மேக்கப்



சாயம் வெ.ராஜாராமன்

‘ஃபேஷியலா... வீட்டுக்கே வந்து செய்து தருகிறோம். மேனகா பியூட்டி சர்வீசஸ்’ - அலைபேசியில் ரீங்காரமிட்ட விளம்பரம், பாவனாவின் ஆசையைக் கிளறியது. தன்னந்தனியாக வீட்டிலிருந்து போரடிக்கவே அழைத்துவிட்டாள். ‘‘ஒரு மணி நேரத்துல உங்க முகம் எப்படி ஜொலிக்கப் போகுது பாருங்க மேடம்’’ - வந்த பெண் மயக்கும் குரலில் பேசினாள். அவள் சொன்ன கட்டணமும் பியூட்டி பார்லரில் கேட்பதைவிட மிகக் குறைவு.



க்ரீம், எண்ணெய் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இவள் முகத்தில் பூசத் தொடங்கினாள். நறுமணம் அறையை நிறைத்தது. முகத்தில் குளிர்ச்சி. ‘‘கண்ணையும் மூடிக்குங்கம்மா!’’ அவள் சொல்ல, மூடினாள். அதன் மீதும் க்ரீம்! ‘‘ஒரு மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருக்கணும்மா. அப்புறம் எழுந்து இந்த லிக்விட் வச்சி முகம் கழுவிட்டுப் பாருங்க. நாம ஏன் சினிமா ஹீரோயினாகக் கூடாதுன்னு உங்களுக்கே தோணும். நான் கிளம்புறேன்.

ஆட்டோமேடிக் கதவுதானே. நான் சாத்தினதும் லாக் ஆகிடும்!’’ என்றவள், கிளம்பினாள். ஒரு மணி நேரத்தில் எழுந்து முகத்தைக் கழுவி கண்ணாடியைப் பார்த்தாள் பாவனா. முகம் சற்று அழகாகத்தான் தெரிந்தது. அவளுக்குப் பின்னால் இருந்த அலமாரியும் தெரிந்தது. ஆனால், அதில் இருந்த பொருட்கள் எங்கே? நகை, பர்ஸ், பணம்... எல்லாம் போச்சு! தலையில் கை வைத்துக்கொண்டு அழும்போதுகூட கண்ணாடியில் அவள் முகம் பளபளப்பாகத் தெரிந்தது.