கவிதைக்காரர்கள் வீதி



கலைந்த வாழ்க்கை
தொலைந்த உறக்கம்
கிராமத்துக் காதலியின்
திருமணம்
வர முடியாத திருவிழாக்கள்
ஊர்ப் பெருசுகளின் தெரியப்படுத்தாத
கடைசி விடைபெறல்கள்

கலந்துகொள்ள முடியாத
வகுப்புத் தோழர்களின் திருமணங்கள்
அம்மாவுக்கு அருகேயான
இரவு உறக்கம்

அப்பாவுடன் மாதம் ஒருமுறையேனும்
மலைக் கோயில் பயணம்
என்ன அவசர வேலையிருந்தாலும்
அது தவிர்த்து விளையாடும்
ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் போட்டிகள்
பெரிய வாய்க்காலுடனான
மத்தியான நேரத்து
நீச்சல் சிநேகங்கள்
வேப்ப மரத்துக் குயிலின்

தினசரி இசைக் கச்சேரி
கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி
காதலிக்கும் நட்சத்திரங்கள்
மொட்டை மாடித் தனிமைக்கு
வர்ணமடித்துவிடும் வெண்ணிலா

கிழக்கு வீதிக்காரியின்
ஜன்னல் விழிகள்
என
என
எல்லாம் தொலைந்துபோனது
நானும் தூரத்துப் பெருநகரில்
கைநிறைய சம்பளத்தோடு
வேலையில்...

 சௌவி