நினைவோ ஒரு பறவை



நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்


கேளுங்கள் கொடுக்கப்படாது என்ன வரம் வேண்டும்? என்றார் கடவுள்! அது தெரியாத நீர் என்ன கடவுள்? -கவிஞர் நீலமணி

நம் குழந்தைப் பருவத்தின் புதிர்களைக் கேள்விகளே ஆக்கிரமித்திருந்தன. வளர வளர... நம் மீது வாழ்வின் சுமை வந்து விழுந்து விடுகிறது. ஒருசிலர் மட்டுமே பால காண்டம் கடந்தும் பசியடங்காமல் கேள்விகளுடன் வாழ்கிறார்கள். மாநகரம் ஒரு சரளைக்கல் போல என்னை உள்வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் டீசல் நதி ஓட்டத்தில் கூழாங்கல்லைப் போல வனைந்துகொண்டிருந்த காலம் அது. கண் விழித்துப்  பார்க்கும் ஒவ்வொரு பகலும் ஒவ்வொரு நிறத்துடன் வெயிலைக் கொண்டு வந்துகொண்டிருந்தது.



சில பகல்களின் வெயிலுக்கு புறக்கணிப்பின் வலி சூழ்ந்த வெம்மை நிறம்; சில பகல்களின் வெயிலுக்கு துக்கம் நிரம்பிய வெளிறிய நிறம்; சில பகல்களின் வெயிலுக்கு குற்ற உணர்ச்சி கலந்த தகிக்கும் நிறம். அப்போதைய என் ஒரே கவலை... பகலை எப்படிக் கொல்வது? பகலைக் கொல்வதற்குப் பல வழிகள் உள்ளன. பகலைக் கொல்வது சுலபம்.

ஆனால் அதன் எதிர்வினைகள் ஆபத்தானவை. கிளை நூலகங்களில் கயிறு கட்டித் தொங்கும் பென்சில்கள் போல ஏதோ ஒரு மூலையில் புத்தகங்களுடன் மூழ்கிப் போகலாம். புத்தகங்கள் எழுப்பும் உணர்வலைகள் மீண்டும் நம்மை ஒரு நிராசையின் பள்ளத்தாக்கில் தள்ளக்கூடும். ஜனசந்தடி மிக்க தெருவில் போகிற வருகிறவர்களைப் பார்த்தபடி ஒரு ஓரமாக நின்றிருப்பது போல, நம் இருப்பு சுருங்கிக் கிடப்பதை ஞாபகப்படுத்தும் செயல் அது.

அரசாங்க அலுவலகத்தின் குமாஸ்தா மேஜையில் அமர்ந்தபடி மதிய உணவு உண்ட மயக்கத்தில் பல் குத்திக் கொண்டிருக்கலாம். அதற்கு ஒரு வேலையும் மேஜையும் வேண்டும். இப்படிப்பட்ட பகல்கள்தான் என்னை இலக்கியக் கூட்டங்களை நோக்கிச் செல்ல வைத்தன. மதிமாறனை நான் முதன்முதலில் சந்தித்தது அத்தகைய இலக்கியக் கருத்தரங்கம் ஒன்றில்தான்.

மதிமாறனின் வயது அப்போது நாற்பதுகளின் தொடக்கத்தில் இருந்தது. சராசரிக்கும் கூடுதலான உயரம். உயரத்திற்கேற்ற உடல்வாகு. நெற்றி மேட்டிற்கு மேலாக தலையில், ஒரு காலத்தில் சுருட்டை முடிகள் இருந்ததற்கான சிற்சில அடையாளங்களும் வழுக்கைக்கான ஆரம்ப ஆயத்தங்களும் தெரியும்.

அந்தக் கூட்டத்தில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். ‘‘வாழ்க்கை ஒரு நதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது’’ என்று அந்த எழுத்தாளர் பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘எந்தப் பக்கம் ஓடுது?’’ என்று ஒரு குரல் அரங்கத்தில் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையைப் பார்க்க, வெள்ளை ஜிப்பாவில் கைவிட்டபடி மதிமாறன் எழுந்து நின்று, ‘‘எந்தப் பக்கம் ஓடுது?’’ என்று திரும்பவும் கேட்டார். எழுத்தாளர் பேச்சை நிறுத்திவிட்டு மதிமாறனைப் பார்க்க, ஒரு கணம் அரங்கத்தில் ஆழ்ந்த அமைதி.



‘‘எதிர்காலத்தை நோக்கி...’’ என்றார் எழுத்தாளர். மதிமாறன் அந்த பதிலைக் கேட்ட மாதிரி தெரியவில்லை. அதற்குள் அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டார். ‘‘கிரிக்கெட்ல இந்தியா தோற்றதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’’ எழுத்தாளரின் முகம் இப்போது கடுமையானதொரு தொனிக்கு மாறிவிட்டது. ‘‘எனக்கு கிரிக்கெட் பத்தி தெரியாது... நான் பார்க்கறதில்ல... உங்களுக்கு என்ன வேணும்? என் கதையைப் பத்தி மட்டும் கேளுங்கோ’’ என்றார் எரிச்சலுடன்.

