எனக்கு முதல் ரசிகன் நான்தான்!



24 சூர்யா

‘எப்படியிருக்கும் ‘24’? சூர்யா அதில் எப்படி இருப்பார்? டிரெய்லர் பார்த்தால் வேற வகையா தெரியுதே?’ என எக்கச்சக்க சஸ்பென்ஸில் காத்திருக்கிறது கோலிவுட். அனுபவமும், அபாரத் திறமையும் கொண்டு உருவாக்கிய ‘24’க்காக காத்திருக்கிறார் சூர்யா. ‘‘ஒரு படம்னா இப்படித்தான் ஆரம்பமாகும், இந்த நேரத்தில் ஒரு  திருப்பம் வரும், இடைவேளைக்குப் பின்னாடி கதை மாற்றமாகும்னு ஒரு  பழக்கப்பட்ட கிராமரில் ரெடியாகியிருப்போம்.

ஆனால், இயக்குநர் விக்ரம்குமார் இந்தக் கதையைச் சொன்னபோது எனக்கு வேற மாதிரி இருந்தது. ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்க முடியும்னு நினைச்சேன். இப்படி ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் சினிமாவை உருவாக்க முடியும்; அதில் நம்பகத் தன்மையை கொண்டு வந்திட்டால் போதும்னு தோணுச்சு. சிரிக்கவும், அழவும், சென்டிமென்ட்டில் கரையவும், ரொமான்ஸுக்கும் நிறைய இடம்  இருக்கு...’’ - மிகையில்லாத மொழியும், கனிவும், ரசனையும், சினிமாவின் மீது காதலுமாய் பரிவாகக் கொட்டியது சூர்யா சாரல்!



‘‘படத்தின் மையம் என்ன?’’
‘‘இதில் எனக்கு மூணு ரோல். எல்லோருக்கும் தன்னை நிரூபிக்கிற இடமும் இருக்கு. சில சமயம் நம்மையே வழக்கம்போல முன்னிறுத்தாம, கதையை முன்னிறுத்திப் பார்க்கலாம்னு தோணும். ‘இது என் படம்... நல்லா விற்பனையாகணும்... வெற்றி பெறணும்...’ என்ற ஆசைகள் போக, சில சினிமாக்களில் நம்மை அடையாளம் காண ஆசை வரும். கமல் சாரை எடுத்துக்கிட்டால் நாற்பது வயசுக்குள்ள ‘நாயகன்’, ‘மகாநதி’, ‘தேவர் மகன்’னு ஒரு நல்ல  லைன் அப் பண்ணிட்டார். நாற்பது வயசைத் தொடும்போது நானும் ஏதாவது ஒரு இடத்துக்கு வரணும் இல்லையா? அதுக்காகத்தான் இந்த ‘24’. ‘முக்கியமான படம், பாருங்க செமயா இருக்கு, பசங்களையும் குடும்பத்தையும் பார்க்கச் சொல்லுங்க’னு பரிந்துரைக்கறதுக்கு புதுசா ஒரு படம்.

இப்போ பாருங்க... கொஞ்சம் பழைய விஷயங்களை தள்ளி வைச்சிட்டு, ‘தோழா’னு வந்தபோது ஜனங்க உட்கார்ந்து பார்த்தாங்களே! கார்த்திக்கு நல்ல பெயர் வந்ததே! அதெல்லாம் எனக்கு சந்தோஷமா இருக்கு. சில படங்கள் செய்யும்போது உத்வேகமா இருக்கும். நாமளே நம்மளை கொஞ்சம் தட்டிக் கொடுத்துக்கறது மாதிரின்னு வச்சுக்கங்களேன். ஒரு விஷயம் கேட்டுக்குங்க பிரதர், சூர்யாவின் முதல் ரசிகனும் நான்தான்; சூர்யாவோட கடுமையான விமர்சகனும் நான்தான். எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். ஒரு சினிமா என்பது டைரக்டர், கேமராமேன், இசையமைப்பாளர்னு எல்லோரும் சேர்ந்து ஆடுற விளையாட்டுதான். சமயங்களில் அது சூர்யா படமா கூட ஆகிடும். ஆனால், நான் திருப்தியை மனப்பூர்வமாக எல்லோருக்கும் பிரிச்சிக் கொடுக்கத்தான் விரும்புவேன். விக்ரம்குமார், திரு, ஏ.ஆர்.ரஹ்மான்... இவங்க இல்லாமல் இந்தப் படத்தில் நான் இல்ல!’’

