நியூஸ் வே



* பிரபல பாப் பாடகர் பிரின்ஸ் 57 வயதில் தனது வீட்டில் திடீரென இறந்து கிடந்தது இசை ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அவரது மரணச்சூழல் குறித்த செய்திகள் அதைவிட அதிர்ச்சி ரகம். உடல்நலக் கோளாறு ஏதுமில்லை என்றாலும் ஏராளமான மாத்திரைகளைச்சாப்பிடுவாராம் அவர். பதற்றத்தைத் தடுக்கவும், தூக்கத்தைத் தவிர்க்கவும் எடுத்துக்கொண்ட மாத்திரைகள்தான் அவரைக் கொன்றன என்கிறார்கள். இறப்பதற்கு முன்பு தொடர்ச்சியாக 154 மணி நேரம் - அதாவது ஆறரை நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறார் அவர். தூங்காமல் வேலை பார்ப்பது ஆபத்து என்பதை, தன் உயிரைக் கொடுத்து உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் பிரின்ஸ்.



* நடிகர் சங்க வளாகத்திலேயே தனது படங்களின் பூஜையைத் தொடங்கிவிட்டார் கமல். 1989ல் மலையாளத்தில் கமல், ஊர்மிளாவை வைத்து ‘சாணக்யன்’ படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் நீண்ட இடைவெளிக்குப் பின், கமலை இயக்குகிறார். மலையாளம், தமிழில் ஒரே நேரத்தில் படம் ரெடியாகிறது.

* விளையாட்டுக் களத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே மாநிலங்களவை எம்.பி. ஆகியிருக்கிறார், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். ‘‘பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா என்னை நேரில் வரச் சொல்லி அழைத்தபோது, ஏதோ வாழ்த்து சொல்ல கூப்பிடுகிறார் என்றே நினைத்தேன். இந்த விஷயத்தைச் சொன்னபோது இன்ப அதிர்ச்சி. நான் எல்லா விளையாட்டு வீரர்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் பேசுவேன்’’ என்கிறார் மேரி கோம்.

* இறுதிச்சுற்று’க்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கிறார் மாதவன். மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடித்த ‘சார்லி’யை ரீமேக் செய்கிறார்கள். ஹீரோயினாக  அனேகமாக ஒரிஜினல்மேக்கில் நடித்த பார்வதி மேனனிடமே பேசி வருகிறார்கள் எனத் தகவல்.

* விஜய் நடிக்கும் 60வது படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கே அவரின் ஓப்பனிங் பாடலோடு ஆரம்பமாகிறது. பாடலுக்கு நடனம் தினேஷ். ஆனால், பாடல் வரிகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

* கபாலி’யை முடித்துவிட்டு இந்தியில் ‘போபியா’ பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் ராதிகா ஆப்தே. ‘‘இது ஒரு சைக்காலஜிகல் த்ரில்லர். வெளி உலகைக் கண்டு பயந்து போய் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பெண்ணாக நடிச்சிருக்கேன். சமீபத்தில் ரிலீஸான அதன் டீஸர் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது!’’ என்கிறார் ராதிகா.

* சூர்யா சுற்றுச்சூழல் பற்றிய செய்திகளுக்காகவும் விழிப்புணர்வுக்காகவும், ‘யாதும்’ என்கிற மாத இதழைத் தொடங்கப் போகிறார். அதில் நிச்சயம் சினிமா செய்திகள் இடம்பெறாது!



* அடுத்த வருடம் ஜனவரி 2017 முதல் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் அவசர உதவிக்கென ஒரு பட்டன் இருக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை.  இதற்காக, 5 அல்லது 9 எண்களை அவசர பட்டன்களாக வைக்க எண்ணியிருக்கின்றன செல்போன் நிறுவனங்கள். அதே போல், ‘2018 முதல் எல்லா செல்போனிலும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கட்டாயம் உள்ளடங்கி இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இவை எல்லாம், ஆபத்தை சந்திக்கும் பெண்களுக்கு நிச்சயம் உதவிகரமாக அமையும்!

* சசிகுமாருக்கு மறுபடியும் கிராமத்துக் களம்தான். ‘கிடாரி’ என குட்டித்தலைப்பில் புயல் கிளப்பப் போகிறார்கள். வசந்தபாலனின் உதவி இயக்குநர்தான் படத்தின் டைரக்டர்.

* பிரபு சாலமனின் ‘தொடரி’ பட டப்பிங்கை ஒரே நாளில் முடித்துக் கொடுத்துவிட்டார் தனுஷ். இது ஒரு புது சாதனை என்கிறார்கள் தெரிந்தவர்கள்.

* அனிருத்தின் இசை நிகழ்ச்சி துபாயில் நடக்கிறது. இதற்காக இப்போதே துபாய் பறந்துவிட்டார் அனிருத்.

* 2.0 பட வில்லன் சுதன் பாண்டே பேட்டியால் எரிச்சலில் இருக்கிறார் ஷங்கர். முதல் பாகத்தில் வந்த ‘டேனியின் மகனாக நானே நடிக்கிறேன். நான்தான் அக்‌ஷய்குமார் ரோபோவை உருவாக்குவேன்’ எனப் படத்தின் ஒன்லைனை போட்டு உடைத்துவிட்டார். அடுத்த தடவை ஷூட்டிங் போனால் காய்ச்சி எடுக்கப் போகிறார் ஷங்கர்.

* கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்து வரும் ‘ராஜகுமாரா’ பட ஷூட்டிங்கிற்காக ஆஸ்தி
ரேலியா பறந்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.

* பதினைந்தாவது ஆண்டாக கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறார் ஐஸ்வர்யா ராய். வேறெந்த பிரபலத்துக்கும் கிட்டாத பெருமை இது!

* மதுவிற்கு தடை விதிக்கப்பட்ட இருபத்திமூன்று நாட்களிலேயே 27 சதவீத கொடிய குற்றங்களைத் தடுத்திருக்கிறதாம் பீகார் அரசு! கடந்த ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடும்போது 3,178 என இருந்த குற்றங்கள் இப்போது 2,328 எனக் குறைந்துள்ளன. சாலை விபத்துகளும் ெவகுவாகக் குறைந்திருக்கின்றன.