சம்மரில் உடற்பயிற்சி செய்யலாமா?



கோடை டிப்ஸ்! 

இரவு இதமான, சுகமான, நிம்மதியான உறக்கம் இல்லையா? அதிகாலை எழும்போது மிகச் சோர்வாக உணர்கிறீர்களா? சுட்டெரிக்கும் வெயிலில் போனால் கண்ணைக் கட்டுகிறதா? மயக்கம் வருகிறதா? உடலுக்கும் உயிருக்கும் சொந்தமில்லாத உணர்வு வருகிறதா? - இந்த நான்கு கேள்விகளில் ஏதேனும் இரண்டுக்கு ‘ஆம்’ என்றால், நீங்கள் உங்கள் உடலை சீர்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். உடல் என்பது சிலை என்றால், உடற்பயிற்சிதான் உளி! செதுக்க ஆசை இருந்தால் எங்களோடு சில நிமிடங்கள் செலவழியுங்கள்.

* எட்டு டம்ளர் தண்ணீர், எட்டு மணி நேர தூக்கம்... இரண்டும் சீராக இருந்தால் சித்திரம் வரைய சுவர் தயார் என்று அர்த்தம். உடலைக் கூட்டுவதோ, குறைப்பதோ உங்கள் பிரியம். அதைவிட முக்கியம், உடலை சுத்தமாக வைத்திருப்பது. அதிகாலையிலும், இரவிலும் வெந்நீர் குடிப்பது நல்லது.



* எவ்வளவு நேரம் உறங்குகிறோம், எப்போது விழிக்கிறோம் என்பவைதான் நம் ஆரோக்கியத்தின் முதல் இரண்டு சாவிகள்!

* கவனித்துப் பாருங்கள்... நாம் சுவாசிப்பது நம் சுவாசத்திறனில் நான்கில் ஒரு பங்குதான். சீரான ஆழமான சுவாசம் இருந்தால் ஆரோக்கியம் என அர்த்தம். திணறினால் உங்களைத் திருத்த வேண்டியிருக்கிறது.

* வருங்காலத்தில் மருந்தே உணவாகக் கூடாது என்று நினைத்தால், இப்போதே உணவை மருந்தாக்குகிற அதிசயம் பழகுங்கள். வசதி இருந்தால் டயட்டீஷியன் அட்வைஸ் கேளுங்கள். அல்லது வீட்டில் பாட்டி இருந்தால், அவர்களே சொல்வார்கள், நல்ல உணவுகளை தேர்ந்தெடுக்கிற ரகசியம்.



* பச்சைக் காய்கறிகளும், பழங்களும் அதிகம் சேர்த்துக் கொண்டாலே போதும். நாம்தான் அரிசி உணவில் மோகமாகி கர்ப்பஸ்திரீகளாக அலைகிறோம்.

* எதற்கும் நேரம் இல்லை என பிகு பண்ணாதீர்கள். அது பிரச்னையை நீங்களே வரவழைக்கிற முயற்சி. வீட்டிலேயே ஸ்கிப்பிங், ஃப்ளோர் எக்சர்ஸைஸ், யோகா, ஜாகிங், ஏரோபிக்ஸ்... எதையாவது செய்யுங்கள்.

* சன் ஸ்கிரீன் லோஷனை வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே முகத்தில் அழுத்தாமல் தடவிக்கொள்ள வேண்டும். சூரியக் கதிர்கள் உள் நுழையாமல்... லோஷன் மூடிக்கொள்வதற்கு இந்த நேரஅவகாசம் அவசியம்.

* வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் கால அளவைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். நடுநடுவே பழச்சாறு அருந்தத் தடையில்லை. எங்கே பார்த்தாலும் சிவந்து கிடக்கிற தர்ப்பூசணி, வெள்ளரியை அவசியம் சாப்பிடலாம். நீரும், பொட்டாசியமும் இணைந்து கிடைக்கிற விஷயம் இவை.

