குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்


தமிழ் சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி, நடிகர்  சங்கக் கடனை அடைத்து கட்டிடம் கட்டப் போறாங்க. இது ஒரு அற்புத ஐடியா, இது ஒரு அட்டகாசமான ஐடியா, இது ஒரு அழகிய ஐடியா, இது ஒரு அமர்க்களமான ஐடியா. இதே மாதிரி ஐடியாவை பின்பற்றி ஏன் வேறு சில கடன்களை அடைக்கக்கூடாது?



தமிழக அரசின் கடன் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல எகிறியிருக்கு. அதுல தமிழ்நாடு மின்சார வாரியக் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய். அறிஞர் அண்ணா தமிழ்நாடுன்னு 1969ல பேரு மாத்துனதுல இருந்து 2011ல ஆட்சி முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியக் கடன் 45 ஆயிரம் கோடி; அம்பது வருஷத்துல இருந்த கடனை அஞ்சே வருஷத்துல இரட்டிப்பாக்கிட்டாங்க. சரி, அதை விடுவோம்! இப்படி தமிழ்நாடு அரசு கடனையும் தமிழ்நாடு மின்சார வாரியக் கடனையும் அடைக்க, தமிழக அமைச்சரவை ஏன் ஊர் ஊரா சென்று கிரிக்கெட் விளையாடி நிதி சேர்க்கக் கூடாது?

உள்ளூர் வங்கிகளில் இருந்து உலக வங்கி வரை எல்லா வங்கிகளிலும் கடனை வச்சிருக்கு நம்ம மத்திய அரசு. சுவிஸ் வங்கில இருந்து கறுப்புப் பணத்தை எடுத்து நம்ம ஒவ்வொருவருக்கும் கொடுத்தாலும், இந்தக் கடனையெல்லாம் அடைச்சா, கைல கால் காசு மிஞ்சாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஏன் நாடு நாடாகச் சென்று கிரிக்கெட் விளையாடி பணம் வசூலித்து இந்தியாவோட கடனை அடைக்கக்கூடாது?

கல்விக் கடன் வைத்திருக்கும் மாணவர்கள் கும்பலாகக் கூடி, ஒவ்வொரு இடத்திலும் கிரிக்கெட் ஆடியோ, கபடி ஆடியோ, ஏன்... டான்ஸ் ஆடியோ கூட காசு பார்த்து கடனைக் கட்டலாம். தங்க நகைக் கடன், விவசாயக் கடன் மற்றும் கந்து வட்டி கடன் வைத்திருக்கும் மக்கள், அவரவர்களுக்கு தெரிந்த வித்தைகளைக் காட்டி ஏன் கடனை அடைக்கக் கூடாது?

கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கே.ஆர்.விஜயா தம்பி கே.எஸ்.ரவிக்குமாருன்னு சொல்வாங்களாம். அந்த சொலவடைய மாத்தி, ‘கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கேப்டனோட தேர்தல் வாக்குறுதிகள் தெளிவா இருக்குன்னு சொல்வாங்களாம்’னே சொல்லலாம். ‘முறை மாமன்’ படத்துல செந்திலும் ஜெயராமும் பேதி மாத்திரையை மாத்தி மாத்தி அள்ளிப் போடுற மாதிரி, அஞ்சாம் வகுப்பு பையனோட ஸ்கூல் பைல இருந்து ‘நான் முதல்வரானால்’ கட்டுரையைக் கைல எடுத்து கிட்டக்க வச்சு காப்பியடிச்ச மாதிரி இருக்கு தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்.

