ரகசிய வீதிகள்



அட்டகாசத் தொடர்

சுபா

கல்யாணியின் வயிற்றில் நாற்பது நாள் கரு இருப்பதாக மருத்துவர் சொன்னதைக் கேட்டு விஜய் அதிர்ந்தான். இன்ஸ்பெக்டர் அவனை அர்த்தத்துடன் திரும்பிப் பார்த்தார். “கல்யாணிக்கு கல்யாணம் ஆயிடுச்சா, விஜய்..?” “இல்ல சார்..!” “பாய் ஃப்ரெண்ட்..? லவ்வர்..?” “எனக்குத் தெரியாது சார்...” “வெறும் சிலைத் திருட்டு, குருக்கள் கொலை வழக்குனு நினைச்சேன். இந்த வழக்குல சுவாரசியமா வேற கோணம்கூட கிடைக்கும் போல இருக்கே..?” என்றார் இன்ஸ்பெக்டர், கண்ணடித்து.



இரு உயிர்கள் பறி போயிருக்கையில் இவரால் எப்படி இவ்வளவு அலட்சியமாகப் பேச முடிகிறது என்று விஜய்க்குக் கோபம் வந்தது. கிரிதர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருந்ததால் போஸ்ட்மார்ட்டம் விரைவில் முடிந்தது. தேவையான மற்ற போலீஸ் சடங்குகள் முடிந்தன. சென்னைக்கு எடுத்துச் செல்ல ஐஸ் பெட்டியுடன் இருந்த ஆம்புலன்ஸில் கல்யாணியின் உடல் ஏற்றப்பட்டது. பிரகாஷ் பிழியப் பிழிய அழுதுகொண்டிருந்தார். பன்னீர் கலங்கிப் போயிருந்தான்.

கே.ஜி. டிவியின் அதிகாரி விஜய்யை நெருங்கினார். “தம்பி, நீங்க ஆம்புலன்ஸ்ல பாடி கூட வர்றீங்களா..? கல்யாணியோட வீடு உங்களுக்குத் தெரியும் இல்லையா..?” என்று கேட்டார். விஜய் தலையசைத்தான். இறந்த உடலைச் சுமந்து சென்றாலும், ஆம்புலன்ஸ் சைரனை ஒலித்து முன்னுரிமையுடன் வழி தேடிக்கொண்டது. கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்த கல்யாணியைப் பார்த்தபடி, விஜய் இரு கைகளிலும் தன் தலையைப் பிடித்திருந்தான். நேற்று தங்கியிருந்த விடுதியில் கல்யாணியுடன் நடந்த உரையாடல் அவன் மனதில் மறுஒளி
பரப்பானது:

“உனக்கு மட்டும் ஒரு பாய் ஃப்ரெண்ட் இருந்தா, இப்படிப் பார்த்ததும் உன் கால் கட்டை விரலை நக்கிட்டுக் கெடக்கச் சொன்னாகூட கெடப்பான்...” “எனக்கு பாய் ஃப்ரெண்ட் கெடையாதுனு யார் உனக்குச் சொன்னது..?” “என்னைத் தவிர வேற பயல்கூட உனக்கு ஃப்ரெண்டா இருக்கானா... அது யாருப்பா உன் ஆளு..?” “நேரம் வரும்போது சொல்றேன்... இப்ப கோயிலுக்குப் போகணும். கிளம்பு!” இனிமேல் எப்போது நேரம் வரும்..? எப்போது அவள் சொல்ல இயலும்..? பதில் இல்லாத கேள்விகளைச் சுமந்துகொண்டு, விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு விரைந்தது ஆம்புலன்ஸ்.

கல்யாணியின் உடல் அவள் வீட்டு ஹாலில் கிடத்தப்பட்டிருந்தது. அவள் அப்பா ஒரு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்திருந்தார். கல்யாணியின் அம்மா, குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழையின் அருகிலேயே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்தாள். கண்ணீர் நிற்காமல் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்தது.

