ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

சுபா

ஓவியம்: அரஸ்

பரபரப்பான செய்தியாக பத்திரிகைகளில் அடிபடும் சிலை கடத்தலின் பகீர் பின்னணியும் மாஃபியா கும்பலின் திக்திக் த்ரில் சதிவலைப் பின்னலும் இந்தத் தொடர்கதையின் சுவாரஸ்யத்துக்கு உத்தரவாதம் தருகின்றன!



விஜய் ரிசீவரைக் கையில் வாங்கினான். “ஹலோ விஜய்! நீ விடுதலை ஆகி வந்தது எனக்கு சந்தோஷம்ப்பா... யார் பேசறேன்னு புரியுதா?” எதிர் முனையில் ஒலித்த குரல் வெகு பரிச்சயமானதாக இருந்தது. “புரியுது... பிரகாஷ் அண்ணன்தானே?” “ஆமாம் தம்பி...” என்றார், எதிர்முனையில் இருந்த டிரைவர் பிரகாஷ். “நடக்கக் கூடாதது ஏதேதோ நடந்துடுச்சு. உன்னை போலீஸ் பிடிச்சிட்டுப் போகும்போது, என் மனசாட்சி என்னைக் குத்துது. எனக்கு மட்டும் தெரிஞ்ச ஒரு உண்மையை நான் இன்னும் யார்கிட்டயும் சொல்லல. உன்கிட்ட அதை சொல்லணும்னு தோணுது!”

“சொல்லுங்க...” “போன்ல வேண்டாம்ப்பா! நீ ஒண்ணு செய்... பெசன்ட் நகர் டெர்மினஸ் பக்கத்துல ஒரு கையேந்தி பவன் இருக்கு இல்ல?” “ஆமாம்!” “சாயந்திரம் எட்டு மணிக்கு அங்க வந்துரு... நான் டியூட்டி முடிஞ்சு உன்னைப் பாக்க வர்றேன். ஆனா விஜய் தம்பி, நான் புள்ளகுட்டிக்காரன். என்னை போலீஸ்ல மாட்டி விட்டுடாதே..!” என்று கெஞ்சும் தொனியில் சொன்னபடி போனை வைத்துவிட்டார் பிரகாஷ். தன்னிடம் பேசுவதற்கு அவரிடம் என்ன விவரங்கள் இருக்கப்போகின்றன என்று அவனுக்குப் புரியவில்லை.

“யாருடா போன்ல..?” என்றாள் மரகதம். “எங்களுக்கு வண்டி ஓட்டுவாரே, டிரைவர் பிரகாஷ், அவர்தாம்மா! நான் பெயில்ல வெளிய வந்ததையே விடுதலை ஆகி வந்துட்டேன்னு நினைச்சுப் பேசறார். நைட் மீட் பண்ணணும்னு சொன்னாரு...” “எங்கேயும் தனியா போய் மாட்டிக்காத, விஜய்...” என்று தன் ஆட்சேபத்தைத் தெரிவித்தாள் நந்தினி. “ஆசை இருந்தா நீயும் வரணும்னு நேரடியா கேளு, நந்து...” என்று கண்ணடித்தான் விஜய்.

“விளையாட்டா பேசி வந்து சேர்ந்திருக்கற பிரச்னை போதும், விஜய்! அவ சொல்றதுலயும் அர்த்தம் இருக்கு...” “நீ பயந்தது போதாதுன்னு அம்மாவையும் பயமுறுத்திட்டியே, நந்து...” என்றபடி மரகதத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டான் விஜய். “கவனமா இருப்பேன்மா...” நந்தினி தன் கைப்பையிலிருந்து ஒரு புது செல்போனையும், சிம் கார்டையும் எடுத்து நீட்டினாள். “நீ என்னிக்கு சொன்ன பேச்சைக் கேட்டிருக்க..? இதையாவது பத்திரமா வெச்சிக்க. யாராவது துப்பாக்கி எடுத்தா, இதை காலுக்கடியில போட்டு மறைச்சு வச்சுக்க...” விஜய் சிரித்தான்.

