தனுஷும் நயன்தாராவும் பிரமிக்க வைக்கிறார்கள்!



இயக்குநர் : மித்ரன் ஆர்.ஜவஹர்

‘‘ஒரு சீஸன்ல ஒரே மாதிரி படங்கள் வந்திட்டிருக்கும்போது, வித்தியாசமான ஒரு படம் அமைஞ்சா, தமிழ் ரசிகர்கள் அதை தலை மேல தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. அந்த வகையில் பேய்ப் பட சீஸனிலிருந்து நம்மை ரெஃப்ரெஷ் பண்ற படமா ‘மீண்டும் ஒரு காதல் கதை’ அமையும்!’’ - நம்பிக்கை வார்த்தைகளால் வரவேற்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர். ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ என எவர்கிரீன்  குடும்பப் படங்கள் கொடுத்த இயக்குநரின் அடுத்த படம், ‘மீண்டும் ஒரு காதல் கதை’. புதுமுகம் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வாருடன் இந்த சம்மருக்குக் களம் இறங்குறார் மித்ரன்.



‘‘எப்படி வந்திருக்கு ‘மீண்டும் ஒரு காதல் கதை’?’’
‘‘ரொம்ப நல்லா வந்திருக்கு. தனுஷ் சார் நடிச்ச ‘உத்தமபுத்திரன்’ படத்துக்குப் பிறகு இப்போதான் என் படம் ரிலீஸ் ஆகப் போகுது. ஒரு முஸ்லிம் பொண்ணு மேல இந்து பையனுக்கு காதல் வருது. அந்தக் காதல் கை கூடியதா என்பதே ஒன்லைன். நாகர்கோவிலில் நடக்கும் கதை. ‘அட! இது ‘பம்பாய்’ படம் மாதிரி இருக்கே’னு சொல்லிடாதீங்க. அதுக்கும் இதுக்கும் துளியும் சம்பந்தமில்ல. அது வன்முறை, கலவரம், சமூகத்துக்கு ஒரு மெசேஜ்னு இருக்கும். ஆனா, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ அப்படியில்ல. ரம்மியமான காதலும், அழகான குடும்பமுமா மனசை இதமாக்கும்.

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன, ‘தட்டத்தின் மறையத்து’ படத்தைத்தான் இந்த முறை ரீமேக் பண்ணியிருக்கேன். அதோட ரைட்ஸ், எடிட்டர் மோகன் சார்கிட்ட இருந்துச்சு. ‘ஜவஹர், ஒரு அழகான கதை இருக்கு. தமிழ்ல கன்ஃபார்ம் ஹிட் அடிக்கக் கூடிய சப்ஜெக்ட். நீ பண்ணினா நல்லா இருக்கும்’னு அவரே சொன்னார். தாணு சாரும் தைரியம் கொடுத்தார். இப்போ, ‘தெறி’யில் கூட இதோட டிரெய்லரை வெளியிட்டு உற்சாகப்படுத்தியிருக்கார். புதுமுகம் வால்டர் பிலிப்ஸ் ஹீரோ. ஹீரோயின் இஷா தல்வார். மலையாளத்தில் ஹிட் ஹீரோயின். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 51வது படம் இது!’’

‘‘தனுஷுக்கு 3 ஹிட் கொடுத்த நீங்க, இப்போ புதுமுகம் பக்கம் வந்தது ஏன்?’’
‘‘கதை அப்படி அமைஞ்சிடுச்சு. ஹீரோ வால்டர் பிலிப்ஸ், ‘சம்திங் சம்திங்’ படத்துல பிரபுவோட சின்ன வயசு கேரக்டர்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சவர். இப்போ ஹீரோவா அறிமுகமாகிறார். ஹீரோயின் முஸ்லிம் பெண் என்பதால், கொஞ்சம் அதுக்கு பொருத்தமான லுக் இருக்கற பொண்ணா தேடினோம். சரியா அமையல. அப்புறம்தான் ஒரிஜினல் மேக்கில் நடிச்ச இஷா தல்வாரையே ஃபிக்ஸ் பண்ணிட்டோம். தமிழுக்காக இதில் சில மாற்றங்கள் பண்ணியிருந்தேன். அதையும் ஈஸியா பண்ணி, ஸ்பாட்ல நிறைய அப்ளாஸ் வாங்கினாங்க இஷா.