விஜய்யைப் பார்த்தபோது, “உங்கள எல்லாம் நம்பித்தானே என் பொண்ணை அனுப்பினேன்..? ராப்பகலா உட்கார்ந்து இன்டர்நெட்டைப் பார்த்து, ஏதோ குறிப்பு எடுத்துட்டே இருந்தாளே..! ‘இந்த புரோகிராம் பிரமாதமா வரணும். ஞாயித்துக்கிழமை வேற சேனலை யாரும் பார்க்கக்கூடாது’ன்னு சொல்லிட்டே இருப்பா... ‘எதுக்கு இப்படி உயிரைக் குடுத்து வேலை செய்யற..?’னு திட்டுவேன். இப்ப, நிஜமாவே உயிரைக் குடுத்துட்டாளே..?” என்று கதறி அழுதாள்.

அழும் அவளிடம் கல்யாணி கர்ப்பமாயிருந்த விவரத்தை எப்படிச் சொல்வது? விஜய் மென்று விழுங்கினான். கல்யாணியின் அம்மா உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்கும்போதெல்லாம் வெடித்து அழுததைக் காண இயலாமல் விஜய் மெல்ல வாசலுக்கு நடந்தான். கே.ஜி. தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த பலர், மாலைகளுடன் மரியாதை செலுத்த வந்திருந்தனர்.

ஆட்டோவில் வந்து இறங்கினாள் நந்தினி. அவளைப் பார்த்ததும், விஜய்யின் துக்கம் கூடியது. ரோஜா மாலையை இடது கையில் மடித்துப் போட்டுக்கொண்டு, நந்தினி அவனை நெருங்கினாள். “என்ன விஜய்... ஏதேதோ சேதி காதுல விழுது..?” என்று சுருக்கென்று கேட்டாள். “என்ன சேதி..?” “கல்யாணி கர்ப்பமா இருந்தானு சொல்றாங்க..?”

“அப்படித்தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது...” என்றான் விஜய், குரலைத் தழைத்து. நந்தினி அவன் கண்களைச் சந்திக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மாலையுடன் உள்ளே போனாள். எம்.டி கிரிதர் காரில் வந்து இறங்கினார். உதவியாளர்கள் புடைசூழ வீட்டுக்குள் நுழைந்தவர், விஜய்யின் தோளை அழுத்திக்கொடுத்துவிட்டு உள்ளே போனார். விஜய் அவரைப் பின்தொடர்ந்தான். கல்யாணியின் அம்மா, நந்தினியின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.

கிரிதர் மாபெரும் மாலையை மரியாதையுடன் வைத்தார். கல்யாணியின் அம்மாவைப் பார்த்துக் கைகூப்பினார். “நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க... அத்தனை ஏற்பாடும், செலவும் எங்க ஸ்டாஃப் பார்த்துப்பாங்க...” என்றார். புடைசூழ, புயல் போல் வெளியேறினார். “எல்லா டி.விலயும் இதேதான் நியூஸு...” என்று சமயம் தெரியாமல் அண்டை வீட்டுக்காரப் பெண்மணி பெருமையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள்.

உண்மைதான். கே.ஜி தொலைக்காட்சி மட்டுமல்லாமல், மற்ற தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் கல்யாணியின் முகம் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. எந்தக் கோயில் பிரபலமாக வேண்டும் என்று அவள் மிக விரும்பினாளோ, அந்த அரவமணி நல்லூர் ஆலயத்தின் பழுதடைந்த கோபுரம் காட்டப்படாத சேனலே இல்லை.

நடராஜரின் பஞ்சலோகச் சிலை கொள்ளையடிக்கப்பட்டது குறித்த தகவலும், காவல்துறை அதிகாரிகளின் பேட்டிகளும், குருக்களின் மனைவியும் இளம் மகளும் கதறியழும் காட்சியும் பரபரப்பான செய்திகளாகி, அத்தனை சேனல்களிலும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகியபடி இருந்தன.

கிரிதர் வந்திருந்த நேரம் விஜய்யின் கவனம் அவர் மீது பதிந்திருக்க, நந்தினி எப்போது நழுவிப் போனாள் என்று அவனுக்குப் புரியவில்லை. வெளிநாட்டிலிருந்த கல்யாணியின் அண்ணன் வர இயலாது என்று சொல்லிவிட்டதால், யாருக்காகவும் காத்திருக்காமல் கல்யாணியின் இறுதிச் சடங்குகள் தொடங்கின. விஜய் அந்த வேலைகளில் மும்முரமானான்.