‘‘சமந்தா, நித்யா மேனன்னு கொண்டாட்டமா இரண்டு ஹீரோயின்ஸ் இருக்காங்க!’’
‘‘சமந்தா ரொம்ப செலக்டிவ். விக்ரம், விஜய், தனுஷ்னு தெளிவா படம் பண்றாங்க. ஆந்திராவெல்லாம் அவங்க கொடிதான் பறக்குது. விக்ரம்குமாரும், அவங்களும் முன்னமே ஒரு படம் பண்ணியிருக்காங்க. அதனால் ரொம்ப ஈஸியாக இருந்தது. ரொமான்ஸ் சீன் வந்தால், ‘இப்படி பண்ணினால் நல்லாயிருக்குமா, இப்படி... அப்படி...’னு பல ரீயாக்‌ஷன்ஸ் கொடுத்து அந்த சீன்ல நிறைஞ்சு நிற்பாங்க. அவங்களுக்கு தெலுங்கும், தமிழும் நல்ல நல்ல வாய்ப்பைக் கொடுத்துக்கிட்டே இருக்கு.

நித்யா மேனனோட ‘ஓகே கண்மணி’ பார்த்துட்டு அப்பாவிற்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‘நித்யாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைப்பா’ன்னு கேட்டாரு. ‘நித்யா எங்க காலத்தில் இல்ல. இருந்திருந்தா சாவித்திரி மாதிரி வந்திருப்பாங்க’னு சொன்னார். அந்தப் பாராட்டு எல்லாம் அவங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விஷயம் சொன்னா, அதை மெருகேத்திப் பண்ணிட்டு, ‘போதுமா’ன்னு ஒரு சின்ன கர்வத்தோட நிப்பாங்க. பார்க்கவே அழகாயிருக்கும். படத்திற்கு உழைக்கிறதில் அவங்க மிச்சம் எதுவும் வச்சுக்கிறதில்ல!’’



‘‘ரொம்ப நாளைக்குப் பிறகு ரஹ்மான்... அருமையா இருக்கு!’’
‘‘அவரை அணுகும்போது சம்மதிப்பாரான்னு சந்தேகம். ஏகப்பட்ட புராஜெக்ட்ஸ் அவர் கையில் இருந்தது. நமக்கும் நேரம் ஒதுக்கி பண்ண முடியுமான்னு நினைச்சேன். ‘நீங்களும் ஃப்ரெஷ்ஷா கதை கொடுத்திருக்கீங்க, நானும் அந்த ஃப்ரெஷ் கொடுக்கணும்ல. பண்றேன்’னு புன்னகையோட சொன்னார். அவர்கூட இருந்ததும், பகிர்ந்ததும் நெஞ்சில் அப்படியே நிக்குது. சென்னை போலவே ஐதராபாத்திலும் ஒரு இசை வெளியீடு நடந்தது. அவருக்கு இருக்கிற வேலைக்கு வரக்கூட முடியாது. வந்தார். ஒரு நாள் தங்கினார்.

என்ன தோணுச்சோ தெரியலை... அவரோட வாழ்க்கையின் சில அனுபவங்களையும் சொன்னார். இப்படியான பொழுதுகள் எப்போதாவதுதான் அமையும். அவர் போட்டிருக்கிற இசையையும் கூட்டிப் பார்த்தால் எங்க எல்லோருடைய உழைப்பும் மும்மடங்குதான். ரொம்ப யதார்த்தமும் போரடிக்கும். அதனால் ஃபேன்டஸியோடு, புது இடத்தைக் காட்டியிருக்கோம். வில்லன்னா புஜபலத்தோட இல்லாமல், இன்டலிஜென்ட்டா இருப்பாங்க.