என்னோட பலமே ஃபேமிலி சப்ஜெக்ட் எடுக்கறதுதான்னு எல்லாருமே சொல்வாங்க. வனிதா, சங்கிலி முருகன், மனோஜ் கே.ஜெயன், நாசர், தலைவாசல் விஜய், சிங்கம்புலி, காமெடி அர்ஜுன்னு நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸ் இருக்காங்க. கேரளா, சென்னை, கோவைனு வளைச்சு வளைச்சு ஷூட் போனோம். எல்லாத்துக்கும் ஓகே சொன்னார் தயாரிப்பாளரான ஜெயச்சந்திரன். தாணு சார் வெளியிடுறார்!’’

‘‘தனுஷ் கூட டச்ல இருக்கீங்களா?’’
‘‘தனுஷ் மட்டுமில்ல... நயன்தாரா கூடவும் பேசிக்கிட்டிருக்கேன். நான் செல்வராகவன் சார்கிட்ட இருக்கும்போதே, தனுஷை தெரியும். ‘போய்யா... வாய்யா...’னு பேசிக்கற ஃப்ரெண்ட்ஸ் நாங்க! ‘யாரடி நீ மோகினி’யில நடிக்கும்போது அவர் வெறும் ஹீரோ மட்டுமில்ல. ஒரு அசிஸ்டென்ட் மாதிரி வொர்க் பண்ணுவார். தனுஷோட ப்ளஸ், அவர்கிட்ட சீனை நாம விளக்க வேண்டிய அவசியமே இருக்காது. சீன் பேப்பரை அவர்கிட்ட காட்டினாலே போதும். அந்த கேரக்டரை உயிரோட்டமா ஆக்கிடுவார். நயன்தாராவோட வளர்ச்சியும் பிரமிப்பா இருக்கு. அப்போ பழகின அதே நட்போடு இன்னிக்கும் பேசுறாங்க.

ஸ்பாட்ல கலகலப்பா இருந்தாலும், கேமரா முன்னாடி ரொம்ப சின்ஸியரா இருப்பாங்க. எப்பவாவது ஸ்ரேயா பேசுவாங்க. இன்னமும் ‘குட்டி’ படத்தை ஞாபகம் வச்சிருக்காங்க. ஜெனிலியா கல்யாணம், குழந்தைனு ஃபேமிலில பிஸியாகிட்டாங்க. ஸ்பாட்டுல அவங்க செம புரொஃபஷனல். ‘உத்தமபுத்திரன்’ல விவேக் சார்கிட்ட அவரோட கேரக்டரை சொன்னதும், ‘பேசாம காமெடி பண்ணணுமா’னு முதல்ல தயங்கினார். ஆனா, ‘இன்னிக்கு வரை அந்தக் காமெடிக்கு செம வரவேற்பு கிடைக்குதுப்பா’னு இப்ப அவரே சொல்றார்!’’

‘‘ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிட்டிருக்கீங்களே... ஏன்?’’

‘‘சொந்தமா பேய்க்கதை, காமெடி சப்ஜெக்ட், த்ரில்லர்னு வெரைட்டியா கதைகள் ரெடி பண்ணி வச்சிருக்கேன். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிக்கும்போது மோகன்ராஜா சார் எனக்கு சீனியர். நேரம் வரும்போது அவரை மாதிரி என்னாலும் ‘தனி ஒருவன்’ போல ஒரு படம் கொடுக்க முடியும். ரீமேக்தான் பண்ணணும்னு ஸ்பெஷல் காரணம் எதுவும் கிடையாது. எல்லாமே அதுவா அமைஞ்சதுதான். ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’ படங்களை இன்னமும் மக்கள் ரசிக்கிறாங்க. ‘எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கலை’னு சொல்றாங்க. அப்படி கதைகள் கிடைக்கும்போது ரீமேக் பண்றதுல என்ன தப்பிருக்கு? இப்போ இயக்கியிருக்கற ‘மீண்டும் ஒரு காதல் கதை’ கூட இனிமையான ஃபீலிங்கை தரும்!’’

- மை.பாரதிராஜா