திறமைசாலி விமல்... விவசாயி பிரகாஷ்ராஜ்!



நான் உங்கள் ரசிகன் 35

நான் தயாரிச்ச ‘சதுரங்க வேட்டை’க்குப் பிறகு நடிப்பிலும் சீரியஸா கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார் ஒளிப்பதிவாளர் நட்டி. சந்தோஷமா இருக்கு. இந்த நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியத்தை, ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமியிடம் அசோசியேட் கேமராமேனா இருக்கும்போதே தெரியும்.

என்னுடைய, ‘எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’, ‘சிறைப்பறவை’ படங்களில் எல்லாம் இணை ஒளிப்பதிவாளரா நட்டி வொர்க் பண்ணியிருக்கார். அதன் பிறகு அவர் மும்பை போயிட்டார். கொஞ்ச நாள்ல, ‘நட்டி இஸ் எ காஸ்ட்லியஸ்ட் கேமிராமேன் இன் பாம்பே’னு கேள்விப்பட்டேன்!

இந்தியில் பிரபலமா இருக்கும் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும், நட்டியும் நெருங்கிய நண்பர்கள். ஆனாலும் நட்டிக்கு சினிமாவில் நடிக்கணும்ங்கற ஆர்வம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. இயக்குநர்கள் ராசுமதுரவன், ரவிமரியா போன்றவங்கல்லாம் நட்டியோட ஆசையை நிறைவேத்தி வச்சாங்க.

‘சதுரங்க வேட்டை’ கதையை இயக்குநர் வினோத் என்கிட்ட சொன்னார். ‘‘ஹீரோ யாருப்பா? இப்போ இருக்கற ஹீரோக்கள் யாரும் இதைப் பண்ண மாட்டாங்களேப்பா..?’’னு கேட்டேன். ‘‘எனக்கு நட்டிதான் பொருத்தமா இருப்பார்’’னு வினோத் சொன்னதும், நட்டிகிட்ட பேசினேன். உடனே ஒப்புக்கிட்டு நடிச்சுக் கொடுத்தார். அவருக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!

கூத்துப்பட்டறையில் வெறும் நடிப்பு மட்டுமில்லாமல் இசை, நடனம்னு எல்லாத்தையும் தேர்ந்து கத்துக்கிட்டவர் விமல். ‘களவாணி’யில இயக்குநர் சற்குணம், விமலுக்குப் பொருத்தமான கேரக்டர் கொடுத்திருப்பார்.

ஆனா, ஏன்னு தெரியல... அதுக்குப் பிறகு விமலுக்கு அப்படி கேரக்டர் அமைய மாட்டேங்குது. கூத்துப்பட்டறையில் இருந்து வெளிவந்த பசுபதி, விஜய்சேதுபதி எல்லாம் ‘விமல் ரொம்பத் திறமைசாலி’னு பாராட்டுறதைக் கேட்டிருக்கேன். அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரணும்னு விரும்புறேன்.

விமல் மாதிரியேதான் சிபிராஜும். உண்மையிலேயே ரொம்ப திறமைக்கார தம்பி. தன்னோட சொந்தத் தயாரிப்பில் நாய்க்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலம் தன் திறமையை வெளிக்கொணர்ந்தார். சரியான வாய்ப்புகளும் சப்ஜெக்ட்டும் அமைஞ்சா மீண்டும் அவர் பெரிய ரவுண்டு வருவார்.

என்னுடைய அடுத்த படமான ‘பாம்பு சட்டை’யில் பாபி சிம்ஹா ஹீரோ. அவர் தேசிய விருது வாங்கினதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ‘இறைவி’க்குப் பிறகு பாபியும் உச்சம் தொடுற வாய்ப்புகள் இருக்கு.

அடுத்ததா ஜெய். ‘எங்கேயும் எப்போதும்’ மாதிரி திடீர்னு ஒரு நல்ல படம் கொடுப்பார். அப்புறம் அவருக்கு நாலஞ்சு படங்கள் சரியா போகாது. இதனால மனிதர் ரொம்பவே சோர்ந்து போயிடுவார். மறுபடியும் ஒரு படம் ஹிட் ஆகும். ‘ராஜா ராணி’யில ஜெய் கலக்கியிருந்தார். ஆனா, அதன் பிறகு அவர் சுணக்கம் ஆகிடுறார். அதைத் தவிர்க்கணும். எங்கள மாதிரி இயக்குநர்கள், சக நடிகர்கள்கிட்ட தொடர்பில் இருங்க ஜெய். நீங்க முன்னணியில ஒரு நாள் கண்டிப்பா வருவீங்க!

எனக்கு ரொம்பவும் பிடிச்ச கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள் பத்தியும் சொல்லியாகணும். குணச்சித்திர, காமெடி கேரக்டர்கள்ல  எப்பவும் அசத்துறவர் டெல்லி கணேஷ் அண்ணா. அவரை ‘வாழும் ரங்காராவ்’னு கூட சொல்லலாம். மனிதநேயமிக்க அருமையான மனிதர்.  டெல்லி அண்ணா,  கமல் காம்பினேஷன்னா சக்சஸ் கேரன்டி. ரெண்டு பேரோட பாடி லாங்குவேஜும் பிரமாதப்படுத்தும். ‘அவ்வை சண்முகி’யில வாய் பேச முடியாத நாசரை வேலைக்கு  சேர்க்கற பொறுப்புல டெல்லி அண்ணா இருப்பார். அப்போ அவர் பர்ஃபார்மென்ஸ்... யப்பா!

