கவிதைக்காரர்கள் வீதி



* எத்தனை கேவலமானவனாயிருப்பேன்
என்னைக் கண்டதும்
பயந்தோடும் காகத்தின் மனதில்!

* ஒவ்வொரு முறை
கோயிலுக்கு வரும்போதும்
அர்ச்சனைச் சீட்டைக் கொடுத்ததுமே
அத்தனை பேரின்
பெயர், ராசி, நட்சத்திரத்தையும்
மனப்பாடமாக ஒப்பிக்கிறாள்;
கடவுளுக்குத்தான்
இன்னமும் மனப்பாடமாகவில்லை!



* அம்மாவைப் போல அரவணைத்து,
குளிப்பாட்டி, சிங்காரித்துவிட்டும்,
தம்பியைப் போல வம்பிழுத்து,
வீட்டுப் பாடங்கள் செய்தும்,
தாத்தாவைப் போல
அஞ்சுதலைப் பாம்புக்கதை சொல்லியும்
பொம்மைகளைத் தூங்க வைத்து
விளையாடும் மகள்,
சிலநேரங்களில் என்னைப் போலவும்...
பொம்மைகளை அதட்டி மிரட்டியபடி!

* எறும்புகளுக்கு பயந்து
ஒளித்து வைக்கும் நம்மைப்போல்
இருப்பதில்லை இயற்கை!

* உண்மைதான்...
தினமும் விடிகாலையில்
இன்னிசையால் எழுப்பிவிடும்
பெயர் தெரியாத பறவைகளுக்கு
சிறு தானியம் கூட வைத்ததில்லை;
அந்த இசை
பசிக்கானதாகக்கூட இருக்கலாம்...

* யார் கண்டது?
என்றேனும் வேற்றுக்கிரகவாசிகள் வரக்கூடும்
உலகை அள்ளிச் செல்லக்கூடும்
கேரி பேக்கில்...

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்