ஊழல் மின்சாரம்!



அ.தி.மு.க.வின் 60 ஆயிரம் கோடி ஊழலைப் பேசும் ஆவணப்படம்

சூரியன் உதிப்பதில் இருந்து துவங்குகிறது ஆவணப்படம். ‘‘1991ல்  ஏற்பட்ட மின்பற்றாக்குறையால் மின் உற்பத்தியில் முதலீடு செய்யப் பணம் இல்லை என்றன மத்திய, மாநில அரசுகள். இனி தனியாரிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று ‘சந்தை கொள்முதல் கொள்கையை’ மத்திய அரசு உருவாக்கியது.



அந்தக் கொள்கைதான் இன்று ஊழலுக்கு மாபெரும் அச்சாரமாக அமைந்துவிட்டது’’ என ஆதாரங்களை அடுக்கிச் செல்லும் இந்த ஆவணப் படத்தின் பெயரே ‘ஊழல் மின்சாரம்’! கடந்த ஆட்சிக்காலம் முழுக்க தமிழக மின்துறையில் நடந்த ஊழல்களை புட்டுப் புட்டு வைக்கும் இப்படியோர் ஆவணப்படத்தை ‘தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பை’ச் சார்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருப்பது பெரும் ஆச்சரியம்!

‘‘44 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த ஆவணப்படத்தை கடந்த ஏப்ரல் 2ம் தேதியே வெளியிடத் திட்டமிட்டு இருந்தோம். தேர்தல் நேரத்தில் ‘ஊழல் மின்சாரம்’ வெளி வந்தால் தமது ஸ்டிக்கர் முகம் கிழிந்துவிடும் என்ற பயத்தில் பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்துத் தடுத்தனர் ஆளும் கட்சியினர். அடுத்து 10ம் தேதி வெளியிட முயற்சித்தோம். தேர்தல் ஆணையமும் சேர்ந்து கை கோர்த்து முட்டுக்கட்டை போட்டது. இப்போது மக்கள் மன்றத்தைத்தான் நம்பி உள்ளோம் தேர்தலுக்குள் மக்களிடம் இந்த ஆவணப்படத்தை கொண்டு சேர்க்க வேண்டும்!’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் பொறியாளர் சா.காந்தி.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய்க்கும் குறைவுதான். அதுவும் நீர்மின் நிலையங்களில் உற்பத்திச் செலவு, யூனிட்டுக்கு வெறும் 50 பைசாதான். இதேபோல அரசே மேலும் பல மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தால், குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும்; மின் தட்டுப்பாட்டையும் போக்க முடியும். ஆனால், இதில் ஆள்பவர்களுக்கு கமிஷன் கிடைக்கப் போவதில்லை. ‘தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்காகவே அரசு மின் உற்பத்தித் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன’ என ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது இந்த ஆவணப்படம்.

‘‘தமிழகத்தில் 7,327 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் உள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.10 பைசாவிற்குக் கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாகக் கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது இந்த அரசு. ‘எங்களிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிஷன் தரவேண்டுமென்று மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுகின்றனர்’’ என குற்றம் சாட்டியுள்ளனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.

அத்துடன் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனே ஒரு முறை மேடையில் கூறியிருந்தார், ‘குறைந்த விலை கொடுத்து வாங்க வேண்டிய மின்சாரத்தை அதிக விலை கொடுத்துத்தான் வாங்கியுள்ளோம்’ என்று. 2008ம் ஆண்டில் தி.மு.க. அரசு அறிவித்த புதிய மின் உற்பத்தித் திட்டப்படி, மின் நிலையங்கள் தொடங்குவதற்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வேலை தொடங்கப்பட்டு 2011ம் ஆண்டில் முடிவடைந்திருக்க வேண்டிய, வட சென்னை அனல் மின் நிலையம், மேட்டூர் அனல் மின் நிலையம் மற்றும் காட்டுப்பள்ளி மின் நிலையம் ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2014ல்தான் உற்பத்தியைத் தொடங்கின. காரணம், அதுவரை தனியார் மின்சாரத்தை வாங்கி ஊழல் செய்யலாமே என்ற கணக்குதான்.



இவை தவிர, எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம், வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம், உப்பூர் அனல் மின் நிலையம் ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களைத் தொடங்கிவிட வேண்டிய நிலையில்தான் 2011ல் இருந்தது தமிழகம். இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக  கிடப்பில் போடப்பட்டு விட்டன. ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதில் தாமதம், அதைத் திறப்பதில், செயல்படுத்துவதில், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என எவ்வளவு முடியுமோ, அவ்வளவு இழுத்தடிக்கப்பட்டது.

2012லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம், முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒரே காரணத்தால் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருப்பது மின்துறையில் நிலவும் பகல்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும். இதற்காக பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது தி.மு.க அரசு. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிஷனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது அ.தி.மு.க அரசு’’ - இப்படி பல வண்டவாளங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது இந்த ஆவணப்படம்.

4 ரூபாய் சந்தை மதிப்புள்ள ஒரு யூனிட் மின்சாரத்தை, தமிழக அரசு 7 ரூபாய் 01 காசுக்கு அதானி நிறுவனத்திடமிருந்து சூரிய மின்சாரமாகக் கொள்முதல் செய்கிறது. இதில்  60 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி, கருணாநிதி தொடங்கி ராமதாஸ், இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்னைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தையாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக ஆவணப்படத்தில் குற்றஞ் சாட்டியிருக்கும் சா.காந்தி, அவற்றைத் தனது குரலிலேயே பதிவும் செய்துள்ளார். ஆக, ‘கொள்முதல் மின்சாரம்’ என்பது ஊழல் செய்ய வசதி யாகத் தனியாரிடம் வாங்குவது தான் என நிறுவியிருக்கிறது இந்தப் படம்.

2012ல் மூடப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள்:

குற்றாலம் எரிக்காற்று மையம் - 101 மெகாவாட்
வழுதூர் முதல் மின் நிலையம் - 96 மெகாவாட்
வழுதூர் இரண்டாம் மின் நிலையம் - 92 மெகாவாட்
தாமதப்படுத்தப்பட்ட அரசு மின் நிலையங்கள்:
உடன்குடி மின் நிலையம்  - 1300 மெகாவாட்
உப்பூர் மின் உற்பத்தி நிலையம் - 1320 மெகாவாட்
காட்டுப்பள்ளி மின் உற்பத்தி நிலையம் - 320 மெகா வாட்
வட சென்னை (3.pash) - 800 மெகாவாட்
எண்ணூர் விரிவாக்கம் - 660 மெகாவாட்

அரசு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் தனியார் மின் நிலையங்கள்:

ISFC பரங்கிப்பேட்டை - 600 மெகாவாட்
Gostel Energen - 1200 மெகாவாட்
OPG power generation - 450 மெகாவாட்
இந்து பாரத் பவர் ஜெனரேஷன்  - 150 மெகாவாட்
இந்து பாரத் தெர்மல் பவர் - 450 மெகாவாட்

இந்திய மாநிலங்கள் அதானி நிறுவனத்திடம் வாங்கும் ஒரு யூனிட் சூரிய மின் சக்தியின் விலை:

மத்தியப் பிரதேசம் - 5 ரூபாய் 05 பைசா
ஆந்திரப் பிரதேசம் - 4 ரூபாய் 64 பைசா
ராஜஸ்தான்  - 4 ரூபாய் 34 பைசா
தமிழ்நாடு -  7 ரூபாய் 01 பைசா

- புகழ் திலீபன்