120 கிலோ சைக்கிள்...ஒன்றரை ஆள் உயர சைக்கிள்...ஒரே ஒரு வீல் சைக்கிள்...



புதுமை மனிதர்

‘‘நாமெல்லாம் வெளிநாட்டு கார் கம்பெனினு மதிப்பா பார்க்குற பல பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஒரு காலத்துல சின்ன இரும்புப் பட்டறையில உருவாகி வளர்ந்ததுதான். இந்தியாவுல இன்னைக்கு எல்லாத்தையும் வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செய்றாங்க. ஆனா, நம்ம ஆளுங்ககிட்ட இருக்குற திறமையை யாரும் கண்டுக்கறதில்ல!’’- இப்படி வெள்ளந்தியாகப் பேசும் ராஜேந்திரன், வெறும் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.



ஆனால், ஃபாரீனர்களையே வாய் பிளக்க வைக்கும் பிரமாண்ட சைக்கிள்களை வடிவமைப்பவர். ஒரு வாகனத்துக்கு இருக்க வேண்டிய பொறியியல் அளவீடுகள் அனைத்தையும் துல்லியமாய் மனக்கணக்கிலேயே போட்டு விடுபவர்! ‘‘சின்ன வயசுலயே லேத் பட்டறையில வேலைக்கு சேர்ந்துட்டேன் சார். இதுதான் என் உலகம். ‘எல்லாரையும் போல சாதாரணமா ஒரு சைக்கிளை நாமளும் ஓட்டிப் போகணுமா? நம்ம கையிலதான் தொழில் இருக்கே!’னு விளையாட்டா சைக்கிள் செய்ய ஆரம்பிச்சேன்.

அப்படி 2002ல நான் உருவாக்கிய சைக்கிள் ஒரு அம்பாசிடர் காரைவிட நீளமா இருந்துச்சு. சொகுசு கார் மாதிரி, அது ஒரு சொகுசு சைக்கிள். எக்கச்சக்க ஸ்பிரிங்ஸ் இருந்ததால சும்மா தேர் மாதிரி நகரும். அடுத்து 2005ல நீளம் குறைவா ஒரு சைக்கிளை உருவாக்கினேன். அதுல வீல் சின்னது. தேவைப்பட்டா அப்படியே மடிச்சு சின்னதாக்கி கையில தூக்கிக்கலாம். லாஸ்ட்டா 2014ல உருவாக்கின இந்த சைக்கிள்தான் பிரமாண்டமானது. இதோட பின் சக்கரம் ஒரு ஆள் அளவுக்கு உயரமானது. எடை 120 கிலோ!’’ என்கிற ராஜேந்திரன், இதில் கடந்த வருடம் திருவண்ணாமலை வரை கூட சென்று அசத்தியிருக்கிறார்.

‘‘இதுல செயினே கிடையாது சார். அதுக்கு பதில் உள்ளுக்குள்ளேயே சுழலுற மாதிரி பல் சக்கரங்கள் வச்சிருக்கேன். சாதாரண சைக்கிள்கள் மாதிரி இதில் வேகமா  போக முடியாது. ரொம்ப வெயிட்டு போட்டு அழுத்தினாதான் நகரும். உடம்பைக் குறைக்க நினைக்கிறவங்களுக்காகவே விசேஷமா உருவாக்கினது இது.

உண்மையில சைக்கிள் ஓட்டுறது உடலுக்கும் சுற்றுப்புறத்துக்கும் நல்லது. நமக்கும் பெட்ரோல் செலவு மிச்சம். அதனால மக்கள்கிட்ட சைக்கிள் பத்தி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் இப்படியொரு சைக்கிளை செய்தேன். சாதாரண சைக்கிள்ல சில மணி நேரங்கள்லயே திருவண்ணாமலைக்குப் போயிட முடியும். ஆனா, இதுல போக ரெண்டரை நாள் ஆச்சு. இந்த சைக்கிளுக்கும் ப்ளஸ் பாயின்ட்ஸ் இருக்கு. செயின், கியர் எதுவும் இல்லாததால இது ரிப்பேர் ஆகறதுக்கு சான்ஸே இல்ல!’’ என்கிறவர் அந்த உயர சைக்கிளில் அநாயாசமாக ஏறி அமர்ந்து ஓட்டிக் காண்பிக்கிறார்.

‘‘இதுல ஏறி உட்கார்றதும், டிராபிக் வந்தா இறங்கி நிக்கிறதும் கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனா, பயிற்சி இருந்துட்டா பிரச்னை இல்லை. எனக்கு எப்பவுமே ஒரு சைக்கிளோட வடிவம் ராத்திரி மல்லாந்து படுத்துத் தூங்கும்போதுதான் கிடைக்கும். அதோட ஒவ்வொரு பாகங்களையும் மனசுக்குள்ளேயே வரைபடமா உருவாக்கி வச்சிடுவேன். அடுத்த நாள் காலையே அதுக்கான வேலைகளைத் தொடங்கிடுவேன். அப்படி மனசில் வந்த டிசைன்தான் இதுவும்!’’ என்கிற ராஜேந்திரனிடம் ஒன்றிரண்டு சைக்கிள்களை செய்து கொடுக்கச் சொல்லி ஆர்டர்கள் வருகின்றனவாம். ஆனால், பெருமளவில் சைக்கிள் தயாரிக்கும் தன் கனவு பலிக்கவில்லையே என ரொம்பவே வருத்தப்படுகிறார் மனிதர்.

‘‘இந்த 120 கிலோ சைக்கிளைத் தயாரிக்கவே கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. நம்ம மனசில் இருக்குற டிசைனுக்கு ஏத்த பாகங்களை பழைய இரும்புக்கடையிலயோ மற்ற இடங்கள்லயோ தேடித் தேடித் தேர்ந்தெடுக்கணும். அப்படி செலவு பண்ணி ரெண்டு, மூணு சைக்கிள் செஞ்சு வித்தா... அதுல ஒண்ணும் கையில நிக்காது. இதையெல்லாம் பெரிய கம்பெனிகள் ப்ராஜெக்ட்டா பண்ணணும் சார். அப்படி யாராவது முன்வந்தா நானும் சேர்ந்து வொர்க் பண்ண தயாரா இருக்கேன்.

ஆனா, இப்படிப்பட்ட புதுமையான கண்டுபிடிப்புகளையெல்லாம் நம்ம ஊர்ல யார் மதிக்கிறாங்க!’’ என்கிற ராஜேந்திரன், அடுத்து ஒன்றரை ஆள் உயரத்தில் பிரமாண்ட சைக்கிள் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட பேட்மேன் பயணிக்கும் வண்டி போல அது பக்கவாட்டில் சக்கரங்களைக் கொண்டது. ஒரே ஒரு வீல் கொண்ட சைக்கிள் ஒன்றும் அவரின் சிந்தனைக்குள் டிசைன் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்