ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

சுபா

ஹாரனை ஒலித்துக்கொண்டே இன்னோவா கார் விரைந்தது. ஒரு கையால் கல்யாணியின் கழுத்தில் துணியை அழுத்திக்கொண்டே, இன்னொரு கையில் போனை எடுத்தான் விஜய். அவசர அவசரமாக சில எண்களுக்கு போன் செய்தான். முதலில் காவல்துறைக்கு. தன்னை அறிமுகம் செய்துகொண்டு, பெண்ணையாற்றங்கரையில் நடந்ததை வெகு சுருக்கமாக விவரித்தான். “எதிர்க்கரையில குருக்கள் காயப்பட்டுக் கெடக்காரு. அவரை கவனிக்கப் போக முடியாதபடி இங்க எமர்ஜென்ஸி. நீங்க உடனடியா ஆம்புலன்ஸ் அனுப்பி அவரை கவனிக்க ஏற்பாடு பண்ணுங்க... அப்புறம் எங்களைத் தாக்கினவங்க தப்பிச்சுப் போறது ஒரு ஹோண்டா சிட்டி கார். செக்போஸ்ட்ல மடக்கப் பாருங்க!”



கல்யாணியின் கழுத்தில் அழுத்தியிருந்த துணியை மீறி ரத்தம் அவன் கையை நனைத்துக்கொண்டிருந்தது. “ப்ரகாஷ்... கொஞ்சம் வேகமாப் போங்க!” “எனக்குக் கை, கால் எல்லாம் உதறுது, விஜய்! அவசரப்படுத்தாத... டென்ஷன்ல ஆக்சிடென்ட் பண்ணிறப் போறேன்!” என்று ப்ரகாஷ் பதறினார்.

விஜய் அடுத்து, திருக்கோவிலூரில் இருந்த மருத்துவமனையின் எண்ணை கூகுளில் தேடிக் கண்டுபிடித்து போன் செய்தான். கழுத்து அறுபட்டு, ரத்தத்தை வெகுவேகமாக இழந்துகொண்டிருக்கும் ஒருவரை எடுத்து வருவதால், அவசர சிகிச்சைப் பிரிவு அந்த நிலைமையைக் கையாளத் தயார் செய்துகொள்ளுமாறு கோரிக்கை வைத்தான்.

அடுத்து அவன் போன் செய்தது, தன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு. அவனுடைய மேலதிகாரி முரளிதரனுக்கு. “முரளி சார்! ஒரு பெரிய விபரீதம் நடந்துருச்சு... கல்யாணியை வெட்டிட்டாங்க...” எதிர்முனையில் பெரும் அதிர்ச்சியுடன், “என்னது..?” என்ற பதற்றக் குரல் ஒலித்தது. “இருப்பா... நான் எம்.டி. சார் கூடதான் நிக்கறேன். அவர்கிட்ட கொடுக்கறேன்!”

எதிர்முனையில் முரளிதரனிடமிருந்து போனைப் பறித்து கிரிதர் பேசினார். விஜய் அவரிடமும் நடந்ததை விவரிக்க... “திருக்கோவிலூர்ல போதுமான வசதி இருக்காது, விஜய். விழுப்புரத்துக்கு கூட்டிப் போ..!” என்றார் அக்கறையாக! “சார், முதல்ல ரத்தத்தை நிறுத்தணும். முதலுதவி செஞ்ச பிறகு எங்க வேணா தூக்கிட்டுப் போலாம்...”

“முடிஞ்சதை நான் போன்ல அரேன்ஜ் பண்றேன்... நம்ம டி.வி. பேரைச் சொல்லு!” என்றார் கிரிதர். சொன்னபடியே செய்திருந்தார். திருக்கோவிலூரில் இருந்த மருத்துவமனையை அடைந்ததும், ஸ்ட்ரெச்சரில் கல்யாணி கிடத்தப்பட்டு, பரபரப்பாக உள்ளே எடுத்துச் செல்லப்பட்டாள். ஒரு சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் பைக்கில் வந்து இறங்கினர். கிரிதர் போன் செய்து அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தியிருந்ததால், வேலைகள் துரிதமாக நடந்தன.

