கவிதைக்காரர்கள் வீதி



உருட்டிய கண்களுடன்
நீட்டிய பற்களுடன்
தொங்கும் நாக்குடன்
ஓங்கிய கைகளுடன்
தூக்கிய கால்களுடன்
கரிய உருவத்துடன்
நின்றிருந்தது பேயினுடையதாகவும்
இருந்திருக்கலாம்.
‘தெய்வத்தின் சிலை’ என்று
சொல்லி வைத்தேன் குழந்தையிடம்.
கற்பிதத்தில்தானே உருவெடுக்கிறது
சாமிக்கும் சாத்தானுக்குமான
முதல் உருவம்!



சாளரங்களற்ற அறைக்குள்
யாரோ திறந்த கதவின்வழி
சடுதியில் நுழைந்த வண்ணத்துப்பூச்சி
அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தது.
மரமென்று நினைத்து நெருங்கி
பிறகு ஓவியம்தானென
தெரிந்துகொண்டு திசையை மாற்றியது.
மேஜை மீதிருந்த
பூஞ்ஜாடியின் அருகே சென்று
அதனுள்ளிருந்தவை
பிளாஸ்டிக் பூக்களென்று
புரிந்துகொண்டு முகம் திருப்பியது.
குளிர்ந்து வீசிய மென்காற்று
இயற்கையல்லாத குளிர்சாதனத்திலிருந்து
வெளிப்படுவதை உணர்ந்ததைப் போல
வெளியேறும் வழியைத்
தேடியலைந்த அதனை
கதவைத் திறந்து அனுப்பிவைத்தேன்.
என்னையும் உயிரற்றதொரு
எந்திரமென நினைத்திருக்கக்கூடும் அது!

-கீர்த்தி