பெசன்ட் நகர். பேருந்து நிலையத்தை ஒட்டி அந்த வணிக வளாகம். ஆண்களும் பெண்களும் மற்ற கடைகளில் பரபரப்பாக இருக்க... டாஸ்மாக் கடை வாசலில் குடிமகன்கள் கூட்டமாய் மொய்த்திருந்தனர். சுண்டல், வறுவல் என்று அவர்களைத் துரத்தும் பொடியன்கள். ஒற்றைக்காலில் சாய்ந்து நின்று வரிசையாக தவம் செய்யும் மோட்டார் சைக்கிள்கள். அந்த வரிசையில் தன் பைக்கையும் நிறுத்திவிட்டு, விஜய் கையேந்தி பவனை அடைந்தான்.

ஒன்றிரண்டு முறை நந்தினியுடன் அந்த உணவு விடுதிக்கு அவன் வந்திருக்கிறான். சட்டியில் இருப்பதை முறத்தில் அரிசியைத் தூக்கிப் போடுவதைப் போல் போட்டு லாகவமாகத் திரும்ப வாங்கிக்கொண்டிருந்த மலையாள நண்பன், விஜய்யைப் பார்த்துப் புன்னகைத்தான். பதில் புன்னகையை உதிர்த்துவிட்டு, விஜய் நகர்ந்தான். ஐந்து நிமிடங்கள் கழித்து பிரகாஷின் பைக் வந்து நின்றது. அவனைப் பார்த்ததும், அங்கிருந்தே அவர் கை உயர்த்திக் கூப்பிட்டார். அருகில் சென்றதும், “இங்க வேண்டாம் தம்பி... சுத்தி இவ்வளவு பேர் இருக்காங்க.

சத்தத்துல நான் உரக்கப் பேசணும். பீச்ல உக்காந்து பேசலாம், வர்றியா..?” என்று கேட்டார். அவனால் புரிந்துகொள்ள முடியாத ஒரு பதற்றம் அவரிடம் இருந்தது. சிற்றுண்டிகள் விற்கும் தள்ளுவண்டிகள் கடற்கரை மணலை வீணடித்துக்கொண்டிருந்தன. குழந்தைகள் பலூன்களைத் துரத்திப் பிடித்துக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் குழந்தைகளைத் துரத்திப் பிடித்துக்கொண்டிருந்தனர். வண்டிகளின் எண்ணெய்க் கமறலும், பேட்டரி விளக்குகளின் வெளிச்சமும் எட்டாத ஒரு திட்டில் சென்று அவர்கள் அமர்ந்தனர்.

“விஜய் தம்பி, நான் சொல்லப்போறதை வெளில யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடு...” என்று பிரகாஷ் கையை நீட்டினார். “அது என் உயிரைக் காப்பாத்த அவசியம்னா மட்டும் சொல்லலாமா..?” “அதுக்கில்ல தம்பி... என்னை போலீஸ், கோர்ட்னு அலைய விட்டுராதே!’’ “சரி, சொல்லுங்க! பிரகாஷ் அண்ணே...”

பிரகாஷ் மணலை அளைந்துவிட்டு, மெல்லப் பேசினார். “நீயும் கல்யாணியும் கும்பமேளா புறப்பட்டுப் போனீங்களே, அதுக்கு ஒரு நாலஞ்சு நாள் முன்னால இருக்கும். முரளிதரன் சார் ஒரு மீட்டிங்குக்குப் போகணும்னு என்னைக் கூப்பிட்டார். தேனாம்பேட்டை கிட்ட அண்ணாசாலைல சப்வே பக்கத்துல ஒரு பெரிய ஹோட்டல் இருக்கு இல்ல..?”