ப்ரகாஷின் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது. விஜய் சற்று அணைத்து அழுத்திக்கொடுத்தபோது, அவருடைய கை கால்கள் உதறுவதை உணர முடிந்தது. பன்னீர், மருத்துவமனை வளாக வாசலில் இருந்த பிள்ளையார் கோயிலில் மண்டியிட்டு கண்ணீருடன் அமர்ந்திருந்தான். விஜய் சப் இன்ஸ்பெக்டரிடம் போய் நின்றான்.

“குருக்களைக் காப்பாத்திட்டீங்களா..?” “வாய்ப்பே வெக்கல... அவர் ஸ்பாட்லயே அவுட்!” கணேச குருக்களின் சிரித்த முகம் கண்முன் தோன்ற, விஜய்யின் நெஞ்சை யாரோ காலால் மிதிப்பது போல் இருந்தது. கோயிலுக்கு ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்று எவ்வளவு நம்பிக்கைகளுடன், எவ்வளவு சந்தோஷமாய் அவர் கேமராவில் பேசினார்..!

“அவரை எதுக்கு வெட்டினாங்கனு...” “சம்பவம் நடந்து அரை மணி நேரம்கூட ஆகல! அதுக்குள்ள இவ்வளவு விவரங்கள் கேக்கறீங்களே... மீடியாக்காரங்க எப்பவுமே இப்படித்தானா..?” வேறு சூழ்நிலையாக இருந்தால் ‘நாங்கள்தான் பொதுமக்களின் கண். அவர்களின் காது. அவர்களின் குரல்... எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்’ என்றெல்லாம் அவனுடைய வழக்கமான பதிலைச் சொல்லியிருப்பான். ஆனால், இப்போது நெஞ்சு முழுவதும் கவலையும், கலக்கமும் நிறைந்திருந்தன. சப் இன்ஸ்பெக்டர் சிறு நோட் புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டார்.

“நீங்க அங்க எதுக்குப் போனீங்க? என்ன பார்த்தீங்க? வெட்டினவங்க எப்படி இருந்தாங்க? எல்லா விவரமும் கொடுங்க, சார்...” விஜய் சொல்லச் சொல்ல... பால்பாயின்ட் பேனாவை உதறி உதறி குறிப்பெடுத்துக்கொண்டார். நாற்பது நிமிடங்களில் ஸ்ட்ரெச்சர் வெளியே தள்ளி வரப்பட்டது. கல்யாணியின் கழுத்தில் பெரும் வெள்ளைத்துணிக் கட்டு. அவள் கண்கள் இன்னும் மூடியே இருந்தன. பச்சை முகமூடியை இறக்கிவிட்டுப் பேசிய மருத்துவரின் முகத்தில் உற்சாகம் இல்லை.

“நிறைய ரத்தம் இழந்திருக்காங்க... மூச்சுக் குழாயிலகூட பாதி சிதைஞ்சு போயிருக்கு... மணலும் தண்ணியுமா நுரையீரல் பூரா சேர்ந்திருக்கு... இவங்களைக் காப்பாத்தற அளவுக்கு இந்த ஆஸ்பத்திரில வசதி கிடையாது. நீங்க விழுப்புரத்துக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க. அதான் நல்லது!”

“தம்பி, எனக்கு வண்டி ஓட்ட பயமா இருக்கு...” என்று ப்ரகாஷ் கலங்கினார். “சரி... நான் ஓட்டறேன்!” என்றான் விஜய். “தேவையில்ல... எங்க ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டுப் போயிடுங்க!” ஒருபுறம் ஆம்புலன்ஸில் கல்யாணி ஏற்றப்பட... இன்னொருபுறம் சப் இன்ஸ்பெக்டர் சில காகிதங்களைத் தயார் செய்து நீட்ட... அவசரமாக சில கையெழுத்துக்களைப் போட்டான், விஜய். டிஸ்சார்ஜ் சம்மரி தயாராகியிருந்தது. ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

ஆம்புலன்ஸில் கல்யாணியின் அருகில் அவன் அமர்ந்திருந்தபோது போன் ஒலித்தது. நந்தினி! சட்டென எடுத்தான். “என்னடா... ரெண்டு பேரும் மஜா பண்ணிட்டிருக்கீங்களா?” என்று அவள் துள்ளலுடன் கேட்டாள். முதலில் அவனுக்குக் குரல் வரவில்லை. “ஆஸ்பத்திரிக்குப் போயிட்டிருக்கேன்... கல்யாணியைத் தூக்கிட்டு” என்றான்.