மதிமாறன் அடங்குகிற மாதிரி தெரியவில்லை. ‘‘சரி! பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏன் சரியாகலை?’’ என்று அடுத்த கேள்வி கேட்டு பதிலுக்குக் காத்திருந்தார். கூட்டத்தில் சற்று சலசலப்பு கூடி, மதிமாறனை வெளியே கூட்டிச் செல்ல நேரிட்டது. ‘‘இலக்கியம்னா வெங்காயம். வெங்காயத்தைக் கண்டுபிடிச்சது எந்த நாடு?’’ என்று சத்தம் போட்டுக்கொண்டே வெளியேறும் மதிமாறனின் உருவம் என் மனதில் ஆழமாய்ப் பதிந்துபோனது.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, இன்னொரு கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். விழாவிற்கு வந்திருந்த ஏழெட்டு பேரில் மதிமாறனும் இருந்தார். நூலை வெளியிட்டு சிறப்பு விருந்தினர் பேசத் தொடங்கினார். அதற்காகவே காத்திருந்தது போல் மதிமாறன் எழுந்து நின்றார். ‘‘கவிதை எதனோட விதை?’’ என்று கேட்டுவிட்டு, பூர்வஜென்ம விரோதியைப் பார்க்கும் பாவனையில் பேச்சாளரின் பதிலுக்குக் காத்திருந்தார். ‘‘நீங்க பேசறதா இருந்தா கடைசியில நேரம் தர்றேன். மேடைல வந்து பேசுங்க’’ என்று நூலாசிரியர் கேட்டுக்கொண்டும் மதி
மாறன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அடுத்த கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். நான் மெல்ல அரங்கிலிருந்து வெளியேறி தேநீர்க் கடையைத் தேடிப் போனேன்.

அதற்குப் பின் நான் சென்ற பல கூட்டங்களில் மதிமாறனையும் அவரது கேள்விகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஒரு ஆக்டோபஸ் போல மதிமாறன் தன் கைகளை நீட்டி என் உலகத்திற்குள் நுழைவதாய் உணர்ந்தேன். இலக்கியக் கூட்டங்கள் மட்டுமல்லாமல் அரசு விழாக்கள், பல்கலைக்கழகக் கருத்தரங்குகள், வணிக நிறுவனங்களின் இலக்கியப் பங்களிப்புகள் என எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும் மதிமாறன் கேள்விக் கணைகளுடன் அங்கு இருந்தார். என் மனசாட்சியின் இன்னொரு உருவம்தான் மதிமாறனோ என்று நான் பயந்ததும் உண்டு.

கூட்டங்கள் இல்லாத நாட்களில், கைகளை வீசி காற்றிடம் கேள்வி கேட்கும் மதிமாறனின் சித்திரம் ஒன்று அடிக்கடி என் மனதில் வந்து போகும். ஒரு நாள் பேச்சாளரின் அறுவை தாங்காமல் கூட்டத்திலிருந்து வெளியே வந்தேன். ஏற்கனவே வெளியே நின்றிருந்த மதிமாறன், என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். பயத்துடன் பதிலுக்குப் புன்னகைத்தேன். ‘‘கேள்வி கேட்டா வெளியே துரத்துறாங்க... இலக்கியம் எப்படி வளரும்?’’ என்றார் என்னைப் பார்த்து! எனக்கு முன்பே வந்து, கேள்வி கேட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று புரிந்தது.

கிளம்பலாம் என்று எண்ணுகையில் எங்கள் அருகில் ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது. பற்கள் முன்துருத்தி கறுத்த நிறத்திலிருந்த ஒரு பேரிளம்பெண் அதிலிருந்து இறங்கி மதிமாறனைப் பார்த்து, ‘‘இங்கதான் இருப்பீங்கன்னு நினைச்சேன்... எனக்கு ஆபீஸ்ல ஓவர்டைம் இருக்குன்னு சொன்னேன் இல்ல? குழந்தைய ஏன் ஸ்கூல்ல இருந்து கூட்டிக்கிட்டு வரலை?’’ என்று கேட்டார்.

அவர் மதிமாறனின் மனைவி என்று புரிந்தது. மதிமாறன் சங்கோஜத்தின் நுனியில் நின்றபடி என்னையும் தன் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தார். ‘‘கேஸ் தீர்ந்துடுச்சா... ஏன் போன் பண்ணலை? பர்ஸ்ல இருந்த ஐநூறு ரூபாயைக் காணோம்... என்ன பண்ணீங்க?’’ என அடுத்தடுத்த கேள்விகள், பதில் கூறுவதற்கு முன்பே மதிமாறனை நோக்கி வந்து கொண்டிருந்தன.

அவர் எல்லாவற்றிற்கும் ஈனஸ்வரத்தில் ‘‘உம்... உம்...’’ எனச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் மெல்ல அந்த இடத்திலிருந்து நழுவினேன். அதற்குப் பிறகு இன்று வரை மதிமாறனைப் பல கூட்டங்களில் கேள்விகளோடு சந்திக்கிறேன். ஏனோ முன்பிருந்த எரிச்சலும் கோபமும் மறைந்து ஒரு இரக்க உணர்வையே இப்போதெல்லாம் அந்தக் கேள்விகள் ஏற்படுத்துகின்றன. 

வாழ்க்கை ஒரு நதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்று அந்த எழுத்தாளர் பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘எந்தப் பக்கம் ஓடுது?’’ என்று ஒரு குரல் அரங்கத்தில் கேட்டது.

கிளை நூலகங்களில் கயிறு கட்டித் தொங்கும் பென்சில்கள் போல ஏதோ ஒரு மூலையில் புத்தகங்களுடன் மூழ்கிப் போகலாம். புத்தகங்கள் எழுப்பும் உணர்வலைகள் மீண்டும் நம்மை ஒரு நிராசையின் பள்ளத்தாக்கில் தள்ளக்கூடும்.

(பறக்கலாம்...)