“ஆமாம்... சூர்யகலா ஹோட்டல்!” “அதுக்கு எதிர்ல லேம்ப் ஷேடுலாம் விக்கற ஒரு கடை இருக்கு. அது வாசல்ல அவர் இறங்கினாரு. ‘பிரகாஷ், நீ போய் டிபன் சாப்பிடணும்னா சாப்பிட்டுட்டு வா... எனக்கு ஒரு ரெண்டு மணி நேரம் வேலை இருக்கு’னு சொல்லிட்டு கடைக்குள்ள போனாரு. நான் காரை பக்கத்து சந்துல கொண்டு நிறுத்திட்டு ஒரு தம் அடிக்கலாம்னு வந்தேன்!”

அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பாதைக்காக ஆங்காங்கே தடைகள் போடப்பட்டிருந்ததால், அன்று போக்குவரத்து நெரிபட்டுக்கொண்டிருந்தது. பிரகாஷ் பெட்டிக் கடையில் ஒரு சிகரெட் வாங்கினார். பற்ற வைத்துக்கொண்டார். சுரங்கப் பாதையிலிருந்து பாதசாரிகள் பரபரவென்று வெளிப்பட்டுக்கொண்டிருந்தனர். திடீரென்று மின்விளக்குக் கடையிலிருந்து முரளிதரன் தலையைக் குனிந்தபடி வேகமாக வெளியில் வருவது தெரிந்தது. தன்னைத்தான் தேடுகிறாரோ என்று பிரகாஷ் உடனே சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கிவிட்டு, ஓரடி எடுத்து வைக்க, முரளிதரன் அவரைக் கவனிக்காமல் அவசரமாக சுரங்கப் பாதையில் இறங்கினார்.

பிரகாஷ் ஆர்வமாகிப் பார்த்தார். முரளிதரன் சுரங்கப் பாதை வழியே சாலையைக் கடந்து எதிர்ப்புறம் வெளியில் வந்தார். திரும்பிப் பார்த்துவிட்டு, அங்கேயிருந்த அந்தப் பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தார். ‘காரை இங்கே நிறுத்தச் சொல்லிவிட்டு, அவர் ஏன் அங்கே போகிறார்? ஹோட்டலிலேயே காரைக் கொண்டுபோய் நிறுத்த பார்க்கிங் வசதி இருக்குமே..?’ - பிரகாஷின் மனதில் குழப்பமான கேள்விகள் எழுந்தன.

இன்னொரு ஆச்சரியமாக, அதே ஹோட்டல் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்பதும், அதிலிருந்து கல்யாணி இறங்குவதையும் பார்த்தார். ஆட்டோவிலிருந்து இறங்கியதும், துப்பட்டாவை இழுத்துத் தலையைப் போர்த்தி மூடிக்கொண்டு, கல்யாணி அதே ஹோட்டலுக்குள் நுழைந்தாள். பிரகாஷ் திகைத்துப் போனார். முரளிதரன் மீட்டிங் என்று சொன்னது, இவளுடன்தானா..? அவர் அறிந்திருந்த கல்யாணிக்குப் பின்னால், அவர் அறியாத ஒரு முகமும் இருக்கிறதா..?

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து, சுரங்கப் பாதையில் இறங்கி, சாலையைக் கடந்து பழைய இடத்துக்கு வந்த முரளிதரன், ஷட்டர்களை இழுத்து மூடத் துவங்கியிருந்த அந்தக் கடைக்குள் அவசரமாக நுழைந்தார். ஏதோ ஒரு விளக்கை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார். பிரகாஷை போனில் அழைத்தார். பிரகாஷ் உடன் வர, காரை நிறுத்தியிருந்த இடம் வரை நடந்தார். “சித்தப்பா பையன் புது வீடு கட்டறான்... ஷாண்ட்லியர் வாங்கித் தரச் சொன்னான். யப்பா... வீட்டை அலங்காரம் பண்ண எத்தனை லைட்டு இருக்குன்றே..?” என்று கேட்காமலேயே பொய்யாக விளக்கம் கொடுத்தார்.