நந்தினியின் அதிர்ச்சியை துல்லியமாக அவனால் உணர முடிந்தது. “என்னடா சொல்றே..?” நடந்ததை அவளிடம் விவரிக்க முனைந்தான் விஜய். அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்ச்சிகள் எல்லாம் வெடித்துக்கொண்டு புறப்பட்டன. போனில் விவரங்களைத் தெளிவாகச் சொல்ல முடியாமல் அழுகையில் குரல் குழறியது.

“கோயிலுக்குல்லாம் போயிட்டு வந்திருக்கீங்க... அவளுக்கு ஒண்ணும் ஆகாதுடா!” என்று சொல்கையில் நந்தினியின் குரல் தழுதழுத்தது. “பொழைப்பாளானு தெரியல நந்து..!” என்று விசும்பி விசும்பி அழுதான். அந்த ஹோண்டா கார் அடர்ந்த மரங்கள் நிறைந்ததொரு தோப்புக்குள் நுழைந்தது. நின்றது. காரிலிருந்து இருவர் இறங்கினர். இருவரும் கையுறைகள் அணிந்திருந்தனர்.

“குருக்கள் தனியா இருப்பாரு... வேலை சுலபமா முடியும்னு சொன்னியே லியோ..?” “தனியாத்தான் இருப்பாரு... கேக்கறதுக்கு நாதியில்ல... வெட்டிப் போட்டாக்கூட கண்டுபிடிக்கவே பல மணி நேரமாகும்னுதான் நானும் நெனைச்சேன்... ஆனா, மேட்டர் இவ்வளவு சொதப்பும்னு நான் நெனைக்கவேயில்ல ஜோஷ்வா!”

“அந்தாளு திமிறிட்டு ஓடினதுகூட பரவாயில்ல... கேமராவை வெச்சுக்கிட்டு ஒரு கூட்டமே அங்க நிக்கும்னு யார் எதிர்பார்ப்பாங்க..?” “பொண்ணு பொழைக்குமா..?” “சான்ஸே இல்ல, லியோ...” “மத்தவங்கள விட்டுட்டு வந்தது தப்போ..?” “இப்ப நடராஜர் சிலையைத் திருடினவங்கனுதான் போலீஸ் தேடும். மூணு, நாலு கொலையைப் பண்ணினா, மொத்தமா ரிவிட் அடிச்சுரும்!”

ஜோஷ்வா காரின் பின் இருக்கையில் இருந்த துணிப்பையை எடுத்தான். சற்று விலக்கிப் பார்த்தான். பஞ்சலோக நடராஜர் சிற்பத்தின் முழங்கையில் ஒரு ரத்தப்பொட்டு காய்ந்திருந்தது. சிற்பத்தை வேறொரு துணியில் பத்திரமாகச் சுற்றினான். பையில் போட்டு, லியோவிடம் கொடுத்தான்.

குந்தி அமர்ந்து, காரில் இருந்த இரு நம்பர் பிளேட்களையும் கழற்றினான். காரின் சாவியை தலையைச் சுற்றி தூர எறிந்தான். சில மரங்கள் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை அணுகினான். அதை உயிர்ப்பித்தான். லியோ சிற்பப்பையுடன் பின்னால் ஏறி அமர, விருட்டென்று கிளப்பினான்.

அரவமணி நல்லூர் ஆலயம். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு எதிரில் நின்றிருந்தவருக்கு சுமார் எழுபது வயது இருக்கும். வெள்ளை வேட்டியும், கதர்ச் சட்டையும் அணிந்திருந்தார். கழுத்தையொட்டி ஒரு தங்கச் சங்கிலி மினுக்கியது. வாயில் வெற்றிலைச் சிவப்பு. “என் பேரு தங்கமணி. இந்தக் கோயில் அறங்காவலர். திருக்கோவிலூர்ல இருக்கேன். கணேச குருக்கள் குடும்பமே பரம்பரை பரம்பரையா இங்க சேவகம் பண்ணிட்டு இருக்காங்க. கோயில் சாவி அவர்கிட்டதான் இருக்கும். இதுவரைக்கும் இப்படி ஒரு கொடுமை இங்க நடந்ததே இல்ல...”