தொடர்ந்து மூணு வாரம், நாலு வாரம்னு எங்காவது  ஷூட்டிங் போனோம்னா, நல்ல சாப்பாடு இல்லாமல் நமக்கு நாக்கு செத்துப் போயிடும்.  ஆனா, டெல்லி கணேஷ் அண்ணா இருந்தா எங்களுக்கு கவலை இல்லை. ‘‘உனக்கு என்ன  வேணும்? வத்தக்குழம்பா? அவனுக்கு மீன் குழம்பா? பொறுங்க! எல்லாத்துக்கும்  ஏற்பாடு பண்றேன்!’’னு சொல்லிடுவார்.

அவுட்டோர் ஷூட்டிங்ல கூட அக்கம்  பக்கத்து வீட்டு மாமிகள்கிட்ட, ‘இன்னிக்கு உங்க ஆத்துல என்ன சாப்பாடு?’னு  கேட்டுப் பழகிடுவார். அவங்களையே எங்க எல்லாருக்கும் சாப்பாடு கொண்டு வர வச்சிடுவார்.

அந்தக் காலத்தில் இப்படி ஒரு பண்பு, மேஜர் சுந்தர்ராஜன்  சார்கிட்டதான் இருந்திருக்குனு சொல்வாங்க. ஒவ்வொரு விஷயமும் பண்றதுக்கு  முன்னாடி, ‘‘மனோ... அப்படிப் பண்ணலாமா? இப்படிப் பண்ணலாமா?’’னு கேட்பார். அவர்  மகனை ஹீரோவா அறிமுகப்படுத்தி, ‘என்னுள் ஆயிரம்’னு கூட இப்போ படம்  தயாரிச்சிருந்தார்.

அதுல அவருக்கு வருத்தங்கள் அதிகம் இருந்தாலும் அந்தப்  படத்தை தயாரிக்கறதுக்கு முன்னாடியும் என்கிட்ட கருத்து கேட்டார். ‘‘அண்ணா,  சினிமாவில் சூழல் இப்போ சரியா இல்லை. இது வேணுமாண்ணா?’’னு அவர்கிட்ட கேட்டேன். ‘‘என்ன பண்றது? அவன் கேக்குறானே! என்ன பண்ணட்டும்?  பண்றேன்!’’ன்னார். படமும் தயாரிச்சார். அண்ணாவோட எல்லா விஷயங்களிலும் நானும்  கூட இருந்திருக்கேன்றது எனக்கு பெருமை.

அடுத்ததா, பிரகாஷ்ராஜ். அவர் கூட எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். நாங்க சந்திக்கறபோதெல்லாம் நல்ல சினிமாக்கள் பத்தி பேசிட்டிருப்போம். ராதாமோகன் மாதிரி இயக்குநர்களை தொடர்ந்து ஊக்குவிக்க நினைக்கறவர்.

ஒரு சாதாரண படமா இருந்தாலும், தன் கேரக்டரால அந்தப் படத்தை அப்படியே தூக்கி நிறுத்திடுவார். அதனாலதான் ஆயுத பூஜை அவல்பொரி மாதிரி நேஷனல் அவார்டை எப்போதும் அள்ளிக்கிட்டே இருக்கார். நம்ம ஊர்ல ஒரு பெரிய கமர்ஷியல் படம் பண்ணுவார்.

அதே டைம்ல கன்னடத்தில போய் ஒரு சின்ன படம் பண்ணிக்கிட்டிருப்பார். திடும்னு ஒரு நாள், ‘‘45 நாள் நான் இங்கே இருக்க மாட்டேன். மனசுக்கு இதமான கதை ஒண்ணு மாட்டியிருக்கு. நான் போயிட்டு வந்திடுறேன்!’’னு சொல்லிட்டு எங்காவது ஒரு மொழியில படம் பண்ணிட்டிருப்பார். அவருக்கு நேரம் கிடைக்கும்போது அவரோட பண்ணை வீட்டுக்கு வந்திடுவார்.

நான், ராதாமோகன், குமாரசாமினு எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைப்பார். அவரோட பண்ணையில் காய்கறிகள், பழங்கள்னு எல்லாமே இயற்கை உரம் போட்டு வளர்க்கிறார். அப்படியே அச்சு அசல் விவசாயியா... அங்கே வேற ஒரு பிரகாஷ்ராஜை பார்க்க முடியும்.

பிரகாஷ்ராஜ் மாதிரியே பசுபதியும் கிடைச்ச கேரக்டரை சிறப்பா பண்றவர்.  ‘தூள்’ல வில்லனா மிரட்டினது இன்னும் எல்லாருக்கும் நினைவிருக்கும். கூத்துப்பட்டறையில இருந்து வந்தவர் என்பதை நடிப்பில் உணர்த்திடுவார்.

ஆனா, அவரோட பர்சனல் கேரக்டர் வேற. பசுபதியும் பிரகாஷ்ராஜ் மாதிரி சென்னையை விட்டு கொஞ்ச தொலைவில் ஒரு பண்ணை வீடு வச்சு, இயற்கையோடு இயைந்து வாழ்றார். நடிகர் சங்கத் தேர்தல்ல கூட பசுபதி முக்கியமான பொறுப்பு எடுத்து பண்ணினார். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கூட நாட்டுப்புறக் கலைகள், மேளதாளக் கச்சேரிக்கு ஆணிவேரா இருந்தவர் பசுபதிதான்.

உனக்கு என்ன  வேணும்?
வத்தக்குழம்பா? அவனுக்கு மீன் குழம்பா? பொறுங்க! எல்லாத்துக்கும்  ஏற்பாடு பண்றேன்!’’னு சொல்லிடுவார் டெல்லி கணேஷ்.

(ரசிப்போம்...)

தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்

மனோபாலா