கவிதைக்காரர்கள் வீதி



வித்யாசாகர்

* விளையாட்டுப் பொருட்களைப் போலவே
மனதிற்குள்
அடுக்கி வைத்துக்கொள்கிறார்கள்
குழந்தைகள் நம்மை
இது அப்பா,
இது அம்மாவென்று!



* தந்தையும் மகனுமானாலென்ன
தந்தையும் மகளுமானாலென்ன
வயிறும் வாயும்
வேறு வேறுதானே என்கிறார்கள்
ஆம், அதெல்லாம் வேறு வேறுதான்.
ஆனால் எங்களுக்கு
உயிர் மட்டும் ஒன்றேயொன்று,
அது அவர்களுக்கான ஒன்று!

* தூங்கும்போது
எனது குழந்தைகளின்
முகத்தையே பார்க்கிறேன்
எனைப் போலவேதானே வாழ்க்கை
இவர்களுக்கும் வலிக்குமென்று துடிக்கிறேன்.
கொஞ்சம் சிரிப்பாகவும்
கொஞ்சம் பயமாகவும்
தெரியுமவர்களின் முகத்தோடு
கத்தி நீட்டாமல் மிரட்டுமந்த
எதிர்காலத்தை சற்று சபிக்கிறேன்.
கசக்கிப் பிசைந்து உருட்டி
நல்லதாக மாற்றிய கனவுகளாக
மனக்கண்ணுள் வீசி
அவர்கள்மீது எறிகிறேன்.
‘போ, போய்
வெற்றியின் கனவுகளாக அங்கே விரி!’
கட்டளையின் நிம்மதியில்
உறங்கச் சம்மதிக்கிறது என் மனசும்...

* வீடு பெருக்குகையில்
விளையாட்டுப் பொருட்களை எல்லாம்
புலம்பிக்கொண்டே எடுத்து
அடுக்கினாள் அம்மா
மீண்டும் புலம்பிக்கொண்டே
கலைத்துப் போட்டது குழந்தை.