“இந்தக் கோயில்ல ஏதாவது சி.சி.டி.வி கேமரா வெச்சிருக்கீங்களா..?” “விளக்கேத்தவே வக்கில்லாத கோயில். இங்க எங்க கேமரா வெக்கறது..?” “மொதல்ல அதெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க சார்... எந்த விவரமும் இல்லாம, வந்தவங்க யாருனு நாங்க காத்துலேர்ந்தா கண்டுபிடிக்க முடியும்..?”

“கோயிலுக்கு ஒண்ணு, ரெண்டு பேருதான் வராங்க... குருக்கள் வீட்ல கேட்டீங்களா?” “அங்கதான் போயிட்டிருக்கேன். நீங்க நடராஜர் சிலையோட போட்டோ ஏதாவது இருந்தா கொடுங்க... உதவியா இருக்கும்!” “வீட்ல பார்க்கறேன்...” குருக்கள் வீட்டை இன்ஸ்பெக்டர் நெருங்கும்போதே, பெரும் குரலில் ஒலித்துக்கொண்டிருந்த அழுகை அவரைத் தாக்கியது. 

திண்ணையில் அமர்ந்து தலையில் அடித்தபடி அழுதுகொண்டிருந்த குருக்களின் மனைவியை நெருங்கினார். “அம்மா! நீங்க எவ்வளவு பெரிய ஷாக்ல இருப்பீங்கனு தெரியும். ஆனா நடந்தது என்னன்னு தெரிஞ்சாதான், உங்க புருஷனை வெட்டிட்டுப் போனவங்களை எங்களால கண்டுபிடிக்க முடியும்...”

அந்தம்மாள் முந்தானையால் மூக்குத்தியோடு சேர்த்து மூக்கைத் துடைத்துக்கொண்டு, நடுங்கும் குரலில் பேசினாள்: “சென்னைக்குப் போயிடலாம். ஏதோ ஒரு பிளாட்ஃபார்ம் கோயிலா இருந்தாகூட, அங்க தட்டுல நிறைய விழும். பொழைச்சுக்கலாம்னு சொல்லி எவ்வளவு நாள் கதறி இருப்பேன்! பரம்பரை பரம்பரையா பார்த்துக்கற கோயில், விட்டுட்டு வரமுடியாதுனு பிடிவாதம் பிடிச்சார். இதுக்காகத்தானா..? பஞ்சலோகத்துல பண்ணின நடராஜர் சிலை, கொள்ளுத் தாத்தா காப்பாத்தினார், காப்பாத்தினார்னு வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் பெருமை அடிச்சிப்பார். அந்த நடராஜர்தான் இப்போ இவர் உயிரைக் குடிச்சிட்டாரு...”

“சந்தேகப்படற மாதிரி யாராச்சும் வந்தாங்களா..?” “ரெண்டு வாரம் முன்னால ஒருத்தர் வந்தாரு! ஃபாரீன்லேர்ந்து வர்றதா சொன்னாரு. நடராஜரைப் பார்க்கணும், போட்டோ எடுத்துக்கணும்னு சொன்னாரு. இவர் தயங்கினபோது, சுளையா பத்தாயிரம் ரூபா எடுத்துக் குடுத்தாரு. இவர் சபலப்பட்டுட்டார்...”

“வெட்டினது அவங்கதானாம்மா..?” “தெரியாது... நேத்து கே.ஜி டிவிலேர்ந்து ஆளு வந்தது. ஒரு பையன், ஒரு பொண்ணு... கோயிலைப் பத்தி விவரங்கள்லாம் வேணும்னு துருவித் துருவி வாங்கினாங்க... அவங்களும் ரெண்டாயிரம் ரூபா கொடுத்தாங்கனு சந்தோஷமா கொண்டுவந்து கொடுத்தார். எல்லாப் பணமும் அவர் காரியத்துக்குதான்னு இப்பல்ல புரியுது..!” என்று சொல்லும்போதே அவள் தொண்டையிலிருந்து அழுகை வெடித்துக்கொண்டு புறப்பட்டது.