“ஒண்ணுமே சொல்லாம இருந்திருந்தாக்கூட எந்த சந்தேகமும் வந்திருக்காது.. ஆனா, அந்தாளு பொய் சொன்னாரு. நான் எதிர்க் கேள்வி கேட்காம வண்டியை எடுத்தேன்...” என்று பிரகாஷ் குரல் நடுங்கச் சொன்னார். அந்தத் தகவல் கேட்டு, விஜய் அதிர்ந்து போயிருந்தான். ஒரு ஹோட்டலுக்குள் சேர்ந்து போவதாலேயே இரண்டு பேரை சந்தேகப்பட வேண்டுமா? புரியவில்லை. பிரகாஷ் தொடர்ந்து பேசினார்... “பெரிய எடத்து விவகாரம்லாம் எனக்கு எதுக்குனு அதோட அதை மறந்துட்டேன் தம்பி! ஆனா, கல்யாணி கண்ணு முன்னால செத்துப் போச்சு. ‘அது வயித்துல குழந்தை இருக்கு, அதுக்குக் காரணம் நீயா’னு போலீஸ் உன்னைக் கேக்குது.

இதையெல்லாம் பார்த்துட்டு என்னால நைட்டு தூங்க முடியல...” “அந்த ஹோட்டலுக்குள்ள ரெண்டு பேரும் போனாங்கன்றதுனாலயே, அங்க தப்பு நடந்துச்சுன்னு எப்படி அண்ணே சொல்ல முடியும்..? ரெஸ்டாரன்ட்ல உக்காந்து சாப்பிடக்கூட போயிருக்கலாம்...” “அதுக்கு எதுக்கு திருட்டுத்தனமா எதிர்க் கடைல நுழையற மாதிரி நாடகமாடணும்..? எதுவா இருந்தாலும், இனிமேலும் உன்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லாம இருக்கக் கூடாதுனு சொல்லிட்டேன்...”

விஜய்யின் முகம் வெளிறிப் போயிருந்தது. “தேங்க்ஸ்...” என்று பிரகாஷின் கையை அழுத்திக் கொடுத்தான். “இது நமக்குள்ளயே இருக்கட்டும் தம்பி...” என்று மீண்டும் ஒரு முறை பிரகாஷ் சொல்லிவிட்டு, மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார். விஜய் நிலவை இன்னும் சற்று நேரம் வெறித்துக்கொண்டிருந்துவிட்டு, யோசனையுடன் எழுந்தான். தன் பைக்கை நிறுத்தியிருந்த இடத்துக்கு நடந்தான். மறுநாள் கல்யாணியின் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கியபோது, விஜய் எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

அழைப்புமணி ஒலி கேட்டு, கதவைத் திறந்தவர் கல்யாணியின் அப்பா. “வா தம்பி... எப்படிப்பா இருக்கே?” விஜய் புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்தான். சாய்வு நாற்காலியின் கித்தானில் திட்டுத் திட்டாக அழுக்கு ஏறியிருந்தது. அதன் காலடியில் வைக்கப்பட்டிருந்த காலியான காபி டம்ளரை இரண்டு ஈக்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. தரையில் கால் நீட்டி அமர்ந்து, ஆர்வமின்றி கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தாள், கல்யாணியின் அம்மா.

“கேள்விப்பட்டேன் தம்பி... போக்கத்த போலீஸ் அடிக்கடி உன்னை இழுத்திட்டுப் போயிடுதாமே! எங்களுக்குத் தெரியும். கல்யாணிக்கும், உனக்கும் இருந்த உறவைப் பத்தி... போலீஸ் கேட்டபோதும் அதைத்தான் சொன்னோம்!” விஜய் அவளருகில் சென்று தரையில் அமர்ந்தான். “எனக்கு ஒரு விவரம் வேணும்மா..” “கேளு தம்பி...” “நான் கல்யாணியோட கும்பமேளாவுக்குப் புறப்பட்டுப் போறதுக்கு முன்னால, கல்யாணி என்னிக்காவது வீட்டுக்கு லேட்டா வந்தாளா..?”