சுள்ளி பொறுக்க வந்த இடத்தில், கவனிப்பாரின்றி அநாதரவாக நின்றிருந்த அந்தக் கார் மாடசாமியைக் கவர... நான்கைந்து நபர்களைத் தாண்டி தகவல் காவல்துறைக்குப் போக... இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தன் படையுடன் அங்கே வந்து சேர்ந்தார். காரைச் சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டார்.

“இங்க வந்து வண்டி மாத்திருப்பாங்க...” என்றார். “சார், கார்ல நம்பர் பிளேட்டே இல்ல...” என்றார் கான்ஸ்டபிள். “யோவ், நம்பர் பிளேட் இல்லன்னா என்ன..? என்ஜின் நம்பரை வெச்சு, ஓனரைக் கண்டுபிடிக்க முடியும். சுத்து வட்டாரத்துல வேற ஏதாவது வண்டி நிக்கவெச்சிருந்த அடையாளம் இருக்கான்னு கவனமாப் பாருங்க...” என்றார் குரலை உயர்த்தி!

சென்னை ராயபுரம். நீள நீளமான கன்டெயினர் லாரிகள் ஓய்வெடுக்கும் சாலைகளைத் தாண்டி ஒரு குறுக்குச் சந்து. வண்ணமிழந்த சுவர்களுடன் களையிழந்து காணப்பட்ட ஒரு சிறு வீட்டின் மாடிப்பகுதி. ஜோஷ்வா தன்னிடமிருந்த வீடியோ கேமிராவை இயக்கினான். அதில் பொருத்தப்பட்டிருந்த எஸ்.டி கார்டில் பதிவாகியிருந்த காட்சி சிறு திரையில் ஒளிர்ந்தது. லியோவும் கண்ணெடுக்காமல் அதைப் பார்த்தான்.

அரவமணி நல்லூர் கோயில் கோபுரம் பின்னணியில் காணப்பட... கல்யாணி உற்சாகமாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க... திடீரென்று குருக்களும், துரத்தி வரும் அவர்கள் இருவரும் ஃபிரேமுக்குள் வர... “சினிமா சீன் மாதிரியே எடுத்திருக்கான் இல்ல..?” என்றான் ஜோஷ்வா, ஆச்சரியத்துடன். “அந்தப் பொண்ணு பாக்க நல்லா இருக்கா. தேவையில்லாத நேரத்துல தேவையில்லாத இடத்துல வந்து பொட்டுனு உயிரை விட்டுட்டா, பாவம்...” என்றான் லியோ.

“அவ உயிரைக் கொடுத்ததாலதான், இந்த எவிடென்ஸ் நம்ம கைக்கு வந்தது.. இல்லேன்னா, இந்நேரம் இந்த வீடியோவை போலீஸ் இல்ல போட்டுப் பார்த்துட்டிருப்பாங்க..?” “போலீஸ் மட்டுமா..? சேனல் சேனலா போட்டு முகமூடிக் கொள்ளைக்காரர்கள் யார்னு பரபரப்பு ஏத்திட்டிருப்பாங்க... சரி, இது யார் கைலயாவது கெடைக்கப் போவுது... அழிச்சிரு!”

“வெயிட்... இதையெல்லாம் காட்டி, நாம எடுத்திருக்கற ரிஸ்க்கைப் புரிய வெச்சாதான் வீண் பேரம் இல்லாம விலை படியும்!” “பார்ட்டி எப்ப வராரு..?” “மகாபலிபுரத்துக்கு வந்துட்டாராம்... நாளைக்கு டீல் முடிஞ்சுரும்னு நெனைக்கறேன்” என்று சொல்லிவிட்டு, ஜோஷ்வா விடியோவில் கவனத்தைப் பதித்தான்.

கே.ஜி தொலைக்காட்சி நிறுவனம். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், ரிசப்ஷனில் தன் அடையாள அட்டையைக் காட்டியபடி நின்றிருந்தார். “விசாரிக்கணும்னு சொல்றேன்! ‘உக்காரு... உக்காரு...’ன்னு சொன்னதையே சொல்லிட்டிருக்க?” என்று ரிசப்ஷன் பெண்ணுக்கு கிலியேற்றிக்கொண்டிருந்தார். ரிசப்ஷன் பெண் திடீரென்று விறைப்பாவதை கவனித்தார். “என்ன..?” என்று குரைத்தார்.

