சக்திஜோதி In Download மனசு!



மீட்க விரும்பும் இழப்பு

நான் அப்பா, அம்மாவோடு இருந்த அந்த வாழ்க்கையைத்தான் மீட்க விரும்புகிறேன். அம்மாவிற்கு மகளாய், அக்காவிற்கு தங்கையாக பேரானந்தமான வாழ்வு அது. அதுல ஒரு இன்னசென்ஸ் இருக்கும். எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எதிலும் நாமாக சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதின் சுகம்... அதெல்லாம் நிச்சயமாக சந்தோஷம்!

இப்போது முடிவெடுப்பதில் என் பங்குதான் அதிகம். முடிவெடுப்பது எப்போதும் கொஞ்சம் சிரமம். பால்யத்தில் எதுவும் தெரியாமல் இருந்த அந்த இடத்தைத்தான் விரும்புகிறேன். அறிவுக்கு உட்பட்டு, அலசிப் பார்த்து, எதிரே இருக்கிற மனிதர்களை எடை போடாமல், களங்கமற்றுப் பழகுகிற அந்த வாழ்க்கைதான் நான் திருப்பிக் கேட்பது.

எப்போதும் வேண்டுவது அன்பு செலுத்துவதுதான் கடினம். அதனால்தான் எல்லா மதங்களும் அன்பை போட்டி போட்டுக்கொண்டு பேசுகின்றன. எவ்வளவு சிரமம் வந்தாலும் நேசிப்பைக் கைவிடாமல் இருக்கிற மனப்பாங்கை எப்பவும் விரும்புகிறேன். யாரையும் அறிந்து நிந்தித்தது கிடையாது. எல்லா நேரமும் நேசிப்போடு இருப்பது யதார்த்தமான வாழ்க்கை கிடையாது என்றாலும் கூட, அதிலிருந்து மாறுபடத்தான் உண்மையாக விரும்புகிறேன்.

திருமணம்என்னுடையது காதல் திருமணம். இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு. அதே ஊரில் போராட்டத்தோடு வாழ்ந்தோம். ‘என்னை ஏன் என் மாமனார் வேண்டாம் என்று சொன்னார்’ என்பது மனதில் குத்திக்கொண்டே இருந்தது. என்னை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆனால் என் மாமனார் இறந்த பிறகு, அது போய்விட்ட மாதிரி இருந்தது.

நான் சுயமாக முன்னேறுவதற்கு, என்னை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் எதிரே இருப்பது வேண்டியதாக இருந்தது. நான் வளர்ந்ததை மாமனாருக்கு எதிராகச் செய்ததாகவே நினைத்து விட்டேன். மரணப்படுக்கையில், ‘‘இப்படி ஒரு மருமகளைத் தவறவிட இருந்தேனே’’ என்று அவர் சொன்னதாக உறவினர் பலர் என்னிடம் மாய்ந்து மாய்ந்து பகிர்ந்தார்கள்.

தன்னைவிட தன் மனைவி எதிலும் பெரியவளாக இருக்கக் கூடாது என நிறைய பேர் விரும்புகிறார்கள். அப்படி அமைந்தால் புருஷர்களோட position is challenged என்று பயப்படுகிறார்கள். என் கணவர் அப்படியல்ல. என் அன்பிற்கான விதையை சக்திவேல் விதைத்திருக்கிறார். நான் எதிர்பார்த்த அன்பு, பாசம், கணவர்... அதைவிட என் தந்தை, என் மூத்த பிள்ளையும் அவர்தான். இந்த இரண்டு பெரிய உறவையும் இட்டு நிரப்பியது மாதிரி திருப்தி. என் வீட்டிலேயே அப்பாவும், மூத்த பிள்ளையும், கணவருமாக ஒருத்தரே இருக்கிறார். சிறப்பல்லவா!

எதிர்பார்ப்பு

என்னிடம் எதிர்பார்ப்புகள் இல்லை. என்னால் கொடுத்துவிட்டுப் போகத்தான் முடியும். குறைந்தபட்சம் ஒரு நல்ல சொல்லாவது பரிசளிப்பேன். உணவு பரிமாறுகிற சர்வர் முகம் வாடியிருந்தால்கூட என்னால் அவரிடம் பேசாமல் வரமுடியவில்லை. பரிதவிக்கிறவர்களுக்கான ஆறுதல் வார்த்தைகளும், முடிந்த உதவிகளும் என்னிடம் எப்போதும் தருவதற்குத் தயாராக இருக்கின்றன.

பாதித்தது

சென்னையில் பெய்த ஒரு வார மழை. கிட்டத்தட்ட முழு நாளும் தொலைக்காட்சிக்கு முன்னாலேயே இருக்க வேண்டிய நிலை. மக்கள் கையறு நிலையோடு இருந்த தவிப்பு... வசதி, வசதியில்லை என்ற நிலையெல்லாம் தாண்டி, பொங்கிப் பெருகிய மனிதாபிமானம்... வாழ்க்கையின் நிரந்தரமின்மை... என எல்லாமே புரிந்த இடம் அது. அன்பு தேவைப்பட்டு, உணவே அரிதாகி தவித்த வசதியான மக்கள். நம்மால் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனம். ‘வாழ்க்கையே புதிரானது’ என சொல்லிக் கொடுத்த பாடம்.