கல்யாணியின் அப்பா நெற்றியைச் சுருக்கிக்கொண்டு அவனைப் பார்த்தார். கல்யாணியின் அம்மா, அவருடைய விழிகளைப் பார்க்காமல், “ஆமாம்...” என்றாள். “கும்பமேளாவுக்கு ஒரு நாலைஞ்சு நாள் முன்னால, ஃப்ரெண்டைப் பார்க்கப்போறேன்னு சொல்லி புறப்பட்டுப் போனா. நைட்டு பத்து மணிக்கு மேல டாக்ஸியில வந்து இறங்கினா. ‘என்னம்மா இவ்வளவு லேட்டா வர..?’ அப்படின்னு கேட்டேன். ‘அம்மா! மீடியா தொழில்ல நேரம், காலம்லாம் பார்க்க முடியாது..’ன்னு கடுப்படிச்சிட்டு உள்ள போயிட்டா. அவளால வேகமா நடக்க முடியல.

வயித்தைப் பிடிச்சிக்கிட்டு சுருண்டு படுத்துக்கிட்டிருந்தா. ‘என்னம்மா பண்ணுது..?’னு கேட்டேன். ‘பயங்கர வயித்து வலி... ஏன் என்னனு கேட்டு தொந்தரவு செய்யாத. என்னை நிம்மதியாத் தூங்க விடு..’ அப்படின்னு சொல்லி திரும்பிப் படுத்துக்கிட்டா...” சொல்கையில் அவள் கண்கள் கலங்கியிருந்தன. “நானும் ஒரு பொண்ணுதான..? அவ எதையோ மறைக்கறானு எனக்கு உடனே புரிஞ்சுது. ‘எதுவா இருந்தாலும், என்கிட்ட சொல்லு’னு எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்தேன். ‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல’ன்னு கடைசிவரைக்கும் பிடிவாதமா சொல்லிட்டா!”

“ஏன் என்கிட்ட இதையெல்லாம் சொல்லல..?” என்று கல்யாணியின் அப்பா நடுக்கத்துடன் கேட்டார். “நீங்க ஒண்ணும் இல்லாததுக்கே கவலைப்பட்டுக்கிட்டு தூங்க மாட்டீங்க... அதனாலதான் சொல்லல!” “என்கிட்ட சொல்லியிருந்தா, பொளேர்னு கன்னத்துல ஒண்ணு விட்டுக் கேட்டிருப்பேனே..?” “அதுவும்தான் ஒரு காரணம் உங்ககிட்ட சொல்லாததுக்கு...” என்று அவள் மூக்கை உறிஞ்சினாள். விஜய்யின் பக்கம் திரும்பி, “அம்மாவும் மகளுமா இருந்தாலும், நாங்க அவளோட சம்பாத்தியத்துல வாழ்ந்துட்டு இருக்கும்போது, அதிகாரம் பண்ணி எப்படிப்பா கேட்க முடியும்..?”

விஜய், சற்று நேரம் மௌனமாக இருந்தான். “கல்யாணி இல்லன்றதுக்காக உங்களுக்கு யாருமில்லனு நெனைக்காதீங்க... உங்களுக்கு எப்ப, எது தேவைன்னாலும் எனக்கு போன் பண்ணலாம்!” “உன்னை எங்க மகனாத்தான் நெனைச்சிருக்கோம், விஜய்...” என்று சொல்கையில் கல்யாணியின் அம்மாவுக்குத் தொண்டை அடைத்தது. “கல்யாணி செத்தபோது, அவ வயித்துல நாப்பது நாள் கரு இருந்ததுனு சொன்னாங்க. அதுக்கு நான் காரணம் இல்லனு எனக்குத் தெரியும். காரணம் யாருனு தெரிஞ்சு உங்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டியது என்னோட கடமை...” என்றான் விஜய்.

நாங்க அவளோட சம்பாத்தியத்துல வாழ்ந்துட்டு இருக்கும்போது, அதிகாரம் பண்ணி எப்படிப்பா கேட்க முடியும்..?

 (தொடரும்...)