“எங்க எம்.டி வர்றாரு...” இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் திரும்பிப் பார்த்தார். கிரிதர் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார். போலீஸ் உடுப்பில் நிற்பவரைப் பார்த்ததும், “யெஸ்..?” என்றார். “குட் மார்னிங் சார். ஒரு என்கொயரி...” என்றார் சந்திரமோகன். “டெல் மீ!” “ரெண்டு கொலையைப் பண்ணிட்டு நடராஜர் சிலையைத் தூக்கினவங்க எந்தக் கார்ல தப்பிச்சுப் போனாங்களோ, அந்த ஹோண்டா சிட்டி காரை ட்ரேஸ் பண்ணிட்டோம். நம்பர் பிளேட் கிடைக்கல... ஆனா, என்ஜின் நம்பரை வெச்சு, ஓனர் யாருனு செக் பண்ணோம். அந்த வண்டி கே.ஜி. டெலிவிஷன்னு உங்க சேனல் பேர்லதான் பதிவாகியிருக்கு!”

“வ்வாட்..?” - கிரிதர் தன் உதவியாளரைத் திரும்பிப் பார்த்தார். “ஆனா, அந்தக் கார் திருடு போயிடுச்சுனு பத்து நாளைக்கு முன்னால நீங்க லோக்கல் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் குடுத்து இருக்கீங்க...” “வெல்... நம்ப டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்டுக்கு இவரைக் கூட்டிட்டுப் போங்க...” என்று கிரிதர் தன் உதவியாளரிடம் சொன்னார். லிஃப்ட்டில் ஏறி மாயமானார்.

கே.ஜி டெலிவிஷனின் வாகனங்களைப் பராமரிக்கும் துறையில் சந்திரமோகனுக்கு மேலும் விவரங்கள் கிடைத்தன. “அந்தக் காரு எங்க புரோகிராம் எக்ஸிக்யூடிவ் முரளிதரனுக்கு சேனல்ல குடுத்த கார். ஹோட்டல்ல லன்ச் வாங்கிட்டு வர்றதுக்காக டிரைவர் எடுத்துட்டுப் போயிருந்தார். போன இடத்துல வண்டி காணாமப் போயிருச்சு. போலீஸ்ல உடனே கம்ப்ளெயின்ட் குடுத்தோம்...”

“டிரைவர் பேரு..?” “பிரகாஷ்..!” “அரவமணி நல்லூருக்கு இன்னோவா ஓட்டிட்டு வந்தவரா..?” “அவரேதான் சார்!” அடுத்து பிரகாஷ் வரவழைக்கப்பட்டு, அவரிடம் கேள்விகள் வீசப்பட்டன. “சார், ஹோட்டல் வாசல்ல பார்க்கிங் இல்லன்னு, பக்கத்து சந்துல நிறுத்திட்டுப் போயிருந்தேன். சாப்பாடு வாங்கிட்டு வந்து பார்த்தபோது, வண்டியைக் காணும் சார்...”

“சாவியை வண்டில விட்டுட்டுப் போயிருந்தீங்களா..?” “இல்ல சார்! ஒரிஜினல் சாவி இன்னும் எங்ககிட்டதான் இருக்கு. டூப்ளிகேட் சாவி தயார் பண்ணி தூக்கிட்டாங்கனு தோணிச்சு...” “உங்க சேனல்ல யார் மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கா..?” “இல்ல, சார்..!” “விஜய் எப்படி..?” “நல்ல பையன் சார்...” “நீங்கதான் விஜய்க்கும், கல்யாணிக்கும் அடிக்கடி வண்டி ஓட்டுவீங்கனு கேள்விப்பட்டேன். அவங்களுக்குள்ள உறவு எப்படி..?”