தொழில்நுட்பத்தில் சிறந்து, எமோஷன், காதல்னு பரபரப்பாகிறபோது இந்த சினிமா வித்தியாசமாகவே இருக்கும். எனக்கே இப்பல்லாம் ‘சூர்யா நல்ல நடிகன், நல்ல படம் கொடுத்திருக்கார்’னு சொல்லிக் கேட்க ஆசையா இருக்கு. இந்தப் படம் பி.சி.ஸ்ரீராம் சார் பண்ணிருக்க வேண்டியது. வேற கமிட்மென்ட் முந்திடுச்சு. அவரே ‘திரு’வை டிக் செய்தார். திரு... இந்தியில் ‘கிரிஷ்’, ‘ஹே ராம்’, ‘காஞ்சீவரம்’னு வெரைட்டி பண்ற ஒளிப்பதிவாளர். ‘இது முடியாதுங்க’ன்னு எதையும் அவருக்கு சொல்லத் தெரியாது!’’

‘‘மறுபடியும் முரட்டு மீசையோட ‘சிங்கம் 3’. எப்படி ஃபார்மில் இருக்கு?’’
‘‘ ‘சிங்கம்’ நடிச்சது என் கேரியரில் ரொம்ப நல்ல விஷயம். அந்தப் படத்தால் என் கைக்கு வந்தவங்க வியர்வை சிந்திக் கஷ்டப்படுகிற மக்கள். எங்கே என்னைப் பார்த்தாலும் வேஷ்டியை மடிச்சுக் கட்டிட்டு, பைக்கில் விரட்டி ‘தலைவா... துரைசிங்கம் டாப்பு’னு கை வலிக்கிற மாதிரி குலுக்கிச் சொன்ன மக்கள். ‘சிங்க’த்துல போலீஸ்காரனுக்கு அப்பா, அம்மா இருப்பாங்க. அவங்க ஊர், சப்போர்ட், பின்புலம்னு போய், ‘போலீஸ் தனி ஆள் இல்லை’ன்னு முடியும். ‘சிங்கம் 2’ல வெளிநாட்டு வில்லன் வந்து, அங்கே துரைசிங்கம் போய் பிரச்னையை முடிச்சு வைச்சாரு. மறுபடியும் ‘சிங்கம் 3’ உறவுகள், குடும்பம், கிராமம், போலீஸ் வேலைன்னு வேல்யூ சம்பந்தமாகவும் இருக்கும்.

‘சிங்க’த்தோட கொடி பறந்ததற்கு இவ்வளவு விஷயமும் காரணம். ‘ஊரோட இருந்தால் வேரோட இருக்கலாம்’னு வசனங்கள்ல பொறி பறந்தது. ‘சிங்கம் 3’ எல்லோருக்குமான படம். ஹரியை சொல்லணுமா, அப்படியே ஸ்கிரிப்ட்டை தலையில வச்சுக்கிட்டு பின்றார். கதையையும், வாழ்க்கையையும் சரியானபடி சேர்த்தால் அங்கே நம்மளை எப்படிப் பிடிக்காமல் போகும்?’’

‘‘நடிகர் சங்க கட்டிடம் வந்திடும் போலிருக்கே?’’
‘‘வரட்டும். வரணும். இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து கிரிக்கெட் விழாவை பண்ணியிருக்காங்க. நிறைய நாடக நடிகர்கள் பிள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ் கூட கட்ட முடியாமல் தவிக்கிறாங்க. இப்ப அவங்களைப் பத்தி எல்லா விபரமும் சேர்த்தாச்சு. ஒரு பட்டனைத் தட்டினா, தகவல்கள் கொட்டுது. அவங்க பேசுவது, முகபாவங்கள் எல்லாம் வந்து, அவங்க நடிக்கவும் சான்ஸ் தேடித் தருது. நல்லதே நடக்கும்!’’

- நா.கதிர்வேலன்