குடும்பம்

 ‘நான் என் 14 வயதில் எப்படி இருந்தேனோ, அந்தப் பருவத்தை அப்படியே நமது பெண்ணும் கடப்பாள்’ எனப் பெற்றோர் நினைக்க வேண்டும். ஆணாக இருந்தால், ‘17 வயதில் டீக்கடையில் உட்கார்ந்து ஒரு பெண்ணைப் பார்த்திருந்தால், நம்ம பையனும் கிட்டத்தட்ட அதே இடத்தில் நிற்பான்’ என உணர வேண்டும். ‘என் பையன் தப்பே பண்ணமாட்டான்’ எனச் சொல்லக் கூடாது.

15 வயதில் தெருமுனையில் நின்று, அல்லது எதிர்வாசலில் வைத்து ஒருத்தர் பார்க்கிறார் அல்லது ரசிக்கிறார் என்பதை பெண்கள் உணரத்தான் செய்வார்கள். பத்து பேர் பார்ப்பதில் எட்டு பேர் பார்ப்பது எரிச்சலைத் தரும்; ஒருவரோ, இருவரோ பார்ப்பது ரசனைக்குரிய விஷயமாகப் படும். அந்த இடத்தை சாமர்த்தியமாகக் கடந்து அடுத்த இடத்திற்குப் போக, நம் பெண்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்.

சம்பிரதாயமான நம் மண வாழ்க்கையில் ஆணுக்கும், பெண்ணுக்குமான பொறுப்புகள், கடமைகள் எனச் சுமைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. நான் கனவு கண்டது எந்தவித ஈகோவும் இல்லாமல் இரண்டு சிட்டுக் குருவிகள் போல் கூடி வாழ்வது... வேலைகள் உண்டு; ஆனால், அட்டவணைகள் கிடையாது.

ஒருவர் மேல் மற்றவருக்கு இருக்கும் அன்பும், அக்கறையும் இணைந்து, அவரவர் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் ஓர் உறவு முறை, பகிர்வு. ஒரு கத்தல் இல்லை, கூச்சல் இல்லை, குற்றம் சாட்டும் மனோபாவம் இல்லை. ‘என் செல்லமே...’ என மனப்பூர்வமாய் கொஞ்சிவிட்டால் உனக்காக இந்த உலகத்தையே சுமந்துவிடுவது... இதுதான் நான் நினைத்த குடும்பம். எல்லோரும் இதை நினைப்பார்கள். ஆனால் எனக்கு நடந்திருக்கிறது!

மறக்கமுடியாத மனிதர்கள்

நான் நன்றாக வரைவேன். கைவினைக்கலைகளில் ஆர்வம் உண்டு. சக்திவேலின் நண்பர் அறிவழகன் ‘‘இதில் ஏதாவது ஒன்றையாவது முன்னெடுத்து சக்திவேலுக்கு உதவலாமே!’’ எனக் கேட்டார். அதுதான் என்னை வீட்டை விட்டு வெளியே வரத் தூண்டியது. எனக்கு மனிதர்களை ஒரு சொல்லாகக்கூட நினைவு வைத்துக்கொள்ள முடியும். அதே மாதிரி, என் அண்ணன் ‘‘சங்க இலக்கியங்களைத் திரும்பப் படி’’ என்றார்.

அண்ணனின் இந்த வார்த்தைகள் மட்டுமே என்னை அதில் கொண்டுபோய் திளைக்கவிட்டது. ‘‘நீ எழுத வேண்டும்... படிப்பதின் செறிவை எங்கே போய் நிறுத்துவது’’ எனக் கேள்வி கேட்டது சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள். ‘‘நீங்கள் எழுதுகிறீர்கள்’’ என உற்சாகப்படுத்தி பிரசுரித்து புத்தகங்களையும் வெளியிட்ட ‘உயிர் எழுத்து’ சுதிர் செந்திலின் பங்கு ஆகச் சிறந்தது.

அடிக்கடி வரும் கனவு

எனக்குக் கனவில் நடந்தவை, நிஜ வாழ்க்கையில் நடந்திருக்கிறது. கடலும், அலைகளும் தவறாது என் கனவுகளில் இடம் பெறுகின்றன. ஆர்ப்பரிக்கிற அலைகளுக்கு மேல் என்னால் அங்கே நிற்க முடிகிறது. ஒற்றைப் படகில் தன்னந்தனிப் பயணம் அங்கே சாத்தியமாகியிருக்கிறது.

கேட்க விரும்பும் கேள்வி

எல்லோருக்கும் இந்த சமூகத்தின் மீது குற்றச்சாட்டு இருந்துகொண்டே இருக்கிறது. ‘என்னை யாரும் கொண்டாடவில்லை, புரிந்துகொள்ள
வில்லை’ என வருத்தங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. ‘யாருமே எனக்கு இல்லை’ என்ற கவலையும் இருக்கிறது.

ஆனால், சமூகத்தின் மேல் இப்படிக் கோபப்படுகிற யாருமே, பிறர் நலத்திற்காக எதையாவது முன்னெடுத்து இருக்கிறோமோ என்றால் இல்லை என்பதுதான் நிச்சயமான பதில். சமூக அக்கறையை நம்மிடமிருந்தே ஆரம்பிக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. எதிரே இருக்கிறவன் பட்டினிக்கு நமது உணவில் பாதி போகட்டும். வருத்தம் சுமக்கிறவருக்காக ஏன் ஒரு வார்த்தைகூட நம்மிடம் இல்லாது போயிற்று? யோசிக்கலாமே!

- நா.கதிர்வேலன்
  படங்கள்: புதூர் சரவணன்