தே.மு.தி.க ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 45 ஆகவும், டீசல் விலை ரூபாய் 35 ஆகவும் குறைப்பாங்களாம். எனக்கென்னமோ கோயம்பேடுல அவங்க கட்சி அலுவலகத்துக்கு அடியில ஆறேழு எண்ணெய் கிணறைத் தோண்டி வச்சிருக்காங்களோன்னு தோணுது. பெட்ரோல் என்ன டாஸ்மாக் வாட்டர் பாக்கெட்டா, போனா போவுதுன்னு ஐம்பது காசை குறைச்சுட்டு கொடுக்கிறதுக்கு? அடுத்த வாக்குறுதி ஒண்ணு இருக்கு... சும்மா பொக்லைன எடுத்து பொடனில போட்ட மாதிரி! நல்லி மற்றும் போத்தீஸ் போன்ற துணிக்கடைகள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும், இந்தியாவுக்கு வெளியேயும் தங்களது கிளைகளைத் திறக்க அனுமதி வழங்கப்படுமாம்.



ஆசையிருந்தா கடைக்காரரே உலகம் முழுக்க கிளைகள் போட்டுடப் போறாரு. இதுக்கு அரசாங்கம் எதுக்கு? விட்டா முனியாண்டி மெஸ்கள், அய்யங்கார் பேக்கரிகள், நாயர் டீக்கடைகளை சென்னை முதல் செவ்வாய்க்கிரகம் வரை சென்று திறந்து வைப்பாரு போல நம்ம கேப்டன். வீடுகள் கட்டித் தர்றேன்னு சொல்லுங்க... அதுக்காக ஒரு சதுர அடி ரூபாய் 2000லிருந்து, ரூபாய் 5000 வரையில் செலவிட்டு வீடுகள் கட்டப்படும்னு வாயில எண்ணெய் ஊத்தி வார்த்தைல வடை சுடாதீங்க. சதுர அடி 5000 ரூபாய்க்கு வச்சு வீடு கட்டினா பாத்ரூம் கட்டவே பல லட்சம் வேணும்யா!

அடுத்து ஒரு மேட்டர்... ‘என்ன காந்தி செத்துட்டாரா?’ன்னு நம்மளை கேட்க வைக்கிற மாதிரியான ஒரு மேட்டர்! மகாத்மா காந்தியின் சுயசரிதை மாணவர்களுக்குப் பாடமாக பள்ளிகளில் வைக்கப்படுமாம். விஜயகாந்துக்கு யாரோ காந்தியைப் பற்றி முந்தாநேத்தும், அவரு செத்துட்டாருன்னு நேத்தும்தான் சொல்லி இருப்பாங்க போல! எதுக்கும் கேப்டனை ஒரு தடவை ரூபாய் நோட்டுல இருக்கிறவரு காந்திதானேன்னு கேட்டுக்குவோம். அதை ராஜாஜின்னு நினைச்சுட்டு ரூவாய் நோட்டுல காந்தி போட்டோவை அச்சடிப்போம்னு சொல்லிடப் போறாரு.

‘நெடுஞ்சாலையில் சுங்க வரி வசூலிக்கும் கம்பெனிகள் நாட்டுடைமை ஆக்கப்படும்’னு ஒரு வாக்குறுதி. என்னமோ மத்திய அரசுக்குத் தெரியாம, அதோட மண்டையில மஞ்சப்பையை போட்டு மூடிவிட்டுட்டு இந்த கம்பெனிகள் சுங்கம் வசூலிக்கிற மாதிரி. இதையெல்லாம் படிக்கிறப்ப, எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது... ‘வாயைத் திறக்காம இருந்தாலாவது நம்மளை லூஸுன்னு சந்தேகப்பட்டுக்கிட்டு இருப்பாங்க; வாயைத் திறந்து பேசிட்டா நம்மை லூசுன்னே கன்ஃபர்ம் பண்ணிடுவாங்க’.