* தொப்பை என்பது நமக்கு நாமே சேர்க்கிற இம்சை. சரியான உணவு சாப்பிடாவிட்டால் அது அல்சரை ஆரம்பிக்கும். நேரங்கெட்ட வேளைகளில் நிறைய வயிற்றை நிரப்பினால் அது தொப்பையைத் தோரணம் கட்டி வரவேற்கும். அது ஆரோக்கியமான உணவாகவும் இல்லாமல் போனால், இன்ன பிற உபாதைகளும் ‘வணக்கம் தலைவா’ என வயிற்றில் குடியேறும்!

டாக்டர் அட்வைஸ்!

‘‘வெயில் காலத்தில் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெப்பம் உச்சத்தில் இருக்கும். அந்த வேளையில் வெளியே செல்லும் வேலைகளைத் தள்ளி வைக்கலாம். பொதுவாக அந்தச் சமயங்களில் சருமத்தில் வெயில்பட்டால் சன் பர்ன் நடக்கிறது. இதைத் தவிர்ப்பதற்கு சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தலாம். சுத்தமாக உடம்பை வைத்துக்கொள்ள  காலை, மாலை இரண்டு வேளை குளியல் அவசியம்.

கேலமின் லோஷன் பயன்படுத்தலாம். முடிந்தவரையில் உடலை மூடும்படியான உடை அணிந்தால் நல்லது. தொப்பி, கண்ணாடி, கையுறை பயன்படுத்தலாம். குளித்தவுடன் முகத்திலும், உடலிலும் மாய்ஸ்சரைஸிங் க்ரீம் தடவிக் கொள்ளலாம். பூஞ்சை பிரச்னை இருப்பவர்கள், ஆன்டி ஃபங்கல் சோப் உபயோகிக்கலாம்.

ஃப்ரஷ் ஜூஸ் குடிப்பதால் உடல் குளுமை அடைகிறது. நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். கோடைக்காலத்தில் உடலில் வியர்வை அதிகம் வெளியாவதால் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். மேலதிக பிரச்னைகளுக்கு டாக்டரை அணுகி நிவாரணம் பெறலாம்!’’

* இந்த வெயிலுக்கு இறுக்கமான ஆடை வேண்டாம். கூடுமான வரை பருத்தி ஆடைகள் வியர்வையை எடுத்துக்கொண்டு உங்களுக்கு நிவர்த்தி கொடுக்கும். வெயிலிலும் கழுத்தை இறுக்கி ‘டை’ கட்டிக்கொண்டு போக அவசியமில்லை.

* கண் கண்ணாடிகள் அவசியம். அதற்காக முப்பது ரூபாய்க்கு கிடைக்கிற கண்ணாடியை வாங்கிப் போட்டுக் கொள்ளக்கூடாது.

* ஒரு சிகரெட்டுக்கு ஆகும் செலவில் ஒரு கட்டுக் கீரை வாங்கலாம். பழங்களில் கொழுப்பு, உப்பு இல்லை.

* நடிகர்கள் பரிந்துரைத்த குளிர்பான வகைகள் வேண்டவே வேண்டாம். கேக், பிஸ்கட்களை குறைத்துக்கொள்ளுங்கள்.

* ஐம்பதுகளைத் தாண்டிய நாகார்ஜுன்தான் இன்னும் தெலுங்கு தேசத்தின் காதல் இளவரசனாக இருக்கிறார். எண்பதைத் தொடும் லதா மங்கேஷ்கர், தன் குரல் இனிமையை இன்னும் இழந்துவிடவில்லை. தகுதியை நிர்ணயிப்பது வயது அல்ல. கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது ஆண்டுகள் அல்ல. நம்பினால் நம்புங்கள்... உணவு என்பது பசிக்கும், ருசிக்கும் இல்லை. உயிர் வாழ்க்கைக்கு!

- க.நன்மதி
படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: சாக்‌ஷி