுவார் தனுஷ். அந்த ஒரு ஷாட்டே கோடி ரூபாய் பெறும். அப்படி ஒரு இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரர் தனுஷ். அவருக்கு தேசிய விருது கிடைச்சதுல ஆச்சரியமே இல்ல.

‘மாப்பிள்ளை’ல இருந்து அவரோட படங்கள்ல நானும் இருப்பேன். என்னோட நடிப்பை ரொம்பவே ரசிச்சுப் பாராட்டுவார். அவரோட இந்த பரந்த குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு திறமையான நடிகர் என்பதையும் தாண்டி, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’னு தரம் வாய்ந்த படங்களை எடுக்கறார். நல்ல இயக்குநர்களைக் கண்டுபிடிச்சிடுறார். சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய லைஃப் கொடுத்து மேல கொண்டு வர்றார்.

விஜய்சேதுபதிக்கு கொஞ்சம் டல் அடிச்சதும், ‘நானும் ரவுடிதான்’ கொடுத்து அவருக்கும் சூப்பர் ஹிட் கொடுக்கறார். தன்னோட பேனரை அவ்வளவு அழகா செதுக்கி எடுத்துட்டுப் போயிட்டிருக்கார். தனுஷை எவ்வளவு பாராட்டுறேனோ... அவ்வளவு ஐஸ்வர்யா தனுஷையும் பாராட்டலாம். செல்வராகவனோட உதவியாளரா சேர்ந்தது மட்டுமில்லாமல், ஒரு இயக்குநரா ஈடுபாட்டோடு அவங்க உழைக்கிறதை கண்கூடாக ‘வை ராஜா வை’ படத்தில் பார்த்தேன்.

ரெண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் இயக்கத்தில் கவனம் செலுத்திட்டிருக்காங்க. யார் யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்காங்க. ‘‘நான் நல்லா டைரக்ட் பண்றேனா சார்?’’னு ‘வை ராஜா வை’ ஷூட்டிங்ல கேட்டுக்கிட்டே இருப்பாங்க. ‘‘சூப்பர் மேடம்’’னு சொல்லுவேன். ‘‘இந்த வார்த்தையை அப்படியே எங்க அப்பாகிட்டேயும் சொல்லுங்க சார்’’னு சொல்லுவாங்க. ‘‘சொல்றேன்மா... ஆனா, அவர் மொதல்ல என் போனை எடுக்கணுமே!’’னு கலாய்ப்பேன்.



 ‘வை ராஜா வை’க்காக ஏழு நாட்கள் ராயல் கரிபீயன் க்ரூஸ் கப்பல்ல பயணம் செய்ய வேண்டியிருந்தது. சிங்கப்பூர்ல ஆரம்பிச்சு, ஹாங்காங், வியட்நாம்னு பல இடங்கள்ல சுத்திட்டு மறுபடியும் சிங்கப்பூருக்கே வந்து சேரும் பிரமாண்டமான ஏழு நட்சத்திர ஹோட்டல் போன்ற சொகுசுக் கப்பல் அது. அதில் 14 மாடி இருக்கும்.  ‘‘உனக்கு இந்த வயசுல க்ரூஸ் ட்ரிப் கேட்குதா?’’னு என் பையன் கூட என்னைக் கிண்டல் பண்ணினான். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்த ஐஸ்வர்யாவுக்கு நன்றியை சொல்லிக்கறேன். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் எல்லாரும் அதில் பயணப்பட்டோம்.

அந்தக் கப்பல்ல ‘ருலே’னு ஒரு கேம் உண்டு. பல ஆங்கிலப் படங்கள்ல பார்த்த அந்த கேமை நேரடியா அன்னிக்குத்தான் பார்த்தேன். அந்த க்ரூஸ்ல பல கோடி ரூபாய் பந்தயம் வச்சு, அந்த கேமை ஆடுறாங்க. இதுல முக்கியமான சீக்ரெட்... அந்த விளையாட்டை கௌதம் கார்த்திக்கும், விவேக்கும் அங்கேயே கத்துக்கிட்டாங்க. கப்பல்ல போகும்போதே ஏழு நாளைக்குள்ள கத்துக்கிட்டு ரெண்டு பேருமே ஒரு லட்ச ரூபாய் வரை ஜெயிச்சாங்க. மறக்க முடியாத அனுபவங்கள்.

எனக்குப் பிடிச்ச நடிகர்கள்ல விஷாலும் ஒருத்தர். அவர் தயாரிப்பாளர், நடிகர் சங்கப் பொறுப்புல இருக்கார்ங்கறதெல்லாம் காரணமில்ல. ரொம்ப தன்மையான தம்பி. ஒரு குறிக்கோள் எடுத்துட்டா கடைசி வரை அதுல ஸ்ட்ராங்கா இருப்பார். திருட்டு டி.வி.டி விஷயத்துல கூட அவரோட துணிச்சல் எல்லாராலும் பாராட்டப்பட்டுச்சு. விஷால் ஒரு முடிவெடுத்தா, அது மிகச் சரியானதா இருக்கும். உதாரணத்துக்கு, நடிகர் சங்கத் தேர்தல் நடக்குறதுக்கு ரொம்ப நாள் முன்னாடி எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்துக்காக உண்ணாவிரதம் இருந்தோம். அப்போ விஷால் கேட்டார்... ‘‘என்னண்ணே! நடிகர் சங்கத்துல இருந்த கட்டிடத்தையே காணோம்? என்னாச்சு?’’னு.