விஜயகாந்துக்கு இதையெல்லாம் எழுதிக் கொடுத்த அந்த புண்ணியவான், நல்லவேளையா ‘வாழைப்பழத்தை எல்லோரும் சாப்பிடும் ஏழைகள் பழமாக்குவோம்’, ‘இலந்தவடையை எண்ணெய்க்குள் போட்டு உளுந்தவடையாக்குவோம்’, ‘சுடுகாட்டுக்குள் நதிகள் விட்டு பசுமைக்காடா மாற்றுவோம்’, ‘அனைத்து ‘பார்’க்கிங் ஏரியாவிலும் சைடு டிஷ் விற்போம்’னு அடுத்த கட்டத்துக்குப் போகல!

இந்த ஐபிஎல் சீசன்ல கெயில் நூறு அடிக்கிறாரோ  இல்லையோ, ஒவ்வொரு நாளும் வெயில் நூறு அடிச்சிடுது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஸ்கோரை விட வெயில்தான் அதிகம் ஸ்கோர் பண்ணுதுன்னா, வெயிலோட ஆட்டம் எப்படி இருக்குன்னு நீங்களே பார்த்துக்குங்க. இப்படி பவர் ஸ்டாரோட பிரேக் டான்ஸ் மாதிரி வெயில் ரொம்ப கொடுமையா ஆட்டம் காட்ட, ‘‘உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென தாய்க்குத் தெரியும்’’னு சொல்லிட்டு நல்ல மொட்டை வெயில்ல - ஹெல்மெட்டுல முட்டைய உடைச்சு ஊத்தி நாலு வெங்காயத்த போட்டா, ரெண்டே நிமிஷத்துல ஆம்லெட்டா வெந்திடும் அளவுக்கு வெயில் அடிக்கும் நேரத்துல பொதுக்கூட்டம் போடுறாங்க.

ஒவ்வொரு மீட்டிங்குக்கும் வெறும் நூறு ரூபா பணத்துக்கும், ரெண்டு வேளை சோத்துக்கும் ஆட்டு மந்தையாட்டம் லாரியேறி வந்து எமனோட பந்தியில கதைய முடிச்சுக்கிட்டவங்க, அவங்க சொல்ற கணக்குப்படியே மூணு நாலு பேர் இருக்காங்க. கொடுத்த காசுக்கு கை தட்ட வந்துட்டு, இப்படி உயிரை விட்டுட்டுப் போறாங்க.

மந்திரிசபையை மணிக்கொரு தடவை மாத்துறாங்க, வேட்பாளர் லிஸ்ட்டை வினாடிக்கு ஒரு தடவை மாத்துறாங்க, ஆனா ‘மக்களுக்காக நான், மக்களால் நான்’னு டயலாக் படிச்சது கூட மறந்துட்டு, மக்களுக்காக பொதுக்கூட்ட நேரத்தைக் கூட மாத்த மாட்டேங்கிறாங்க. மேல மேடையில எட்டு பக்கமும் ஏசி காத்துல உட்கார்ந்து பேசறவங்களுக்கு, கண்ணுக்கு கீழ கோடையில மக்கள் வாடி பாடையில போறதே தெரியாதபோது, எந்த நம்பிக்கையில நம்மளோட காவலர்கள்னு சொல்லிக்கிறாங்கன்னு தெரியல.

ஆயிரம் அம்புகள் வைத்து வெயில் கூராக்கி குத்தக் குத்த, தெய்வம் தேர் ஏறி வரும் வரை, 100 ரூபாய்க்காக நாள் முழுக்க கொடுமை அனுபவிக்கும் மடமை மிகுந்த மக்கள் மீதுதான் தப்பு இருக்கு. மனசார பேசுனா கூட பரவாயில்ல, மனப்பாடமா பேசுனா கூட பரவாயில்ல, அட... அங்கங்க மறந்துட்டு பேசுனாக்கூட பரவாயில்ல, இப்படி பேப்பரைப் பாத்து பேசறதைப் பார்க்கவா வந்து பரலோகம் போவணும்? மக்களே, உங்களை ஓடி வரச் சொல்பவர்களைத் தூர வையுங்கள், உங்களைத் தேடி வருபவர்களை மேலே ஏற வையுங்கள்.