சற்று இடைவெளி கொடுத்து மேற்கொண்டு விசாரிக்கலாம் என்று இன்ஸ்பெக்டர் அங்கிருந்து நகர்ந்தார். சைரனை ஓங்கி ஒலித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் விரைந்தது. “கல்லு... தைரியமா இரு. விட்டுக் கொடுத்துராத” என்று மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தாலும், நம்பிக்கை இழந்திருந்தான் விஜய். கல்யாணியிடம் எந்த அசைவும் இல்லை. 

விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டியிருந்தது அந்த மாபெரும் அரசு மருத்துவமனை. ஆம்புலன்ஸ் நிறுத்தத்துக்கு வந்ததும், ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் மருத்துவமனைக்குள் அந்த ஸ்ட்ரெச்சர் உருட்டிச் செல்லப்பட்டது. சில நிமிடங்களிலேயே மருத்துவர் வெளியே வந்தார். உதடுகளைப் பிதுக்கினார். “ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்றவரைக்கும் உயிர் நிக்கல...” என்றார்.

விஜய் மடங்கி அமர்ந்து அழுதான். காவல்துறை, மருத்துவமனை போன்ற அரசு விவகாரங்களை உடனிருந்து கவனித்துக்கொள்ள கே.ஜி தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மேலதிகாரிகள் இருவரை கிரிதர் அனுப்பியிருந்தார். சென்னையில் இருந்த கல்யாணியின் பெற்றோர் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பதாலும், அவளுடைய ஒரே அண்ணன் வெளிநாட்டில் வசித்ததாலும், அவர்கள் வருவது சாத்தியமற்றுப் போயிற்று.

லாட்ஜில் இருந்த அறைகளை காலிசெய்வதற்காக விஜய் அங்கு சென்றான். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் அங்கே காணப்பட்டார். “மர்டர் கேஸ். அந்தப் பொண்ணோட ரூமைப் பார்க்கணும்...” என்று அவர் ரிசப்ஷனில் இருந்தவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். விஜய்யை பார்த்ததும், அறை சாவியை வாங்கிக்கொண்டு அவனுடன் படிகள் ஏறினார். 

கல்யாணி கடைசியாகத் தங்கியிருந்த அறையை இன்ஸ்பெக்டருக்குக் காட்டினான் விஜய். அவர் பார்வையால் அறையைத் துழாவியபடி நுழைந்தார். அங்கு அலமாரி கீழ்த் தட்டில் வைத்திருந்த சிறு பாட்டிலை எடுத்துப் பார்த்தார். “இதைப் பார்த்தீங்களா..? செத்துப்போன பொண்ணு, கர்ப்பமா இருக்கோமானு டெஸ்ட் பண்ணிப் பாத்திருக்கு!” என்றார்.

விஜய் திடுக்கிட்டான். கல்யாணியா? கர்ப்பமாவென்றா? அதனால்தான் அவ்வளவு களைப்பாக இருந்தாளா? “எதுவா இருந்தாலும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல தெரிஞ்சுரும்...” என்றார், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன். மருத்துவமனையில் அவர்கள் நுழைந்தபோதே விஜய்க்கு அந்த உண்மையைத் தெரிந்துகொள்ளும்வரை படபடப்பு அடங்காது என்று புரிந்தது. போஸ்ட்மார்ட்டம் செய்துமுடித்து மருத்துவர் வெளியே வந்தார். இன்ஸ்பெக்டரிடம், “இறந்துபோன பொண்ணோட கணவர் வந்திருக்காரா..?” என்று கேட்டதும், அவர் விஜய்யைத் திரும்பிப் பார்த்தார். “ஏன் டாக்டர்..?” “செத்துப் போனவங்க வயித்துல நாப்பது நாள் கரு இருக்கு, இன்ஸ்பெக்டர்!”

பஞ்சலோகத்துல பண்ணின நடராஜர் சிலை, கொள்ளுத் தாத்தா காப்பாத்தினார், காப்பாத்தினார்னு வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் பெருமை அடிச்சிப்பார். அந்த நடராஜர்தான் இப்போ இவர் உயிரைக் குடிச்சிட்டாரு... 

(தொடரும்...)