‘‘இடிச்சிட்டாங்க தம்பி’’னு நான் சொன்னேன். சாதாரண தகவலா சொன்னேன். உடனே கார்த்தி, பொன்வண்ணன், நாசர், விஷால், கருணாஸ்னு அஞ்சு பேரும் சேர்ந்து அந்த இடத்திலேயே தனியா போய் உட்கார்ந்து ஒரு முடிவுக்கு வந்தாங்க. விஷால்கிட்ட விவேகத்தோட சேர்ந்த வேகம் இருந்தது. ‘‘கட்டிடம் என்னாச்சுனு மொதல்ல கேள்வி கேட்போம்’’னு சொன்னாங்க. அவங்க கேள்வி கேக்க நானும் நிறைய முறை அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொடுத்தேன். ஆனா, பழைய தலைமை சொன்ன விளக்கம் எதுவும் இவங்களுக்குத் திருப்தி தரல.

அவசரப்படக்கூடாதுன்னுதான் மூணு மாசம், ரெண்டு மாசம்னு டைம் கொடுத்துப் பார்த்தாங்க. அப்படியே ரெண்டு வருஷம் பொறுமையா இருந்தாச்சு. அப்புறம்தான் நடிகர் சங்கத்  தேர்தல் வேணும்னு ஒரு முடிவுக்கு வந்தாங்க. அப்போ எல்லாரும் விஷாலை பயமுறுத்திட்டாங்க. ‘‘நடிகர் சங்கத் தேர்தல் சாதாரணமானது இல்ல. நீங்க சட்டசபை தேர்தல்ல கூட நின்னு ஜெயிச்சு வந்துடலாம். ஆனா, நடிகர் சங்கத் தேர்தல் பெரிய ஆபத்தை உண்டு பண்ணும்’’னு எச்சரிச்சாங்க. ஆனா, விஷால் கவலையே படல. உடனே ஒரு முடிவெடுத்து ஒரு பிரமாதமான அணியை ஃபார்ம் பண்ணினார். இப்போ நான் இருக்கற கட்சித் தலைமை சொன்னதால நாங்கள்லாம் கூட அதில் இருந்து விலகிட்டோம்... ஆனா, விஷால் பொறுமையா இருந்தார்.

ஒவ்வொருத்தரையும் அரவணைச்சார். மெல்ல அவரோட அணியை முன்னுக்குக் கொண்டு வந்தார். இதெல்லாம் உங்களுக்கே தெரியும். இந்தியாவே கவனிக்கற ஒரு தேர்தலா நடிகர் சங்கத் தேர்தல் இருந்தது. அதில் விஷால் ஜெயிச்சது மனசுக்கு ரொம்ப ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுத்துச்சு.

பல மறக்க முடியாத தருணங்கள் எனக்கும் விஷாலுக்கும் இருக்கு. சொல்லப் போனா நாங்க நெருக்கமானதே அப்படியொரு தருணத்துலதான். நான் தளர்ந்து போய் இருந்த நேரங்கள்ல, ‘‘நான் பார்த்துக்கறேன் சார்’’னு தைரியம் கொடுத்தவர் விஷால். இவரோடு சேர்ந்த ஒரே காரணத்துக்காக சில தடங்கல்கள் எனக்கு வந்துச்சு. அந்தத் தடங்கல்களை மீறி, ‘விஷால் என்னைக் காப்பாத்துவார்’ங்கற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு.

‘‘நீங்க தைரியமா இருங்க’’னு சொல்லுற அந்த வார்த்தையே, என்னைக் காப்பாத்தின மாதிரி இருக்கும். சமீபத்துல கூட ஒரு விவசாயிக்கு உதவினார். இப்படி விஷாலோட நோக்கங்கள் அழகானவை. அதுவும் நடிகர் சங்கத்துக்கு நல்லபடியா வொர்க் பண்ற தன்மையான ஒருத்தர் கிடைச்சிருக்கறது வரம்.

பாண்டவர் அணியோட நோக்கமே, ‘‘இனிமே ‘நலிந்த’ என்ற வார்த்தையே இல்லாமல் போகணும். ‘நலிந்த’ கலைஞர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம்’’ என்பதுதான். சங்கத்துக்குள் எல்லாரும் சமமான உரிமையுள்ள கலைஞர்களா இருக்கணும்னு உழைக்கிறாங்க. இது மட்டுமில்லாமல், கனவுக் கோட்டை மாதிரி கட்டப் போற கட்டிடத்தின் மாடலை உருவாக்கியிருக்காங்க. அதைப் பார்த்த ஒவ்வொருத்தருமே, ‘இதெல்லாம் நம்மால சாத்தியமா’னு ஆச்சரியமா கேக்கறாங்க. அந்த பிரமை மாறாமல் நாங்க இருக்கோம். விஷாலைப் பத்திச் சொல்லும்போது கார்த்தியையும் சொல்லியாகணும்...

(ரசிப்போம்...)

தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்