“ரொம்ப நல்லாப் பழகுவாங்க சார்! ஒருத்தரை ஒருத்தர் கேலி பண்ணிக்கிட்டு, காலை வாரிக்கிட்டு, கலகலனு இருப்பாங்க!” “வேற கசமுசா..?” “நீங்க கேக்கறது எனக்குப் புரியுது சார். தொட்டுப் பேசுவாங்க... ஒருத்தரை ஒருத்தர் கிள்ளிப்பாங்க... துரத்திப் பிடிச்சு விளையாடுவாங்க... ஆனா, தப்பா நெனைக்கத் தோணாது, சார்!” சந்திரமோகன் யோசனையுடன் தலையை ஆட்டினார்.

கா ஃபி ஷாப். விஜய்யின் முகத்தில் சிறு கோபம் தெரிந்தது. எதிரில் நந்தினி தன் நகங்களை ஆராய்ந்துகொண்டிருந்தாள். “சுத்தி வளைக்காம கேளு, நந்து... என்ன உன் சந்தேகம்?” “டேய்! கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காத. கல்யாணி வயித்துல இருந்த கரு, நாப்பது நாளுனு சொல்றாங்க. கிட்டத்தட்ட நாப்பது நாளைக்கு முன்னால, நீயும் அவளும் வெளியூர் போயிருந்தீங்க... அதனால கேக்கறேன்!” விஜய்யின் முகம் சிவந்தது.

“என்னை சந்தேகப்படறியா, நந்து..? நாப்பது நாள் கருனு சொன்னா, கரெக்டா நாப்பது நாளைக்கு முன்னால உருவாச்சுனு அர்த்தமா..? என்னவோ காலண்டர்ல தேதி குறிச்ச மாதிரி பேசற..?” “ஒரு கேள்வி கேட்டா, பதில் சொல்லாம ஏன் எதிர்க் கேள்வி கேக்கறே..? உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது..? இல்லனு சொல்லிட்டுப் போயேன்..!” பதில் சொல்லாமல் விஜய் பட்டென்று எழுந்தான். விடுவிடுவென்று கடையைவிட்டு வெளியில் நடந்தான்.

“ஸாரிடா! உன்னை சந்தேகப்பட்டது தப்புதான்... அதுக்கு தண்டனையா எத்தனை முத்தம் குடுக்கணும்னு சொல்லு...” என்று அவன் உதடுகளை நந்தினி நெருங்கும்போது, அவன் கனவிலிருந்து தட்டி எழுப்பப்பட்டான். “விஜய், உன்னைத் தேடி போலீஸ் வந்திருக்கு..!” என்று அவன் அம்மா பதறிக்கொண்டு நின்றிருந்தாள். “போலீஸா..?” விஜய் உறக்கம் முற்றிலும் கலைந்தவனாக எழுந்து அமர்ந்தான். ஹாலில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் காத்திருந்தார். சீருடையில் வராமல் டி ஷர்ட்டில் வந்திருந்தார்.

“போய் பல்லு வெளக்கிட்டு, காபி குடிச்சிட்டு, வாசல்ல ஒரு அம்பாசிடர் காத்துக்கிட்டு இருக்கு பாருங்க. வந்து அந்த வண்டில ஏறுங்க, விஜய்...” என்றார் அவர். “எதுக்கு சார்..?” “கல்யாணி கொலை வழக்குல சந்தேகத்தின் பேர்ல உங்களைக் கைது செய்ய வந்திருக்கேன்..!” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஓவியம் : அரஸ்

(தொடரும்...)

‘‘முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கும் அளவுக்கு எங்கள் கட்சிக்குப் பேராசை கிடையாது. ஆதலால் சட்டசபை எதிர்க்கட்சி வேட்பாளரை மட்டும் அறிவிக்க உள்ளோம்...’’



‘‘உங்களுக்கு எலெக்‌ஷன்ல நிக்கறதுக்கு சீட் கொடுத்து, ஜெயிச்சதும் எதிர்க்கட்சிக்குத் தாவிடாம இருப்பீங்களா?’’
‘‘ரொம்ப ரொம்ப கற்பனை பண்றீங்க தலைவரே!’’

‘‘எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வரும் கட்சிக்கு 233 தொகுதிகளை ஒதுக்கத் தயாராக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்...’’
- கோவி.கோவன்,சென்னை-107.